இந்தியாவை ஆளும் ஐக்கிய முன்னணி அரசு, தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்று ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்க இசைவு தெரிவித்தவுடன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் 1), கடலோர ஆந்திரா, 2), இராயல சீமா, 3), தெலங்கானா என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆண்டில் வலுவாக எழுப்பப்பட்ட போது, நாம் நமது நிலைபாட்டைத் தெளிவாகத் தெரிவித்தோம்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கு தேசிய இனத்தின் தாயகமாக இருக்கும் ஆந்திரப்பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவு சரியல்ல. எனினும், தெலங்கானாப் பகுதியின் மக்கள் கோரிக்கையாக - மாபெரும் எழுச்சியுடன் தனிமாநிலப் போராட்டங்கள் நடக்கும் நிலையில் தெலங்கானாப் பிரிவினையை நாம் எதிர்க்கவில்லை என்று தெரிவித்திருந்தோம். இப்போதும் அதே நிலைதான் நமக்கு! தெலங்கானா தனி மாநிலம் அமைவதை நாம் எதிர்க்கவில்லை! எனில் ஆதரிக்கிறோம் என்பது பொருள்!

தெலங்கானாப் பிரிவினையைப் பயன்படுத்திக் கொண்டு சூதுமதி படைத்த இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு சாராரும் இந்தியத் தேசியவாதிகளில் ஒரு சாராரும் பெரிய மாநிலங்களை நிர்வாக வசதிக்காகச் சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கதைகட்டி விடுகின்றனர்.

தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கையோ அல்லது கூர்க்காலாந்து, போடோலாந்து போன்ற தனி மாநிலக் கோரிக்கைகளோ நிர்வாக வசதிக்காகப் பெரிய மாநிலங்களைச் சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்தவை அல்ல. அவையெல்லாம் இனமரபு அடிப்படையில் எழுந்தவை. மொழி வேறுபாடு, இனமரபு வேறுபாடு போன்றவற்றால் எழுந்தவை.
 
தெலங்கானா கோரிக்கைக்குக் கூட அம்மக்கள் தங்களின் இனமரபு சார்ந்த தனித்துவக் காரணம் கூறுகின்றனர். 500 ஆண்டுகளாகத் தனி நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இருந்ததாகத் தெலங்கானா மக்கள் கூறுகின்றனர். சீமா - ஆந்திராவில் ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய போது, தெலங்கானா மக்கள் ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்தனர். தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கு தான் அசல் தெலுங்கென்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கடலோர ஆந்திரப் பகுதியினர் தெலங்கானா தெலுங்கு கொச்சைத் தெலுங்கென்று கேலி செய்கின்றனர். திரைப்படங்களிலும் தெலங்கானா தெலுங்கை நையாண்டி செய்கின்றனர்.

தெலங்கானாவின் வறட்சியைப் போக்க - குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கோதாவரி, கிருஷ்ணா என்னும் ஆண்டு முழுவதும் ஓடும் பேராறுகள் இருந்தும் ஆந்திரப்பிரதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; ஒருதலைச் சார்பாக ஆந்திர அரசு நடந்து கொள்கிறது என்கின்றனர்.

வளர்ச்சியடைந்த முதலாளிகளும் வணிகர்களும் தெலங்கானாப் பகுதிக்கு வெளியில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளனர். பொருளாதாரத்தில் தெலங்கானா புறக்கணிக்கப்படுகிறது என்கின்றனர். இவ்வாறான தங்களின் அடையாள மறுப்பு, பொருளியல் புறக்கணிப்பு காரணமாக அங்கு தனிமாநிலக் கோரிக்கை மக்கள் கோரிக்கையாக - மாணவர் கோரிக்கையாக வளர்ச்சி பெற்று எழுச்சி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில், தோல்வியால் துவண்டு போயுள்ள சாதி அரசியல்வாதிகள் சிலரும், தன்சாதி மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்று தோற்றுப்போன ஒரு சிலரும், தெலங்கானாப் பிரிவினையைக் காரணம் காட்டித் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்; மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டில் இது மக்கள் கோரிக்கை அன்று.

