இராணுவமயமாக்கப்பட்ட முதலாளியமே ஏகாதிபத்தியம்! அடுத்த நாட்டை ஏதோ ஒரு வகையில் ஆக்கிரமிக்காமல் அதனால் உயிர்வாழ முடியாது. புதிய உடுப்புகளுக்குள்ளும் ஒப்பனைகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் காட்டுமிராண்டிகளே வடஅமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள். ஜான் கென்னடி – ஜார்ஜ்புஷ் – பாரக் ஒபாமா முதலிய அனைவரும் பழங்காலக் காட்டுமிராண்டிகளைவிடக் கொடியவர்கள்! வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் புகுந்து இலட்சக்கணக்கில் மனித வேட்டை நடத்திய மனிதப் பிசாசுகள் இவர்கள்!

இப்பொழுது மனிதக் கறி தேடி சிரியாவில் மோப்பம் பிடிக்கிறது வடமொரிக்க பூதம்! ஒபாமாவின் உடல் ஆப்ரிக்கக் கருப்பு; உள்ளம் ஏகாதிபத்திய வெள்ளை!

பிள்ளை பிடிப்பவர்கள் கையில் சாக்லேட் இருக்கும். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையின் பதாகையில் “சனநாயகம்“, “மனிதஉரிமை” என்று எழுதப்பட்டிருக்கும்.

ஒபாமா சிரியாவின் மீது படையெடுக்கக் கூறிய காரணங்கள் யாவை? 31.08.2013 அன்று வாசிங்டனில் ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்:

“சிரியா அரசு வேதி (இரசாயன) ஆயுதத் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் உயிரிழந்த படங்களை நாம் பார்த்தோம். அதன் பிறகும் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. சிரியாவில் நடைபெற்ற வேதி ஆயதத் தாக்குதல் மனித மாண்புகள் மீதான நேரடித் தாக்குதல் மட்டுமின்றி அது நமது தேசியப் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதனால்தான் சிரியா மீது அமெரிக்கா படைநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். இந்த நடவடிக்கை மூலம் சிரியாவின் பசீர் அல் – அசாத் அரசைத் தண்டிக்க விரும்புகிறேன்.”

சிரியாவில் 1971 ஆம் ஆண்டிலிருந்து பாத் கட்சியின் பசீர் அல்அசாத் குடும்ப எதேச்சாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த எதேச்சாதிகாரத்தை வீழ்த்தி சனநாயக ஆட்சி கொண்டுவர அங்கு ஆயுதப் புரட்சி நடக்கிறது.

எகிப்து மற்றும் சில அரபு நாடுகளின் எதேச்சாதிகார அரசுகளுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் வெடித்தது. இது “அராபிய வசந்தம்” என்று அழைக்கப்பட்டது. அப்போது 2011 மார்ச்சு மாதம் சிரியாவிலும் அராபிய வசந்தம் எழுச்சி கொண்டது.

சனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காகப் போராடும் மக்களை பசீர் அரசு மிகக்கொடிய முறையில் படைகளை ஏவித் தாக்குகிறது. அங்கு உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.

சிரிய அரசுப் படைகள் 2013 ஆகத்து 21 அன்று ரிஃப் டிமாஷ்க் மாநிலத்தில் கவுட்டா (Ghouta) பகுதியில் மக்கள் மீது வேதிக் குண்டுகளை வீசியது. குருதி கொட்டவில்லை. உறுப்புகள் அறுபடவில்லை. புயற்காற்றில் மரங்கள் வீழ்ந்து கிடப்பது போல் மூச்சுத்திணறி உயிர்விட்டு மனிதப் பிணங்கள் இறைந்து கிடந்தன. சற்றொப்ப 355 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதிக் குண்டுகள் ஐ.நா. மன்றத்தால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள். அவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது.

தங்கள் படை வேதிக் குண்டுகளை வீசவில்லை; போராளிகளே வீசிக் கொண்டார்கள் என்று ரீபசீர் அரசு கூறுகிறது.

பசீர் அரசை எதிர்த்துப் புரட்சி அமைப்புகளுக்கு கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வழியாக ஒபாமா ஆட்சி ஆயுதங்கள் விற்கிறது. ரசியாவும் ஈரானும் பசீரின் படைக்கு ஆயுதங்கள் விற்கின்றன.

2009 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடில்லாத பாதுகாப்பு வளையத்திற்குள் வாருங்கள் என்று வரவழைத்து பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் போட்டுக் கூட்டம் கூட்டமாகக் கொன்றதே சிங்கள அரசு, அப்பொழுது ஏன் இப்பொழுது போல் ஒபாமா துடிக்கவில்லை. அதை ஏன் தட்டிக் கேட்கவில்லை? அங்கு நடந்த மனித அழிவைத் தடுக்க ஏன் முன்வரவில்லை.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இராசபட்சே அரசு பயன்படுத்துகிறது என்று ஈழத்தமிழ் அமைப்புகள் ஒபாமாவுக்கும் ஐ.நா. மன்றத்திற்கும் முறையீடுகள் அனுப்பினவே, அதை ஏன் கண்டுகொள்ளவில்லை அமெரிக்காவும் ஐ.நா. மன்றமும்? ஏனெனில் இலங்கையில் அமெரிக்கா கொள்ளயடிக்க பெட்ரோலியம் இல்லை; தங்கம் இல்லை! வல்லரசுகளின் சனநாயகம் கொள்ளையடிக்கும் வாய்ப்புகளைப் பொறுத்ததுதானே!

