தமிழ்மண்ணில், மாணவர் ஆற்றல் மீண்டும் மகுடம் சூட்டிக் கொண்டது. நாற்பத்தெட்டாண்டுகளுக்குப் பின் நடந்துள்ள வரலாற்றின் மறு பிறப்பு இது!

ஆதிக்கம் செய்ய வந்த இந்தியை எதிர்த்து 1965இல் ஆர்த்தெழுந்த மொழிப் போரின் கதாநாயகர்களும் களப்போராளிகளும் மாணவர்களே!

அன்று சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் இராசேந்திரன் காங்கிரசு ஆட்சியின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் களப்பலி ஆனான்.அந்த இளம் ஈகியைத் தொடர்ந்து முந்நூறு பேர்க்கு மேற்பட்ட மாணவர்களையும் மக்களையும் காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது.

இந்தித் திணிப்பை எதிர்த்து 1964சனவரி 25 இல் திருச்சித் தொடர்வண்டிச் சந்திப்பு முகப்பில் தீக்குளித்து மடிந்தான் கீழப்பழூர் சின்னச்சாமி!1965மொழிப்போர் சனவரி 25அன்று மாணவர்களால் தொடங்கப்பட்ட பின்,சின்னச்சாமியைப் பின்பற்றி கிட்டத் தட்டப் பத்துத் தமிழர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தார்கள்.

மக்களும் கலந்து கொண்ட மாணவர் போராட்டத்தை நசுக்க இராணுவம் வரவழைக் கப்பட்டது. அது நூற்றுக்கணக்கான தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. 1965 சனவரி 25 இல் தொடங்கி மார்ச்சு 15 வரை 50 நாள்கள் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. தமிழகம் போர்க்களமானது.இந்திய அரசு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்க முடியவில்லை. தொடர்வண்டிகள் மறிக்கப்பட்டன. சில இடங்களில் தொடர் வண்டிப் பெட்டிகள் கொளுத்தப்பட்டன. இந்தி எழுத்துகள் இருந்ததால் அஞ்சலகங்கள் தாக்கப்பட்டன. பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் முனைப்பாக பங்கெடுத்தனர்.நான் திருக்காட்டுப்பள்ளி சர் சிபி. சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளி இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராகச் செயல்பட்டேன். அப்போது 11 ஆம் வகுப்பு மாணவன் நான்!

இந்த மாணவர் போராட்டத்திற்கு நிகராக இதுவரை உலகத்தில் வேறெந்த நாட்டிலும் அயல் மொழித் திணிப்பை முறியடிக்க, தாய்மொழியை பாதுகாக்க ஒரு போராட்டம் நடக்க வில்லை; இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உயிர் ஈகம் நடந்ததில்லை.

இவ்வளவு பெரிய ஈகம் செய்த தமிழினம் அதற்குரிய பயனை அனுபவித்ததா?இல்லை. காரணம் என்ன?மொழிச் சிக்கலைத் தீர்ப்பதற்குரிய சரியான கொள்கையும் கோட்பாடும் முன்வைக்கப்படவில்லை.“ஒரு போதும் இந்தி வேண்டாம். எப்போதும் ஆங்கிலம் வேண்டும் (Never Hindi Ever English)” என்று இராசாசி உருவாக்கிக் கொடுத்த முழக்கத்தைத்தான் தி.மு.க. தலைவர்கள் தங்களின் தீர்வாக முன் வைத்தார்கள்.அயல்மொழியான இந்தி ஆட்சி மொழியாகிவிட்டால், தாய் மொழியாம் தமிழ் பின்னுக்குத் தள்ளப்படும், காலப்போக்கில் அழிந்து விடும் என்ற உண்மையான அச்சத்தின் காரணமாகத் தாய்மொழிகாக்க எழுந்த போராட்டம் அது!அதற்காகத்தான் இத்தனை ஈகங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டது தமிழினம்.

ஆனால் இந்தித் திணிப்பை எதிர்த்து 1963 முதல் தீவிரப் பரப்புரையும் கிளர்ச்சியும் செய்து, இந்தியால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏற்படஉள்ள இழப்புகளை-இழிவுகளை எடுத்துரைத்து வந்த தி.மு.க.சரியான மொழிக் கொள்கையை வகுத்துக் கொள்ளாமல் இந்திக்கு மாற்றாக ஆங்கிலமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்ற கோரிக் கையை முன்வைத்ததால் தமிழுக்கு உரிய இடம் தில்லியிலும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிலும், இதுவரை கிடைக்கவில்லை. இந்திய அரசியல் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தி.மு.க. அவ்வப்போது பேசி வந்தாலும் அதன் அழுத்தம் ஆங்கிலத்தின் பக்கமே நின்றது.

போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது; ஈகம் செய்தால் மட்டும் போதாது! தெளிவான, துல்லியமான கோரிக்கைகள் கோட்பாடுகள் தேவை. அப்படிப்பட்ட தெளிவான கோரிக்கை களும் கோட்பாடும் அப்பொழுது முன் வைக்கப்படவில்லை.ஆனால் இப்பொழுது நடந்த மாணவர் போராட்டத்தில் கோரிக்கைகள் தெளிவாக வைக்கப்பட்டன;குழப்ப மில்லாமல் கூர்மையாக வைக்கப்பட்டன.

1.இலங்கை அரசு நடத்திய தமிழினப் படுகொலைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டு புலனாய்வு அமைப்பை ஐ.நா. மன்றம் நிறுவ வேண்டும்.

 ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க முன்வைத்த தீர்மானம் கொலைகார இராசபட்சே கும்பலைப் பாதுகாக்கும் மூடு திரையாகும். அதை நாம் ஆதரிக்கவில்லை.

 2.சிங்களர்களோடு சேர்ந்து இலங்கையில் வாழ்வதா அல்லது தமிழ் ஈழத் தனிநாடு அமைத்துக் கொள்வதா என்பதை முடிவு செய்ய ஈழத்தமிழர்களிடம் இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் கருத்து வாக்கெடுப்பு ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில் நடத்த வேண்டும்.

