உண்மை ஒன்று சொல்வேன் – 13 

கேரள மாநிலத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலை மனதில் கொண்டு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கேரள அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்குகிறார்கள் என நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறியதை கண்டித்து கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல கட்சித்தலைவர்களும் சிதம்பரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கூக்குரலிட்டதை யாரும் அவ்வளவு விரைவில் மறைந்திருக்க முடியாது.

நடுவண் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் எவ்வாறு இப்படி கூறலாம் என்றும் கண்டித்தனர். எதிர்ப்புக்குப் பணிந்து சிதம்பரமும் அந்தக் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் இன்றைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தை கண்டிக்க தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடுவண் அமைச்சருக்கும் துப்பில்லாமல் போனதை நினைத்தால் பாரதியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. “முகத்தில் காறி உமிழ்ந்து விடு பாப்பா”!!

தமிழகத்துக்கு நியாயமாக சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது கர்நாடக மாநிலம். உச்சநீதிமன்றம், பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டும் தண்ணீர் தர முடியாது என்று போராட்டம் நடத்துகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலையில் நிலவுகிறது என்பதை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் இருந்தும் கர்நாடகாவிலிருந்தும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அப்படியே நிற்க வைக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தி, பேருந்து கண்ணாடிகளை உடைத்துள்ளனர். 

அதே நேரத்தில், இரு மாநிலங்களுக்கும் இடையே கர்நாடக பதிவெண் கொண்ட அம் மாநில பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வந்து கொண்டுதானிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் போது, கேட்கும் போது சூடு சொரணை இல்லாத இனமாய் தமிழினம் மாறிவிட்டதோ என்று கவலையாக இருக்கிறது.

கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை என்று பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்கிறது கர்நாடக அரசு. அக்டோபர் 8-ஆம் தேதி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 104.92 அடி தண்ணீர் இருந்தது. (மொத்த உயரம் 124.8 அடி). கபினி அணையில் (கடல்மட்டத்திலிருந்து) 2268.50 அடிக்கு தண்ணீர் இருந்தது. மொத்த உயரம் 2284 அடி. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 72.05 அடியாகத்தான் இருந்தது மொத்த உயரம் 120 அடி கடந்த ஒரு மாதமாக இந்த உயரத்துக்கு மேலாக நீர்மட்டம் உயரவே இல்லை. உபரியாக வைத்துக் கொண்டும் உபத்திரம் கொடுக்கிறது கர்நாடகம்.

ஆனால், தினம் தினம் பதினைந்து மணி நேரத்துக்கு மேலாக மின் தடையால் இருட்டில் தவிக்கும் தமிழகத்தில் இருந்து கன்னடனுக்கு 11 கோடி யூனிட் மின்சாரமும் முல்லைப் பெரியாரை இடிக்கத் துடிக்கும் மலையாளிகளுக்கு 9 கோடி யூனிட்டும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட்டும் நெய்வேலியிலிருந்து போய்க் கொண்டிருக்கிறது. தமிழன் வாழ்வில் வெளிச்சமே கிடையாதா?

காவிரியை தடுத்து நிறுத்து என்று கன்னட நடிகர் நடிகைகளும் அம்மாநில கவர்னரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். நியாயத்துக்கு எதிராக தங்கள் ஒற்றுமையை அவர்கள் பறைசாற்றி உள்ளனர். தமிழ் நடிகர் நடிகைகளோ, மாவீரர் மாதமான நவம்பரில் கனடாவில் குத்தாட்டம் போட்த் தயாராகி வருகின்றனர். தமிழனின் உணர்வை நினைத்தால் புல்லரிக்கிறது!!

(இன்னும் சொல்வேன்)

Pin It