தமிழ்த் திரையுலகில் நன்கு அறிமுகமான இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மீது 65 அகவையான மலையாளப் பெண்மணி, பொய்யான பாலியல் வன்கொடுமைப் புகார் கொடுத்து, அவரை சிறைக்கு அனுப்பிய நிகழ்வு பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள், சென்னை நீலாங்கரை பகுதி - பாலவாக்கத்தில் புதிதாக வீடு கட்டிய போது, அதனருகே வசித்து வந்த திருமதி இராதா வேணுப்பிரசாத் என்ற மலையாளப் பெண்மணி, அந்த இடத்தை தன்னுடைய மகனுக்கு வீடு கட்ட வாங்க நினைத்திருந்ததாகவும், எனவே அதைத் தன்னிடம் விற்றுவிடுமாறும் கோரினார். அதற்கு மறுத்த ஜேம்ஸ் அவர்களிடம், எப்படியும் இந்த இடத்தை என்னிடம் தான் விற்பீர்கள் என சவால் விட்டுச் சென்றுள்ளார் அப்பெண்மணி. அதன்பின், பலமுறை அவ்விடத்தை கேட்டுத் தொல்லைப்படுத்தியும், அங்கு கட்டுமானம் நிகழாத வகையில் அரசு அதிகாரிகளிடம் பலமுறை பொய்ப் புகார்களை அளித்தும் தடை ஏற்படுத்தியிருக்கிறார் அந்த மலையாளப் பெண்மணி. அந்தளவிற்கு அந்த மலையாளப் பெண்ணுக்கு சென்னையிலுள்ள மலையாள அதிகாரிகள் நெருக்கமாக உதவியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 02.08.2013 அன்று நீலங்கரை காவல்நிலையத்தில் திருமதி. இராதா வேணுப்பிரசாத், ஜேம்ஸ் வசந்தன் தம்மிடம் ஆபாச செய்கை காட்டியதாக புகார் அளிக்கிறார். புகாரைத் தொடர்ந்து, ஆபத்தான பயங்கரவாதியைப் பிடிக்க வந்தது போல் சற்றொப்ப 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் வீட்டைச் சுற்றி வளைத்து, அவரைக் கைது செய்தனர். தாம் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்ற தகவல் கூட தெரிவிக்கப்படாமல் தளைப்படுத்தப்பட்ட ஜேம்ஸ் வசந்தன், செங்கல்பட்டில் உள்ள நீதிபதி ஒருவர் முன் நேர் நிறுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

புழல் சிறையிலிருந்து பிணையில் விடுதலையான அவர், 09.08.2013 அன்று மாலை, சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், புகார் அளித்த மலையாளப் பெண்மணி திருமதி. இராதா வேணுப்பிரசாத், காவல் நிலையத்தில் தாம் வைக்கப்பட்டிருந்த போது நேரில் வந்து 'தமிழ் நாயே' என இகழ்ந்ததையும், அது குறித்து தாம் அளித்தப் புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக உள்ள மலையாளியான ஜார்ஜ், திரு. ராதா வேணுப்பிரசாத்தின் உறவினர் ஆவார். இவர் தான், காவல்துறை கூடுதல் தலைவராக(ADGP) இருந்த போது, முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்கவும், கூடங்குளம் அணுஉலையை எதிர்த்தும் போராடிய தமிழக மக்கள் மீது, காவல்துறையை ஏவி தாக்குதல் தொடுக்க ஆணையிட்டவர் ஆவார்.

தாம் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படும்வரை பல காவல்துறை அதிகாரிகளிடமும் தனது கைதுக்கான விளக்கத்தைக் கேட்ட திரு ஜேம்ஸ் வசந்தனுக்கு, ஆணையர் ஜார்ஜின் நேரடி உத்தரவில்தான் இது நடக்கிறது என்பதும், தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதுமே பதிலாக வந்துள்ளது.

ஆணையர் ஜார்ஜ் மட்டுமின்றி, மாநகரக் காவல்துறையில் பணியாற்றும் மேலும் பல மலையாளி அதிகாரிகளும், இலண்டன் இந்தியத் தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றும் திருமதி. இராதாவின் மகன் உள்ளிட்ட மலையாள அதிகாரிகளும் தான் இந்தப் பொய் வழக்கு - கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும், இது குறித்து தமிழக முதல்வர் உடனடியாக கவனம் செலுத்தி, விசாரித்து தவறிழைத்த அதிகாரிகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதரவாக செய்தியாளர் சந்திப்பிற்கு இசையமைப்பாளர் திரு. எஸ்.ஏ.ராஜ்குமார், சின்னத்திரைக் கலைஞர்கள் திருமதி. உமா பத்மநாபன், திரு. விஜய் ஆதிராஜ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். விஜய் ஆதிராஜ் பேசும் போது, பாலவாக்கத்தில் தற்போது திருமதி. இராதா வசித்து வரும் வீடு மாநகராட்சியின் முறையான அனுமதிப் பெறாமல்தான் கட்டப்பட்டுள்ளது என்பதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் உறுதி செய்வதாக செய்தியாளர்களிடத்தில் கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பில், தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பாளர் திரு. இராஜ்குமார் பழனிச்சாமி, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புத் தோழர் செம்பியன், நாம் தமிழர் கட்சித் தோழர் அகழ்வான் கணேசன், இன உணர்வாளர் திரு. காரை மைந்தன், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. இரா.அதியமான், மே பதினேழு இயக்கத் தோழர் சரவணன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி கலந்து கொண்டார். ஜேம்ஸ் வசந்தனை ‘தமிழ் நாய்’ என இகழ்ந்த அந்தப் பெண்மணி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென தோழர் இராஜ்குமார் பழனிச்சாமி கூறினார்.

தமிழகத்தின் முன்னணித் திரைப்படக் கலைஞர் ஒருவரை, மலையாள அதிகாரிகளின் துணையோடு பொய் புகாரின் பேரில் கைது செய்வதும், சிறையில் அடைப்பதும், மலையாளிகள் சென்னையில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதையே உணர்த்துகின்றது. தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக் காடாக மட்டுமல்ல; அவர்களின் ஆதிக்கக் கொற்றமாகவும் விளங்குகிறது.

தமிழர்களே விழித்தெழுங்கள்! தன்மானத்தை காப்பாற்ற ஒன்று சேருங்கள்!

Pin It