“என்று முடியும் எங்கள் மொழிப் போர்?” இன்றையத் தமிழ் உணர்வா ளர்களின் வினா இது! மொழிப்போர் 1938லிருந்து இன்றும் தொடர்கிறது.

 1938, 1965களில் இந்தித் திணிப்பை எதிர்த்து மொழிப்போர். இன்று ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டம்!

 2013-2014 கல்வியாண்டில் தமிழ்நாடெங்கும் ஒன்றாம் வகுப்பு தொடங்கி +2 வரை, ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தமிழக அரசால் தொடங்கப்படு கின்றன. இது தொடர்ந்தால் இப்போது அரசுப் பள்ளிகளில் உள்ள தமிழ்ப் பயிற்று மொழி வகுப்புகளும் விரைவில் மூடுவிழா காணும்.

 ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப் பயிற்றுமொழிப் பிரிவும் இருக்கும். ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்பும் இருக்கும். தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்பில் மாணவர் சேர்க்கை மேலும் மேலும் குறையும். இதைக் காரணம் காட்டித் தமிழ்ப் பயிற்று மொழி வகுப்புகளை அரசு மூடிவிடும்.

 இப்போது ஒன்றாம் வகுப்பு தொடங்கி +2 வரை ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடமாக உள்ளது. தமிழ் அவ்வாறு கட்டாய மொழிப்பாடமில்லை. அதுபோதா தென்று, அறிவியல், சமூகவியல், கணிதம், வரலாறு, வணிகவியல் என அனைத்துப் பாடங்க ளையும் ஆங்கில மொழி மூலமே கற்க வேண்டும் என்று அரசு திட்டம் வகுத்துச் செயல்படுவானேன்? தமிழகக் கல்வி முழுக்க முழுக்க ஆங்கில மயமாகி விட்டால், தமிழ் மொழியின் பயன்பாட்டுத் தேவை அற்றுப் போய்விடும்! தமிழ் மொழியின் அழிவுக்கு இது இட்டுச் செல்லும்.

 தமிழ்மொழியை இழந்துவிட்டால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டிலேயே, அயல் மொழி ஆதிக்கத்திற்கும் அதன்வழி அயல் இனங்களின் ஆதிக்கத்திற்கும் உள்ளா வார்கள். சொந்தச் சிந்தனையும் அறிவுத் திறனும் தாய்மொழிவழிக் கல்வி மூலம்தான் உருவாகும் என்பது உலகக் கல்வி வல்லுநர்களின் முடிவு.

 தமிழ் உணர்வாளர்களும், தமிழறிஞர்களும் நெஞ்சு பதைத்து, இந்த அழிவைத் தடுப்பதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் உருவாக்கினார்கள். அக்கூட்டியக்கம் ஆங்கிலப் பயிற்றுமொழிகளைத் தொடங்க வேண்டாம் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து, 28.05.2013 அன்று சென்னைப் பள்ளிக் கல்வி இயக்கக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சற்றொப்ப 300 பேர் ஆண்க ளும் பெண்களும் தளைப்படுத்தப்பட்டு மாலை விடுவிக் கப்பட்டனர்.

 இரண்டாம் கட்டமாக, 17.06.2013 அன்று மாவட்டத் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடந்தன. 18 இடங்களில் நடந்தன.

 மூன்றாவது கட்டமாக முதலமைச்சருக்குக் கோரிக்கை விண்ணப்பம் கொடுக்கும் பேரணி கோட்டைக்கு நடந்துவதென முடிவு செய்யப்பட்டது.

