சிவகங்கைச் சீமான் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதும், பிறகு உள்துறை அமைச்சராக ஆன பிறகும் தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும் தவறாமல் கல்விக் கடன் பற்றிப் பேசியதைக் கேட்டிருப்போம்…

சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “மாணவர்களின் கல்விக் கடனுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுவரை 14 ஆயிரத்து 84 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது” (22.02.2009).

• காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பேசிய அவர், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின், கல்விக் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மார்ச் வரை 16 லட்சம் மாணவர்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். வரும் 2015ம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கப்படும்” (30.08.2009).

• கோவையை அடுத்த வெள்ளலூரில் காமராஜர் சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், “கடந்த 2008-09ம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 16 கோடி கல்விக்கடன் தரப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் அதிகமாக கல்விக்கடன் வழங்கி உள்ளோம். அதற்கு காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காமராஜர் வித்திட்ட இலவசக்கல்வி என்ற விதை. அது தற்போது விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இந்திய அளவில் கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முதல் இடத்தை பெற்று உள்ளது” (27.01.2010).

இப்படியாக கல்விக் கடன் பெறுவது என்பது ஏதோ கைமாற்று வாங்குவதைப் போல எளிதானது என்கிற பிம்பத்தை அவர் பத்திரிகைகள் மூலமாக ஏற்படுத்தி வந்திருக்கிறார். உண்மையில், கல்விக் கடன் பெறுவதில் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என்பதை கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களைக் கேட்டால் புரியும். சென்னை போன்ற பெருநகரங்களில் முதலீட்டு ஆலோசகர்கள், கல்வி ஆலோசகர்கள் வரிசையில் இப்போது கல்விக் கடன் ஆலோசகர்கள் பெருகிவிட்டார்கள். சென்னையில் உள்ள ஒரு கல்விக் கடன் ஆலோசனை நிறுவனத்திற்கு Education Loan Task Force (?!) என்று பெயர். அந்த அளவிற்கு வங்கிகளிடம் கல்விக் கடன் பெறுவது என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டும் செய்தியாக இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ் என்ற மாணவர், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி, இவருக்கு மூன்றாண்டு படிப்பிற்குத் தேவையான ரூ.4 லட்சத்தை கல்விக் கடனாக வழங்க முன்வந்தது. முதலாமாண்டு தவணை தரும்போது, இதற்கு வட்டி எதுவும் கட்டத் தேவையில்லை என்று கூறிய அந்த வங்கி, இரண்டாமாண்டு தவணையில் 20 விழுக்காடு வட்டியைப் பிடித்துக் கொண்டு கொடுத்தது. மாணவர் நேரில் சென்று விசாரித்தபோது, இந்திய ரிசர்வ் வங்கி இப்போது விதிமுறைகளை மாற்றிவிட்டது என்று கூறி வங்கியே தயாரித்த போலியான விதிமுறைப் பட்டியலை (word file) காட்டியிருக்கிறது. விவரம் தெரிந்த அந்த மாணவர் ஊடகங்களின் உதவியை நாடியிருக்கிறார்.

அதேபோல, வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கல்விக் கடன் மறுக்கப்பட்டிருக்கிறது (அவர்கள் பொறுப்புணர்வுடன் கடனைத் திருப்பிக் கட்டுவதில்லை என்றது அந்த வங்கி). இதனையடுத்து வேலூரைச் சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, உடனடியாக அந்த மாணவருக்கு கல்விக் கடனைத் தர முன்வந்தது அந்த தேசியமய வங்கி. இருந்தும், விடாப்பிடியாக மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதன் அடிப்படையில் அந்த மாணவருக்கு கல்விக் கடன் தர மறுத்தீர்கள்? இப்போது திடீரென எதன் அடிப்படையில் கல்விக் கடன் தர ஒப்புக்கொண்டீர்கள்? என்று கேட்க, கல்விக் கடன் தர முதலில் மறுத்த / பிறகு ஒப்புக்கொண்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இப்படியாக, கல்விக் கடன் பெறுவதென்பது கல்வி நிறுவனங்களில் இடம் பிடிப்பதைவிடவும் கடினமான காரியமாக மாறிவருகிறது. ஒரு மாணவருக்குக் கல்விக் கடன் தர முடியாது என்பதற்கு வங்கிகள் கூறும் பொதுவான காரணங்கள்:

• மாணவரின் வார்டு (உள்ளாட்சி நிர்வாகத்தில் வட்டம்)க்கு ஒதுக்கப்பட்ட வங்கியையே அணுக வேண்டும்; எங்கள் வங்கியை அல்ல.
• கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.
• கல்விக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஏற்கெனவே பல மாணவர்களுக்கு ஒதுக்கிவிட்டோம்.
• மாணவர் பெற்ற மதிப்பெண் குறைவாக இருக்கிறது.
• மாணவரின் தந்தை / காப்பாளர் ஏற்கனவே வாங்கிய கடனை சரிவர கட்டவில்லை.
• எங்கள் வங்கி கல்விக் கடனை சிறிதுகாலம் நிறுத்தி வைத்துள்ளது.
• குறிப்பிட்ட பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர்) நாங்கள் கல்விக் கடன் தருவதில்லை.

மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சட்டப்பூர்வமானதல்ல. மேற்கண்ட காரணங்களை ஒரு வங்கி கூறுமானால் அதனை எழுத்துப்பூர்வமாக பெற்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளையோ, நீதிமன்றங்களையோ மாணவர்கள் அணுகலாம். எனவேதான், இந்திய வங்கியாளர்கள் சங்கம், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி,

கல்விக் கடன் பெறுவதற்கான தகுதிகள் (விதி எண்:4.1):

மாணவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி மதிப்பெண் அல்லது நுழைவுத்தேர்வு மூலம் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்க்கைகான அனுமதி கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண் அல்லது நுழைவுத்தேர்வு தேவைப்படாத முதுநிலைக் கல்வியாக இருந்தால் கல்வி நிறுவனத்தின் தரம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் கல்விக் கடன் தரலாமா, வேண்டாமா என்பதை வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம்

எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் பெறலாம் (விதி எண்:4.2):

இந்தியாவில் படிப்பதாக இருந்தால், மத்திய - மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி)அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE), அகில இந்திய வங்கிப் பணிகள் கூட்டமைப்பு (AIBMS), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) போன்றவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / கல்வி நிறுவனங்கள் தரும் படிப்புகளுக்கு கல்விக் கடன் பெறலாம். CA, CFA, ICWA போன்ற வணிகவியல் படிப்புகள், IIM, IIT, IISc, XLRI, NIFT, NID போன்ற மத்திய அரசு கல்வி நிறுவங்களில் பயிலவதற்கும் கல்விக் கடன் பெறலாம். ஏரோனாட்டிக்கல், பைலட் பயிற்சி போன்ற படிப்பாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் விமான போக்குவரத்துத் துறையின் அங்கீகாரத்தையும், ஷிப்பிங் போன்ற படிப்பாக இருந்தால் அந்த கல்வி நிறுவனம் கப்பல் போக்குவரத்துத் துறையின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். வெளிநாடுகளில் படிப்பதாக இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் தரும் வேலைவாய்ப்புள்ள படிப்புகளுக்கும், MBA, MCA, MS போன்ற முதுநிலை படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெறலாம்.

எந்தெந்த செலவுகளுக்கு கல்விக் கடன் பெறலாம் (விதி எண்:4.3):

கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டணம், தேர்வு, நூலகம், ஆய்வுக் கூட கட்டணங்கள், மாணவர் காப்பீட்டுக் கட்டணம், வெளிநாட்டுப் படிப்பாக இருந்தால் பயணச் செலவு, புத்தகங்கள், உபகரணங்கள், சீருடைகள், கணினி போன்றவை வாங்குவதற்காகவும் கல்விக் கடன் பெறலாம்.

அதிகபட்ச கடன் வரம்பு மற்றும் வட்டி விகிதம் (விதி எண்: 5 & 6):

இந்தியாவில் படிப்பவருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பவராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.20 லட்சமும் வங்கிக் கடனாக பெறலாம். ஆனால், கல்வி நிறுவனத்தைப் பொறுத்து இந்த உச்ச வரம்பை வங்கிகள் முடிவு செய்யும். தேவைப்பட்டால், மத்திய வட்டி மானியத் திட்டத்தின் கீழ் இந்தக் கடனுக்கு வட்டிக் குறைப்பையும் வங்கிகள் செய்யலாம். வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு வட்டி கிடையாது. ரூ.4 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுக்கு, உள்நாட்டில் படிப்பவர் என்றால் 5 சதவீதமும், வெளிநாட்டில் படிப்பவர் என்றால் 15 சதவீதமும் வட்டி வசூலித்துக் கொள்ளலாம். அல்லது ரூ.4 லட்சத்திற்கு மேற்பட்ட கல்விக் கடனுக்கு BPLR எனப்படும் Benchmark Prime Lending Rate-ஐ விடவும் 1 சதவிகிதம் கூடுதலாக வட்டி வசூலித்துக் கொள்ளலாம் (BPLR) என்பது வங்கிகள் தனக்கான நிதி நிலையின்படி, 9 முதல் 14 சதவீதத்திற்குள்ளாக நிர்ணயித்துக் கொள்ளும் ‘பொதுவான’ வட்டி விகிதம்). (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் போலவே, கல்விக் கடன் தொடர்பான விதிமுறைகளிலும் பல ஓட்டைகள் இருக்கின்றன என்பது விவாதத்திற்குரிய ஒன்று).

