நாம் சென்ற கட்டுரையில் கண்டவாறு, மூடநம்பிக்கையில் தோய்ந்த புராணக் கடவுளர்களின் பெயர்களை இயற்கைக் கோள் களுக்கும் இயற்கைத் துணைக் கோள்களுக்கும் சென்ற நூற்றாண்டு வரை சூட்டி வந்ததைத் தெரிந்து கொண்டோம். அது இன்றுங்கூட தொடர்கிறது.

அறிவியலர்கள் தாங்கள் 2001இல் கண்டு பிடித்த குள்ளக் கோள் (dwarf planet) ஒன்றுக்கு ஏரஸ் (Ares) என்னும் கிரேக்கக் கடவுளின் மகன் பெயரை, அதாவது இக்சியான் (Ixion) என்னும் பெயரைச் சூட்டினர்.

அமெரிக்க அறிவியலர்கள் நிலவுக்குத் தாங்கள் தொடர்ச்சியாக அனுப்பி வந்த எறியங்கள் (ராக்கெட்டுகள்) அனைத்துக்கும் அப்பல்லோ (Apollo) என்னும் கிரேக்கப் புராணக் கடவுளின் பெயரைத்தான் சூட்டினார்கள்.

சென்ற ஆண்டு 2011இல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகிய நாசா (NASA) வியாழனை ஆராய்ச்சி செய்வதற்கென்று ஒரு விண்கலத்தை அனுப்பி வைத்தது. 2016இல் வியாழனைச் சென்று அடையவிருக்கும் அந்த விண்கலத்துக்கு அமெரிக்க அறிவியலர்கள் சூட்டிய பெயர் ஜூனோ. இவள் வேறு யாருமல்ல, குயில் வேடமிட்டு வந்த தன் அண்ணனாகிய ஜூபிடரை மணமுடித்தாளே, அதே ரோமானிய இறைவி ஜூனோதான்.

கோள்களின் இயக்கங்களைக் கொண்டு ராசிப் பலன்கள் சொல்வதற்கும் ஆங்கில உலகில் பஞ்சமில்லை. அமெரிக்காவின் 90 விழுக்காடு பத்திரிகைகள் ராசிப் பலன்கள் வெளியிடுவதாகச் சொல்கிறது நியூயார்க் டைம்ஸ். அமெரிக்கா விலிருந்து வெளிவரும்நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற நாளிதழ்களும், உலகப் புகழ் பெற்ற டைம் போன்ற கிழமையேடுகளும், இங்கிலாந்தில் இடதுசாரி நாளிதழ் எனக் கருதப்படும் தி கார்டியன் உட்படடெய்லி மெயில், தி டெலிகிராஃப், தி டைம்ஸ் போன்ற நாளிதழ் களும், கனடாவின் வான்கூவர் சன், ஆஸ்திரே லியாவின் தி ஏஜ் போன்ற நாளிதழ்களும் வக்கணையாக ராசிப் பலன்கள் வெளியிட்டு வருகின்றன.

வான்கப்பல்களையும் பலூன்களையும் ஊதிப் பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் வாயுவின் பெயர் ஹீலியம் (Hellium). இது சூரியக் கடவுளுக்கு உருவகமாகத் திகழும் ஹீலியாஸ் (Helios) என்னும் கிரேக்கப் புராணக் கடவுளின் பெயரிலிருந்து உருவானது.

மருத்துவத் துறையைக் குறித்துக் காட்டுவதற்கு உல கெங்கும் மருத்துவர்கள் பயன் படுத்தும் கடூசியஸ் (Caduceus) என்னும் சின்னத்தை எல் லோரும் பார்த்திருப்போம். இரு இறக்கைகளும் பாம்பும் சூழ அல்லது இரு இறக்கைகள் மட்டுமே சூழக் காணப்படும் கடூசியஸ் எனப்படும் தண்டம் மருத்துவத் துறையின் அடையாள முத்தி ரையாகத் திகழ்கிறது. இந்தத் தண்டத்தை மெர்குரி எனப் படும் கிரேக்கக் கடவுள் தன் கையில் ஏந்தி நிற்பார். நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, லாரண்டா என்னும் பெண் ணைக் கற்பழித்த மெர்க் குரிக் கடவுள் ஏந்தியுள்ள தண்டந் தான் மருத்துவர்களின் சின்ன மாகத் திகழ்கிறது, நல்ல வேடிக்கைதான்!

