செயலலிதா திருந்திவிட்டார் என்று நாம் ஒரு போதும் நினைத்ததில்லை; இப்போது சில கூறுகளில் அவர் எடுத்த சாதகமான முடிவுகளைப் போல் தொடர்ந்து எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை

முதல்நாள் தமக்கு அதிகாரமில்லை என்று கூறிவிட்டு மறுநாள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர் உயிர்காக்க சட்டப் பேரவையில் அவர் தீர்மானம் நிறைவேற்றினார். கூடங்குளம் அணு உலைக்கெதிராக முதலில் இந்திய அரசுக்கு ஆதரவாக நிலைபாடு எடுத்தார். பின்னர் அணு உலை வேலைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரின் இத்தடுமாற்றங்கள் தமிழகத்தில், பெரும் கட்சிகளுக்கு வெளியே சமூக இயக்கம் முன்னோக்கிச் செல்வதன் அறிகுறியாகும். அதனைப் பின் தொடர வேண்டிய நெருக்கடி பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாகும்.

எனவே, செயலலிதாவின் அந்நகர்வுகளை நாம் எச்சரிக்கையாகவே வரவேற்றோம்.

தமிழ்நாட்டை இந்திய அரசு மாநகராட்சி போல் நடத்துகிறது; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது என்று அவர் அறிக்கைகள் வெளியிட்டதும் தமிழக மீனவர்கள் சிங்களர்களால் சுட்டுக் கொல்லப்படுவதை இந்திய எல்லையோரத்தில், சீனாவோ, பாகிஸ்தானோ துப்பாக்கிச் சூடு நடத்துவதை எதிர்ப்பதைப் போல் கருதி இந்திய அரசு ஏன் எதிர்க்கவில்லை என்று அவர் கேட்டதும், இந்திய ஏகாதிபத்தியத்திற்கு தமிழ்நாடு காலனியாக இருக்கிறது என்ற த.தே.பொ.க.வின் நிலைபாட்டை உறுதிப்படுத்தும் புற நிலைச் சான்றுகள் என்று மதிப்பிட்டோம்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் மின் நிலையம் ஆகியவற்றையும், நரிமணம் உள்ளிட்ட பெட்ரோலியக் கிணறுகளையும், எண்ணெய்த் துப்புரவு ஆலையையும், எரிவளி ஆலையையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துப் போராடினால் தான் முதல்வர் செயலலிதா நடுவண் அரசின் அதிகாரக்குவியலை எதிர்ப்பதற்குப் பொருளிருக்கும் என்றும் எழுதினோம். மீனவர்களைக் காக்க மீனவர்களைக் கொண்ட ஊரகப்படை அமைத்து அதற்கு ஆயுதம் வழங்குமாறும் வலியுறுத்தினோம்.

2011 மே மாதம் சட்டப் பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் செயலலிதா குறித்து நாம் பின் வருமாறு எழுதியிருந்தோம் :

”செயலலிதாவின் சசிகலாக் குடும்பக் கொடுங்கோன்மை, ஊழல் கொள்ளை, உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி, தமிழினத்திற்கெதிரான காழ்ப்புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சதிகாரம், அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது” ( தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2011 மே 16-31 இதழ் ).

  ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அறவே ஒழித்துக் கட்டினார் செயலலிதா. சமத்துவக் கல்விக்கெதிரான செயலலிதாவின் பார்ப்பனியப் போக்கைக் கண்டித்து த.தே.பொ.க. போராட்டம் நடத்தியது.

பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களை சுட்டுக் கொன்றதுடன், அதை ஞாயப்படுத்தி சட்டப் பேரவையில் அறிக்கை வெளியிட்ட செயலலிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது த.தே.பொ.க.

மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று இந்திய அரசை வலியுறுத்தி, 30.08.2011 அன்று சட்டப்பேரவையில தாமே முன்மொழிந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் செயலலிதா, இரண்டு மாதங்களுக்குள் தலைகீழாக மாறி எதிர்நிலைக்குப் போய்விட்டார். 29.10.2011 அன்று அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்ததை எதிர்த்தும், தூக்குத் தண்டனையை நீக்க வலியுறுத்தியும் மூவரும் தொடுத்துள்ள இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தைக் கோரியது.

தமிழினப் பகை அரசான இந்திய அரசின் நிலைபாட்டை ஏற்று அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் செயலலிதா அரசு பதில் மனு தாக்கல் செய்தது ஏன்? தமிழின உணர்வுகளை ஆதரிப்பதுப் போல் நடித்த நாடகம் இனிமேலும் தேவையில்லை என அவர் கருதியதாலா? மனித உரிமைக் குரலுக்கு செவி சாய்ப்பது போல் பாசாங்கு செய்தது போதும் என்பதாலா? உள்ளாட்சித் தேர்தலிலும் வாகை சூடி விட்டோம், வாக்குக் கேட்க வேண்டிய தேவை உடனடியாக இல்லை என்பதாலா? இந்த வினாக்களுக்கு உரிய விடை செயலலிதாவிற்கு மட்டுமே தெரியும்.

