தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 பிப்ரவரி 16-29 இதழ்

வரலாற்று ஓட்டத்தில் ஓர் உயர்ந்த அரசு வடிவமாக முகிழ்த்தது தான் சனநாயகம். ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் தேர்தல் முறையில் தேர்வு நடைபெறுவது சனநாயகத்தின் இன்றியமையாத கூறாகும். ஆனால், இப்போது தேர்தல் சனநாயகம் என்பது இந்தியாவில் மக்களை மூச்சுமுட்ட அழுத்தி வருகிறது.

கட்சிகளும், முதலாளிய நிறுவனங்களும் ஒன்று கலந்து விட்ட ஒட்டுண்ணி வலைப்பின்னல் வளர்ந்து விட்ட இக்காலத்தில் தேர்தல் சனநாயகம் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு உற்ற வழியாக சீரழிந்துவிட்டது.

ஆயினும், இந்தக் கொள்ளைக் கூட்டாளிகளுக்குள் ஏதோ ஒரு நிலையில் குத்துவெட்டு நடக்கும் போது அதில் சிக்கிக் கொண்ட ஒரு பிரிவினர் மட்டுமே கொள்ளையர் போலவும் அதனுடன் மோதும் மற்றொரு பிரிவினர் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் போலவும் தோற்றம் காட்டுகிறார்கள்.

அலைக்கற்றை ஊழலில் கைக்கோத்தவர்கள் மக்களிடம் அம்பலப்படும் நிலையில் அன்றையத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.இராசாவும் ஒரு சில அதிகாரிகளும் மட்டுமே இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் போல கைகழுவி விடப்பட்டனர். முதன்மைக் குற்றவாளிகளான பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குற்றத்தைத் தடுக்க முனைந்து தோற்றுப் போன அப்பாவிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இக் கையூட்டுக் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சுருட்டிய முதன்மைப் பயனாளிகளான பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் இரத்து செய்த நிலையில், மன்மோகன்சிங் அரசு இவர்களின் உரிமங்களை மீட்டுத் தருவதற்கு குறுக்குவழிகளை ஆய்ந்து வருகிறது.

தமிழகத்திலும் செயலலிதா-சசிகலா கொள்ளைக் கூட்டணிக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டு சசிகலா குடும்பத்தினர், சசிகலா ஆதரவாளர்கள் ஆகியோர் தேடித்தேடி சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். ஏதோ செயலலிதாவின் கவனத்துக்கு வராமலேயே இதுநாள் வரை சசிகலாவின் மன்னார்குடி குற்றக்கும்பல் அரசுப் பணத்தை கொள்ளையிட்டது போலவும் இப்போது விழித்துக் கொண்ட செயலலிதா ஊழல்வாதிகள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்வது போலவும் படம் காட்டப்படுகிறது. சசிகலா கும்பல் அடித்த கொள்ளையில் செயலலிதாவுக்குப் பங்கே இல்லாதது போலவும் காட்டிக்கொள்கிறார்.

சசிகலாவின் நெருங்கிய உறவினர் இராவணன், தான் பதுக்கிய கொள்ளைப் பணத்தில் ஒரு பகுதியை கட்டுக் கட்டாக பெட்டகச் சரக்குந்தில் (கன்டெய்னர் லாரியில்) கடத்த முயன்ற போது அவ்வாகனம் பணக்கட்டுகளோடு தமிழகக் காவல்துறையால் மடக்கிப் பிடிக்கப்பட்டது என வார ஏடுகள் கூறுகின்றன.

பறிமுதலான பணம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா போயஸ் தோட்டத்திற்குள் பதுங்கிக் கொண்டதா என்பது செயலலிதாவிற்கே வெளிச்சம். அது பற்றி அரசு என்ன சொல்கிறது என்று அச்செய்தி தவறு அதை அரசு ஏன் மறுக்கவில்லை?

வெளியில் அம்பலமாகியுள்ள மேற்கண்ட செய்திகளெல்லாம் இமயமலை அளவு ஊழலில் ஒரு கோலிக் குண்டு அளவே ஆகும்.