3. மீள் குடியமர்த்தல், குடிமை உரிமைகள் வழங்கல், நிதி உதவி உள்ளிட்ட துயர் துடைப்புப் பணிகளைச் செய்ய ஐ.நா.மேற்பார்வையில் தமிழர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழீழத் தாயகப் பகுதியிலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தெளிவான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

1965 மாணவர் எழுச்சியைக் குழப்பியவர்கள் இப்போதும் குறுக்குச் சால் ஓட்ட வந்தார்கள். கொலைக் கும்பல் தலைவன் இராசபட்சேவுக்கு வெண்சாமரம் வீசி அவன் அருளால் விசாரணை வேண்டும் என்று கோரிய அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மகுடி வாசித்தார்கள். மாணவர்கள் மயங்கவில்லை.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் அமெரிக்கத் தீர்மான நகலை எரித்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அமெரிக்கத் தீர்மான நகலை மாணவர்கள் எரித்தார்கள். அமெரிக்கத் தீர்மான நகலைப் பாடை கட்டித் தூக்கிச் சென்று தகனம் செய்தார்கள்.

அமெரிக்கத் தீர்மானத்தை ஆண்டை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வரம்பிற்குள் தமிழக எழுச்சியைக் குறுக்கி விடவேண்டும் என்ற உள் நோக்கத்தோடு 2013 பிப்ரவரியிலிருந்து ஓலக்குரலெடுத்து ஒப்பாரி வைத்து வந்த டெசோ தலைமையே இந்தியா தனித் தீர்மானம் கொண்டு செல்ல வேண்டும்.என்று கோரித் தலைகீழாகத் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிவந்தது.

தமிழீழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்கத் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு கோரவேண்டும் என்றார் கருணாநிதி.மாணவர் எழுச்சியின் மகத்துவத்தால் ஏற்பட்ட மாற்றமிது. காலம் மாறி விட்டது என்று உணர்ந்து தாளம் மாற்றிக் கொண்டார்கள்.

தங்களது இந்தச் சாதனையிலிருந்து மாணவர்களும் இளைஞர்களும் ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொள்ளவேண்டும்;சரியான இலக்கை நோக்கியே நம் பயணம் அமைய வேண்டும்; சாத்தியமானதைக் கேட்டு அல்ல! குழப்பமில்லாத கோரிக்கைகள், கூர்மையான இலட்சியங்கள் ஆகியவையே நமது குறிக்கோள்களாக இருக்க வேண்டும்!

சந்தர்ப்பவாதிகளும் தெளிவில்லாதவர்களும் கிறுக்கி வைத்திருக்கும் பழைய தாள்களைக் கிழித்தெறிந்துவிட்டு,புதியதாள்களில் தெளிவாக இலட்சியங்களை எழுதிக்கொள்ள வேண்டும்.

தம் காலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் சிலரைப் பற்றி காரல் மார்க்சு சொன்னது இப்போதும் இங்கும் பொருத்தமாகவே இருக்கிறது: அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களின் வரலாறு செத்துவிட்டது.

அவர்களின் பிணத்தை அவர்களே சுமந்து கொள்ளட்டும்;எதிர்காலத்தின் நாயகர்களான இளைஞர்கள் சுமக்க வேண்டாம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் தமிழீழத்திற்கான கருத்துவாக்கெடுப்பு கோரித் தீர்மானம் நிறைவேற்றியது,இலங்கை எதிரிநாடு என்று கூறியது,இலங்கைக் கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க மறுபடியும் வலியுறுத்தியது,சிங்கள விளையாட்டாளர்கள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல். மட்டைப் பந்து விளையாட் டைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று அறிவித்தது முதலிய மாற்றாங்கள் எவ்வாறு ஏற்பட்டன?தொடர்ந்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழின உணர்வு அமைப்புகளும் எழுப்பி வந்துள்ள இன உணர்ச்சியுடன் மாபெரும் மாணவர் எழுச்சி ஒன்று கலந்ததால் ஏற்பட்ட விளைவுகளாகும்.

காங்கிரசு, சி.பி.எம். கட்சி தவிர தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உட்பட மற்ற தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஈழச்சிக்கலில் இந்த முறை இறுதியில் ஒரே நிலை பாட்டுக்கு வந்துவிட்டன. காங்கிரசிலும் ஜி.கே.வாசன் நமக்கு ஆதரவு தரும் வகையில் சற்றுக் குரல் மாற்றிப் பேசினார்.

மாணவர்களின் போராட்டம் இந்திய அரசின் இறுகிப்போன தமிழின எதிர்ப்பு நிலைபாட்டையும் அசைத்துள்ளது.ஐ.நா.மன்றத்தில் இந்தியாவின் நிரந்தரப் பேராளராக உள்ள அர்தீப் எஸ்.புரி இந்து நாளேட்டில் (9.4.2013)ஒரு கட்டுரை எழுதியுள்ளார். “இந்தியாவின் இலங்கைக் கொள்கைக் கொள்கை சரியானது, ஏன்?” என்ற தலைப்பிலான அக்கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

“தமிழ்நாட்டில் எழுந்துள்ள மக்கள் உணர்வை, அரசியல்வாதிகளின் கைவேலை என்று புறந்தள்ளுவது இரு தவறுகளுக்கு இடம் கொடுக்கும். ஒன்று நிலைமை களைத் தவறாகப் புரிந்து கொள்வது; இன்னொன்று, பேரழிவை நாமே வரவழைத்துக் கொள்வது. 2009 ஏப்ரல் மே மாதங்களில் இலங்கை யும் இந்தியாவும் செய்து கொண்ட இரு தரப்புப் புரிந்துணர்வு உடன்பாடுகளை இலங்கை ஏன் மதிக்கவில்லை? அதற்கு நாம் ஏன் இலங்கையைக் குற்றப் பொறுப்பாக்கக் கூடாது?

“இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருக்கலாம்; ஆனால் தமிழர் களுக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. சிக்கல் என்னவெனில் இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க ளிடமும் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களிடமும் சிங்களர் அடக்கு முறையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றும் ஒரே பாதுகாப் புக் கவசம் தாங்கள்தான் என்ற எண்ணத்தை விடுதலைப் புலிகள் தந்திரமாக உருவாக்கியிருப்பதுதான். இந்த உணர்வை நாம் எளிதில் புறந்தள்ள முடியாது.

