வாய் வீச்சு வீராங்கனை செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு இருட்டில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் அறிவிக்கப் பட்ட மின்வெட்டு இரண்டு மணி நேரம் என்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மூன்று மணி நேரத்தைத் தாண்டியும் நடக்கிறது. பிற நகரங்களில் ஆறு மணி நேரத்திற்கு மேல் எட்டு மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது. கிராமங்களிலோ மின்சாரம் வழங்கப் படும் நேரத்தைவிட மின்சாரம் வழங்கப்படாத நேரமே அதிகம் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக் கிறது.

இந்த மின்வெட்டும் வரைமுறை ஏதுமின்றி எப்போதுவேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை உள்ளது. எப்போது மின்சாரம் வரும் எப்போது நின்று போகும் எனத் தெரியாமல் தமிழக மக்கள் பெரும் தவிப்பில் சிக்க வைக்கப் பட்டுள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், சென்னை புற நகர் உள்ளிட்ட தொழில்மையங்கள் முடங்கிப்போய் உள்ளன. குறிப்பாக சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விசைத்தறிகள் முற்றிலும் முடங்கி விட்டன. அதே நேரம் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு, தகவல் தொழில் நுட்பத் தொழிலகங்களுக்கு தடையில்லா மின்சாரம் தாராளமாக வழங்கப்படுவது தொடர்கிறது.

சிறு தொழில்கள் டீசலைப் பயன்படுத்தி மின்னாக்கி (ஜெனரேட்டர்) யைக் கொண்டு மின் உற்பத்தி செய்துகொள்ள வாய்ப்பு அற்று உள்ளன. உயர்ந்துவரும் டீசல்விலை இந்த மாற்று வழியையும் அடைத்துவிட்டது. ஏற்கனெவே ஆள் பற்றாக்குறையில் சிக்கி இருப்பதால் தொழிலாளர் களை நிறுத்தவும் முடியாமல், அவர்கள் உழைப்பை ஈடுபடுத்தி உற்பத்தி செய்யவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக சிறு தொழில்முனைவோர் அல்லாடுகின்றனர்.

கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்டப் பகுதிகளில் சிறுதொழில் முனைவோரும் தொழி லாளர்களும் பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி மின்சாரம் கோரி போராடி வருகின்றனர். இச்சிக்கலின் அவரசத் தன்மையைப் புரிந்து கொண்டு மின்வெட்டை நிறுத்துவதற்கு அல்லது குறைந்த அளவு தளர்த்துவதற்கு மாற்றுவழிகளை சிந்திக்காமல் செயலற்றுக் கிடக்கிறது செயலலிதா அரசு. மாறாக தன்னெழுச் சியாகப் போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு தடியடி நடத்துகிறது.

தேர்தலில் வாக்கு வாங்கும் போது “தான் முதலமைச்சரானால் மின்வெட்டு சிக்கலுக்கு முன்னுரிமைக் கொடுத்து அனைவருக்கும் தடையில்லா முன்சாரம் வழங்கப்படும்” என்று வாய்ச்சவடால் அடித்தார் செயலலிதா. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் முன் எப்போதும் இருந்ததைவிட மின்வெட்டு அதிகரித்துக் கொண்டே வந்து இன்று எட்டு மணி நேர மின் வெட்டு என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. கோடைதொடங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால் மார்ச்சு, ஏப்ரல். சூன் மாதங்களில் இது எந்த அளவு தீவிரம் பெறும் என்பதை நினைப்பதற்கே அச்சம் ஏற்படுகிறது.

வழக்கம்போல் இந்திய அரசுக்கு கண்டனக் கடிதங் களை எழுதித் தள்ளிக்கொண்டு வருகிறார் முதலமைச்சர் செய லலிதா. முந்தைய முதல்வர் கருணாநிதி கண்ணீர்க் கடிதம் எழுதினார். இன்றைய முதல்வர் செயலலிதா கண்டனக் கடிதம் எழுதுகிறார். வேறுபாடு அவ்வளவே.

மின்வெட்டு இவ்வளவு தீவிரப்பட்டுள்ள நிலையிலும் நெய்வேலி மின்சாரம் முழு வதையும் தமிழகத்திற்கே கேட்டுப் பெற அவருக்கு நா எழவில்லை. மொட்டையாக மத்தியத் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் வழங்குங்கள் என்று இந்திய அரசிடம் கையேந்தி நிற்கிறார். தமிழகத்தில் தற் போது நிலவும் தீவிர மின் வெட்டு நீங்கும் வரையில் தற் காலிகமாகக் கூட நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே கேட்டுப்பெற செயலலிதா அணியமாக இல்லை. அவரது இந்தியத் தேசியவெறி அவரது வாயைக் கட்டிப் போட்டுள்ளது போலும்.

