முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து நான்காண்டுகள் ஓடிவிட்டன என்பது நாட்காட்டிக் கணக்குதான்! நம் நெஞ்சில் இன்று குத்திய முள்ளாகவே அது வலிக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதற்குரிய கணக்குத் தீர்க்கப்படும் வரை அதே வலி, அதே மானக்கேடு, கடமை தவறிவிட்டோமோ என்ற அதே உறுத்தல் தொடரத்தான் செய்யும்.

அதே வேளை, தமிழின அழிப்புப் போரை நடத்திய இந்திய சிங்கள அரசுகளுக்கு எதிரான நெருக்கடிகள் வளர்ந்து கொண்டுள்ளன என்பது ஆறுதல் அளிக்கிறது; எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிக்கிறது. இலங்கையின் விருப்பத்திற்குமாறாக இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்நாட்டு அரசியல் அரங்கிலும் இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கிற்கெதிரான நெருக்கடி உருவானதைப் பார்த்தோம்.

நீர்த்துப்போன அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைக் கூட இராசபட்சே குற்றக் கும்பல் விரும்பவில்லை. இலங்கையும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அமெரிக்கத் தீர்மானத்தை இன்னும் நீர்த்துப் போகச் செய்ய அரசியல் தரகர் சுப்பிரமணிய சாமியை இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் தனது தூதராக அனுப்பிப் பேச வைத்தது இந்தியா! ஆனால இந்தியாவின் இத்திட்டம் தோல்வி கண்டது.

பேரழிப்பு நடந்த 2009 மே மாதத்திற்குப் பின் உடனடியாக ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், இப்பொழுதுள்ள அமெரிக்கத் தீர்மானத்தை விடவும் உப்புச் சப்பற்ற ஒரு தீர்மானத்தை சுவிட்சர்லாந்து கொண்டு வந்தது. இராசபட்சே அரசே ஒரு விசாரணை அமைப்பை நிறுவி, இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் செய்த போர்க்குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று அது கோரியது.

அத்தீர்மானத்தை இந்திய அரசும் இலங்கை அரசும் கடுமையாக எதிர்த்தன. அத் தீர்மானம் தோற்றுப் போனது. மாறாக, “மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்ததற்காக” இலங்கையைப் பாராட்டும் தீர்மானம் இலங்கை அரசால் இந்தியாவின் துணையோடு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஈழத்தில் நடத்தப்பட்ட இனப் பேரழிப்புப் போரை எள்ளளவும் கணக்கில் எடுக்காமல் ஐ.நா. மனித உரிமை மன்றம் இலங்கைத் தீர்மானத்தைப் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றியது. இன்று அந்த அவல நிலை அப்படியே இல்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காலவரிசைப்படிக் காணலாம்:

2009 மே 27 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 6 நாடுகள் வாக்களிக்கவில்லை. 2012 மார்ச்சு இலங்கைக்குக்கெதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 2013 மார்ச்சு 21 இல் இலங்கைக்கு எதிராக 25 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக 13 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.

அடுத்த முன்னேற்றமாக இலங்கைத் தலைநகர் கொழும்பில் 2013 நவம்பர் மாதம் நடத்தத் திட்ட மிட்டுள்ள காமன் வெல்த் மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்ற கருத்தை கனடா, அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு; அப்பாவித் தமிழர்களைக் கொன்று போர்க்குற்றம் இழைத்துள்ளது. அங்கு மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்பது கனடா அரசு கூறும் காரணம். மீறி கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் அதில் கனடாப் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார். என்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இதே கோரிக்கை எழுந்துள்ளது. பன்னாட்டு அரங்கில், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஞாயம் கேட்டு இன்னும் பல மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. தமிழ் நாட்டரங்கில் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த மாபெரும் மாணவர் எழுச்சியும் அதற்கு ஆதரவாக அனைத்துப் பகுதி மக்களும் அரணாக நினற வளர்ச்சியும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே முழக்கத்தின் கீழ் இழுத்து வந்துவிட்டன. காங்கிரசு மற்றும் காங்கிரசின் இடதுசாரிப் பிரிவாய்ச் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவிர மற்ற தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே நிலைக்கு வந்துவிட்டன.

1. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை; இக்குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பு நிறுவப்படவேண்டும்.

2. இனியும் சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வதா, இல்லை தனிநாடு அமைத்துக் கொள்வதா என்பதை முடிவு செய்ய ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

3. தமிழீழப் பகுதியில் ஐ.நா. மேற்பார்வையில் துயர் துடைப்புப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சிங்கள இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட குடிமை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் செயல்படுத்த ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் தமிழர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவர் ஆதரவையும் பெற்றுள்ளன. தமிழக சட்டப் பேரவையில் இவை தொடர்பான தீர்மானங்களை முதலமைச்சர் செயலலிதா முன் மொழிந்து நிறைவேற்றியுள்ளார்.