மருத்துவத் துறையில் பல மருந்துகளின் பெயர்களுக்கும் புராணக் கடவுளர்களே துணை செய்கின்றனர். காட்டாக, மயக்க மளித்து வலியைக் குறைக் கக் கூடிய மார்ஃபின் (Morphine) என்னும் மருந்தின் பெயர் மார்ஃபியஸ் (Morpheus) என் னும் கிரேக்கக் கனவுக் கடவு ளின் பெயரிலிருந்து உருவானது ஆகும்.

ஈடிபஸ் உளச்சிக்கல் (Oedipus Complex) என்பது உளவியல் துறையில் ஒருவர் தன் தாயின் மீதே மோகம் கொள்ளும் மனநோயைக் குறிப்பதாகும். ஈடிபஸ் என்னும் இந்தக் கிரேக்க இலக்கியக் கதை மாந்தன் தன் தாயையே திருமணம் செய்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு ஈடிபஸ் உளச்சிக்கல் என்னும் நோய்ப் பெயரும் உருவானது.

இவ்வாறு மூடப் புராண இதிகாசங்கள் படர்ந்துள்ள ஆங்கில அறிவியல் இன்று தனித்து வளர்ந்து விட்டாலும் இலத்தீன் துணையின்றி அதனால் தனித்து இயங்க இயலாது.

தாவரவியல், விலங்கியல் பெயர்கள் அனைத்திலும் முழுக்க முழுக்க இலத்தீனே ஆதிக்கம் செலுத்துகிறது. அதாவது தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஐரோப்பாவில் அந்தந்த நாடுகளில் தனித் தனிப் பெயர்கள் இருந்ததால் அவற் றின் பெயர்கள் அனைத்து அறிவியலர்களுக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) என்னும் சுவீடன் நாட்டுத் தாவரவியலர் உயிரினங்கள் அனைத்துக்கும் இருசொல் பெயரீடு(Binomial Nomenclature) என்னும் முறையின்படிப் பொதுவான பெயர்களை உருவாக்கினார். அவர் உலகின் உயிரினங்கள் அனைத்துக்கும் இரு சொற்களில் பெயரிட்டார்.

அதாவது ஓர் உயிரினத்தின் பெயரின் முதல் சொல்லை அது எந்தப் பேரினத்தின் (genus) கீழ் வருகிறதுஎன்பதைக் கொண்டும், இரண்டாம் சொல்லை அது எந்தச் சிற்றி னத்தின் (species) கீழ் வருகிறது என்பதைக் கொண்டும் உருவாக்கினார். இவ்வகையில் அவர் அனைத்து உயிர்களுக்கும் இலத்தீனிலேயே பெயரிட்டார். ஓரளவுக்குக் கல்வி கற்றவர்கள் நன்கு அறிந்த ஹைபிஸ்கஸ் ரோசாசினன்சிஸ் (செம்பருத்தி), பெரிப்ளா னேட்டா அமெரிக்கானா (கரப் பான் பூச்சி) போன்ற எந்த உயிரியல் பெயரை எடுத்துக் கொண்டாலும் அது பெரும் பாலும் இலத்தீனே என அறியலாம்.

ஆங்கில நீதித்துறையை எடுத்துக் கொண்டால் இலத் தீன் இல்லையேல் ஆங்கிலச் சட்டங்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு இலத்தீன் கலைச் சொற்கள் ஆங்கில நீதித் துறையில் நீக்கமற நிறைந் துள்ளன. காவல்துறை ஒரு வரைத் தவறாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக ஐயுற்று அவரை நீதிபதியின் முன் நிறுத்தக் கோரும் ஹேபியஸ் கார்பஸ், ஒரு சிக்கலில் தானாகத் தலையிடும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கும்சுயோ மோட்டு (சுயோ மோட்டோ), ஒருவருக்குச் சட்டப்படியுள்ள உரிமை பற்றிக் குறிப்பிடும் லோகஸ் ஸ்டேன்டி,செயல் வழிமுறையைக் குறிக்கும் மோடஸ் ஆபரன்டி, நடப்பு நிலை என்பதைக் குறிக்கும் ஸ்டேடு கோ (ஸ்டேடஸ் கோ), பிரமாணப் பத்திரத்தைக் குறிக்கும் அஃபிடிவிட், சட்டப் படி அல்லாத நடைமுறைக்கு உரிமையளிக்கும் டி ஃபேக்டோ என இலத்தீன் சட்டச் சொற் களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இப்படி இறையியல், அறிவியல், மருத்துவம், சட்டம் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறைக் குரிய கலைச்சொற்களைப் பெரும்பாலும் இலத்தீன் மொழி யிடமிருந்தே கடன் பெற்று இயங்க வேண்டிய ஒரு நிலை யில் ஆங்கிலம் இருக்கிறது என்பது உண்மைதான் என்றா லும், அது பயிற்று மொழி என்றளவில் இலத்தீனைத் துரத்தி அடித்து விட்டது. இதுவுங்கூட பெரும் போராட் டங்களுக்கு இடையில்தான் நடந்தது.

