தமிழகத்தின் ஒன்பது பல்கலைக் கழகங்களில் விவேகானந்தர் குறித்து உயர் ஆய்வு நடுவங்கள் நிறுவப்படும்; ஒவ்வொரு நடுவத்திற்கும் 25 இலட்சம் ரூபாய் வைப்பு நிதியாக ஒதுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதா 8.4.2013அன்று தமிழக சட்டப் பேரவையில் விதி 110இன் கீழ் அறிவிப் புச்செய்தார்.விதி 110இன் கீழ் அறிவிப்புச் செய்தால் அந்தத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் விவாதம் செய்ய முடியாது.இப்பொழுதெல்லாம் முதல்வர் செயலலிதா விதி 110இன் அடிமை (addict)ஆகிவிட்டார்.அது ஒரு புறம் இருக்கட்டும்.

“இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு வழி காட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் தற்கால சூழ்நிலைக்கும் பொருத்தமாக விளங்குவதைக் கருத்தில் கொண்டு, சென்னை,மதுரைகாமராசர்,பாரதியார்,பாரதிதாசன்,அன்னைதெரசா,அழகப்பா,மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், திருவள்ளுவர் ஆகிய 9 பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 25இலட்சம் ரூபாய் செலவில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.’’

“இதன் மூலம் விவேகானந்தரின் தேசபக்தி, ஒழுக்கம், கண்ணியம்,அறிவாற்றல், மத சகிப்புத் தன்மை ஆகியவை மாணவர்களிடமும் பொது மக்களிடமும் எடுத்துச் செல்லப்படும்’’ என்கிறார் முதல்வர்.

வர்ண-சாதி ஒழிப்பு,உருவ வழிபாடும் மதமும் நீக்கப்பட்ட ஒளி வழிபாட்டின் வழி ஓர் இறைப் பேராற்றலைத் தொழுவது,ஒடுக்கப்பட்ட வகுப்பினர்,இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைப்பது போன்ற சாதனைகளை ஆன் மிகத்தில் நிகழ்த்தியவர் தமிழரான வள்ளலார் இராமலிங்க அடிகளார். அவரது சமத்துவக் கொள்கையை, முற்போக்கான ஆன்மி கத்தை மாணவர்களிடமும் மக்களிடமும் கொண்டு செல்லத் தமிழகப் பல்கலைக் கழகளில் உயராய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதா? இல்லை.

ஒப்பிட்டுப் பார்த்தால், விவேகானந்தரை விட உயர் கொள்கைகளை 19 ஆம் நூற்றாண்டில் பரப்பி ஆன்மிகத்தில் சமத்துவப் புரட்சி செய்தவர் வள்ளலார். விவேகானந்தர் முற்போக்குக் கருத்துகளைக் கூறியிருந் தாலும் வர்ணாசிரம ஒழிப்பை வலியுறுத்தியவர் அல்லர். வர்ணாசிரம வகுப்புப் பிரிவினைகளுக்குப் புதிய விளக்கம் அளித்தார் விவேகானந்தர். “நால்வருணம், தோல் வருணம், மேல் வருணம்’’ என்று நையாண்டி செய்து வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தவர் வள்ளலார்.

“வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர், சூதாகச் சொன்ன தல்லால் உண்மை நிலை தோன்ற உரைத்தல் இல்லை’’ என்று வைதீகத்தைச் சாடியவர் வள்ளலார். அவர்க்கு ஏன் தமிழகப் பல்கலைக் கழகங்களில் உயராய்வு மையங்கள் தொடங்கப் படவில்லை.? அவரது வைதீக எதிர்ப்புத்தான் அவர் புறக்கணிக்கப்படு வதற்குக் காரணமா?

திருவள்ளுவருக்குத் தமிழ்நாட்டில் எத்தனைப் பல்கலைக்கழகங்களில் உயராய்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் ஆய்வு மையம் செயல் படவில்லை. மற்ற பல்கலைக் கழகங்களில் திருவள் ளுவர் உயராய்வு மையங்கள் நிறுவப்படவில்லை.தமிழ் நாட்டில் மட்டும் வங்காளியான விவேகானந்தருக்கு 9 பல்கலைக் கழகங்களில் உயராய்வு மையங்கள் ஏன்?

மேற்கு வங்காளத்திலோ அல்லது வேறு மாநிலங்களிலோ உள்ள பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர்க்கோ,வள்ளலார்க்கோ ஓர் உயராய்வு மையம் கூட கிடையாது.

கன்னியாகுமரிக் கடல் குன்றில் உள்ள விவேகானந் தர் மடம் ஆர்.எஸ்.எஸ். பாசறையாக விளங்குகிறது. அது மட்டுமின்றி வங்காளிகளின் ஆதிக்கக் கோட்டையாக விளங்குகிறது. அடுத்தாற் போல் உள்ள சிறிய கடல் பறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்க தி.மு.க. ஆட்சி நடவடிக்கை எடுத்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தனர் அங்குள்ள விவேகானந்தர் பீடத்தினர். அவர் களின் எதிர்ப்பை மீறித்தான் அங்கு திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது.

அங்கு விவேகானந்தர் பீடத்திற்குச் செல்ல தொடர்ச் சியான படகு வசதி உண்டு. திருவள்ளுவர் பாறைக்குச் செல்ல தொடர்ச்சியான படகு வசதி இல்லை.தமிழக அரசு திருவள்ளுவரைப் புறக்கணிப்பது ஏன்?

இப்பொழுது விவேகானந்தர் இந்துத்துவா வெறி அமைப்புகளான ஆர். எஸ். எஸ்., பா.ச.க. ஆகிய வற்றின் அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறார்.ஜெயலலிதா தமிழகத்தின் ஒன்பது பல்கலைக்கழகங்களில் விவேகானந்தர் உயராய்வு மையம் அமைப்பது இந்துத்துவா தீவிரவாதம் பரவவே வழி அமைக்கும்.

 எனவே இத்திட்டத்தைக் கைவிட்டு, ஒன்பது பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர், வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும். 

Pin It