முல்லைப் பெரியாறு சிக்கலில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் செயல்பாடு தமிழின உணர்வாளர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அத்துடன் தமிழ்த் தேசிய இனம் குறித்து இந்தியாவில் இயங்கும் மனித உரிமை இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் அணுகுமுறை பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாமும் பிற தமிழின உணர்வாளர்களும் பெரிதும் மதிக்கும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்கக் கோரி கேரளத்தில் 09.12.2011 அன்று நடைபெற்ற மனிதச் சங்கிலியில் பங்குபெற்றார். மலையாள இனவெறியர் அச்சுதானந்தனோடு கைகோத்து நின்றார்.

அதற்கு மேலும் கொச்சியில் 10.12.2011 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என வலியுறுத்தினார் (தி இந்து, திருச்சி 11.12.2011).

தனது கருத்துக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் குறித்த ‘ரியோ பிரகடனத்தை’ எடுத்துக்காட்டினார். “முல்லைப் பெரியாறு அணையின் வலு குறித்த ஐயம் எழுந்தாலோ, அவ்வணை இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்தாலோ அதனை இடித்து விடுவதுதான் சூழலுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பானது. இதற்கு அறுதியான முழு அறிவியல் ஆதாரத்தைக் கேட்கக் கூடாது.இதனை ரியோ டி ஜெனிரோ மாநாட்டு தீர்மானத்திறகு இணங்கவே வலியுறுத்துகிறேன். இப்பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது” என்றார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 1992 சூன் 14 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாட்டு அறிக்கையே ரியோ பிரகடனம் எனப்படுகிறது. இதன் 15-ஆவது கோட்பாட்டைதான் கிருஷ்ணய்யர் கூறுகிறார். “எந்த ஒரு நிகழ்விலும் கடுமையான அல்லது மீளமுடியாத பேரழிவு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருக்குமானால் அதில் முழு அறிவியல் அறுதிப்பாடு இல்லை என்பதற்காக செலவுக் குறைவான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்கும் செயல்பாடுகளில் இறங்குவதைத் தள்ளிப்போடக்கூடாது.” என்பதே இக்கோட்பாடு.

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகவும், அது உடைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்றும் கேரள அரசு கூக்குரல் எழுப்பியதற்கு பிறகு அதில் உண்மை இல்லை என்று தெரிந்தும் ‘முழு அறிவியல் அறுதிப்பாட்டிற்காக‘ காத்திராமல் அணையை வலுப்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் 1980 முதல் 1994 வரை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இதனை உச்சநீதிமன்றம் நியமித்த பல்துறை வல்லுநர் குழு விரிவாக ஆய்ந்தது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது. அணை சீரமைப்புப் பணிகள் போதுமானவை என சான்றளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் உடனடியாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என ஆணையிட்டது.

ரியோ கோட்பாடு வலியுறுத்துவது போல் முழு அறிவியல் ஆதாரத்திற்காக காத்திராமல் அணையை வலுபடுத்தும் நடவடிக்கை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அண்மையில் கேரள அரசின் தலைமை வழக்குரைஞரே கேரள உயர்நீதிமன்றத்தில் இதனை உறுதி செய்துவிட்டார்.

எனவே கிருஷ்ணய்யர் கூறுவது போல் ரியோ கோட்பாடு மீறப்படவில்லை. இனப்பகை உள்நோக்கத்தோடு மலையாள வெறியர்கள் கிளப்பிவிடும் ஐயங்கள் எந்த அனைத்து நாட்டு சட்டத்தின் முன்னும் செல்லத்தக்கதல்ல.

நீதிபதி கிருஷ்ணய்யருக்கு இது புரியாமல் இருக்காது. கேரளாவில் கிளப்பிவிடப்பட்டுள்ள மலையாள இனவெறி கிருஷ்ணய்யரையும் தொற்றிக்கொண்டுவிட்டது.

இச்செய்தியாளர் கூட்டத்தில் கிருஷ்ணய்யரோடு கலந்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி நாராயண குரூப் “கேரள அரசு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்.புதிய நிலைமை எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு 1886 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுக்கான குத்தகை ஒப்பந்தத்தை கேரள அரசு ஒரு தலைப்பட்சமாக ரத்து செய்துவிட வேண்டும். ” எனக்கொக்கரித்தார்.

“இப்போதுள்ள நிலைமை (Rebus Sic Standibus)” என்ற அனைத்து நாட்டு சட்டக் கோட்பாட்டை இதற்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறார் நாராயண குரூப். இரு நாடுகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு பிறகு முற்றிலும் புதிய சூழ்நிலை உருவாகிவிட்டால் அப்புதிய நிலைமைக்கு ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் பொருந்தி வரவில்லை எனக்காரணம் கூறி ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு நாடு ஒரு தலைபட்சமாக அவ்வொப்பந்தத்தை ரத்து செய்யலாம் என இச்சட்டக் கோட்பாடு உரிமை வழங்குகிறது.