“இலங்கைச் சிக்கலில், தமிழகத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தி.மு.க. மற்று முள்ள சிறு கட்சிகள் ஆகிய அனைத்தும் ஒரே நிலைபாட்டில்தான் உள்ளன.கொழும்பில் மெய்யான மனமாற்றம் ஏற்படவில்லை. இந்தச் சிக்கல் இன்னும் கெட்டுச் சீழ்பிடிக்கும். அண்மைக் கால நிகழ்வுகள், ஆறுதல் தருவதாக இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராசபட்சே 2013 மார்ச்சு 27 அன்று சொன்னார்: “மாநில நிர்வாக அமைப்புகளை நாம் வைத்திருக்க வேண்டுமா?அவற்றின் துப்பாக்கிமுனை தேசியத் தலைமையின் மகுடத்தைதான் குறி பார்க்கும். தேசியத் தலைமைக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டும் மாநில நிர்வாக அமைப்புகள் நமக்குத் தேவை இல்லை” 13 ஆம் திருத்தத்தை விட்டுவிடுங்கள், பாதுகாப்புச் செயலாளரின் பேச்சு மாநில நிர்வாக அமைப்புகள் அனைத்தையும் கலைத்துவிடுவதாக இருக்கிறதே!

“இந்தியாவுக்கு உறுதி மொழிகள் கொடுத்திருந்த போதிலும், அரசியல் நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை நோக்கி நகரும் எண்ணம் இலங்கையை ஆளும் “சகோதரர்களுக்கு” இருப்பதாகத் தெரியவில்லை”.

இந்தியாவின் நிரந்தரப் பேராளராக ஐ.நா.மன்றத்தில் இப்போது பதவி வகிக்கும் அர்தீப் புரியின் கருத்துகள்,எதைக் காட்டுகின்றன?தமிழர்களின் போராட்டம் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவை அசைத்துள்ளது.முதன் முறையாக அதிகாரத்தில் உள்ள ஒருவரிடமிருந்து சிங்கள இனவாத ஆட்சிக்கு எதிராகவும்,தமிழர்களின் போராட்டத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கவனத்தோடும் செய்தி வந்துள்ளது.

ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை, நடுநிலையோடு,நம் ஞாயங்களுக்காக எழுதப்பட்டதன்று. இந்திய ஆளும் வர்க்கத்திற்குள் இலங்கை சிக்கலை அணுகுவதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்தபின் கூட இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது என்ற எரிச்சலில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். தமிழர்களின் ஞாயத்தை ஆதரிப்பதுபோல் பாவனை கூட செய்யாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தியக் கட்டமைப்பிற்குள் வைத்தி ருப்பது கடினம் என்று இன்னொரு பிரிவினர் கருதுகின்றனர்.இந்த இரண்டாவது பிரிவின் குரலாக இக்கட்டுரை அதிகாரப் பொறுப்பில் உள்ள ஒருவரி டமிருந்து வந்திருக்கிறது.

அர்தீப் எஸ்.புரியின் இந்தக் கட்டுரையைக் கண்டித்து கோத்தபய ராசபட்சே ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாதான் ஈழப்பயங்கரவாத அமைப்பு களுக்குப் பயிற்சி கொடுத்தது, ஆயுதம் கொடுத்தது. அந்த ஆயுதக் குழு ஒன்று 1988 இல் மாலத்தீவு மீது படை எடுத்தது. இந்தியா பிரிவினைவாதிகளுக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால், முப்பதாண்டுகளுக்கு இந்தப் போர் நீடித்திருக்காது. 1987 இல் இலங்கையில் இருந்த அரசு இந்தியாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டது.ஆனால் இப்பொழுதுள்ள குடியரசுத் தலைவர்(இராசபட்சே)இந்தியாவை இலங்கை நடத்தும் போருக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டார்.அர்தீப் புரியும் அவர் மனைவி இலட்சுமியும் இலங்கையில் இந்தியத் தூதரகத் தில் 1987காலத்தில் பணிபுரிந்தார்கள். அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித் எழுதியுள்ள நூலில், இந்தியா எவ்வாறெல்லாம் தவறாக இலங்கைச் சிக்கலில் தலையிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் என்று கோத்தபய தமது அறிக்கையில் கூறியுள்ளார். (தி.இந்து, 12.4.2013)

கொலைக்கும்பலுக்குள் பிளவு ஏற்பட்டால்-கொள்ளைக் கும்பலுக்குள் பிளவு ஏற்பட்டால் இப்படித்தான் ஒருவர் குற்றச்செயலை இன்னொருவர் அம்பலப் படுத்துவார்கள்.அது போல்தான் இந்தியாவும் இலங்கையும் ஒன்றையொன்று குற்றம் கூறத் தொடங்கியுள்ளன. இன்னும் கூடுதலாக இவ்விரு நாடுகளின் குற்றச்செயல்கள்.ஈழத்தமிழர்களை அழித்ததில் இவற்றின் பாத்திரங்கள் எவ்வளவோ வெளிவரவேண்டியுள்ளது.

தமிழக மாணவர்கள்,இந்திய அரசைப் பகைச் சக்தியாக முன்னிறுத்தி தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தியதுதான் இந்த முறை இந்திய ஆட்சியாளர் களுக்கு எறும்பு கடிப்பதுபோன்ற சிறுவலியை உண்டாக்கியிருக்கின்றது.இந்தஉண்மையை இளந்தலைமுறை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்தியா முட்டாள்தனமாகத் தவறு செய்வது போலவும்,இலங்கையிடம் ஏமாந்து கொண்டிருப்பது போலவும்,இந்தியாவுக்கு உண்மையைப் புரியவைத்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அதைத் திருப்பிவிட முடியும் என்பது போலவும் மூத்த தலைமுறைத் தலைவர்கள் பலர் தமிழ் மக்களிடம் கூறிக் குழப்பி வருகிறார்கள். இவர்களின் குழப்பங்களுக்கு மாணவர்கள் இடம் கொடுக்கக் கூடாது.

இந்தியாவுக்குத் தமிழினத்தின் மீது எப்போதும் பகை நோக்கும் சந்தேகப் பார்வையும் இருந்து கொண்டே இருக்கும்.இந்தியாவிற்காக நம்இனத்தார் கண்ணைப் பிடுங்கி வைத்தாலும் அதைக் கண்கட்டி வித்தை என்று இந்தியா மறுதலித்துவிடும்.இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் காவல் அரணாகத் தமிழீழம் விளங்கும் என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பலமுறை உறுதியளித்தும் அதை ஏற்கவில்லை இந்தியா!