அ.இ.அ.தி.மு.க. மட்டுமின்றி, தேர்தல் சனநாயகத்தில் கோலோச்சும் அத்தனை அரசியல் ஒட்டுண்ணிக் குற்றக்கும்பலும் நாட்டு வளங்களை வடநாட்டு - பன்னாட்டு உலகமய முதலாளிகள் சூறையாட வழிதிறந்துவிட்டு, அதில் கையூட்டுப் பணம் பெறுபவை தாம். அரசுக் கருவூலத்தைப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் - நலத்திட்டங்கள் பெயரால் சூறையாடி தங்கள் சொந்தப் பணப்பெட்டிகளை நிரப்புபவைதாம்.

சாலை போடுவது, பாலம் கட்டுவது, மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி வாங்குவது, தொடர்வண்டிப் பாலங்கள் போடுவது, படைதுறைக்குக் கருவிகள் வாங்குவது, கப்பல் விடுவது, என்று அனைத்து முனையிலும் மக்கள் வரிப்பணத்தைக் கணக்கின்றிக் கொள்ளையிடுகின்றன. மக்களுக்குச் சென்றடைய வேண்டிய எந்த நலத்திட்டமும் இவர்களது கையூட்டுத் திட்டத்திலேயே பெருமளவு கரைந்து விடுகின்றன.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி அரசின் கடைநிலைப் பணியாளர் வேலை வரை அனைத்து பணியமர்த்தங்களிலும் கோடிகோடியாய் கையூட்டுகள் கைமாறுகின்றன. இக்கொள்ளையை நேரடி அரசியல் புள்ளிகளும், நிழல் அரசியல் புள்ளிகளும் அதிகாரிகளும், நடத்துகிறார்கள்.

இவ்வாறு கொள்ளையிடப்படும் கையூட்டுப் பணமே தேர்தல் கட்சிகளின் உயிர் மூச்சாகத் திகழ்கிறது. மேலிருந்து அடிமட்டம் வரை தேர்தல் கட்சிகள் கையூட்டுக் கொள்ளைக்கான எந்திரங்களாகவே வடிவம் கொள்கின்றன.

இக்கட்சிகளின் அடிமட்ட நிர்வாகியாக வருவதற்கே ஒருவர் கோடிகோடியாக செலவிட வேண்டும். தலைவர் அல்லது தலைவி பிறந்தநாளுக்கு வானுயர்ந்த வெட்டுருக்கள்(கட்அவுட்டுகள்) வைப்பதிலிருந்து காசைத் தண்ணீராக செலவழித்துக் கூலிக்கு ஆள்பிடித்து, கூட்டங்களுக்குத் திரட்டுவது வரை பல கோடி ரூபாய் மூலதனம் இடுபவர் மட்டுமே கட்சியிலும், அரசிலும் உயர் பதவிகள் அடைந்து இச்சுரண்டல் பொறியமைவில் இடம்பிடிக்கமுடியும்.

கொள்கை, அர்ப்பணிப்பு, மக்கள் பணி போன்ற எதற்கும் தேர்தல் கட்சிகளில் இடமில்லை.மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வப்போது அடையாளப் போராட்டங்கள் நடத்துவார்கள். அடைவதற்கு இவர்களுக்குப் பெரிய இலட்சியம் எதுவும் இல்லை; ‘பெரிய’ நாற்காலியைத் தவிர! உற்பத்தியிலோ, வழங்கலிலோ ஈடுபடாமலேயே பல்லாயிரம் கோடி ரூபாய் இலாபம் பார்க்கும் ஒட்டுண்ணித் தொழிலாக தேர்தல் அரசியல் வளர்ந்து விட்டது.

ஆடம்பரத்திற்குப் பெயர் போன முகலாய அரசர்கள் சிலரை விடவும், மக்கள் பணத்தைக் கொள்ளை யிட்டுப் பகட்டு வாழ்க்கை நடத்துபவர்களாக தேர்தல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் உள்ளனர்.

