பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர் மரண தண்டனையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் தானாகவே தன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது கூட்டாட்சி நீதி முறைமைக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது.

இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது, வேறு ஒரு மாநில உயர்நீதி மன்றம்தான் விசாரிக்க வேண்டும் என மூப்பனார் பேரவை என்ற முகவரித்தாள் அமைப்பைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தொடுத்த வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்னபோதிலும் உண்மையில் மறைமுகமாக அவரது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவே அம்மன்றத்தின் நடவடிக்கை உள்ளது.

ஒரு குற்றவியல் வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தனக்குள்ள சட்ட உரிமையையும்நியாயத்தையும் வலியுறுத்தி சட்ட வழியில் போராடுவதற்கு இருக்கும் ஒரு வாய்ப்பை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பறிக்கிறது. இராஜீவ் காந்தி கொலைவழக்கில் தடா நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மன்றமாக உச்சநீதிமன்றம் செயல்பட்ட போது அதன் தீர்ப்பில் தீவிரமான உள் முரண்பாடுகள்சட்டவழிப்பட்ட பிழைகள் இருப்பதை அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி. தாமஸ் அவர்களே தி ஏஷியன் ஏஜ்ஏட்டில் ஒத்துக் கொண்டிருக்கிறார். அவ்வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகளின் பல்வேறு நேர்காணல்களும் கட்டுரைகளும் இராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏற்பட்ட குழறுபடிகளை எடுத்துக் காட்டியிருக்கின்றன.

இவை பற்றியெல்லாம் சட்டவழியில் போராடுவதற்கு உள்ள சென்னை உயர்நீதிமன்றம் என்ற களத்தை உச்ச நீதிமன்றம் பறித்துவிட்டது. எந்த உயர்நீதிமன்றத்திலிருந்தும் வழக்கை தானே எடுத்து விசாரிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வதிகாரத்தை உச்சநீதிமன்றம் அரிதாகவே பயன்படுத்தவேண்டும். அதுதான் கூட்டாட்சி முறைமையை நீதித்துறையில் பாதுகாக்க உதவும்.

கூட்டாட்சி முறைமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று. (Basic structure of the Constitution) என கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை இப்போதைய உச்ச நீதிமன்ற நடவடிக்கை மீறுவதாக உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை இதே போன்ற வேறு சில மரண தண்டனை வழக்குகளைக் காரணம் காட்டி தன்னுடைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்துக் கொண்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மறைமுகமாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மீது அதற்குள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் செயலே ஆகும். இது கூட்டாட்சி நீதி முறைமைக்கு மிகப் பெரிய ஊறு விளைவிக்கும்.

எனவே தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை உரியவாறு அணுகி சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இவ்வழக்கை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

Pin It