இவ்வாறான ஒருமித்த நிலைப்பாடு திடீரென்று உருவாகிட வில்லை. இது தமிழகத் தில் உருவாகப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு தரப்புப் காரணமாக மட்டும் இவ்வளர்ச்சியைச் சுருக்கி விடக்கூடாது. தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒற்றைக் காரணம் கற்பித்துக் கொண்டு மக்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவைத் தம் தம் அமைப்புக்குப் பங்கு போட்டுக் கொள்ளும் போட்டியில் இறங்கக் கூடாது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பெருந்திரள் மக்கள் ஆதரவுக்கு முதல் காரணம் ஈழத்தமிழர்கள் இன்றும் பணயக் கைதிகள் போல் இராணுவக் கண்காணிப்பின் கீழும் அதன் நிர்வாகத்தின் கீழும் வைக்கப்பட்டுள்ள பெருந்துயரம். இரண்டாவது காரணம் தடைகள், சிறைகள், உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏற்று, அவற்றிற்கு பின்னும் ஊசலாட்டமின்றி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழ் ஈழ மக்களையும் ஆதரித்து 2009 முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் முள்ளிவாய்க்கால் பேரழிப்பிற்குப் பின்னும் போராடி வரும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழின உணர்வு அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை. இவைதாம் ஈழத் தமிழர்க்கான ஆதரவுத் தளம் சுருங்காமல் விரிவடையச் செய்து வந்தவை.

மூன்றாவதாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இமைப் பொழுதும் சோராமல் ஈழம் குறித்து எல்லா முனையிலும் இயங்கி வரும் சிறப்பு.

நான்காவதாக தமிழ்நாட்டு ஊடகங்களின் பாராட்டத் தக்க பங்களிப்பு. இவை உடனுக்குடன் ஞாயமான செய்திகளைப் பரப்பி, விவாதங்களை நடத்தி மக்களிடம் உண்மைச் செய்திகளையும், செய்ய வேண்டிய கடமைகளையும் கொண்டு போய்ச் சேர்த்தன. வெளிநாட்டு ஊடகமான சேனல் 4 ம், இயக்குநர் கல்லம் மக்கரேயின் ஆவணப்படமும் பெரும்பங்காற்றின. இணைய தளங்களில் விவாதிப்போரின் பங்களிப்பு முகாமையானது.

இவ்வளர்ச்சிப் போக்குகளின் சிகரமாக திருப்பு முனையாக அமைந்தது 2013 மார்ச்சு மாத மாணவர் எழுச்சி! தமிழகம் ஒற்றைக் குரலில் பேசும் நிலையை அது உருவாக்கியது!

தமிழக மாணவர்கள் தமிழ்ச் சமூகத்தின் துடிப்பு மிக்க உறுப்பு! தமிழ்ச்சமூகத்தில் ஏற்படும் அதிர்வுகள் தமிழக மாணவர்களிடம் தாக்கத்தை உண்டாக்கும். தமிழக மாணவர்கள் எழுச்சி தமிழ்ச் சமூகத்தைத் தட்டி எழுப்பும். இது ஒரு வழிப் பாதையன்று; இருவழிப்பாதை!

போராடிய மாணவர்கள் பல தரப்பினர் ஆவர். அரசியல் சார்புடையோர், பல்வேறு அமைப்புகளின் சார்புடையோர், எந்த அரசியலும், அமைப்பும் சாராதோர் எனப் பலவகையினர் உள்ளனர். அதே போல் இம்மாணவர் எழுச்சியில் சாதி, மத அடையாளங்களுக்கும், சார்புக்கும் எந்தத் தொடர்புமில்லை.

தமிழின உணர்வு என்ற ஒற்றை அடையாளம்தான் தமிழக மாணவர்களை இணைத்தது; போராட்டத்தில் இறக்கியது.

மாணவர்களுக்கு அரசியல் சார்போ, அமைப்புச் சார்போ இருப்பது குற்றமன்று; அவரவர் அமைப்புச் சார்பையும், அரசியல் சார்பையும் மதித்துக் கொண்டே பொது இலட்சியத்தில் ஒன்றுபடும் சனநாயகப் பண்பும் மனப்பக்குவமும் வேண்டும். மாறாக ஒருவரை ஒருவர் வீழ்த்தும் முனைப்பு கூடாது.

தத்துவங்கள் குறித்துத் தருக்கங்கள் நடக்கட்டும்; கருத்தியல்கள் குறித்துக் கலந்துரை யாடல்கள் நடக்கட்டும். காயப்படுத்திக்கொள்ளும் கடும் சொற்கள் கூடாது; காலை வாரி விடும் கரவு வேலை கூடாது. தகுதி உடையது தங்கும், வளரும். சதி வேலைகள் எதையும் வளர்க்காது.

உளவுத்துறையினர் ஊடுருவல் செய்து சீர் குலைக்க முயல்வர். அரசிடம் சம்பளம் வாங்கும் உளவுத் துறையினர் மட்டுமின்றி அருட்பணியிலிருந்து அரசியல் வேலை வரை செய்யும் பலரும், தன்னல நோக்கில் சீர்குலைவுச் சித்துகள் செய்வர்.

இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் விழிப்புணர்ச்சி போராளிகளுக்கு எப்போதும் தேவை.

ஈழத் தமிழர்க்குத் துணை நிற்கும் தமிழகப் போராட்டக் களத்தில் மாணவர்கள் முன்னணிப் பாத்திரம் வகிப்பது பாராட்டத்தக்கது. ஆனால் மக்கள் ஆற்றலோடு இணைந்தும், மக்களைச் சார்ந்தும் அப்போராட்டம் நடக்க வேண்டும்.

கல்லூரிகள் திறந்ததும் மாணவர்கள் போராடுவார்களா? போராட்டம் அரைகுறையாய் அப்படியே முடிந்து விடுமா என்று சிலர் கேட்கிறார்கள். மாணவர்களும் போராட வேண்டும், மக்களும் போராட வேண்டும். அது மாணவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட தனிக்கடமையன்று என்பதை அந்தச் சிலர் உணரவேண்டும்.

அடுத்து போராட்டம் தொடர்வதும், அது வளர்வதும், வெற்றி காண்பதும், தமிழ் மக்களும் தமிழ் மாணவர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இனச் சிக்கல்களில் கால் ஊன்றி நிற்பதைப் பொறுத்துதான் அமையும். இதுதான் சமூக இயங்கியல் (Social Dialicti) காவிரி உரிமைப் பறிப்பு, முல்லைப் பெரியாறு உரிமைப் பறிப்பு, பாலாற்று உரிமைப் பறிப்பு, கச்சத்தீவு உரிமைப் பறிப்பு அறு நூறு மீனவர் உயிர்ப் பறிப்பு, மூன்று தமிழர் உயிர் பறிக்கத்துடிக்கும் பகைத் துடிப்பு, தமிழர் தாயகத்தை அன்றாடம் ஆக்கிரமிக்கும் அயல் இனத்தாரின் பெருந்திரள் குடியேற்றம் போன்றவற்றில் அக்கறை காட்டாமல், இந்த உரிமைகளைக் காக்கும் உணர்வு பெறாமல், ஈழத் தமிழர்களுக்காக மட்டும் போராடுவோம் என்று மாணவர்களோ அல்லது மக்களோ போராடினால் அது தற்காலிக எழுச்சியாக எழுந்து தீர்வுகாணாமல் அடங்கி விடும். காட்டாற்று வெள்ளம் போல், சீறிக்கிளம்பி வடிந்து விடும். நிலத்தில் ஆழமாக வேர்விடாமல் நீர் மேல் மிதக்கும் ஆகாயத் தாமரை, தண்ணீர் வற்றியுவுடன் காய்ந்து சருகாவது போல், அப்போராட்டம், இடையில் முறிந்து போகும்.

ஓர் உளவியல் படி சிந்திக்கலாம்; தான் அம்மணமாக நிற்பதை உணராமல் தம்பியின் அம்மணத்தைப் போக்க ஆடை தருகிறேன் என்று ஓர் அண்ணன் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்டதுதான் தமிழ்நாட்டில் தமிழினத்தின் உரிமைப்பறிப்புகளுக்குப் போராடும் உணர்வு பெறாமல் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தருகிறேன் என்று சொல்வது. தமிழீழ ஆதரவுப் போராட்டம் தமிழக மக்களைக் கவ்வி எழுச்சி பெற வேண்டுமெனில் அது தமிழக மண்ணில் கால் பதித்து நிற்க வேண்டும்.

முதலில் ஈழத்தை வென்றெடுப்போம், பின்னர் தமிழ்நாட்டை வென்றெடுப்போம் என்று சிலர் சொல்லக்கூடும். வரலாற்று நகர்வு ஒன்றுக்குபின் மற்றொன்று என்று நகர்வதில்லை. ஒன்றின் ஊடாக இன்னொன்று என்று சங்கிலித்தொடராக வளர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் “தமிழ்த் தேசியம்” என்ற தமிழர்கள் அனைவர்க்குமான அரசியல், பொருளியல், பண்பியல் சித்தாந்தம் புதிய கருத்தியலாக வளர்ந்து வருகிறது. இத் தமிழ்த் தேசியம் பன்மைத் தன்மை கொண்டது. மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிப்பது; தமிழர் அறத்தின் மீது அது நிற்கிறது.

மேலே சொன்னவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து, தனக்குள்ளாகவும், தோழர்களு டனும் விவாதித்து, மக்கள் திரள் அமைப்புகளும் மாணவர்களும் செயல்பட்டால் தமிழ் ஈழத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் பயன்கள் விளையும்.

முள்ளிவாய்க்கால் ஈகியர் மேல் ஆணையிட்டு, சிங்கள இந்தியத் தமிழினப் பகை ஆற்றல்களை முறியடிக்க உறுதி ஏற்போம்!

Pin It