2008-2009 போரை இயக்கிய வல்லுநர் குழு அறுவரில், மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவைச் சேர்ந்த மூவர் 1,எம்.கே.நாராயணன் (மலையாளி)அப்போது இந்தியப் பாதுகாப்பு மதியுரைஞர், இப்போது மேற்கு வங்க ஆளுநர். 2, சிவ சங்கரமேனன் (மலையாளி) அப்போது இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர்,இப்போது இந்தியாவின் பாதுகாப்பு மதியுரைஞர் 3, விஜய் சிங் (வடவர்) அப்போது இந்தியாவின் பாதுகாப்புத் துறை (இராணுவத் துறை) செயலாளர்.

ஈழத் தமிழர் அழிப்புப் போரில் நடந்த இனப்படுகொலைக் குற்றங்கள்,போர்குற்றங்கள், மனித உரிமைப் பறிப்புக் குற்றங்கள் அனைத்திலும் இலங்கை அரசுக்கு எத்தனை விழுக்காடு பங்கிருக்கிறதோ அத்தனை விழுக்காடு பங்கு இந்திய அரசுக்கு இருக்கிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அப்படி என்ன உறவு?பிரிக்க முடியாத நெருக்கம்? அது இன உறவு;மொழி உறவு;பண்பாட்டு உறவு!ஆரிய மரபினத்துக் குரியதாக இந்தியா தன்னைக்காட்டிக் கொள்கிறது. ஆரிய இனவழித் தோன்றல்கள் என்று சிங்களர் தங்களைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர்.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் இதோ கூறுகிறார்:சிங்களர் இந்தியாவின் ஒரிசாவிலிருந்தும், வங்காளத்திலிருந்தும் இலங்கையில் குடியேறியவர்கள். சிங்களமொழி சமற்கிருதம், இந்தி,வங்காளம் ஆகிய வற்றின் வழியாக உருவான மொழி. இலங்கையில் உள்ள தமிழர்கள்,தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் நீங்கலாக இருநாட்டு மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.எனவே இந்தியர்கள் இலங்கைக்கு எதிரான செயல்களைச் செய்யமாட்டார்கள்.

கரியவாசத்தின் இக்கூற்றைத் தமிழகத் தலைவர்கள் சிலர் கண்டித்தார்கள்.ஆனால் நாம் கண்டிக்கவில்லை.ஏன்? நாம், இதுகாறும் கூறிவந்த சிங்களர் இந்தியரின் ஆரிய இனச்சார்பை சிங்களர் ஒருவரே கூறி நமது கூற்றுக்குச் சாட்சியம் அளித்துள்ளார் என்று கூறினோம். தமிழர்கள் ஒரு போதும் ஆரியர் அல்லர்.ஆரியத்திற்கும் தமிழர்களுக்கும் இடையே வரலாறெங்கும் போரும் பகையும் முரண்பாடுகளும்தான் விரவிக்கிடக்கின்றன.தவிர நல்லுறவும், ஒத்த பண்பும் ஒத்த கொள்கையும் ஒரு போதும் நிலவியதில்லை.

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் போன்றோரை உள்வாங்கிச் செரித்துக் கொண்டது போல தமிழர்களையும் தமிழையும் உள்வாங்கிச் செரித்துக் கொள்ள அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை படாதபாடுபடுகிறது ஆரியம்! தமிழர்கள் சிலர் நிலை தடுமாறினாலும் தமிழ்மொழி தமிழ் இனத்தை மீட்டுக் கொண்டு வந்து விடும்!

உலகின் முதல் மொழி, முதல் செம்மொழி தமிழ்! உலகின் முதல் மாந்தர் தமிழர்! நாம் யாரையும் இரண்டாம் நிலை மக்களாகப் பார்க்கவில்லை.எந்த மொழியையும் நமக்குக் கீழ்ப்பட்ட மொழியாகக் கருதவில்லை.ஆனால் நம்மையும் நம் மொழியையும் தாழ்த்திச் சிதைக்கும் வேலையில் ஓய்வு ஒழிச்சலின்றி ஆரியம் ஈடுபட்டு வருகிறது.தமிழர்களின் மூல மெய்யியல், சிற்பக்கலை, நாட்டியக்கலை, எண்ணியம், ஐந்திரம், உள்ளிட்ட அனைத்தை யும் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்து வைத்துக்கொண்டு அவை அனைத்தும் சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தவை என்கின்றனர் ஆரியப்புரட்டர்கள்!

திருவள்ளுவரின் அசல் பெயர் “ஸ்ரீ வல்லப”என்ற சமற்கிருதப் பெயர்தான் என்கின்றனர். சமற்கிருத நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்டதுதான் திருக்குறள் என்கின்றனர். அவர்களின் புரட்டுக்கு அளவுமில்லை; காலவரம்புமில்லை.

தமிழர் தவிர்த்த “இந்தியர்” அனைவரும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களா? அவ்வாறு நாம் சொல்லவில்லை.மூலத் தமிழினத்தைச் சேர்ந்த மக்கள் இந்தியாவெங்கும் இன்றும் வாழ்கின்றனர். ஆனால் வேறு இனப்பெயருடன், இனக்கலப்புடன், கலப்பு மொழியுடன்! அவர்களும்,வேறுபல இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஆரிய மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, ஆரிய வேதங்களை, புராணங்களை, ஆரியமொழியான சமற்கிருதத்தைத் தங்களின் மரபுப் பெருமைகளாகக் கருதும் பண்பாட்டு உள்வாங்கலுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டவர்கள். எனவே அவர்கள் இந்தியை ஏற்றுக் கொள்வார்கள். ஆரிய மயப்பட்ட வேதத்தை, வேத மரபைப் போற்றுவார்கள்.