தமிழகம் இருளில் மூழ்கி வரும் இன்றைக்கும் கூட தமிழ் மண்ணாம் நெய்வேலியி லிருந்து கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட் மின்சாரம் நாள் தோறும் போய்க் கொண்டிருக் கிறது. கேரளாவிற்கு நாள் தோறும் 9 கோடி யூனிட் நெய்வேலி மின் சாரம் போய்க் கொண்டிருக்கிறது. ஆந்திரா விற்கு நிகரமாக 6 கோடி யூனிட் போய்க் கொண்டிருக்கிறது. நெய்வேலி யில் உற்பத்தியாகும். மின்சாரத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங் கப்படுகிறது. அதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் நெய்வேலி நிறுவனத்திற்கு பணம் கொடுத்து வாங்கிகொள்ளும் மின்சாரமாகும். நெய்வேலி மின் சாரத்தில் பெரும்பான்மையும் அண்டை மாநிலங்களுக்கே அனுப்பப்படுகின்றன.

கல்பாக்கம் அணுமின் நிலை யத்தை மூடவேண்டும் என தமிழர்கள் போராடி வரு கின்றனர். ஆனால் கதிரியக்க பாதிப்புகளை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் அணு மின் சாரத்தில் பெரும் பகுதியையும் அண்டை மாநிலங்களுக்கே இந்திய அரசு வழங்குகிறது. கல்பாக்கம் மின்சாரத்தில் 30 விழுக்காடு மட்டுமே தமிழகத் திற்கு.

இன்னொருபுறம், கிடைக்கும் மின்சாரத்தில் 20 முதல் 25 விழுக்காடு வரை கம்பி இழப் பில் (LINE LOSS) காணாமல் போகிறது. உற்பத்தி மையங் களிலிருந்து கம்பிகள் வழியாக மின்சாரம் எடுத்துச் செல்லப் படும் போது, அதில் செலுத்தப் படும் மின்சாரம் நூற்றுக்கு நூறு வழங்கல் மையத்தை சென்று அடைந்து விட முடியாது. கம்பி வழியாக மின்சாரம் கடக்கும் போது மிகச் சிறு பகுதி காற்றில் கசிந்து இழப்பு ஏற்படுவது இயல்பு. இது பின்தங்கிய நாடுகளில் கூட மிகக் குறைவான அளவில் இருக்குமாறு கண்காணிக்கப் படுகிறது. அதிகம் போனால் 7 விழுக்காட்டிற்கு மேல் கம்பி இழப்பு உலகில் எங்கும் ஏற் படுவதில்லை. ஆனால் கம்பியில் செலுத்தப்படும் மின்சாரத்தில் மொத்தமாக கால்பங்கு காணாமல் போவது தமிழ் நாட்டில்தான்.

மின் ஊக்கிகள் (டிரான்ஸ் பார்மர்), மின்கம்பிகள் ஆகிய வற்றை வாங்கி நிறுவும் போது நிகழும் எல்லையில்லா கை யூட்டு ஊழலே இதற்கு முதன் மைக் காரணமாகும். தரமற்றக் கம்பிகளை வாங்குவதால் மின் சாரக்காப்பு (INSULATION) குறைவாக இருந்து மின் கசிவு அதிகம் ஏற்படுகிறது.

கம்பி இழப்பை 8 விழுக்காடு என்ற அளவுக்கு உடனடியாகக் குறைக்கமுடியும். இலஞ்சம் வாங் குவதை குறைத்துக்கொண்டால் போதும்.

அடுக்குமாடிக் கட்டடங்கள், வெளிநாட்டுப் பெருநிறுவ னங்கள்ஆகியவற்றில் கதிரவன் மின்சாரம் உட்பட சொந்த மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு கட்டாயமாக்கினால் மின் தேவையில் கணிசமானப் பகுதியை நிறைவு செய்துவிட முடியும். ஏற்கெனவே செயல லிதா ஆட்சியில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அனை வருக்கும் கட்டாய மாக்கியது போல் இதனையும் நிர்வாக வழியில் வற்புறுத்தினால் உறுதி யாக நிறைவேறும்.

தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ கத்திற்கே கேட்டுப் பெற வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்தியும், இந்திய அரசு இதனை செயல்படுத்த வேண்டும் என வற்புறுத்தியும், தமிழ்நாட்டில் இயங்கும் பன்னாட்டு - வடநாட்டு பெரு நிறுவனங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாக தடை யில்லா மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கோரி யும் மின் பற்றாக்குறையைப் போக்க மாற்றுத் திட்டங்களை முன் வைத்தும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் அமைப்புஉள்ள இடங்களில் வரும் 21.2.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்து கிறது.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் , அமைப்புகளும் நெய்வேலி மின்சாரம் முழு வதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வேறுபாடு இன்றி வலியுறுத்த வேண்டும். தமிழக மக்கள் இக்கோரிக்கைக்கு வீதியில் இறங்கிப் போராட அணிதிரள வேண்டும்.

Pin It