இவைபோன்ற தகவல்கள் எதுவும் தெரியாத கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு கடைசிவரைக்கும் கல்விக்கடன் தராமல் இழுத்தடித்து, அவர்கள் கல்வியைத் தொடரவே முடியாமல் போன கதைகள் ஏராளம் இருக்கின்றன. மாணவர்கள் இழுத்தடிக்கப்படுவது தவிர்க்கப்பட, கல்விக் கடன் விண்ணப்பங்களை வங்கிகளிடம் நேரில் தராமல், இணைய தளம் (Online Application) மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனையும் பெரும்பாலான தேசியமய வங்கிகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுவிடுகின்றன.

வங்கிகளைப் பொறுத்தவரைக்கும் கல்விக் கடன் பிரிவை வராக்கடன் பிரிவாகவே கருதுகின்றன. பல தேசியமய வங்கிகளில் கல்விக் கடன் பிரிவில் பணியாற்றும் மேலாளர்களுக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பதவி உயர்வே வழங்கப்படுவதில்லை. அதனால், கல்விக் கடன் பிரிவுக்கு மாற்றலாகி வரும் மேலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வேறு பிரிவுக்கு மாறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவில் கல்விக் கடன் வழங்காமல் இருப்பதே தனக்கு நல்லது என்ற அவர்கள் நினைக்கின்றனர்.

இந்தியாவின் முதல்தர தேசிய வங்கியின் தமிழக தலைமையகத்தில் பணிபுரியும் முதன்மை மேலாளர் ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர் கல்விக் கடன் பிரிவின் தலைமை மேலாளராகப் பணிபுரிந்தபோது மிக அதிக அளவாக தமிழ்நாடு முழுக்க 3 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கியதை பெருமையுடன் குறிப்பிட்டார். இந்திய தேசியமய வங்கிகளின் கல்விக் கடன் வரலாற்றில் இது ஒரு சாதனை என்றார் அவர். அதாவது, பொறியியல், மருத்துவம், கலை – அறிவியல், கல்வியியல் படிப்புகள் என ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் உயர் கல்வியில் சேரும் ஒரு மாநிலத்தில் ஒரு முதல்தர தேசியமய வங்கி மிக அதிக அளவாக 3 ஆயிரம் பேருக்கு கல்விக் கடன் வழங்கியதுதான் சாதனையாம்.
 
தேசியமய வங்கிகள்தான் இப்படி என்றால், தனியார் வங்கிகளின் கல்விக் கடன் வன்முறை சொல்லில் அடங்காதது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதி முறைகளுக்காக சும்மா பெயரளவில் கல்விக் கடன் வழங்குவதாகச் சொல்லும் தனியார் வங்கிகள், உண்மையில் 10 சதவீதம் கூட கல்விக் கடன் வழங்குவ தில்லை. அந்த 10 சதவீதத்திலும் உயர் சாதியினர், வங்கி மேலாளர் களுக்கு வேண்டப்பட்டவர்கள், கல்விக் கடன் ஆலோசகர்கள் கைகாட்டும் மாணவர்கள் ஆகியோருக்குத்தான் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

உயர் கல்வியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 80 லட்சம் பேர் பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் சுமார் 40 லட்சம் பேர் மட்டுமே அந்தப் படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கின்றனர். சுமார் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களில் சுமார் 72 ஆயிரம் பேர் மட்டுமே ஐந்தரை ஆண்டு படிப்பை முடிக்கின்றனர். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை முடிக்காத மீதமுள்ள மாணவர்கள் என்ன ஆனார்கள்? 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண் பந்தயத்தில் முந்திச் சென்று பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிக்க முடிந்த அவர்களால் ஏன் அந்தப் படிப்புகளை வெற்றிகரமாக படித்து முடிக்க இயலவில்லை? ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கல்விக் கடன் சாதனைகளை காரைக்குடியில் பட்டியலிடும் சிவகங்கைச் சீமான் இதற்கு விடை அளிப்பாரா?

Pin It