எந்த ஒரு நாடும்,தனது மக்களின் ஒருங்கிணைப்பைத் தக்கவைத்து நாட்டுபற்று உணர்ச்சியை ஊட்டுவதற்காக ஒரு மூல இனச்சார்பை-ஒரு மரபு வழிப் பண்பாட்டுச் சார்பை அன்றாடம் சொல்லிக் கொண்டே இருக்கும். அதற்குள் குறிப்பிட்ட இன மரபினரின் ஆதிக்கம் அடங்கியிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம் ஆரியம், வேதம் – சமற்கிருதம், இந்துத்துவா ஆகியவற்றை அன்றாடம் ஓதிக்கொண்டே இருக்கிறது.இந்த ஆதிக்கக் கருத்தியலுக்குள் அகப்படாமல்,வெளியே நின்று எதிர்ப்புத் தெரிவிக்கும் இனங்களில் தமிழர்கள், காசுமீரிகள், நாகர்கள், அசாமியர், மணிப்புரிகள், மேகாலய மக்கள், மிஜோ மக்கள், திரிபுரிகள், அருணாச்சலப் பிரதேச மக்கள் உள்ளிட்டவர்கள் முகமை யானவர்கள்.

தமிழர்களிடையே நால்வருணக் கோட்பாட்டைப் புகுத்தி,நம்மையெல்லாம் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று கூறி இழிவுபடுத்தியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்!தமிழர்களுக்குரிய சிவநெறி, திருமால் நெறி ஆகியவற்றைப் புறந்தள்ளி, வடநாட்டு ஆரிய இந்துத்துவா உயர்வு தாழ்வுக் கோட்டைப் புகுத்தியவர்கள் அவர்கள்.இன்றும் தமிழர்களிடையே நிலவும் சாதி உயர்வு-தாழ்வு,தீண்டாமை போன்ற ஒடுக்கு முறைகளுக்குத் தத்துவப் பின்னணி வழங்குவது ஆரியரின் வர்ணாசிரம தர்மமே!

இவ்வாறான ஆரியத்தின் மனித குல அநீதிகளை ஆன்மிகம், அரசியல், சமூகவியல், என அனைத்துத் துறையிலும் அன்றிலிருந்து இன்றுவரை எதிர்த்து வருபவர்கள் தமிழர்களே! அந்த வரலாற்று உண்மைகளைத்தான் நமக்கு எதிரான பகையுணர்வை வளர்த்துவிடும் நோக்கத்தோடு இலங்கைத் தூதர் கரியவாசம் தமிழர் தவிர்த்த இந்தியரும் சிங்களரும் ஒரே இனம் என்று கூறுகிறார்.

கரியவாசத்தின் இக்கூற்றை இந்திய ஆட்சியாளர்களோ,வடநாட்டுத் தலைவர்களோ, இந்துத்துவா பீடங்களோ, மறுக்கவில்லை என்பதை தமிழக மாணவர்களும் இளைஞர்களும் கவனிக்க வேண்டும்.புத்தமதம் ஆரிய மதங்களுள் ஒன்றுதான்.புத்தர் முற்போக்குக் கொள்கைகளைச் சொன்னார். ஆனாலும் அது ஆரிய மதம்தான். தமிழ்நாட்டில் புத்தமதம் பெருஞ் செல்வாக்கோடு விளங்கிய காலத்தில் தமிழைப் புறந்தள்ளி பாலிமொழியைத் திணித்தது.சிங்கள புத்த மதத்தில் சாதிகள் உண்டு;சிங்கள புத்தபிக்குகள் பெரும்பாலும் முரடர்கள்; ஆரியப் பெருமிதத்தில் ஊறித்திளைப்பவர்கள்!

 தி.மு.க.வின் திரு அவதாரங்கள் செல்லுபடி ஆகாமல் போன நிலையில், கடைசியில் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை” என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு தனது கூட்டணித் தலைமையான காங்கிரசிடம் கோரிக்கை வைத்தது.ஆனால் அதற்கு பா.ச.க. சமாஜ்வாதி பகுசன் சமாஜ், ஐக்கிய சனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டன.தனது நிலைபாடு,எதிர்க்கட்சிகளாலும் ஏற்கப்பட்டதைக் கண்டு காங்கிரசு நிம்மதி அடைந்தது.கரியவாசம் சொன்னது சரியாகத்தானே செயல்படுகிறது.

 இந்தியாவின் தமிழினப்பகை அரசியலை-காங்கிரசின் அரசியலாக மட்டும் குறுக்கிப் பார்த்தாம் நாம் ஏமாந்து விடுவோம்!தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகள் தங்கள் ஆதய அரசியலுக்காக,தமிழின எழுச்சியை வெறும் காங்கிரசு எதிர்ப்பாக மனமாற்றத் துடிக்கின்றன. காங்கிரசு, பா.ச.க. உள்ளிட்ட மேலே சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து வெளி மாநில கட்சிகளும் தமிழினத்தைப் புறந்தள்ளுவதில் சிங்கள இனத்துடன் உறவை வலுப்படுத்துவதில் ஒரே நிலைபாட்டில் உள்ளன. இதற்கு அக்கட்சிகள் 2009 லிருந்து இன்றுவரை ஈழத் தமிழர் இனப்படுகொலை பற்றி எடுத்து வரும் நிலைபாடுகளே சான்று.

வடநாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி வடநாட்டு மனித உரிமைத் தலைவர்களும் ஈழத் தமிழின அழிப்பு பற்றியோ,தமிழக மீனவர் இனப்படுகொலை செய்யப்படுவது பற்றியோ உரிய அக்கறையோடு இயக்கம் நடத்துவதில்லை. கருத்துப்பரப்பல் கூட முழு அளவில் செய்வதில்லை. நியூயார்க்கில் உள்ள மனித உரிமை கண்காணிப்பகம்(human rights watch), இலண்டனில் உள்ள சேனல்-4 தொலைக்காட்சி போன்றவை எடுத்துக் கொண்ட அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு அக்கறை கூட அருந்ததிராயோ மேதா பட்கரோ எடுத்துக் கொண்டதில்லை.

பி.யு.சி.எல். அமைப்பின் தமிழகத் தலைமை அக்கறையோடு செயல்படுகிறது. ஆனால் அதன்அனைத்திந்தியத் தலைமை ஈழத் தமிழர் அவலம் பற்றி உரியவாறு அக்கறைப்படுவதில்லை.

