இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான தோழர் ஏ.எம்.கோபு என்கிற கோவிந்தராசு 13.09.2012 அன்று சென்னையில் காலமானார். இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 83ஆவது அகவையில் மறைந்தார்.

1942இல், 9ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த தோழர் கோபு, அவரது சக மாணவர்கள் மூவருடன் இணைந்து 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டதால் கைதாகி 16 நாட்கள் கழித்து விடுதலையானவர். பள்ளியிலும், கல்லூரியிலும் போராட்டங்களை ஒருங்கிணைத்த தோழர் கோபு நிர்வாகங்களால் பலமுறை கண்டிக்கப்பட்டும், வெளியேற்றப் பட்டும் தனது படிப்பை நிறைவு செய்தார். தோழர் கோபுவின் பணிகளைக் கண்ட சி.பி.ஐ. தலைவர் தோழர் பாலதண்டாயுதம், அவரை சென்னை “ஜனசக்தி” அலுவலகப் பணிக்காக அழைத்து வந்தார்.

விடுதலைத் தாகத்துடன் திகழ்ந்த அவர், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் களப்பால் குப்பு, வட்டாக்குடி இரணியன், சிவராமன் போன்ற போராளிகளுடன் இணைந்து நிலக்கிழார்களுக்கு எதிரானப் போராட்டத்திலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1947க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, தலைவர்கள் தலைமறைவாக இருந்த போது தோழர் கோபு, பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்க உற்றதுணையாக அவர்களது குடும்பங்களுக்கு உதவிகளைப் புரிந்துப் பாதுகாத்தார். பிரஞ்சு பாதுகாப்பு அதிகாரிகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி, இரயில்வே பணியாளர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 37,000 - பணத்தை பறித்த அவரது நடவடிக்கை பிரஞ்சு அரசை ஆத்திரமூட்ட வைத்தது. தோழர் கோபு அவர்களைப் பிடித்து கொடுத்தால் ரூ.5,000 பரிசு அளிப்பதாக அன்றைய புதுச்சேரி பிராஞ்சு நாட்டு அரசு அறிவித்தது. அதன்பின், 4 ஆண்டுகள் தலைமறைவாகவும், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார் தோழர் கோபு.

1950ஆம் ஆண்டு, திருவாரூரில் காவல் துறையினர் தோழர் கோபுவை சுட்டு வீழ்த்தினர். குண்டு பாய்ந்த நிலையில் அவரது உடலை உடலியல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் கிடத்த்திய போது தான், அவர் இன்னும் இறக்கவில்லை எனத் தெரிந்தது. அப்போது அரைகுறையாக எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளால் அவர் மறையும் வரை அவருக்கு வலிகள் இருந்தன.

சேலம் சிறையில் இருந்த படி தனது பட்டப்படிப்பை முடித்த அவர், 1947க்குப் பிறகு கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யபப்ட்ட காலத்தில் காவல்தறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார். பொதுவுடைமை இயக்கப் பிளவுக்குப் பின், சி.பி.ஐ. கட்சியுடன் இருந்த தோழர் கோபு, கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை திறம்பட நடத்தினார்.

அவரது உடல், மருத்துவ மாணவர்களின் ஆய்வு பயிற்சிக்காக சென்னை அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது. தோழர் கோபுவின் மறைவுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Pin It