15, 16ஆம் நூற்றாண்டு அளவில் இறையியலில் இலத் தீனுக்கு அடி கிடைத்த கதை யைக் கண்டோம் அல்லவா. அதுவே அறிவியல் ஆங்கிலத் துக்கும் கதவைத் திறந்து விட்டது. திருப்பேரவையின் இறையியல் இலத்தீன் ஒழிந் ததும் இயல்பாகவே அதன் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளி களிலும் கல்லூரிகளிலும் கூட இலத்தீன் ஒழியத் தொடங் கியது. அந்தக் காலக் கட்டங் களில் மாணவர்கள் முதல் முறையாகத் தங்கள் தாய் மொழியாம் ஆங்கிலத்தில் கல்வி பயிலத் தொடங்கினர். ஆங்கி லத்தின் இறையியல் விடுதலை ஆங்கிலக் கல்வி விடுதலைக்கும் வழி வகுத்துக் கொடுத் தது ஆங்கிலேயர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

என்னதான் ஆங்கிலக் கல்வி விடுதலை பெற்றாலும் ஆங்கில ஆராய்ச்சிக் கல்வி என்பது, குறிப்பாக மெத்தப் படித்த மேதைகளின் மொழி என்பது அந்நிலையிலும் இலத்தீனாகவே இருந்து வந்தது.அறிவியலர்கள் கூட தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்குச் சரியான மொழி இலத்தீனே எனக் கருதினர். ஏனென்றால் அன் றைய ஐரோப்பியத் தேசங்கள் எங்கும் அறிவியலில் இலத்தீனே ஆதிக்கம் செலுத் தியதால், தங்கள் அறிவியல் கருத்துகளை இலத்தீனில் எழுதினால்தான் அவை மற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிவியல் சமுதாயத்தைச் சென்றடையு மென ஆங்கில அறிவியலர்கள் கருதினர்.

ஐசக் நியூட்டனே இலத்தீன் பக்கந்தான் நின்றார் என்பது அதிர்ச்சிக்குரிய வரலாற்றுச் செய்தியாகும். ஆங்கிலேயராகிய நியூட்டன் தமது அறிவியல் கோட்பாடுகளை ஆங்கிலம் தவிர்த்து இலத்தீனிலேயே எழுதி வெளியிட்டார். குறிப் பாகத் தமது பெரும் படைப் பாகிய இயற்கை மெய்யியலின் கணிதவியல் கொள்கைகள் (Philosophiae Natu ralis Principia Mathematica) என்னும் நூலை இலத்தீனில்தான் எழுதினார். அந்நூலில் அவர் தமது முக்கிய ஆராய்ச்சிக்குரிய ஈர்ப்பு என்ற சொல்லுக்கு gravitas (கிரா விடாஸ்) என்னும் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தினார். இந்தச் சொல்லே பின்னர் ஆங்கிலத்தில் gravity (கிரா விட்டி) ஆயிற்று.

இன்று தமிழகத்தில் ஆங்கிலவழிக் கல்வி மாண வர்கள் புகழ்வாய்ந்த நியூட்ட னின் மூன்றாம் இயக்க விதியை Every action has equal and opposite force (ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமானதும் எதிரான துமான ஒரு விசை உண்டு) என்பதாக ஆங்கிலத்தில் உருப் போட்டுப் படித்து வந்தாலும் இந்த வரியை நியூட்டனின் படைப்பில் தேடினால் கிடைக் காது. சொல்லப் போனால் நியூட்டனே கூட தமது ஈர்ப் பியல் விதிகளையும், இயக்க வியல் விதிகளையும் ஆங்கிலத் தில் படித்ததில்லை. ஏனென் றால் அவரது இலத்தீன் படைப் புகள் அவர் இறந்த பிறகுதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டன.