வடநாட்டு ஆங்கில,இந்தித் தொலைக்காட்சிகள் தமிழக மாணவர் பேரெழுச்சியை உரியவாறு காட்டவில்லை.மாணவர் போராட்டத்திற்கு எதிரான செய்திகளை, விவாதங்களை வெளியிட்டனர். ஆங்கில நாளேடுகள் கட்டுக்கோப்பாக, தமிழக மாணவர் எழுச்சிக்கு எதிரான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டன.

டைம்ஸ் ஆப் இந்தியா, தி நியு இந்தியன், எக்ஸ்பிரஸ், தி இந்து முதலிய ஆங்கில நாளேடுகள் விடுதலைப் புலிகளைப் பயங்காரவாதிகளாக சித்தரித் ததுடன் அவர்கள் ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக கொன்றழித்ததாகத் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (1.4.2013) கட்டுரை எழுதிய எம். என். புச் என்பவர் “நில அமைப்பு இனம், மதம், போர் உத்தி ஆகிய அனைத்தின் வழியாகப் பார்த்தால் இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி, அது தனி நாடாக இருந்த போதிலும் என்று கூறுகிறார். அதே வேளை விடுதலைப்புலிகள் ஒரு கொலைகார அமைப்பு என்று சாடுகிறார்.

தமிழகத்தில் தீக்குளிப்பதும், போராடுவதும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் விளைவிக்காது; தனிஈழம் அமைக்க முடியாது என்று இந்து நாளேட்டில் (29.3.2013) சிங்கள இதழாளர் கவுசல் பெரிரா கட்டுரை எழுதினார்.

இராசபட்சே ஆட்சியில் போருக்குப் பின் ஈழத்தமிழர்களுக்கான துயர் துடைப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்று பாராட்டுக் கட்டுரைகள் செய்திகள் வெளியிட்டு வந்த இந்த ஆங்கில ஏடுகள், தனித் தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று தமிழகம் ஒற்றைக்குரலில் முழங்கிய பின் தமிழீழம் அமைய வாய்ப்பில்லை; துயர்துடைப்புப் பணிகள் சரிவர நடந்திட, அதிகாரப் பகிர்வு கிடைத்திடக் கோரிக்கை வைத்துப் போராடுங்கள் என்று அறிவுரை வழங்கின.மாணவர் போராட்டத்தில் துயர் துடைப்புப் பணிகளுக்கான கோரிக்கைகளும் இடம் பெற்றுள்ளன என்ற போதிலும் தனி ஈழத்திலிருந்துக் கவனத்தை மடைமாற்ற ஆங்கில ஏடுகள் அவ்வாறு எழுதின.

 எனவே, காங்கிரசுக் கட்சி மட்டுமே தமிழினத்தின் எதிரி அல்ல. அது ஆட்சியில் இருப்பதால் அதன் தமிழின எதிர்ப்பும் சிங்கள ஆதரவும் பளிச்சென்று அம்பலமாகின்றன. ஆட்சியில் பிற அனைத்திந்தியக் கட்சிகளிடமும், வெளிமாநிலக் கட்சிக்களிடம் தமிழினப் பகைப் பதுங்கி கிடப்பதை 2009 லிருந்து பார்த்து வருகிறோம்.

தினமலர் ஏடு எப்போதும் போல் தமிழின எதிர்ப்பைக் கக்கியது. தினமணியும் “இராசபட்சே போர்க்குற்றவாளி என்றால் தமிழ்நாட்டில் போராடுவோர் போராட்டக் குற்றவாளிகள்” என்று கட்டுரை வெளியிட்டது.

தமிழினத்திற்கெதிரான ஆரியப் பார்ப்பனிய நஞ்சின் செறிவூட்டப்பட்ட திரட்சி ஏடான துக்ளக்,மாணவர் போராட்டமானது அவர்களுக்கான விடுமுறைக் கொண்டாட்டாம் தவிர வேறெதுமில்லை என்று எழுதியது!ஆனாலும் இவ்வளவு பெரிய வீச்சோடு மாணவர் பேரெழுச்சி இனம் சார்ந்து நடக்கிறதே என்ற வயிற்றெரிச்சலை சோவானவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

தமிழக முதலமைச்சர் செயலலிதா,சட்டப் பேரவையில் ஈழத்தமிழர்களுக்கா தரவாகத் தீர்மானங்கள் அடுத்தடுத்து கொண்டு வந்ததை சோவானவரால் ஏற்கவும் முடியவில்லை, கருணாநிதியைத் திட்டும் பாணியில் அவரைத் திட்டவும் முடியவில்லை. “நம்மவா” என்று நாக்குத் தடுமாறியிருக்கும்! “கலிகாலம்” என்று பூணூலை உருவிக் கொண்டிருந்திருப்பார்!

தமிழக மாணவர்களும் இளைஞர்களும் தமிழக முதல்வர் செயலலிதாவிடம் ஏற்பட்ட “மாற்றங்களை” புரிந்துகொள்ள வேண்டும். இராசீவ்கொலை வழக்கிற் காக பிரபாகரனை இந்திய இராணுவம் பிடித்து வந்து கூண்டில் ஏற்ற வேண்டும் என்று 2002இல் சட்டபேரவையில் தீர்மானம் போட்டவர் அன்றைய செயலலிதா!

எதிர்க் கட்சித் தலைவியாய் இருந்த போதிலும் 2008 ஆம் ஆண்டு, ஈழத் தமிழின அழிப்புப் போர் தீவிர மடைந்த போது, போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அறிக்கை வெளியிட்டவர் இதே செயலலிதா!

2009 இல் தமிழின அழிப்புப் போரைப் இந்தியாவும் இலங்கையும் தீவிரப் படுத்திய போது தமிழ்நாடு கொந்தளித்தது. சாதி, மதம்,கட்சி கடந்து இன உணர்ச்சி மனிதர் நேய உணர்ச்சி ஆகியவை உந்தித்தள்ள என்ற உணர்வுகளின் கீழ் தமிழ் மக்கள் போராடினார்கள். முத்துக்குமாரின் தீக்குளிப்பு,எல்லா மக்களின் கவனத்தையும் ஈழத்தமிழர்கள் பக்கம் திருப்பியது.கருணாநிதியின் இனத்துரோகத்திற்கு எதிராகவும்,அவரது பாவலா போராட்டங்களை வெறுத்தும் மக்கள் கொந்தளித்தார்கள். “தமிழின வாக்கு வங்கி” ஒன்று உருவாகி வருகிறது. என்பதை செயலலிதா கவனித்தார். “நான் சொல்வதைக் கேட்கும் அரசு தில்லியில் அமைந்தால் இராணுவத்தை அனுப்பித் தனிஈழம் உருவாக்கித் தருவேன்” என்று அறிக்கை வெளியிட்டார்.