தாராளமய முதலாளியச் சுரண்டல் மட்டுமின்றி இக்கட்சிகளின் ஒட்டுண்ணிக் கொள்ளையும் சேர்ந்து தான் இந்திய, தமிழக மக்களை வறுமையில் ஆழ்த்துகிறது. முதலாளியச் சுரண்டலின் கையாட்கள் என்ற நிலையில் மட்டுமின்றி இக்கட்சிகளே ஒட்டுண்ணிச் சுரண்டல் நிறுவனங்களாக தனிவளர்ச்சிப் பெற்றுள்ளன.

அறம் சார்ந்த அரசியலுக்கு இத்தேர்தல் கட்சிகளின் களத்தில் ஒர் ஓரத்தில் கூட இடமில்லை.

இந்த நிலை இந்தியா முழுவதிலும் இருந்த போதிலும், இந்தியா முழுமைக்கும் அறம் சார்ந்த மாற்று அரசியல் இயக்கம் ஒன்று பொறுப்பெடுத்துக் கொண்டு, இத்தீமையைப் போக்கிவிட முடியாது.

ஏனெனில், இந்தியா என்ற துணைக்கண்டத்தின் பல்தேசியத் தன்மை, அத்தேசிய இனம் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி அரசியல் - சமூக இலக்குகள், தனித்தனித் தலைமைகள் எனப் பல முரண்பாடுகள் இருக்கின்றன.

 இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தேசிய இனங்கள் சில ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிரும் புதிருமாக செயல்படுகின்றன. குறிப்பாக இந்தித் தேசியம் மற்ற தேசியங்களை ஒடுக்குகிறது. தமிழர்களுக்கு எதிராக இந்தி தேசியம் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட, மலையாள தேசியங்களும் பகையைக் கக்குகின்றன.

தமிழர்கள் இந்தியாவில் அடிமைப்பட்டிருப்பது பெரும் சோகம் என்றாலும் தமிழர்களை விடுதலை என்ற இலக்கு நோக்கித் திரட்டும் நல்வாய்ப்பையும் இந்த அடிமைத் தனம் நமக்கு வழங்கியுள்ளது.

புரட்சிகரத் தமிழ்த் தேசியம் என்பது வெறும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் விடுதலைப் போராட்ட மன்று.சகமனிதர்களுக்குத் தீமை செய்யாத, அவர்கள் நலனைச் சுரண்டாத புதிய தமிழனை, தமிழச்சியை வார்த்தெடுக்கும் அறப்பட்டறையாகவும் அது செயல்புரிய வேண்டும்.

உண்மையில், பெரும் எண்ணிக்கையில் அறச்சிந்தனையுள்ள தமிழர்களை உருவாக்காது போனால் தமிழ்த் தேச விடுதலை நீடித்து நிற்கவும் முடியாது; விடுதலை பெற்ற தமிழ்த் தேசத்தில் மக்களுக்கு மன நிறைவும் இருக்காது; அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சமூகத்தை உந்தித் தள்ளும் மன எழுச்சியும் இருக்காது.

இன்று எல்லா நிலையிலும், எல்லா முனையிலும் மூலை முடுக்கெல்லாம் கையூட்டு ஊழலில் அமிழ்ந்து நாறிப்போன தேர்தல் சனநாயகப் பொறியமைவை நொறுக்கிவிட்டு, மக்களின் நேரடிக் கண்காணிப்பு, பங்கெடுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட புதுவகை மக்கள் சனநாயகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இப்பொழுதுள்ள சீரழிந்துபோன முதலாளிய சனநாயகமும் தீங்கானது, ஒரு கட்சிச் சர்வாதிகாரமுறையும் தீங்கானது. இரண்டின் பட்டறிவிலிருந்து புதிய பொறியமைவை உருவாக்க வேண்டும்.

அது தான் கொள்ளை அரசியலுக்கு இறுதிக்கும் இறுதியாக முடிவு கட்டும் மாற்று சனநாயகமாகத் திகழும்.

Pin It