தர்மபுரி மாவட்டத்தில் நடந்துள்ள சாதி வெறியாட்டம் தமிழ் இனம் தலைகுனிய வேண்டிய வெட்கக் கேடான நிகழ்வாகும். இது சாதி மோதல் அன்று. ஒரு சாதியில் உள்ள வெறியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இன்னொரு சாதி மக்கள் மீது நடத்திய அட்டூழியமும், அழிவு வெறியாட்டமும் ஆகும்.

நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகள் பெட்ரோல் குண்டு வீச்சாலும், தீ வைப்பாலும், கடப்பாறை போன்ற கருவிகளால் தாக்கப்பட்டதாலும் வெந்தும், தகர்ந்தும் நிர்மூலமாகக் கிடந்ததை நேரில் பார்த்து நெஞ்சு பதைத்த பின் இவ்வாறு எழுதுகிறோம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் நம் மண்ணில் இப்படியுமா நடக்கும்? இதைக் காட்டுமிராண்டித்தனம் என்றால் காட்டுமிராண்டிகளைக் கொச்சைப்படுத்தியதாகும். அத்தனை கயமைத்தனம், வன்மம், பழிவாங்க வேண்டும் என்ற வெறி அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இத்தனை வெறியாட்டம் நடத்தும் அளவுக்கு அந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், மேல் சாதிக்காரர்களுக்கு எதிராக என்ன தீங்கு செய்தார்கள்? எதுவும் இல்லை.

நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட(பறையர்) வகுப்பு இளைஞர் இளவரசன் பக்கத்து ஊரான செல்லன்கொட்டாய் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த நாகராசு மகள் திவ்வியாவைக் காதலித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து, முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். நாகராசு, தன்மகளை இளவரசன் கடத்திக் கொண்டு போனதாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காவல்துறையினர் மணமக்கள் இருவரையும் விசாரித்து உண்மை நிலை அறிந்து கொண்டனர். இது கடத்தல் இல்லை, உரிய வயது வந்த இருவர் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களைப் பிரிக்க சட்டத்தில் இடமில்லை என்றனர்.

திவ்வியாவின் தந்தை நாகராசு அதற்குமேல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. அவர் வகுப்பைச் சேர்ந்த தீவிர சாதிவாதிகள், அவரை நச்சரித்து, மீண்டும் மீண்டும் தூண்டி, எப்படியாவது பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

கடைசியாக 2012 நவம்பர் 8 அன்று தொப்பூரில் இரு தரப்பினரும் சந்தித்துப் பஞ்சாயத்தாகப் பேசித் தீர்வு காண்பது என்று முடிவானது. ஒரு தரப்புக்கு ஏழு பேர் என்று இரு தரப்பினரும் பேசினர். “தன் கணவனைப் பிரிந்து வர முடியாது” என்று திவ்வியா உறுதியாக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் சொந்த ஊரில் சொந்த சாதியினர்க்கு என்ன விடை சொல்வது என்று குழம்புகிறார் நாகராசு. தூக்கு மாட்டிக் கொள்கிறார். ஒருவகையில் அவரைத் தற்கொலை நோக்கித் தூண்டியவர்கள் சொந்த சாதியினர்தான் என்றே கூறலாம்.

அதன்பிறகு அவர் பிணத்தை சாலையில் போட்டு, சாதிக்காரர்களுக்கு வெறியேற்றி ஆயிரக்கணக் கானோரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சூறையாடவும் தீக்கீரையாக்கவும் கிளம்பினர். பெட்ரோல் குண்டுகள் வீசினர். தீ வைத்தனர். கடப்பாறை போன்ற கருவிகளால் வீடுகளை இடித்துத் தகர்த்தனர். பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். கொள்ளையடிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். புத்தகங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் ஆகியவற்றைக் குறிபார்த்து எரித்துள்ளனர்.

சிங்களப் படையினர் ஈழத்தமிழர் கிராமங்களைக் கொளுத்திச் சூறையாடியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அங்கு பகையினத்தைச் சேர்ந்த வெறியர்கள், தமிழர்கள் குடியிருப்புகளைத் தகர்த்தனர். இங்கோ ஒரே தமிழினத்தைச் சேர்ந்த ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினர் குடியிருப்புகளைத் தீவைத்துச் சூறையாடியுள்ளனர். தமிழினத்திற்கு இதைவிட மானக்கேடு என்ன உள்ளது?

தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், வன்னியர் வகுப்பினரை இழிவாகப் பேசி ஆத்திரமூட்டினார்கள்; அதனால் ஏற்பட்ட திடீர் ஆவேசத்தால், இப்படிப்பட்ட தீ வைப்புச் சூறையாடலில் ஈடுபட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி மூன்றும் வெவ்வேறு கிராமங்கள். நத்தத்திற்கும், கொண்டம்பட்டிக்கும் இடையே மூன்றரைக் கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

ஏற்கெனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த பொறாமை கொண்டோர், இந்தக் கலப்புத் திருமணத்தை சாக்காக வைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தைத் தாக்கிக் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் பலர் அரசுப்பணிகளில் இருக்கின்றனர். ஓரளவு வசதியுடன் உள்ளனர். படித்துள்ளனர். இவ்வளர்ச்சி அப் பொறாமைக்காரர்களின் கண்ணை உறுத்தியுள்ளது. தங்களுக்குச் சமமாக அவர்களும் வந்து விடுவார்களோ என்று கவலைப்பட்டிருக்கிறார்கள்.