மக்களின் ஆதரவுடன் மாபெரும் மாணவர் எழுச்சி ஈழத் தமிழர்களுக்காக எழுந்துள்ள வேளையில், அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும், ஆதரிப்பதன் மூலம் மாணவர்கள் போராட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உத்தியுடனும் செயல்படுகிறார் செயலலிதா. 2009 இல் கருணாநிதி எடுத்த இனத்துரோக நிலைபாட்டை விட இந்த நிலைபாடு மேலானது!

நடந்தது இனப்படுகொலை,இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை,தற்சார்பான பன்னாட்டு, புலனாய்வு, தமிழ் ஈழமே தீர்வு என்று செயலலிதா நிறைவேற்றிய தீர்மானங்கள் வெளியிட்ட அறிக்கைகள் ஒவ்வொன்றும் கோபாலபுரத்தின் மீது வீசியகுண்டுகள்!குலை நடுங்கிப் போனார் கருணாநிதி!இதையும் புரிந்துகொள்ளவேண்டும்.கடைசியாய் செயலலிதாவும் கருணாநிதியும் ஈழம் தொடர்பாகக் கிட்டத்தட்ட ஒரே கோரிக்கை வைக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இந்த நிலைக்கு இவர்களையும் தமிழகத்தையும் கொண்டுவந்ததற்கு இரண்டு உந்து சக்திகள் இருக்கின்றன.ஒன்று தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்த் தேசிய –தமிழின ஆதரவு அமைப்புகளின் போராட்டங்கள் – பரப்புரைகள் – தர்க் கங்கள்! இவ்வமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.மாணவர் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்ததும் அவர்களின் கோரிக் கைகளின் தெளிவுக்கும் கூர்மைக்கும் கருத்துகள் வழங்கியதும் இவ்வமைப்புகளே!

இரண்டாவதாக உடனடிக் காரணம்,பீறிட்டுக் கிளம்பித் தமிழகம் தழுவிய பேரெழுச்சியை மாணவர் போராட்டம் உருவாக்கியது!

இன உணர்வு என்பது பாச உணர்ச்சிபோல் மனிதர்களுக்கு இயல் பூக்கமாய் (Instingt) உள்ளது.இயற்கையாய் வளரவேண்டிய தமிழின உனர்வை நசுக்கும் வகையில் இங்கே “இந்தியன்” என்ற இல்லாத இனத்தின் பெயரை –ஆரியத்திற்காகத் தயாரிக்கப் பட்ட செயற்கை இனத்தின் பெயரைத் திணித்தார்கள். இதற்குப் போட்டியாக இல்லாத இன்னொரு இனப்பெயரை,நம்மோடு பகைப்போக்கைக் கடைபிடிக்கும் தெலுங்கர்,கன்னடர், மலையாளிகளையும்,நம்முடன் கற்பனையாக ஒருங்கிணைத்துக்கொண்டு “திராவிடர்” என்று நமக்குப் பெயர் சூட்டினார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்கள் சொந்த இனத்தைச் சொல்லிக் கொண்ட போது தமிழர்கள் மட்டும் தொடர்பில்லாத செயற்கை இனப் பெயர்களைச் சுமந்தார்கள்.இதனால் சொந்த இன உணர்ச்சி இழந்து,இன ஒற்றுமையை இழந்து சீரழிந்தார்கள்.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற நமது மரபுரிமையான நீர் வளங்களை இழந்த போதும்,கச்சத்தீவை இழந்த போதும் நம்மின மீனவர் அறுநூறு பேரை சிங்களப்படை சுட்டுக் கொன்றபோதும், 2008-2009 இல் ஒன்றரை இலட்சம் உறவுகளை ஈழத்தில் எதிரிகள் இனப்படுகொலை செய்த போதும் நம்மால் அந்த அநீதிகளைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு தீர்மானகரமான வலிமையோடு போராடமுடியவில்லை. இன உணர்ச்சி அடிப்படையில் நம் ஒற்றுமை முழு அளவில் அமையாததே இதற்குக் காரணம்.

1980களிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக எத்தனையோ கொந்தளிப்புகள், போராட்டங்கள், ஈகங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடந்துள்ளன.அனைத்துக் கட்சிகள் சேர்ந்தும் தனித்தும் நடத்தியுள்ளன. ஆனால் தமிழர் தமிழ்த் தேசியம் என்ற சரியான அடையாளத்தின் கீழ் நடைபெறவில்லை.“திராவிடர்,இந்தியர்”என்ற குழப்பமான அடையாங்களுடன் நடத்தப்பட்டன.

இந்தியாவில் தமிழினம் ஒடுக்கப்படுவதைப் பற்றியும் தமிழினத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதைப் பற்றியும் சிறிதும் சிந்தை செய்யாமல்,ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டத்துடன் தமிழக இனச்சிக்கலை இணைக் காமல்,ஈழ ஆதரவுப் போராட்டங்கள் பேரெழுச்சியுடன் நடந்து கொண்டிருந்தன.

தாங்கள் வாழும் மண்ணில் உள்ள மக்களின் உரிமைச்சிக்கலுடன் இணைக்கப் படாமல் அயல் மண்ணில் தம் இனத்தின் விடுதலைக்கு நடக்கும் போராட்டத்தை ஆதரிப்பது மண்ணில் வேர் இறங்காத் தாவரம் மிதப்பது போல்தான் இருக்கும்.எவ்வளவு பெரிய எழுச்சி நடந்தாலும் அது அவ்வப்போது மழைக்காலத்தில் உருவாகி ஓடிவரும் காட்டு வெள்ளம் போல் பெருகிப் பின்னர் வற்றி விடும்.

