இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இனப்படு கொலை செய்த சிங்கள இனவெறி அரசு, அனைத்துலக சமூகத்தின் முன் குற்றவாளியாக நிற்கும் நிலையில், உலக நாடுகள் சிங்கள அரசை வெளிப்படையாக ஆதரிக்கத் தயங்கும் நிலையில், இந்திய அரசு சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் வைத்தே பயிற்சியளிக்கத் துணிந்திருக்கிறது.

தாம்பரம் சேலையூரில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தில், 9 சிங்களப் படையினர் 9 மாத கால தொழில்நுட்பப் பயிற்சிக்காக இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்து தங்கினர்.

தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து, தமிழ்நாட்டு மீனவர்களை நாள்தோறும் தாக்கி வரும் சிங்களப் படையினருக்கு தமிழ் மண்ணிலேயே பயிற்சியளிக்கத் துணியும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இது குறித்த செய்தி ஊடகங்களில் அம்பலமானதும், தென்னாசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் அமைப்பில் இலங்கையும் இருப்பதால் இது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவது ஒன்றும் புதிதானதல்ல என்று பதில் தந்தது இந்திய அரசு. அதே கூட்டமைப்பில் பாகிஸ்தானும் உள்ளதே, அந்நாட்டிற்கு நீங்கள் இது போல பயிற்சி வழங்குவீர்களா என நாம் கேட்கிறோம். விடை சொல்வார்களா?

தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, இச்செய்தி உண்மை யாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது என தன் தில்லி எசமானர்களுக்கு கோபம் வராத அளவில் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

ம.தி.மு.க. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போதும் கூட, இந்திய அரசு, சிங்களப் படையினரை பெங்களூருவுக்கு அனுப்பிப் பயிற்சியைத் தொடர்ந்ததே தவிர, இலங்கைக்குத் திருப்பி அனுப்பவில்லை.

தற்போது மட்டுமல்ல, போர் நடந்த போதும் கூட இந்திய அரசு இதே போல் தாம்பரம் விமானப் படைத்தளத்தில் சிங்கள வீரர்களுக்கு பயிற்சியளிக்கத் துணிந்தது. இந்திய அரசின் இத்துணிச்சல், அதன் சிங்களப் பாசத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, ”தமிழர்களே உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று ஏளனமாகக் கேட்பதாகவும் உள்ளது.

Pin It