உண்மை ஒன்று சொல்வேன் – 10

கட்டுரை எழுதுவதற்காக என் மடிக்கணினி முன் அமர்ந்து சிலபல நிமிடங்கள் ஓடிவிட்டன. எதைப் பற்றி எழுதுவது என முடிவெடுக்க வில்லை. திரும்ப திரும்ப செங்கொடி முகமும் அவளது தப்பாட்டமுமே கண்முன்னால் வந்து நிற்கின்றன.

மூவர் விடுதலையை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தவள் செங்கொடி. மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த செங்கொடியின் வாழ்க்கை வரலாற்றையும் அவள் தன் உயிரைத் தியாகம் செய்யக் காரணமான மூவர் விடுதலையையும் முன் வைத்து ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ என்கிற ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

செங்கொடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண். இருளர் உள்ளிட்ட ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நின்று போராடியவள்.
 
முன்பு, ‘பாலை’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய போது, அந்தப் படத்தில் நடித்த இருளர்கள் சிலருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இப்போது செங்கொடி ஆவணப் படத்துக்காக இருளர்கள் பற்றிய களஆய்வின் ஒரு பகுதியாக திண்டிவனம் அடுத்த செஞ்சியில் உள்ள இருளர்கள் கிராமங்களுக்குச் சென்றிருந்தேன். பல மணி நேரங்கள் இருளர்களுடன் கலந்துரையாடினேன்.

பாட்டும் நடனமும் அவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமாகி விட்டதை உணர முடிகிறது. இரவு முழுவதும் நடன மாடினார்கள். பாடினார்கள். யாருக் காவும் யாரையும் மகிழ்ச்சி படுத்த ஆடுவதும் இல்லை; பாடுவதும் இல்லை. தங்களுக்காவே பாடுகிறார்கள். ஆடுகிறார்கள்.

இன்றைக்கும் இருளர் இனப்பெண்களைப் பார்க்கும் போதும் ஒவ்வொருவரும் வனத்தேவதைகளாகவே தெரிகிறார்கள். அவ்வளவு அழகு! அவர்களின் பாடல்களில், வழி பாடுகளில் கன்னியம்மன் என்கிற பெண் தெய்வம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

அவர்கள் ஆண் தெய்வங்களை வழிபடுவதாகத் தெரியவில்லை. அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் இருக்கும் ஆண் பெண் சமத்துவமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆண்கள் சமைப்பதும், வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் அவர்களிடம் சர்வசாதாரணம். இருளர்களின் வீடுகள் தோறும் இசைக் கருகிகள் இருக்கின்றன. எல்லோரும் தப்பாமல் தப்பு அடித்து நடனம் ஆடுகிறார்கள்.

நவீன வாழ்க்கையின் சாபக் கேடான நுகர்வுப் பண்பாடு அவர்களை இன்னும் அண்டவே இல்லை. காசு, பணம், பொருட்களின் மீது அவர்களுக்கு ஏனோ எந்தப் பிடி மானமும் இல்லை. நாகரிக வாசிகள் என்று சொல்லிக் கொள்ளும் நம்மைப் போல் அல்லாமல் இருளர்கள் அன்பை மட்டுமே பரிமாறிக் கொள்கிறார்கள். எங்கள் குழுவிடம் அவர்கள் காட்டிய அன்பிலும் அக்கறையிலும்துளியும் போலித்தனம் இல்லை. அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாத அடுக்கு மாடி வாழ்க்கைக்குப் பழகிப் போய்விட்ட நமக்கு இது இன்ப அதிர்ச்சிதான்!!

தங்களுடைய மரபு வழிப் பட்ட தொழில்களான காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு, எலி வேட்டைக்குப் போவது ஆகியவற்றை இழந்த வருத்தம் அவர்களிடம் இருக்கிறது.

மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த இவர்கள் வீடுகளில் அமாக்சலின், பாராசிட்டமால் மாத்திரைகளைப் பார்த்த போது வேதனையாக இருந்தது. பாம்பு பற்றிய இவர்களின் அறிவு உலகில் வேறு எவரிடமும் இல்லை என்கிறார் அறிஞர் விட்டேகர்!

காடுகளில் இருந்துவலுக் கட்டாயமாக இவர்கள் வெளியேற்றப் பட்டவுடன் பெரும்பாலான இருளர்கள் கொத்தடிமைகளாகவே வாழ்கிறார்கள். குறைந்த கூலிக்கு கடுமையான வேலைகளுக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

இருளர்கள் தமிழகத்தின் பழங்குடிகள். “கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி தமிழ்க்குடி"" என்று சொல்லிக் கொள்ளும் நாம் நம்முடைய மரபு அடையாளங்களை மறந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அத்துடன் இருளர்களின் அடையாளங்களையும் சேர்த்தே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

‘இப்படிக்கு தோழர் செங் கொடி’ என்கிற இந்த ஆவணப் படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்தப்படம் தமிழில் வெளிவரும் மரண தண்டனைக்கு எதிரான ஆவணப் படமாக இருக்கும்.

இருளர்களின் பாரம்பரிய அடையாளங்களைத் தேடிப் பிடித்து படமாக்கி இருக்கி றோம். செங்கொடி போலவே இந்தப் படமும் இருளர்களுக்காக குரல் கொடுக்கும்.

முடிவு செய்து விட்டேன்.. ஆம்! மரண தண்டனைக்கு எதிரான இந்த ஆவணப் படத்தை மிச்ச மிருக்கும் தங்கள் மரபைக் கட்டிக் காக்கப் போராடிக் கொண்டிருக்கும் இருளர் இனத்து மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்யப் போகிறேன்!

(இன்னும் சொல்வேன்)

Pin It