உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கி னிலே ஒளி உண்டாகும் என்ற பாரதியார் கூற்றுக் குச் சான்றாக முதுபெரும் எழுத்தாளர் தோழர் தி.க.சி. விளங்குகிறார். 2014 மார்ச்சு 30 ஆம் நாள் தொண்ணூறைத் தொட உள்ள தி.க.சி.யின் உற்சாகப் பெருக்கை என்னென்று சொல்வது!

கடந்த சில ஆண்டுகளாக நெல்லைக்குப் போனால் தி.க.சி.யைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். 11.09.2013 அன்று த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அ. ஆனந்தன், என் வாழ்க்கைத் துணைவி இலட்சுமி, நெல்லைத் தோழர் கணேசன் ஆகியோருடன் 24 இ, சுடலை மாடன் வீதியில் உள்ள அவர் இல்லத்தில் தி.க.சி. யைச் சந்தித்து உரையாடினேன்; உரையாடினோம்.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் பாசம் மிக்கப் படிப்பாளர்களில் தி.க.சி.யும் ஒருவர். “தமிழர் கண்ணோட்டம் வெறும் தமிழர் கண்ணோட்டம் இல்லய்யா அது சோசலிசத் தமிழர் கண்ணோட்டம். உங்கள் அமைப்புக்கு வெளியில் உள்ள எழுத்தாளர்களை இன்னும் கூடுதலாக எழுத வையுங்கள். வெங்கட்ராமன் எழுத்து நன்றாக உள்ளது. அமரந்தா, காந்திமதி போன்றவர்களைக் கூடுதலாக எழுதச் சொல்லுங்கள். ஒரு இதழ் குறித்த காலத்தில் தொடர்ந்து வருவதே அதை நடத்தும் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அறிகுறி” என்று பேசிக் கொண்டு போன தி.க.சி.யை இடைமறித்து “உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது?” என்றேன். “அண்மையில் கூட இலேசான நெஞ்சடைப்பு வந்தது. இது 6ஆவது தடவை. மகன் வண்ணதாசன் அழைத்துக் கொண்டு போய் மருத்துவம் பார்த்துத் தன் வீட்டிலேயே வைத்திருந்தார். உடல் சற்றுத் தேறியவுடன் இங்கு வந்துவிட்டேன். என் பிள்ளைகள் அனைவரும் பாசமானவர்கள். என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். என்றார்.

“என்னிடம் சிலபேர் மணியரசனுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன நெருக்கம் என்று கேட்டார்கள். எங்கள் நெருக்கத்திற்குக் காரணம் தமிழ்தான் என்றேன். நம்முடைய உறவுக்குத் தமிழைவிட வேறென்ன வேண்டும்? பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரிடம் நமக்கு ஏற்பட்ட நெருக்கம் தமிழால் தானே!

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில்! இன்றும் அதில்தான் இருக்கிறேன். ஜீவா என் தலைவர். இன்று தோழர் நல்லக்கண்ணு நான் மதிக்கும் தலைவர். தமிழ்த் தேசியம் தேவை. அது ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சோசலிசத்தையும் கொண்டிருக்க வேண்டும். சிரியாவில் போர் தொடுக்க ஒபாமாவுக்கு அமெரிக்காவிலேயே ஆதரவில்லை. நம் இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டபோது இந்தியாவில் வேறு எந்த இனமும் துயரப்படவில்லையே! இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மழை பொழிவது போல் தொடர்ந்து பேசினார்.

“தமிழர் கண்ணோட்டம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. அதை விரிவு படுத்துங்கள்” என்றார். விடை பெற்று வரும்போது தமிழர் கண்ணோட்டம் இதழ் ஏற்படுத்தித்தரும் உறவுகளையும் அறிமுகங் களையும் எண்ணினேன்.

கடந்த 1,2 (செப்டம்பர்) நாள்களில் தோழர் கி. வெங்கட்ராமன், தோழர் குழ.பால்ராசு ஆகியோரும் நானும் வேதாரணியம் பகுதியில் கட்சிக்கு நிதி சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். 1.9.2013 மாலை ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் “தமிழ் இலக்கியத்தில் தமிழ்த் தேசம்” என்ற தலைப்பில் இலக்கியக் கூட்டம் போட்டிருந்தார்கள். மூத்த எழுத்தாளர் புலவர் வாய்மைநாதன் தலைமை தாங்கினார். அதில் பேசினேன். புலவர் வரதராசன், தோழர் சிவ வடிவேலு ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த நண்பர்கள் அங்கு வந்திருந்தனர். கூட்டம் நிறைவடைந்ததும் தமிழர் கண்ணோட்டத்திற்குத் தங்களால் இயன்ற அன்பளிப் புத் தொகை வழங்கினர். இதழ் உறுப்புக் கட்டணம் தந்தனர்.

மறுநாள் தோழர் வரதராசனும் வேதாரணியம் தோழர் வீரமணியும் வேதாரணியம் நகரத்தில் பலரிடம் எங்களை அழைத்துச் சென்றனர். அவர்களில் பெரும் பாலோர் தமிழர் கண்ணோட்டம் படிக் கிறார்கள். அவர்களிடம் இதழைக் கொண்டு போய்ச் சேர்த்தவர் வரதராசன். தோழர் வீரமணியும் அப்பணியில் உள்ளார். ஆதலால் உரிமை உள்ள உறவினர் களைப் போல் எங்களை அன்புடன் வர வேற்றார்கள். பாசத்துடன் உரையாற் றினார்கள். இயக்கத்திற்கு நன் கொடையும் தந்தார்கள்.

கடந்த சூலை 27,28 நாள்களில் இராமநாதபுரம், இராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய ஊர்களுக்குக் கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். இராமநாதபுரத்தில் தோழர் நாகேசுவரன் தங்கட்சி மடத்தில் தோழர்கள் கணேசன், செரோன்குமார் ஆகியோர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். த.தே.பொ.க.வின் அமைப்பு வலு இல்லாத அப்பகுதியில் பலர் அன்போடு உறவு கொண்டாடிப் பழகினர். தமிழர் கண்ணோட்டம் போட்ட உறவுப்பாலம் பாம்பன் பாலம் போல் பயன்பட்டது. தோழர் மதுரை ஆனந்தன் அப்பகுதிகளில் தமிழர் கண்ணோட்டத்தைக் கொண்டு சேர்த்திருந்தார்.

இராமநாதபுரம் கூட்டத்தில் பரமக்குடி பணி நிறைவு ஆசிரியர் சௌந்தரபாண்டியன் சேர்த்திருந்த பதினாறு த.க. உறுப்புத் தொகையை அளித்தார். இதழை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் கவலையும் அதிகமானது.

Pin It