 “இப்போதுள்ள நிலைமை (Rebus Sic Standibus)” என்பதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் பெரும் புகழ் பெற்ற சட்ட அறிஞருமான ஹெர்ஷ் லாட்டர்பேட் தரும் விளக்கம் கவனிக்கத் தக்கது.(காண்க: The Function of Law in the International Community PP 271-272) போர் வலிமையை கொண்டு வெற்றி கொண்ட நாடு தோற்ற நாட்டின் மீது வலுவந்தமாக திணித்த ஒப்பந்தத்திற்கே இக்கோட்பாடு பொருந்தும் என்றும் சுதந்திரம் பெற்ற முற்றிலும் புதிய நிலையில் பழைய ஒப்பந்தத்தை அந்நாடு ஒரு தலைபட்சமாக ரத்து செய்துகொள்ள உரிமை உண்டு என்றும் பல்வேறு ஒப்பந்தங்களை விரிவாக ஆய்வு செய்து விளக்கம் அளிக்கிறார் ஹெர்ஷ்.

திருவாங்கூர் சம்ஸ்தானத்திற்கும், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1886-ஆல் செய்துகொள்ளப்பட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் எந்த அச்சுறுத்தலின் கீழும் செய்து கொள்ளப்பட்டதல்ல. மேலும் சுதந்திர இந்தியாவில் 1970-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட துணை ஒப்பந்தங்கள் முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை மறு உறுதி செய்தன. தங்களது மலையாள இனச்சார்பை மறைக்க சட்டவாதங்களை வி.ஆர்.கிருஷ்ணய்யரும், நாராயண குரூப்பும் முகமூடியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இச்செய்தியாளர் சந்திப்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது எனக்கூறி கடும் கண்டனத்தை வெளியிட்டார். தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு சென்ற தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மலையாள வெறியர்களால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டனர்.பொதுப்பணித்துறை அடிக்கடி தாக்கப்படுகிறது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அச்சமின்றி அணைக்கு சென்று வரமுடியாத நிலை பல்லாண்டுகளாகவே இருக்கிறது. இது பற்றி ஒரு முறை கூட நீதிபதி கிருஷ்ணய்யர் கேள்வி எழுப்பியது கிடையாது.

கிருஷ்ணய்யர் மட்டுமல்ல; வடநாட்டு மனித உரிமை இயக்கத்தினர் பெரும்பாலானோர் தமிழினம் பாதிக்கப்படும் போது நம்பக்கம் இருப்பதில்லை.

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், தமிழக மீனவர்கள் சிங்கள் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் தாக்கப்படும் போதும் மனித உரிமை போராளிகளான மேதா பட்கர், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் போன்றவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்தது இல்லை.

மனிதர்கள் இனமாக-தேசிய இனமாகத்தான் பெரிதும் வாழ்கிறார்கள். அனைத்து மனித உரிமைகளுக்கும் தாய் உரிமையாக தேசிய இன உரிமைகளே விளங்குகின்றன. ஆனால் இத்தாய் உரிமையில் பெரும்பாலான மனித உரிமை இயக்கங்கள் கருத்து செலுத்துவதில்லை. குறிப்பாக தமிழ்த் தேசிய இனத்தின் இன உரிமை பறிப்புகளில் இவ்வியக்கங்கள் பெரும்பாலும் “நடுநிலை” வகித்து ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக துணைபோகின்றன. 1991 காவிரி கலவரத்தின் போது இலட்சக் கணக்கான தமிழர்கள் கன்னட வெறியர்களால் அடித்து விரட்டப்பட்ட போதும் இதே நிலைதான் நிலவியது.

தமிழ்நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் தான் தமிழர் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துகின்றன. முல்லைப் பெரியாறு சிக்கல் தீவிரம் அடைந்ததில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்த கரை போராட்டத்திற்கு மலையாள அறிவாளர்கள் வருவது குறைந்துவிட்டது என போராட்ட குழுவிற்கு நெருக்கமான நண்பர்களே குறைபட்டு கொள்கிறார்கள்.

தமிழர்களைப் பொருத்த வரை யார் எங்கே பாதிக்கப்பட்டாலும் சகோதரக் கரம் நீட்டுவது நமது இயல்பு. வங்காள தேச விடுதலைப் போராட்டம், பாலஸ்தீன போராட்டம், குஜராத் நிலநடுக்கம், மும்பை தாக்குதல் என எல்லா நேரத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தே வந்திருக்கிறது. ஏனெனில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர் அறநெறி.

ஆயினும் தமிழ்த்தேசிய இன உரிமையிலிருந்தே இங்குள்ள தனிமனிதர்களின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடங்குகிறது. இதில் அக்கறை செலுத்தாத மனித உரிமை இயக்கங்கள் முரணற்ற மனித உரிமை இயக்கங்களாக விளங்கமுடியாது.

இன உரிமை பறிப்பிற்கு ஆளாகிற போதும், இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற போதும் ஒடுக்கும் இனத்திற்கு எதிராக தற்காப்பு தாக்குதல் நடத்துவதும், அடிப்படை மனித உரிமை தான். இதனை வன்முறை என்றோ, இனவெறி என்றோ புறந்தள்ளுவது மனித உரிமைப் பார்வையாகாது.

மனித உரிமை இயக்கங்கள் இந்த கவனத்தோடு செயலாற்றுவதே இன்றைய தேவை.

Pin It