சில்லறை வணிகத்திலும், விமானப் போக்குவரத்துத் துறையிலும் அயல்நாட்டு பன்னாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்பை வணிகர்களும், பொது மக்களும் நாடு முழுவதும் தெரிவித்து வந்த நிலையில், அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக 14.09.2012 அன்று நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் இந்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத பாசிச மனநிலையில் இயங்கும் இந்திய அரசின் இம்முடிவு, நாடெங்கும் உள்ள 4 கோடி வணிகர்களின் வாழ்வையேக் கேள்விக் குறியாக்கியுள்ளது. நடுவண் அரசின் இந்த முடிவு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், கேர்போர், டெஸ்கோ, ஓமன்மெகா உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களை வாழ வைத்து, நமது சொந்த நாட்டு வணிகர்களை ஏழ்மையிலும், வறுமை யிலும் தள்ளப் போகின்றன.

அதே போல இந்திய விமான நிறுவனங்களில் அந்நிய முதலீட்டுக்கும் அனுமதி வழங்கிய நடுவண் அரசு, ஏற்கெனவே கடன் சிக்கலில் தவித்து விமானங்களை இயக்க முடியாமல் தவிக்கும் விஜய் மல்லையா போன்ற முதலாளிகளுக்குத் தான் உதவுமே தவிர, அரசு விமான நிறுவனங்களை வளர்க்க முடியாது. மாறாக, அரசு விமானப் போக்குவரத்து அடியோடு அழியும் ஆபத்து உள்ளது.

 பசுமைப் புரட்சி என்ற பெயரில், பன்னாட்டு விதை நிறுவனங்களை நாட்டில் அனுமதித்ததன் விளைவாக, இன்று வேளாண்மை நசுக்கப்பட்டு, உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை நீடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள இந்திய அரசு வணிகர்களை அப்பறப்படுத்தவே செயல்படுகிறது மக்களுக்கு எதிரான இந்திய அரசின் பாசிசச் செயல்பாடுகள் தொடர்கின்றன. சில்லறை வணிகத்தில் அயல்நாட்டு முதலீடு என்ற இந்திய அரசின் முடிவை தமிழக அரசு தமிழ்நாட்டின் செயல்படுத்த மறுக்க வேண்டும்.

Pin It