அமெரிக்க அரசையே அசைத்துப் பார்த்த அறவழிப்பட்ட மாணவர் போராட்டத்தை ஆவணப் படமாக உருவாக்கி வருகிறோம். அந்தப் படத்திற்காக தமிழகம் முழுவதும் பயணம் செய்து போராட்டத்தில் பங்கேற்ற, முன்னிலை வகித்த மாணவர்களிடம் பேட்டி கண்டு வருகிறோம்.
 
சேனல் 4 வெளியிட்ட பாலசந்திரனின் புகைப்படம் வெளியானதும், நடந்தது வெறுமனே போர்க்குற்றமோ மனித உரிமை மீறலோ கிடையாது, ஓர் இனப் படுகொலை என்பதை உலகம் அறிந்து கொண்டது. தமிழுணர்வாளர்கள் கொதித் தெழுந்தார்கள். குறிப்பாக இளைஞர்கள். அதிலும் குறிப்பாக மாணவர்கள்.

பாலச்சந்திரனின் புகைப்படம் தொடங்கிவைத்த எழுச்சித் தீ, மாணவர்களைப் பற்றி தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டெரிந்தது. போராட்டத்தின் முக்கிய கட்டமாக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது, மாற்றாக மாணவர்கள் முன்மொழியும் தீர்மானத்தை இந்தியா அந்த ஆணையத்தில் முன் வழிமொழிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தொடக்கத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த அரசியல் கட்சிகள் கூட மாணவர்களின் கோரிக்கைக்குப் பின்னால் அணி வகுத்தன. ஒரு கட்டத்தில் மாணவர்களின் போராட்டத்தின் வீச்சை அறிந்து கொண்ட, அமெரிக்கா, ‘இந்தியாவின் ஒப்புதலுடன் தான் இந்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன’ என்ற குட்டை உடைத்தது.

இந்தளவு முக்கியத்துவம் இருப்பதாலேயே இந்த நிகழ்வை ஆவணப்படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஆவணமாக்கி வருகிறோம். அதை யொட்டி மாணவர்களை சந்தித்த போது அவர்களின் தமிழுணர்வும், ஈழ மக்களின் மீதான அவர்களின் அக்கறையும் மெய்சிலிர்க்க வைத்தன. அதே நேரத்தில் அவர்களில் சில மாணவ அமைப்புகள் கையில் ஏந்தி நிற்கும் கொள்கைகள் மறுபரிசீலனைக்கு உரியன. குறிப்பாக, மாணவர்கள் முன்னெடுத்த மொழிப் போரினை தி.மு.க. தன்னுடைய அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டதை மனதில் நிறுத்திக் கொண்டு, வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் யாருக்கும் தங்கள் போராட்டத்தில் இடமில்லை என மாணவர்கள் அறிவித்தனர்.
 
குறிப்பாக, வாக்கு வங்கி அரசியல் கட்சிகளின் சுயநலப் போக்கை குத்திக்கிளறி வெளிப்படுத்தும் ஆயுதங்களை தங்கள் கையில் ஏந்தி நிற்கிறார்கள்.

அதே நேரத்தில் தேர்தலை புறக்கணிக்கும் ஈழ ஆதரவு நிலையில் உள்ள தமிழ்த்தேசிய கட்சிகள், தமிழர் நல அமைப்புகளுக்கும் இந்தப் போராட்டத்தில் இடம் இல்லை என்று மாணவர்கள் சிலர் பேசி வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடந்து வரும் தமிழினத்துக்கு எதிரான அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் எதிராக இங்குள்ள தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்து வந்துள்ளன.
 
மாணவர்கள் இன்று இந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், இத்தனை காலமாக தொப்புள் கொடி உறவுகளுக்குப் போராடி வந்தவர்களை ஒதுக்குவதும் அவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பேசுவதும் நம் இனப் பகையாளிகளுக்கே நல்வாய்ப்பாக அமையும். அது நம் கையால் நம் கண்ணையே குத்துக் கொள்வதற்குச் சமமானது. இத்தனை ஆண்டுகளாக தாய்த் தமிழகத்தில் ஈழம் என்கிற தாகத்தை தணியாமல் பார்த்துக் கொண்டதில் இவர்களின் பங்கை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்குக் களம் கண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தின் வலுவை உணர்ந்து கொண்டும், அதே நேரம் தங்களது வரம்பைப் புரிந்து கொண்டும் அடுத்த கட்ட நகர்வுக்கு திட்ட மிட வேண்டும் மாணவர்களின் எழுச்சி ஒரு சமூக புரட்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் புரட்சி வெடித்துக்கிளம்ப வேண்டுமானால், இளமையின் வேகமும் அனுபவம் உள்ள இயக்கங்களின் விவேகமும் இணைந்தே செயல்பட வேண்டும்.

தமிழினப் படுகொலைக்கு எதிரான மாணவப் போராட்ட வரலாறு, ஆவணப் படமாக வெளிவரும் போது மாணவர்களின் கையில் மற்றொரு காணொளி ஆயுதமாக இப்படம் இருக்கும். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கும் தமிழினம் வஞ்சிக்கப்படும் அவலநிலையை ஆதாரங்களுடன் அடுக்கும் ஆவணமாக இந்தப் படம் இருக்கும். மாணவர்களின் போராட்டம் நீர்த்துப் போகாமல் நீட்டிக்கச் செய்யும் பல்வேறு செயல்திட்டங்கள் மாணவ அமைப்புகளிடம் உள்ளன. அதில் ஒன்றாக இந்தப் படமும் இருக்கும்.

இறுதியாக, மாணவர்கள் உண்மையான உணர்வாளர்களை ஒதுக்காமல் இனம் கண்டு அவர்களின் ஆலோசனைகளை பெறும் பட்சத்தில் அவர்களின் பிரதான கோரிக்கையான தனிஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு என்பது சாத்தியம் ஆகக் கூடிய வாய்ப்புகள் கூடி வரும். இல்லையெனில்,

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

என்ற திருவள்ளுவர் வாக்கு பலித்துவிடும் அபாயம் இருக்கிறது.

Pin It