ஆனால் இங்கிலாந்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுடைமை ஆதிக்கமும், திருப்பேரவைக் கொடுமைகளும் முற்றாக ஒழித்துக் கட்டப் பட்டுத் தொழிற்புரட்சி ஏற்பட் டவுடன் பாட்டாளிகள் உள்ளிட்ட அனைத்து மக்களி டத்தும் அறிவியலைக் கொண்டு சேர்க்க வேண்டிய சனநாயகத் தேவை எழுந்தது. கல்வியில் சமூகநீதி வேண்டுமானால் இலத்தீனின் இடத்தில் ஆங்கி லேயர்களின் தாய்மொழி ஆங்கிலம் வந்து அமர வேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. ஆங்கில அறிவியல் மொழியின் மறுமலர்ச்சியே இங்கிலாந்தின் மறு மலர்ச்சிக் குரிய காலத்தையும் குறித்தது என்றால் மிகையாகாது.

இலத்தீன் ஆதிக்கத்தில் ஆங்கில அறிவியல் கட்டுண்டு கிடந்த போது மேட்டுக் குடி யினருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த அறிவியலானது ஆங்கில விடுதலைக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியதும் பாட்டாளி வீட்டுக் குழந்தை களும் பேரறிவியலர்களாகும் அதிசயம் நடந்தது. இதற்கு மைக்கேல் ஃபாரடே சிறந்த எடுத்துக்காட்டு. ஏழைக் கொல்லராகிய ஜேம்ஸ் ஃபார டே என்பவருக்கு மகனாகப் பிறந்த மைக்கேல் ஃபாரடே புத்தகம் கட்டும் (பைன்டிங்) இடத்தில் வேலை செய்தபடி அங்கு கிடைக்கும் புத்தகங் களைப் படித்து மாபெரும் அறிவியலர் ஆனார். மின்னி யலில் பெரும் சாதனைகள் படைத்தார்.

எழுதப் படிக்கக் கூட தெரியாத பெற்றோருக்கு மகனாய்ப் பிறந்து தொடர் வண்டிகளை ஓடச் செய்த ஜார்ஜ் ஸ்டீஃபென்சன், ஏழை நெசவாளிக் குடும்பத்தில் பிறந்து அடிப்படை அணுக் கோட் பாடுகளை உருவாக்கிய ஜான் டால்டன், ஓர் ஏழைக் குடும் பத்தில் பிறந்து 13 வயதிலேயே வேலைக்குச் சென்று வறு மையில் உழன்றாலும் பிற் காலத்தில் பல ஆய்வுகள் செய்து தாமஸ் ஆல்வா எடிசனுக்கு 20 ஆண்டு முன்பே கார்பனிழை மின் குமிழ் விளக்கைக் கண்டு பிடித்த ஜோசஃப் வில்சன் ஸ்வான் எனப் பல பாட்டாளி வீட்டுப் பிள்ளைகளும் அறிவி யலில் கொடி கட்டிப் பறந்தனர். தாய்மொழிக் கல்வியே சமூக நீதிக்கு அடிப் படை என்பதற் குச் சான்றாகத் திகழும் பெரு மகன்கள் இவர்கள்.

இலத்தீனின் அடிமைப் பிடியிலிருந்து முற்ற முழுக்க விடுதலை பெற்ற ஆங்கிலம் பையப் பையப் பிற நாடுகளை ஆதிக்கம் செய்யத் தொடங் கியதும் தன் முகத்தை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது ஒரு வரலாற்று முரணகை ஆகும். அதாவது இலத்தீன் தனக்குச் செய்த கொடுமையை அது தனது காலனி நாடுகளின் மீது அரங்கேற்றத் தொடங்கியது. ”இலத்தீனே அறிவியல் மொழி; ஆங்கிலம் கவைக்கு தவாத வெற்று மொழி” எனும் கூற்றைப் பல்லாண்டுக் காலம் கேட்டு வந்த ஆங்கிலம் தான் ஆளத் தொடங்கிய தேசிய இனங்களின் மொழியைப் பார்த்துக் கூறியது: “நானே அறிவியல் மொழி; எனக்கு அடிமைப்பட்ட மற்ற யாவும் அறிவுக்குதவாத மூட மொழி கள்.” புராண மூட நம்பிக் கைகளில் ஊறித் திளைத்த ஒரு மொழி பழம் பெரும் மொழி களை மூட மொழிகள் என அழைத்தது நல்ல நகைச் சுவைதான்!

