சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக் கெடுப்பு நடந்து வருகிறது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என்று குரல் கொடுத்ததில் தமிழ்த்தேசப் பொதுவுடை மைக் கட்சியும் ஒன்று.

மண்டல் குழு பரிந்துரைப்படி, நடுவண் அரசு வேலை வாய்ப்பிலும், அதன் பொறுப்பில் உள்ள கல்வி நிலையங்களிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வழங்க இந்திய அரசு ஆணையிட்டது. அதை எதிர்த்த வழக்குகள் உச்சநீதிமன்ற விசார ணையில் உள்ளன.
 
அவ்வழக்கில், தமிழ்நாட்டில் 50 விழுக் காட்டு வரம்புக்குமேல் 69 விழுக்காடு வரை இடஒதுக்கீடு இருப்பதற்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்தது. தமிழ்நாட்டில், மாநில அரசு நிறுவனங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற் படுத்தப் பட்ட மக்களுக்கு வழங்குவது எந்த அடிப்படையில், அதற்கான அளவுகோல் வைக்கப்பட்டு சாதி வாரியாக மக்கள்தொகைக் கணக்கிடப்பட்டதா என்று உச்சநீதி மன்றம் கேட்டது.

இன்னும் இதுபோல் இடஒதுக்கீடு தொடர் பாகப் பல்வேறு முனைகளிலிருந்து வினாக்கள், விளக்கங்கள் கேட்கப்பட்டன.

இவற்றுக்கெல்லாம் விடையளிக்க வந்தது தான் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு!
சாதி ஒழிப்பு கோருவோர், சாதிக்கணக் கெடுப்பை வரவேற்கலாமா என்று வினா எழுவது இயல்பே.

வர்ண சாதி ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்டுள்ள சமூகத்தில் இடஒதுக்கீடு தேவை. முள்ளை முள்ளாள் எடுப்பதுபோல் பிறந்த சாதியால் பின் தள்ளப்பட்ட மக்கள் - தங்கள் சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வரவேண்டியுள்ளது. இது, சமூக நீதியின் உயிர்க் கூறாகும். குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வேற்பாடு தேவை.

எனவே சமூக நீதிக் கண்ணோட்டத்துடன், தாங்கள் பிறந்த சாதிப் பெயரை, கணக்கெடுப்பின் போது ஒவ்வொருவரும் கூற வேண்டும். இடஒதுக்கீடு தேவையில்லை என்று கருதுவோர் சாதி கூறதேவையில்லை.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் சாதியற்ற தனி ஒதுக்கீடு வரும்வரை, கணவனும், மனைவியும் அவரவர் பிறந்த சாதியைக் கூற வேண்டும். அவர்களின் பிள்ளைகள், தந்தை யின் சாதியையோ அல்லது தாயின் சாதியையோ கூற உரிமை உண்டு.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மேற்கண்ட வகைகளில் செயல்படுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Pin It