இவர்கள் தமிழ்நாட்டை சாதி அடிப்படையில் கூறு போட வேண்டும் என்று கோருகின்றனர்.

தமிழ்நாட்டில் சாதிப் பிளவுகள் உண்டு; சாதிக் கொடுமைகள், சாதி ஒடுக்குமுறைகள் உண்டு. ஆனால், அவற்றின் ஊடாகவே அனைத்துச் சாதியினரும் தங்களைத் தமிழர் என்றே உணர்கின்றனர். கணியன் பூங்குன்றனும் திருவள்ளுவரும், கரிகால் சோழனும் பாண்டியன் நெடுஞ்செழியனும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் தங்கள் முன்னோர் என்று அனைத்துத் தமிழ்ச் சாதியினரும் கருதுகின்றனர். தமிழின அடிப்படையில் ஒன்று கூடுகின்றனர்.

தமிழர்களுக்கிடையே உள்ள சாதிச்சிக்கல்கள் - வர்க்கச்சிக்கல்கள் ஆகியவற்றைத் தங்களுக்குள் போராடி தீர்வு காண வேண்டும். மூன்றாய்ப் பிரிப்பதன் மூலம் தீர்வு வராது.

2008-2009 இல் இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையுடன், சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த போது காங்கிரசு - சி.பி.எம் கட்சிகள் தவிர, கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும், பார்ப்பன சாதி அமைப்பு தவிர அனைத்து சாதி அமைப்புகளும் பல்வேறு வணிகத், தொழில் அமைப்புகளும் போர் நிறுத்தம் கோரி வீதிக்கு வந்து போராடின. போராட்டங்களின் வீச்சில் போதாமை இருக்கலாம். அது வேறு செய்தி!

எத்தனை துரோகங்கள் புரிந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைத் தமிழர்கள் கட்டி அழுவதும் ஒருவகையான தமிழின உணர்ச்சியே! வடநாட்டுத் தலைமையின் கீழுள்ள காங்கிரசு - பா.ஜ.க. கட்சிகள் தமிழ்நாட்டில் பெருவளர்ச்சி காணாததற்கும் இங்குள்ள மக்களின் இனஉணர்ச்சிதான் காரணம்!

ஆண்டுக்கு 360 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கர்நாடகத்திலிருந்து காவிரியில் பெற்று வந்த தமிழகம் இறுதித் தீர்ப்பின்படி 192 ஆ.மி.க. கூட பெற முடியவில்லை. வெறும் 135 ஆ.மி.க. என்ற அளவுக்கு சுருங்கி விட்டபோதிலும் காவிரியிலிருந்து குடிநீர் புதுக்கோட்டை - காரைக்குடி - இராமநாதபுரம் பகுதிகளுக்குப் போகிறது; சென்னைக்குப் போகிறது. திருப்பூருக்குப் போகிறது. வேலூருக்கும் போகப் போகிறது. தஞ்சை - திருச்சி தமிழர்கள் இதை எதிர்ப்பதில்லை. ஏன்? நாம் அனைவரும் தமிழர் என்பதால்!

தலைநகர் சென்னை, தமிழகத்தின் அனைத்து மக்களின் காப்பகமாக விளங்குகிறது. அதே போல் திருப்பூர் அனைத்து மாவட்ட மக்களுக்கும் வேலை வழங்கும் தாயாக விளங்குகிறது. இவற்றையெல்லாம் இழக்க எந்தத் தமிழனும், எந்தத் தமிழச்சியும் விரும்பார்.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஐயாயிரம் ஆண்டுகளாக - குமரி முனையிலிருந்து வட வேங்கடம் வரை தமிழர் என்ற இனஉணர்ச்சியும், இந்த நிலப்பகுதி தமிழர் தாயகம் என்ற உரிமை உணர்ச்சியும் தலைமுறை தலைமுறையாகத் தமிழர்களின் உளவியலில் பதிந்துள்ளது; அவ்வுணர்ச்சி கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் ”வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்றார். அப்போது ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்ததா என்ன? இல்லை. சங்கப்பாடல்கள் “தமிழகம்” என்று கூறுகின்றன. சிலப்பதிகாரம், “தமிழ்நாடு”, ”தமிழகம்” என்று கூறுகிறது. பெரியபுராணம் தமிழ்நாடு - தமிழகம் என்று கூறுகிறது. சேர, சோழ, பாண்டியர்கள் தனித்தனிப் பகுதிகளில் தமிழ்நாட்டை ஆண்ட போதே, தங்கள் தாயகம் தமிழ்நாடு என்ற தேச உணர்ச்சி - தேச அறிவு தமிழர்களிடம் இருந்தது.