சாதியைப் பயன்படுத்தி இந்த அழிவு வேலையில் ஈடுபட்ட அரம்பத்தனத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட நாசவேலை இது. இதில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தளைப்படுத்த வேண்டும்.

தங்கள் சாதிப் பெண்களைக் கலப்புத் திருமணம் செய்யும் பிற சாதியினரை வெட்ட வேண்டும் குத்த வேண்டும் என்று பேசும் பிற்படுத்தப்பட்ட சாதி சங்கத் தலைவர்கள் மீது நடவடிக்கை தேவை.

ஒரு மாதத்திற்கு மேல் இக்கலப்புத் திருமணத்தால் நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் சாதிப் பதற்றம் இருப்பது காவல்துறைக்குத் தெரியும். காவலர்கள் சிலரையும் அங்குக் காவலுக்கு நிறுத்தியுள்ளார்கள். இவ்வாறு முன்தகவல்கள் இருந்தாலும் மூன்றரை மணி நேரம் இந்த அரம்பத்தனம் அரங்கேறும் போது, கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினரை உடனடியாக அனுப்பி அதைத் தடுக்கவில்லை மேலதிகாரிகள்.

தர்மபுரியிலிருந்து 10 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது நாயக்கன் கொட்டாய். காவல்துறை உயரதிகாரிகள் கடமை தவறியது ஏன்? அலட்சியமா? கெட்ட உள்நோக்கமா? விடை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு.

பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அனைத்து முனைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் ஆய்வறிக்கையையும் பரிந்துரைகளையும் தமிழக அரசு பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும், புதுவீடுகள் கட்டித் தர வேண்டும். எல்லாப் பொருள்களையும் இழந்து நிற்கும் மக்களுக்கு குடும்பச் செலவுகளுக்காக நிதி வழங்க வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே குருதி என்ற சமத்துவப் பண்பாடு வளர வேண்டும். தமிழ்த்தேசியம் தமிழின உரிமைகளை மீட்கப் போராடும் அதே வேளை, தமிழினத்திற்குள் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை முறியடிக்கவும் போராடும்.

நினைவுநாள் படுகொலைகள்

ஈகி இமானுவேல் சேகரன் (செப்டம்பர் 11) நினைவு நாளும், முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளும் (அக்டோபர் 30) ஒவ்வொரு ஆண்டும் பதற்றத்தோடுதான் நடக்கின்றன. சில ஆண்டுகளில் படுகொலைகளும் சேர்ந்து கொள்கின்றன.

கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு இருநாள் முன்னதாக பழனிக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவனை அடித்துக் கொன்றனர் மேல்சாதி வெறியர்கள்.

இவ்வாண்டு, முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளை ஒட்டித் தேவர் வகுப்பினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளில் பசும்பொன் கிராமத்தில், அவரது நினைவிடத்திற்குச் செல்வோர் எந்தெந்தப் பாதைகளில் போக வேண்டும், வரவேண்டும் என்று காவல்துறையினர் தடம் வகுத்துள்ளனர். அப்பாதையில் செல்லாமல் பரமக்குடி பொன்னையாபுரம் வழியாகவும், பாம்புவிழுந்தான் கிராமம் வழியாகவும் சென்றவர்களில் மூன்று பேர் அப்பகுதியில் வசிக்கும் தேவேந்திரர் வகுப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

ஒரு டாட்டா சுமோ ஊர்தியில் பசும்பொன் சென்று திரும்பியவர்கள் மீது தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை அருகே, பெட்ரோல் குண்டு வீசினர். அதில், படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் இதுவரை ஆறு பேர் இறந்து போயினர். இவை அனைத்தும் கொடுமையான பச்சைப் படுகொலைகள் ஆகும். கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

தலைவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்ற பெயரில் இருவகுப்பினரும் தங்கள் தங்கள் சாதி வலிமையைக் காட்டிக் கொள்ளவே முனைகின்றனர். இவ்விரு தலைவர்களின் நினைவு நாளுக்கு அங்கு செல்லும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த சாதி வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே செல் கின்றனர். அதனால்தான், அண்ணா, பெரியார், காமராசர் நினைவிடங்களைவிட மேற்கண்ட இருவரின் நினைவிடங்கள் “புகழ்” பெற்று விளங்குகின்றன.

தாங்கள் போற்றும் தலைவர்களை சாதி மோதலுக்குரிய சின்னங்களாக மாற்றுவது அத்தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை அன்று அவமரியாதை.