 சென்னைத் தீவுத்திடல் அருகில் உள்ள சர் தாமஸ் மன்றோ சிலையிலிருந்து பேரணி புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அங்கிருந்து பேரணி புறப்பட அனுமதி இல்லை என்றனர் காவல்துறை அதிகாரிகள். காவல் துறையினர் தளைப்படுத்தினால் படுத்தட்டும் என்று 7.8.2013 அறிவன்கிழமை(புதன்) காலை 10 மணிக்கு, மன்றோ சிலை அருகில் தமிழகமெங்குமிருந்து வந்த தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் அமைப்புகளின் தலைவர்கள், தோழர்கள் சற்றொப்ப இரண்டாயிரம் பேர் குவிந்தனர்.

ஒவ்வொரு அமைப் பினரும் அவரவர் கொடிகளை ஏந்தி நின்றனர்.ஒரே வண்ணமயமாகக் காட் சியளித்தது மன்றோ சாலை. அப்போது பேரணி முகப்பிற்கு வந்த ஆன்மிகச் செம்மல் சத்தியவேல் முருக னார் அவர்கள் அன்பர்க ளுடன் வந்து தோழர் பெ.மணியர சன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்

 “தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் வெல்க! தொடங்காதே தொடங்காதே! ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்காதே! வேண்டும் வேண்டும் தமிழ்வழிக் கல்வியே வேண்டும்” என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது.

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தமிழகத் துணைத் தலைவர் திரு. முகமது அனிபா அவர்கள், எழுச்சியும் செறிவும் மிக்கமுறையில் உரை யாற்றி பேரணியைத் தொடங்கி வைத்தார்.

”அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை போன்ற விஞ்ஞானிகளும் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் பயின்று தானே உயர் அறிவு பெற்றனர்; உயர்ந்தனர். தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ராமானுஜம் தமிழ்வழியில் பயின்றவர்; அவர் உயர் பதவியில் இல்லையா? தாய்மொழி வழிக் கல்வி தான் உலகெங்கும் உள்ள கல்வி முறை. நம் தமிழைக் காக்க நாம் போராட வேண்டும்” என்றார் திரு. அனிபா.

பேரணி எழுச்சி முழக்கங்களுடன் நகர்ந்தது. சிறிது தொலைவு சென்றவுடன் காவல்துறையினர் தடுப்பு அரண்களைக் குறுக்கே வைத்துத் தடுத்து ஊர்வலத் தினை மறித்தனர். முழக்கங்கள் உச்ச நிலையை அடைந்தன.

ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிய தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன், ஊர்வலத்தில் வரும் தோழர்கள் காவல்துறையினரின் தளைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி தோழர் பெ.மணியரசன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனை முத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செய லாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. கா.பரந்தா மன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் நீதிக்கட்சித் தலைவர் தோழர் சுபா.இளவரசன், புதுக்கோட்டை திரு. பாவாணன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க.குணசேகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மக்கள் கட்சி தலைமைச் செய்தித் தொடர்பாளர் தோழர் அருண்சோரி, தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் தோழர் அதியமான், தமிழ்த் தேசக் குடியரசு இயக்க மையக்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன், சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப் பாளர் தோழர் செந்தில், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் காஞ்சி அமுதன், தமிழர் குடியரசு முன்னணிப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன், தமிழர் மீட்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சின்னப்பத் தமிழர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தலைவர் தோழர் மா. சேகர், மக்கள் மாநாடு கட்சித் தலைவர் வழக்கறிஞர் க. சக்தி வேல், திருவள்ளுவர் அறக்கட்டளைப் பொறுப்பாளர் திரு மா.செ. தமிழ்மணி, புதுவை செந்தமிழர் இயக்கத் தலைவர் தோழர் ந.மு.தமிழ்மணி ஆகியோர் பேரணியில் முன்னிலை வகித்து வந்தனர். அவர்கள் தளைப்படுத்தப்பட்டனர்.

அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமின்றித் தமிழறி ஞர்களும் கல்வியாளர்களும் இப்பேரணியில் பங்கு பெற்றுத் தளைப்பட்டனர். பேரா.மா.இலெ தங்கப்பா, முனைவர் அரணமுறுவல் (இருவரும் உலகத் தமிழ்க் கழகம்) புலவர் த. சுந்தரராசன்(தலைவர் தலைநகர்த் தமிழ்ச்சங்கம்) பேரா. பிரபா கல்விமணி (மக்கள் கல்விக் கூட்டியக்கம்) புலவர் கி.த. பச்சையப் பனார் (தமிழ் உரிமைக் கூட்டமைப்பு பாவாணர் கோட்டம் புலவர் நெடுஞ்சேரலாதன், தமிழ்வழிக் கல்வி போராளியும் திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி தாளாருமான திருவாட்டி பொற்கொடி இறைக்குருவனார், பேரா.த.மணி (முன்னாள் முதல்வர், மேலைச் சிவபுரி கலைக் கல்லூரி) கண.குறிஞ்சி (முன்னாள் மேனி லைப்பள்ளி தலைமையாசிரியர் மக்கள் நல்வாழ்வு இயக்கம், பேராசிரியர் பி.யோகீசுவரன், ஓவியர் வீரசந்தானம், புலவர் அரங்க நாடன் (தமிழ்க் களம்) புலவர் குமர.தன்னொளியன் (திருவள்ளுவர் அறக் கட்டளை), எழுகதிர் ஆசிரியர் அருகோ உள்ளிட்ட தமிழறிஞர்களும் கல்வியாளர்களும் கலந்து கொண்ட னர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் திருவாளர்கள் செங்குட்டு வன், சோமு, ஜீவன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு பொதுச்செயலாளர் சைதை கே.வி. சிவராமன் திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலை யச் செயலாளர் தோழர் தபசிகுமரன், உலகத் தமிழ்க் கழக சென்னைப் பொறுப்பாளர் திரு பா. இறையெ ழிலன், தமிழக இளைஞர் முன்னணி தலைவர் கோ. மாரிமுத்து, பொதுச்செயலாளர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் மதுரை மேரி, தஞ்சை ம.லெட்சுமி ஆகி யோரும் தளைப்பட்டனர்.

பேரணியில் வந்த தோழர்கள் சற்றொப்ப 1200 பேர் தளைப்படுத்தப்பட்டனர். தளைப்படுத்தப்பட்ட அனை வரும் சேப்பாக்கம் அண்ணா கலையரங்க மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

முதலமைச்சரிடம் மனுக்கொடுக்கத் தலைமை செயலகத்திற்கு தோழர்கள் பெ.மணியரசன், வேல் முருகன், மல்லை சத்தியா, மற்றும் தோழர்கள் அடங்கிய குழுவினரை காவல்துறையினர் தங்கள் வண்டியில் அழைத்துச் சென்றனர் அங்கு, முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இல்லை. முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டார்.

ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை முற்றாகக் கைவிட வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப் பாடமா கவும் கட்டாயப் பயிற்று மொழியாகவும் இருக்கச் சட்ட மியற்ற வேண்டும்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு +2 வரை தமிழ் வழியில் படித்தவர் களுக்கு வழங்க வேண்டும். அதேபோல் மருத்துவம் பொறியியல் வகுப்புகள் மாணவர் சேர்க்கையில் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை விளையாட்டுத் திடல், போதிய ஆசிரியர்கள், இசை, விளையாட்டு, ஓவியம் ஆகியவற்றிற்குத் தனி ஆசிரியர்கள் அமர்த்தல் என உள் கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தித் தமிழகம் முழுவதுமிருந்து அறிஞர்களும் உணர்வாளர்களும் வந்திருந்தனர். பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பொது கோரிக்கைகளை முன் வைத்துப் பேரணி நடத்தித் தளைப்பட்டது எல்லோருக்கும் ஊக்கமளித் தது.

கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்தடுத்துத் தொடர்ந்து போராட வேண்டும் என்று அனைவரும் மண்டபத்தில் வலியுறுத்தினர். இரவு 7.15 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It