உண்மை ஒன்று சொல்வேன்-9 

இயக்குநர் ‘பாலை’ செந்தமிழனும், பாமயனும் இணைந்து நடத்திய தமிழர் மரபு உணவுத் திருவிழா ஒசூரில் அண்மையில் நடந்தது. நேரில் சென்று கலந்து கொள்ள முடியா விட்டாலும், ஓசூர் உணவுத் திருவிழாவுக்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. 

மரபு உணவுகளை மறந்ததால்தான், மருந்து மாத்திரைகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கி றோம். ‘உணவே மருந்து’ என்பது நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், உணவே உடலுக்கு ஊறு உண்டாக்கும் காலமிது. 

பிட்ஸா, பர்கர், பரோட்டாவும் சர்க்கரை நோய்த் தமிழனுக்குப் பழகிப் போய்விட்டன. எதை உண்பது என்பதை மட்டுமல்ல, எப்படி உண்பது என்பதையும் தமிழன் மறந்து போனான். அதனால்தான், ஆங்கில அலோபதி மருத்துவர்கள் ‘‘நேரத்துக்கு சாப்பிடுங்க” என்று தவறான ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

‘நேரத்துக்கு சாப்பிடுவது தானே நல்லது’ என்று உங்களில் பலரும் கேட்கலாம். ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் முரணானது. ஆரோக்கிய வாழ்வுக்கு முதல் படியே பசித்த பிறகு உண்பது தான். பசியோடு சாப்பிடாமல் இருப்பது உடலுக்குத் தீங்கானது. அதுபோலவே, பசி இல்லாத வேளைகளில் சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது. 

தனக்கு என்ன வேண்டும் என்பதை, நம் உடல் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். உடலுக்கு உணவு வேண்டுமென்றால், பசி மூலமும் தண்ணீர் வேண்டுமென்றால் தாகம் மூலமும் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இன்றைக்கு ‘பசித்துப் புசி’ என்கிற பழமொழி பழங்கதையாகிப் போய்விட்டது! 

உணவு உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. தனக்கு ஆற்றல் தேவைப்படும் போது பசி மூலம் உடல் நமக்கு உணர்த்துகிறது. பசியை உணராமல் உணவு எடுத்துக் கொள்வதால்தான் சர்க்கரை நோயி லிருந்து இதய நோய் வரையில் வந்து அவதிப் பட நேரிடுகிறது. 

பசிக்காமல் சாப்பிட்டால் நோய் வருமா என்று உங்களில் பலரும் வியப்படையலாம்.. 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். இதன் விளக்கம், முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து அறிந்து அதன் பிறகு உண்டால் உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை என்பதாகும். 

அத்துடன், திருவள்ளுவர் நிற்கவில்லை, முன் உண்ட உணவு செரித்து விட்டால் பின் வேண்டிய அளவு உண்ண வேண்டும். அதுவே நெடுங் காலம் வாழும் வழி என்பதை ,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

என்றும் கூறியிருக்கிறார். இதுமட்டுமல்ல, மற்றொரு குறளில்,

அற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்துஎன்கிறார்.

இதன் பொருளும், ‘நன்றாக பசித்த பிறகு மாறுபாடில்லாத உணவுகளை உண்ண வேண்டும்’ என்பதாகும். 

அண்மையில் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரிடம், ஆரோக்கியத்துக்காக ‘பசித்த பிறகு உண்ணுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். பசிக்கும் வரைக்கும் சாப்பி டாமல் இருந்தால் உடல் என்ன ஆவது? என்று நண்பரின் மனைவி என்னையும் சேர்த்துக் கோபித்துக் கொண்டார். 

ஆனால் உடல் இயக்கத் துக்குத் தேவையான உணவை உடலே கேட்கும். பசியோடு இருக்கும் போது நம் கண்ணில் படும் உணவுகள் மீது ஆசையும், பசி அடங்கிய நிலையில் அதே சாப்பாடு மீது ஆர்வம் ஏற் படாமை தோன்றும் இது இயற்கை. 

பசியில்லாத நேரங்களில் நம் உடலுக்குள் செல்லும் உணவு, கழிவாக மாறி, நம் உடலுக்கு ஆற்றல் அளிக்காமல் வெளி யேறிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன் னால் பசியை உணர வேண்டும். பசித்துப் பின் உண்ணும் போது தான் உடலின் தேவை முழுமையாக நிறைவேறுகிறது. 

நம் உடலின் தேவையை அறிந்து அதன்படி நடப்பதுதான் விழிப்புணர்வு நிலையின் முதல்படி! அந்த வகைவில் பசி, தாகம், தூக்கம் போன்றவை நம் உடலின் அடிப் படைத் தேவைகள். இந்தத் தேவைகளை உணர்ந்து அதன்படி நடப்பது நல வாழ்வு தரும். 

(இன்னும் சொல்வேன்)

Pin It