இங்கிலாந்து தாம் ஆண்டு வந்த காலனி நாடுகளில் இந்த ஆங்கில மொழி வெறியைச் சட்டமாக்கும் முயற்சிகளில் இறங்கியது. இந்த அடிப் படையில் தமது காலனி நாடுகளில் ஒன்றாகிய இந்தியா விலும் அதன் தேசிய இன மொழிகளைப் புழக்கடையில் தள்ளி ஆங்கிலத்துக்கு முடி சூட்டும் நோக்கில் தாமஸ் பேபிங்டன் மெகாலே (படம் காண்க) என்பவரை 1834இல் இந்தியாவுக்கு வரவழைத்தது ஆங்கிலேய அரசு. இந்தியர் களுக்குரிய கல்வி மொழி எது? கல்விக் கொள்கை என்ன? என்பனவற்றைத் தீர்மானிப்பது அவரது பொறுப்பாக இருந்தது. அவரும் 1835 பிப்ரவரி 2 அன்று தமது திட்டத்தை முன் வைத்தார். கல்வி பற்றி மெகா லேயின் நிகழ்ச்சிக் குறிப்பு (Macaulay's Minute on Education) என அந்தத் திட்டம் அழைக் கப்படுகிறது.

மெகாலே தமக்குக் கீழ் அமைக்கப்பட்ட குழுவினரில் ஒரு பாதியினர் இந்தியக் கல்வி மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமெனக் கூறுவதாகவும், மற்றப் பாதியினர் சமற்கிருதம் அல்லது அரபி மொழி இருக்க வேண்டுமெனக் கூறுவதாகவும் சொல்கிறார். இந்தத் தொடக் கமே நமக்கு அதிர்ச் சியளிக் கிறது. இந்தியாவில் இங்கி லாந்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட தேசிய இனங்கள் இருப்பதும், அவற் றுக்கு ஆங்கிலத்தை விட நன்கு வளர்ச்சி பெற்ற மொழிகள் இருப்பதுங்கூட தெரியாமல் அந்தக் குழுவினரில் ஒரு பகுதியினர் செத்துப் போன சமற் கிருதத்தையும் பிரித்தா னியர்களுக்கு முந்தைய அரபு நாட்டு ஆண்டையர்களின் மொழியாகிய அரபியையும் இந்தியக் கல்வி மொழியாகப் பரிந்துரை செய்தது பெருங் கொடுமை ஆகும். ஆனால் இதனினும் பெரிய கொடுமை என்னவென்றால், மெகாலே இந்தக் கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு தமது கல்வித் திட்டத்தை அறிவித்துச் செல்கிறார்.

சமற்கிருத, அரபி இலக்கி யங்கள் எதுவும் ஆங்கில இலக்கியங்களின் முன் ஒப்பு நோக்கத் தகுதியற்றவை என் கிறார் மெகாலே. இங்கு அவர் இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாயாகிய தமிழ் பற்றி எல்லாம் மூச்சே விடவில்லை. ஆனால் தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டு முன் கோலாச்சிக் கொண்டிருந்த காலத்தில் உலகின் எந்த மூலையிலும் வேர் விட்டிராத ஒரு மொழிக்கு, ஒவ்வொரு கலைச்சொல்லுக்கும் ஓர் அயல்மொழியிடம் கை யேந்தி நிற்க வேண்டிய நிலை யில் உள்ள ஒரு மொழிக் குச் சொந்தக்காரரான மெகாலே ஆங்கிலத்தின் பெருமை குறித் துப் புளகாங்கிதம் அடை கிறார்.

அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த இந்திய, அரபிய இலக்கியங் களின் தரம் ஒரு நல்ல ஆங்கில நூலகத்தில் உள்ள ஒரு அல மாரிப் புத்தகங்களின் தரத்துக்கு ஈடாகாது என்கிறார் மெகாலே. 14ஆம் நூற்றாண்டில் சாசர் வரும் வரை இலக்கியத் தகுதி யைக் கூட அடையாது வெறும் வட்டார மொழியாகச் சுருங்கிக் கிடந்தது ஆங்கிலம் என ஏற் கெனவே கண்டோம். இந்த ஆங்கிலத்தைக் கொண்டு போய் இந்திய இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே கூட எந்தளவுக்குத் தரக்கேடான சிந்தனை!