அதனால்தான் தமிழ்மொழி பேசப்படாத அயல் தேசத்தை “மொழி பெயர் தேயம்” என்று அகநானூறு கூறுகிறது.

ஆங்கிலேயன் சென்னை ராஜதானி என்று பெயரிட்டு அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய போது, “செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று பாரதி பாடினான். குமரி முனையிலிருந்து வடமாலவன்குன்றம் (வேங்கடம்) இவற்றிடையே தமிழ்நாடு புகழோடு விளங்குகிறது என்றான்.

ஏழு கோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழும் போது, பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளை இழந்து இன்றும் மீட்க முடியாமல் போராடிக் கொண்டுள்ளோம். கச்சத்தீவைப் பறிகொடுத்து, 600 மீனவர் உயிரையும் பறிகொடுத்து, தமிழர் கடல் பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறோம். இத்தமிழ்நாடு மூன்றாகப் பிரிந்து சிறுத்துப் போனால் தமிழர்களுக்கு என்ன மிஞ்சும். கோவணத் துணிதான் மிஞ்சும்! நான்குமுழ வேட்டியை மூன்றாகக் கிழித்தால் கோவணத் துணிக்குத்தான் அது பயன்படும்!

குடிவெறியனுக்கு, மறுபடியும் குடிக்க மனைவி பணம் கொடுக்காவிட்டால், அவன் ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களைப் போட்டு உடைப்பான்; மனைவியின் தாலியையும் அறுப்பான். அப்படித்தான் பதவிவெறிபிடித்த சிலர் தமிழ்நாட்டை உடைக்கத் துடிக்கிறார்கள். எந்தக் கட்சித்தமிழர்களும், எந்த சாதித் தமிழர்களும் தமிழ்நாட்டை உடைக்கத் துணை போக மாட்டார்கள்! இது உறுதி!

புதிய எல்லை ஆணையம் வேண்டும்

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சேய்கள் அழுவது போல், தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசத்திலும், கேரளத்திலும், கர்நாடகத்திலும் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட தமிழ் நிலத்தின் மக்கள் அம்மாநில்கள் தங்களை இரண்டாந்தர நிலையில் நடத்துவதால் - வேதனைப்பட்டு அழுகின்றனர்; தாய்த்தமிழகத்துடன் இணையத் துடிக்கின்றனர்.

ஆந்திரப்பிரதேசத்துடன் வலிந்து இணைக்கப்பட்ட சித்தூர் மாவட்ட மக்கள் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் என்று போராடுகின்றனர். அதேபோல், கேரளத்துடன் வலிந்து இணைக்கப்பட்ட இடுக்கி மாவட்ட மக்கள் தமிழ்நாட்டுடன் இணையப் போராடுகின்றனர். இவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் போராட வேண்டும்.

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் மீட்கப் புதிய எல்லை ஆணையம் அமைத்து களஆய்வும் - விசாரணையும் நடத்தி முடிவுகள் எடுக்க இந்திய அரசு முன்வர வேண்டும். குறிப்பாகத் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் எல்லைக் கோடு வரையறுக்கப்படாமல் இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் எல்லை ஆணையம் அமைக்குமாறு இந்திய அரசை வலியுறுத்திப் போராடுவோம்!

Pin It