மீண்டும் மீண்டும் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மீண்டும் செயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் 08.11.2011 அன்று ஏடுகளில் வந்தது. அதில், தமிழக மீனவர்களைக் காக்க மறுக்கும் இந்திய அரசு பற்றி முன்பு போல் விமர்சனம் ஏதுமில்லை. இந்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிட்டன என்று இலங்கை அரசை மட்டுமே குற்றம் சாட்டியுள்ளார். செயலலிதாவின் இந்தப் பின்வாங்கல், தற்செயலானதல்ல.

அவர், திட்டவட்டமாக சில முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். தமிழின உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசுடன் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பார் எனத் தெரிகிறது.

கூடங்குளம் அணு உலைச் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அவர் உறுதியாக முடிவு செய்திருந்தார். அதிலிருந்தும் அவர் பின்வாங்குகிறார் என்று தெரிகிறது.

1991ஆம் ஆண்டு முதல் முதலாக செயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர் என்று திராவிடர் கழகம் அவருக்கு எதிராகப் பரப்புரை செய்தது. பார்ப்பனியத்திற்கு எதிரான உளவியல் தமிழகத்தில் கட்சி கடந்த நிலையில் மக்களிடம் இருப்பதும் அவருக்குத் தெரியும்.

எனவே, இந்தப் பாதிப்பிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதற்காக இடஒதுக்கீட்டைத் தீவிரமாக ஆதரித்து தமிழ்நாட்டில் நிலவும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவரச் செய்தார். அப்போது உறுதியான தனிப்பெரும்பான்மை பெற்றிராத நரசிம்மராவ் அரசு, அ.இ.அ.தி.மு.க.வின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இத்திருத்தத்தை கொண்டு வந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார்.

அதன்பிறகு, மண்டல் குழு பற்றியோ மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசு செயல்படுத்தும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு பற்றியோ செயலலிதா அக்கறை காட்டியதே இல்லை.

தமிழகத்தில் நிலவும் சமூகநீதிக் கருத்துகள், இன உணர்ச்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்கு ஆதரவு தருவது போல் காட்டிக் கொள்வதற்காக தற்காலிகமாக சில நடவடிக்கைகளை எடுத்துப் பெயர் தட்டிக் கொள்வதே அவருடைய உத்தியாக இருக்கிறது. சமூகநீதி மற்றும் தமிழின உணர்ச்சியில் அவருக்கு உளப்பூர்வமான ஈடுபாடு இருப்பதாக அவரது எதிர்நிலைச் செயல்பாடுகள் காட்டவில்லை.

இப்பொழுது மொழிப்போர் ஈகி கீழப்பளூர் சின்னசாமி அவர்களுக்கு திருச்சியில் சிலை அமைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளதும் அவரது நாடகங்களில் ஒன்றுதான். கீழப்பளூர் சின்னசாமி உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர்க்கு சிலைகளும் ,நினைவுச்சின்னங்களும் எழுப்ப வேண்டும் என்பதும், 1938 மற்றும் 1965 மொழிப்போராட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதும், தமிழ்த் தேசப் பொதுவுடை கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சசிகலா குடும்ப ஆதிக்கம் மற்றும் செயலலிதாவிடம் உள்ள எதேச்சாதிகார மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாக நான்கு மாதங்களுக்குள் அமைச்சரவையை நான்கு தடவை மாற்றியமைத்துவிட்டார். உயரதிகாரிகளை அன்றாடம் மாற்றிக் கொண்டுள்ளார். மிகப்பெரும்பான்மை வலுப்பெற்றுள்ள தமது அரசை நிலையற்றத் தன்மையுடையதாக ஆக்கியுள்ளார். கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் அடித்து விரட்டி விட்டார் என்றே சொல்லலாம். 2001 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதும், கூட்டணிக் கட்சிகளை மிக விரைவில் உதறித் தள்ளினார். செயலலிதாவின் குண இயல்பு மாறவில்லை.

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எழுப்பப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தைக் கைவிட்டது, உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூலகத்தை ஊற்றிமூட முடிவு செய்தது, இந்திய அரசு நிறுவனமான தமிழ்ச் செம்மொழி ஆய்வு மைய அலுவலகத்தில் அமைச்சரைக் குடியேற்றி அதை ஓரங்கட்டியது, மக்கள் நலப் பணியாளர்கள் 12,000 பேரை வேலைநீக்கம் செய்து வீதிக்கு விரட்டியது உள்ளிட்ட செயலலிதாவின் நான்கு மாதச் 'சாதனைகள்” ஏராளம். எஞ்சிய ஆண்டுகளில் தமிழகம் என்ன பாடுபடப் போகிறதோ?

நாற்காலி அரசியலோடு தங்களை பிணைத்துக் கொள்ளாத புரட்சிகரத் தமிழ்த் தேசியர்கள் எப்பொழுதும் தங்கள் போர்க்குணத்தையும், அர்ப்பணிப்பையும் நம்பிச் செயல்படுபவர்கள். எதிர்நீச்சல் போடுவது அவர்களுக்குப் புதியதன்று. இன உணர்வு வளர்ந்துள்ள காலமிது.

Pin It