அப்பொழுது 1990 பிப்ரவரி 25இல் சென்னைப் பெரியார் திடலில் “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு” நடத்தினோம். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (அப்போது – எம்.சி.பி.ஐ)மற்றும் பேராசிரியர் சுபவீரபாண்டியன், முனைவர் ந.பிச்சைமுத்து உள்ளிட்ட பலரும் முன்முயற்சி எடுத்து நடத்திய மாநாடு.அதில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், முனைவர் சாலை இளந்திரையனார், கவிஞர் தணிகைச் செல்வன்,கி.வெங்கட்ராமன், அ.பத்மநாபன், பேரா.சுப.வீ., இராசேந்திரச்சோழன், கவிஞர் இன்குலாப், வழக்கறிஞர் அருள்மொழி(தி.க.),க.பரந்தாமன் (த.தே.இ.-பழநெடுமாறன் அவர்களின் உரையை படித்தார்) கவிஞர் அறிவுமதி, முனைவர் செள.வேணுகோபால், மருத்துவர் விமுனாமூர்த்தி கவிஞர் ஈரோடு தமிழன்பன், நகைமுகன், உள்ளிட்டோர் கருத்தரங்கம், பாவரங்கம், நிறைவரங்கம் ஆகியவற்றில் பங்கேற்றனர். மாணவர்கள் பங்கேற்ற மாணவர் அரங்கம் அரங்கம் இராசன் தலைமையில் நடைபெற்றது. அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் முனைவர் தமிழ்க்குடிமகன் மாநாட்டிற்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்.

மாநாட்டு நிகழ்வுகளையும், தமிழகம் எங்குமிருந்து வந்து கலந்து கொண்ட பெரும் திரளான தமிழர் கூட்டத்தையும் கண்டு பொறுத்துக் கொள்ளமுடியாத துக்ளக் ஏடு “இலக்கு பிரிவினை- வழி வன்முறை” என்று தலைப்பிட்டு மூன்று பக்கம் கொச்சைப்படுத்தி எழுதி, அன்றைய தி.மு.க. அரசை நடவடிக்கை எடுக்கத் தூண்டியது.

அம்மாநாட்டின் நிறைவரங்கத்திற்குத் தலைமை தாங்கிய நான் முன்மொழிந்து விளக்கிய தன்னுரிமைத் தீர்மானம் நிறைவேறியது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self Determination With The Right to secede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றது அத்தீர்மானம் அதற்காகப் பிரிவினைத் தடைச் சட்டம் 1967 (unlawfull Activities prevention ACT- 1967 இன் கீழ் தி.மு.க. ஆட்சி என்னைத் தளைப்படுத்தி சென்னை நடுவண்சிறையில் அடைத்தது.

பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டேன். இந்திய அரசுக் கொடியை அவமதித்துக் கவிதை பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கவிஞர் அறிவுமதி மீது வழக்குக் போடப்பட்டது.நானும் அறிவுமதியும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு எட்டாண்டுகள் அலைந்தோம். வழக்கு விடுதலை ஆனது.நான்தீர்மானத்தைமறுக்கவில்லை.தீர்மானத்தைமுன்மொழிந்ததைஏற்றுக்கொண்டேன். கருத்துரிமை என்று வழக்கறிஞர்கள் செ.விஜயகுமாரும்,தஞ்சை இராமமூர்த்தியும் வாதாடினார். கட்டணம் பெறாமால் வழக்கை நடத்தினர். கவிஞரும் பேராசிரியருமான ஈரோடு தமிழன்பன் வழங்கிய கவிதை, இந்திய அரசுக் கொடியை அவமதித்து விட்டதாகக் கூறி தூர்தர்சன் (சென்னைத் தொலைக் காட்சி) செய்தி வாசிப்பிலிருந்து அவரை நீக்கினர்.

 எழுந்து, விழுந்து தொய்ந்து கிடந்த தமிழ்த் தேசியம் மீண்டும் 1990 பிப்ரவரி 25 இல் புத்துயிர் பெற்றுள்ளது. அத் தமிழ்த் தேசியம் இன்றுவரை விடாமல் வளர்க்கப்பட்டுள்ளது. அப்போது அதை ஏற்கமறுத்த மார்க்சிய-லெனினிய அமைப்புகள் சிலகாலப் போக்கில் ஏற்றுக் கொண்டன. இப்பொழுது பல்வேறு அமைப்புகள் தமிழ்த் தேசியம் பேசுகின்றன. தவிர்க்க முடியாத அது கருத்தியலாக வளர்ந்துள்ளது.

 எமது தேசியமொழி தமிழ், எமது தேசிய இனம் தமிழர், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலட்சியம் என்பதுதான் தமிழ்த் தேசியம். இதில் எது குறைந்தாலும் அது தமிழ்த் தேசியம் இல்லை.

தமிழீழத் தேசியம் நமது சகோதரத் தேசியம்,தமிழ்த் தேசியம் நமது தேசியம்!தமிழீழத் தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே உறவு இருக்கிறதே தவிர இரண்டும் ஒன்றல்ல!

தமிழ்த் தேசியத்தில் கால் பதித்து நின்று கொண்டு நடத்தும் தமிழீழ ஆதரவுப் போராட்டமே இடைநிறுத்தம் இல்லாமல் தொடரும்! தமிழ்த் தேசியத்தில் காலூன்றாத தமிழீழ ஆதரவு தற்காலிகமானது;அது காட்டாற்று வெள்ளம் போல் ஓடி நின்று விடும் உணர்ச்சிப் பெருக்காகும்

 இனப்பகை அரசான இந்திய அரசு, தமிழ்த் தேசிய அடித்தளத்தின் மீது எழும் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குத்தான் அஞ்சும், பணியும். ஐ.நா. மன்றத் திற்கான இந்தியாவின் நிரந்தரப் பேராளர் அர்தீப் எஸ்.புரி மேற்படி கட்டுரையில் “தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஈழ ஆதரவு எழுச்சி,ஆதாய அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்டவை என்று புரிந்து கொண்டால் அந்தப் புரிதல் தவறானது மட்டுமல்ல,பேரழிவை வரவழைத்துக் கொள்வதாகும்” என்று எச்சரித்துள்ளதைக் கவனியுங்கள்.

கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம்பெறும்!

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்

தமிழ்த் தேசிய அடித்தளத்தை வலுப்படுத்துவோம்

தமீழத் தேசியத்திற்குத் துணை நிற்போம்!

Pin It