சிரியாவில் வேதிக் குண்டு வீசப்பட்டது வட அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து என்கிறார் ஒபாமா, அது எப்படி? சிரியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க முடியாத நிலை இருந்தால் அது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து! ஒபாமாவின் அகராதியில் தேசியப் பாதுகாப்பு என்பதன் பொருள் அடுத்த நாட்டின் வளத்தைக் கொள்ளையடிக்கும் உரிமை!

ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்காத ரசியாவும் சீனாவும் இப்போது சிரியாவின் மீது அமெரிக்கா படையெடுக்க முனைவதை எதிர்த்து வருகின்றன. வரவேற்கத்தக்கது. இந்தியாவும் அமெரிக்கா சிரியாவின் மீது படையெடுக்கக் கூடாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. சோழியன் குடுமி சும்மா ஆடாது.

இந்திய ரூபாயின் மதிப்பு கிடுகிடு பள்ளத்தில் வீழ்ந்ததற்கு உள்நாட்டுக் காரணங்கள் பல இருக்கின்றன. வெளிநாட்டுக் காரணங்களில் முகாமையானது வட அமெரிக்க அரசு டாலர் மேம்பாட்டு நடவடிக்கைகள் என்று எடுத்த ஒரு தலைச் சார்பான இந்தியா போன்ற வரும் நாடுகளுக்குப் பாதகமான முடிவுகளும் ஆகும். இதனால் இந்தியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் நாணயமதிப்பு பாதிக்கப்பட்டது.

சிரியா மீது அமெரிக்கா படையெடுக்கக் கூடாது என்று இந்தியா பகிரங்கமாகப் பேசியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்திய முஸ்லீம் அமைப்புகள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முயற்சியைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்துகின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்று இந்திய ஆட்சியாளர்கள் கருதுவதும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாகும்.

சிரியாவில் பசீர் அரசு தூக்கி எறியப்பட்டு மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்பது உடனடித் தேவை. அங்கு தற்சார்புள்ள மக்களாட்சி மலர ஒரு போதும் வடஅமெரிக்கா அனுமதிக்காது. ஈராக், ஆப்கனிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் இராணுவத் தலையீடு செய்த அமெரிக்கா அங்கிருந்த எதேச்சாதிகார ஆட்சிகளை அப்புறப்படுத்தியது. ஆனால் அங்கல்லாம் தற்சார்புள்ள மக்களாட்சி உருவாகாமல் பார்த்துக் கொண்டது.

பசீரின் எதேச்சாதிகார ஆட்சியை எதிர்த்து நடைபெறும் புரட்சியில் இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மனித அழிவு முடிவுக்கு வரவேண்டும்.

பசீர் அரசுக்கு ஆயுதம் கொடுப்பதை ரசியாவும் ஈரானும் நிறுத்த வேண்டும். அமெரிக்க வல்லூறு சிரியா வானில் பறக்காமல் தடுக்க வேண்டும். இப்பொழுது ரசியாவின் முயற்சி காரணமாக சிரியாவின் மீது உடனடியாகப் போர் தொடுக்கும் நிலைபாட்டை அமெரிக்கா தள்ளி வைத்துள்ளது. ரசிய கூறிய திட்டத்தின்படி ஐ.நா. வல்லுநர் குழு வேதி ஆயுதங்கள் குறித்து சிரியாவில் சோதனை நடத்த அந்நாடு ஒத்துக் கொண்டது. ஒரு வேளை வேதி ஆயுதங்கள் இருந்தால் ஐ.நா.வின முடிவுப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர அமெரிக்காவின் விருப்பப்படி நடவடிக்கை கூடாது என்பதையும் ரசியத் திட்டம் கூறுகிறது.

பிரான்சைத் தவிர பிரிட்டன் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகள் சிரியாவில் போர் தொடுக்க ஆதரவு தரவில்லை. அது மட்டுமின்றி அமெரிக்க மக்களும் ஒபாமாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கிறார்கள்.இவையெல்லாம் ஒபாமாவின் படையெடுப்பு ஒத்திவைக்கப்பட்டதற்கான உடனடிக் காரணங்கள். ஆனால் ஒபாமா சிரியா மீது படையெடுக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டார் என்று கருதமுடியாது.

அமெரிக்காவே சிரியாவில் தலையிடாதே! என்ற முழக்கம் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழகத்திலும் ஒலிக்க வேண்டும். ரீக்ஷீபசீர் அரசை நீக்கி சனநாயக அரசை உருவாக்க உலக நாடுகள் உருப்படியான முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Pin It