அதுவும் மெகாலே ஆங்கிலத் தைக் காட்டி அரபியைக் கீழ் மைப்படுத்துவது சிறு பிள்ளைத் தனமாகும்.

முக்கோணவியலில் கொசைன் பயன்பாட்டை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவரும் கணிதவியலில் பை (ப) மதிப்புக்கு மிக நெருக்க மான மதிப்பீட்டை வழங்கிய வருமான ஜம்ஷிட் அல்-கஷி, ஒளி கண்களிலிருந்து உமிழப் படுவதாக அரிஸ்டாட்டில், தாலமி காலம் தொட்டு 11ஆம் நூற்றாண்டு வரை மேற்குலகம் நினைத்துக் கொண்டிருந்த போது, ஒரு பொருளில் படும் ஒளியே எதிரடிக்கப்பட்டுக் கண்ணுக்கு வந்து சேர்வதாகச் சொன்னவரும் ஒளிப் படக் கருவிக்கான (கேமரா) அடிப் படையை உருவாக்கிக் கொடுத்த வருமான ஒளியியல் மேதை அல்-ஹைதன், எட்டாம் நூற்றாண் டிலேயே இயற்கணிதம் என்னும் புதிய கோட்பாட்டை உலகுக்கு வழங்கியவரும் அந்தக் கோட் பாட்டுக்குரிய சொல்லை அல் ஜீப்ரா எனத் தமது தாய்மொழி அரபியிலேயே வழங்கிய வருமான அபு அப்துல்லா முகமத் முசா அல்-குவாரிஸ்மி, பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியப் பல் கலைக்கழங் களின் அடிப்படை மருத்துவ நூலாகத் திகழ்ந்த மருத்துவக் கொள்கைகள் (The Canon of Medicine) என்னும் பெருநூலை பத்தாம் நூற்றாண்டிலேயே படைத் தளித்த அபுஅலி சினா என்கிற அவிசென்னாஎன அராபிய உலகத்து மாமேதைகள் பலர் அலை அலையாகத் தோன்றி அளித்த அறிவுக் கொடையில் வளர்ந்ததுதான் ஐரோப்பிய அறிவியல் உலகம் ஆகும். அதன் எச்சங்களில் இருந்து வளர்ந் ததே ஆங்கில அறிவு. இப்படித் தங்களுக்கு அறிவுப் பிச்சை யிட்ட ஒரு பெரும் சமுதாயத் தினரது அறிவியலை, இலக்கி யத்தை ஒரு ஆங்கில அல மாரியுடன் ஒப்பிட்டுக் கீழ்மைப் படுத்துவது முட்டாள்தனமான தற்குறிச் செயல் மட்டுமன்று, தறிகெட்ட விலங்குகளுக்கும் ஒவ்வாத அயோக்கியத் தனமாகும்.

இப்படி இந்தியப் பார்ப்பனர் களுக்குச் சற்றும் குறையாத கொழுப்பும் அடாவடித்தனமும் நிறைந்த மெகாலே என்னும் இந்த மனிதன்தான் இந்தியர் களுக்குரிய கல்வித் திட்டத்தை வழங்கப் புறப்பட்டான்.

இலக்கியத் தரமோ அறிவியல் மேன்மையோ இல் லாத சமற்கிருத, அரபி மொழி களுக்கு இந்தியக் கல்வி மொழி யாக இருக்கும் தகுதியில்லை எனச் சொன்ன மெகாலே அதற்கு மிகப் பொருத்தமான மொழி ஆங்கிலமே என்றார். இந்தியாவில் கல்வி மொழியாக ஆங்கிலம் இருக்கலாமா? என இந்தியர்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய தேவை யில்லை என்கிறார் மெகாலே. அவர்களுக்கு இருக்கும் அறிவுத் தரத்துக்கு அவர்களிடம் சென்று யோசனை கேட்பது மோசமான செயலாகவே இருக்கும் என்றார் மெகாலே.

ஆங்கிலத்தை இந்தியாவில் பரப்புவது எளிய காரியமே, ஏனென்றால் இந்தியாவில் ஆங்கிலம் பேசும் ஒரு வகுப்பினர் ஏற்கெனவே உருவாகி விட்டதாகக் கூறு கிறார் மெகாலே. ஓர் அயல் இனம் தங்களை அடிமைப் படுத்தத் தொடங்கியதுமே அவர்களின் மொழியைக் கற்ற தாக மெகாலே குறிப்பிடும் அந்த வகுப்பினர் பார்ப்பனச் சாதியினராகவே இருக்க முடியும். எனவே அவர் முன் வைக்கும் ஆங்கிலம் யாருக்குப் பயனளிக்க வல்லதென எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டதல்லவா?

