உண்மை ஒன்று சொல்வேன்-12

இடிந்தகரை, தஞ்சை, பட்டுக்கோட்டை, சிதம்பரம் பகுதிகளில் இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு கூட்டங்களில் பங்கேற்று வந்திருக்கிறேன்.

இங்கே மக்களுக்கான படைப்புகள் அரிதாகிவிட்ட நிலையில், அத்திப் பூத்தாற் போல் வெளிவரும் இப்படிக்கு தோழர் செங்கொடி போன்ற படைப்புகளை (சிலபல குறைகள் இருந்த போதிலும்) வாரி அணைத்துக் கொள்ளும் பழக்கம் நம் தமிழர்கள் இடையே அப்படியே உள்ளது.

குறிப்பாக, இடிந்தகரையில் இப்படிக்கு தோழர் செங்கொடி திரையிட்ட போது படம் முடிந்ததும், ஓர் மூதாட்டி பேச எழுந்த என்னிடம் “அணுஉலையை தடுக்க எங்களில் யாராவது செங்கொடி போல சாகவேண்டுமோ?” என்று தன் ஆதங்கத்தை வேதனையுடன் கேள்வியாக எழுப்பினார்.

அந்தக் கேள்வி எனக்கும் அங்கிருந்த அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர்கள் சுப.உதயகுமார் மற்றும் புஷ்பராயன் ஆகியோருக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர் மற்றும் செங்கொடியின் தியாகத்தை நாம் மதிக்கிறோம். அதே நேரத்தில், தற்கொலையை போராட்ட வடிவமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உறுதியாக பதிவு செய்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி படமும் இதைத்தான் சொல்கிறது.

மணிப்பூரில் இராணுவனத்தினரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். தவறிழைத்தவர்களை கைது செய்யக் கோரி இரோம் ஷர்மிளா பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறாள். இத்தனை ஆண்டுகளாக? 12 ஆண்டுகளாக!

அவளுடைய எந்தக் கோரிக்கையையும் அரசு இதுவரை ஏற்கவில்லை. இந்த இரோம் ஷர்மிளா, “என் உடலை ஆயுமாக்கி போராடி வருகிறோம். என் உயிரை அழிக்கும் உரிமை எனக்கோ, இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கோ இல்லை” என்று சொல்கிறார். இதை இப்படிக்கு தோழர் செங்கொடியில் பதிவு செய்திருக்கிறேன். காந்தியும் இதைத்தான் சொல்கிறார். சுப.உதயகுமாரும் இதையேதான் சொல்கிறார்.

அறப்போராளிகள் எப்படி சாவுக்கு அஞ்சக் கூடாதோ அது போலவே சாவை தேடியும் போகக்கூடாது. தற்கொலை ஒரு போராட்ட வடிவமாக மாறினால், முத்துக்குமார், செங்கொடி போன்ற அறிவார்ந்த உணர்வாளர்களை நாம் இழக்க நேரிடம். அந்த இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் எதிர்ப்பையும் மீறி, அணுஉலையை கட்டியெழுப்புவதில் இந்திய அரசுக்கு இருக்கும் உறுதி-ஒரு தீமையை செயலாக்குவதில் இருக்கும் அந்த உறுதி, ஏன் நன்மைக்காக போராடும் நமக்கு இருக்குக் கூடாது!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல இலட்சம் கோடி ஊழலில் சிக்கியவர்கள் சிரித்துக் கொண்டே போகிறார்கள். நிலக்கரியை முகத்தில் பூசப்பட்ட நிலையிலும் பீடு நடை போடுகிறார், ஒரு பிரதமர். பன்னாட்டு நிறுவனங்களின் தரகர் சிதம்பரம் சிரிக்கிறார். ‘இனப்படுகொலை’க்கு துணை போன கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார்.

பட்டாசு தொழிற்சாலையை நிர்வகிக்கத் தெரியாத இந்த அரசு அதற்காக வெட்கப்படவில்லை. இறந்த குழந்தையின் சடலத்தைக் கூட எலிக்குத் தின்னக் கொடுத்த கொடூரத்தை நிகழ்த்தியதற்காக யாரும் நித்திரை இல்லாமல் தவிக்கவில்லை. ஆனால் இந்த அநீதிகளுக்கு எதிராக போராடும் நாம் ஏன் சாக வேண்டும்? தீயவர்கள் அவர்களின் செயல்பாட்டில் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் போது, நல்லவர்கள் நாம் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்?

அதனால்தான் கேட்கிறேன்? மக்களின் நல்வாழ்வுக்காக போராடும் முத்துக்குமாரும், செங்கொடியும் ஏன் சாகவேண்டும்? இவர்கள் நம்மிடையே இருந்திருந்தால் நம் போராட்டத்தின் தூண்களாக நின்றிருப்பார்களே!

இன்று அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் திரண்ட நம் சொந்தங்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு என கடுமையான தாக்குதல்கள் நடத்தி போராட்டத்தை அடக்கிவிட முடிவு செய்திருக்கிறது, இந்திய அரசும் அதற்குத் துணை போகும் தமிழக அரசும்.

கடந்தாண்டு, முல்லைப் பெரியார் அணை விவகாரத்திலும் அணுஉலை விவகாரத்திலும் தன்னெழுச்சியாக திரண்டு எழுந்த தமிழக மக்களை திசை திருப்பவே பேரறிவாளன் உள்ளிட்ட 3 நிரபராதித் தமிழர்களுக்கு மரண தண்டனைக்கான நாள் குறித்தது இந்திய ஏகாதிபத்தியம்.

தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க குறுக்கு வழியில் முயன்ற அரச பயங்கரவாதத்தை செங்கொடி தீயிட்டுக் கொளுத்தினாள்.

அதனால்தான், இடிந்தகரையில் அப்படியொரு கேள்வி கேட்ட அந்த மூதாட்டியிடம் இப்படிக் கூறினேன்: “நம்முடைய போராட்ட ஆயுதம் உயிரல்ல. உடல்! ஓராண்டாக உடலை ஆயுதமாக்கி போராடி வரும் உங்களது நம்பிக்கையும் உறுதியும் இங்கு மட்டுமல்ல உலகில் எங்கேயும் அணுஉலை இல்லாத நிலையை உருவாக்கும். நம்புங்கள். அது போலவே 3 நிரபராதித் தமிழர்களின் உயிரைக் காக்கும் காட்சி ஊடக ஆயுதமாக இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படமும் திகழும்”

 (இன்னும் சொல்வேன்)

Pin It