வைகோ தலைமையிலான உண்ணாப் போராட்டத்தில், த.தே.பொ.க.தலைவர் தோழர் பெ.மணியரசன் உரை

செந்தூரன் உண்ணாப் போராட்டத்தை ஆதரித்தும் சிறப்புமுகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ம.தி.மு.க. 27.08.2012 முதல் சென்னையில் அதன் தலைமையகமான தாயகத்தில் தொடர் உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறது ஐந்தாம் நாளாக 31.08.2012 அன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் தலைமையில் நடந்த உண்ணாப் போராட்ட்த்தில் தோழர் பெ.ம ஆற்றிய உரையின் சுருக்கம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் செயல்பட்டவர்கள் என்று இந்திய உளவுத்துறையான ரா (Raw) சுட்டிக்காட்டும் ஈழ அகதித் தமிழர்களை அடைத்து வைப்பதற்காக சிறப்பு முகாம் என்ற பெயரில் ஒரு மனவதை முகாமைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. செங்கல்பட்டிலும் பூவிருந்தவல்லியிலும் இந்த சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. அவற்றில் காலவரம்பின்றி ஈழத்தமிழர்களை அடைத்து வைத்துள்ளது. அவ்வப்போது புதிது புதிதாக ஈழத்தமிழர்களைப் பிடித்து அடைத்து வருகிறது தமிழகக் காவல்துறை.

சிறப்பு முகாம் என்பது என்ன? அது சிறையா? இல்லை. அகதி முகாமா? அதுவும் இல்லை. பின்னர் சிறப்பு முகாம் என்பதில் உள்ள சிறப்புக்கு என்ன பொருள்? என்ன சிறப்பு அதில் உள்ளது?

சிறப்பு முகாம் என்பது சிறையை விடக் கொடுமையானது. சிறையில் இருக்கும் கைதிகளுக்கு, பிணை உண்டு. சட்டப்படியான பல உரிமைகள் உண்டு. வழக்கை, விசாரித்து நீதிமன்றம் விடுதலை செய்யும் வாய்ப்புண்டு. இந்த உரிமைகள் எதுவுமில்லாமல், காலவரம்பின்றி அடைத்து வைக்கிறார்கள். இக் கொடிய முகாமிற்கு சிறப்பு முகாம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். அதாவது கொடிய நஞ்சுள்ள பாம்பை நல்ல பாம்பு என்று சொல்வது போல் இந்த மனவதை முகாமுக்கு சிறப்பு முகாம் என்று தந்திரமாக – நயவஞ்சமாகப் பெயர்சூட்டி உள்ளார்கள்.

சிறையாகவும் இல்லாத அகதி முகாமாகவும் இல்லாத இந்த முகாமின் உண்மையான பெயர் கடத்தல் முகாம் என்று இருக்க வேண்டும். தமிழக அரசு ஈழத்தமிழர்களைக் கடத்தி அடைத்து வைத்திருக்கும் முகாம் தான் இந்த சிறப்பு முகாம். இந்தக் கடத்தல் செயல் முழுவதும் தமிழக அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.

முதலமைச்சர் செயலலிதா ஒரு முடிவெடுத்தால் இந்தச் சிறப்பு முகாம்களைக் கலைத்து அவற்றில் உள்ள அனைவரையும் வழக்கமான அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிட முடியும். ஆனால் செயலலிதா இது பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் காக்கிறார்.

நம்முடைய தோழர் செந்தூரன் அவர்கள் கடந்த 26 நாள்களாக உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 12 நாள்களாகத் தண்ணீர் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டார். அவர் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரும் சூழ்நிலை உள்ளது.

2009-இல் ஒன்றரை லட்சம் தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் மற்ற நாடுகளும் சேர்ந்து இனப்படுகொலை செய்தன. அப்போது நாம் அழுதோம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். ஆனால் நம் அப்பாவிச் செந்தங்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. இப்போது தமிழ் மண்ணில் நம் கண்முன்னால் செந்தூரன் உயிர் போக அனுமதிக்கக் கூடாது. செந்தூரனைக் காப்பாற்றியாக வேண்டும். தமிழ் நாட்டில் தமிழினத்துக்கு வந்துள்ள சவாலாக இதை ஏற்று நாம் போராட வேண்டும்.

சென்னையில் போராடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நமது போராட்டத்தைத் தமிழ்நாடெங்கும் விரிவுபடுத்த வேண்டும்.

“தமிழக அரசே, செந்தூரன் உயிரைக் காப்பாற்று, சிறப்புமுகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்” என்ற முழுக்கங்கள் தமிழ் நாடெங்கும் கேட்கவேண்டும். தமிழ் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்துவோம்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

Pin It