இதற்கேற்ப ஆங்கிலக் கல்வி முறை ஏன் என்பதற்கான காரணத்தைப் போட்டு உடைக் கிறார் மெகாலே பாருங்கள். கோடிக் கணக்கான (இந்திய) மக்களின் கருத்துகளை நம் மிடம் (ஆங்கில அரசிடம்) எடுத்துச் சொல்லத் தகுதி பெற்ற ஒரு வகுப்பாரை உருவாக்குவதே நமது நோக்கமாகும். இரத்தத் திலும் நிறத்திலும் இந்தியர் களாகவும், உணர்வுத் திறத் திலும், கருத்து நிலையிலும், அறக் கொள்கையிலும், அறி வாற்றலிலும் ஆங்கிலேயர் களாகவும் திகழக் கூடிய ஒரு வகுப்பாரை உருவாக்குவதுமே நமது குறிக்கோளாகும்.

மெகாலே மேலும் சொல் கிறார். நாம் உருவாக்கும் இந்த வகுப்பாரின் கடமை தாம் சார்ந்த வட்டார மொழி பேசும் மக்களின் அறிவைப் பக்குவப் படுத்துவது ஆகும்.உழைக்கும் மக்களின் அறிவைப் பக்குவப் படுத்தும் திருப்பணியை மெகாலே யாரிடம் போய் ஒப்ப டைக்கிறார் பாருங்கள்.

வந்தேறிகள் இடும் விதி களுக்கு உடனடியாகக் கீழ்ப் படிந்து காரியங்கள் சாதித்துக் கொள்ளும் பச்சோந்திக் கூட்டம் எந்த நாட்டிலும் மேட்டுக் குடியினராகவே இருப்பர். இலத்தீனுக்கு அடி மைப்பட்டுக் கிடந்த இங்கி லாந்தில் திருப்பேரவைக்கும் அரசனுக்கும் கீழ்ப்படிந்து முன் னேறியது அரசச் சங்கத்தின் அதிகார வர்க்கக் கூட்டம் என்றால், இந்தியாவில் அந்த அதிகார வர்க்கம் பார்ப்பனச் சாதியினரே என்பதில் அய்ய மில்லை. அப்படியானால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் அறிவைப் பேணும் பொறுப்பு பார்ப்பனர் களுடையது எனச் சொல்லாமல் சொல்கிறார் மெகாலே.ஆட்டு மந்தையைக் காக்கும் பொறுப்பை ஓநாயிடம் ஒப் படைத்த கதைதான்!

எனவே பல நூறாண்டாய் ஒடுக்கப்பட்டு வரும் மக்களின் மொழி அழித்து, அதன்வழி அவர்களின் இயற்கைப் படைப் பாற்றலை ஒழித்துக் கட்டுவதே ஆங்கில மொழியின் சதித் திட்டம் ஆகும்.

மொத்தத்தில், ஆங்கிலக் கல்வியின் நோக்கம் ஆங்கி லேயர்களுக்குக் கூழைக்கும் பிடும் போடும் அடிமைக் கூலி களை உருவாக்குவதுதானே அன்றி, படைப்பாற்றலுடன் திகழும் ஓர் அறிவுச் சமுதா யத்தை உருவாக்குவது அன்று. இப்படி இந்தியாவில், நமது தமிழ்நாட்டில் அனைத்து உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு மேட்டுக்குடி கல்வித் திட்டம் ஆங்கிலத்தின் வடிவில் முன்வந்த போது, ஆங்கிலமே அறிவியல் மொழி என்னும் மாயா வாதத்தை மக்களிடம் ஆங்கில அரசு கட்டவிழ்த்து விட்ட போது,அந்தச் சதித் திட்டத்துக்கு அன்று பார்ப் பனியத்துக்கு எதிராகப் போரா டிவந்த சமூநீதித் தலைவர்கள் எப்படி முகங்கொடுத்தார்கள்? இதற்கு விடை காண்பதே நமது இந்தக் கட்டுரைத் தொடரின் கடைசிப் பகுதியின் நோக்கமாகும்.

(தொடரும்)

Pin It