கிராமங்களை விழுங்கி உழவர்களை வெளியேற்றி "நாட்டு வளர்ச்சித் திட்டங்கள்" என்ற பெயரால் உலகமயம் கோலோச்சுவது இந்தியாவில் வாடிக்கையாகிவிட்டது. பெருந்தொழிற்சாலைகளுக்கான சரக்குந்துகளும் மகிழுந்துகளும் அதிவிரைவாகச் செல்ல சாலை விரிவாக்கங்கள் விளைநிலைகளை விழுங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக புதுதில்லிக்கு அருகில் உத்திரப்பிரதேசத்தின் நொய்டா பெருமாவட்டத்தில் உள்ள பட்டாபர்சோல் கிராம உழவர்களின் நிலங்கள் யமுனா அதிவிரைவுச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டன. வெள்ளைக்காரர்கள் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட நிலக் கையகப்படுத்தும் சட்டம் பொது நலனுக்காக என்ற பெயரால் தனியார் பெருமுதலாளிகள் கொள்ளைக்கு, விளைநிலங்களைக் கட்டாயமாகக் கைப்பற்றும் வாய்ப்பை வழங்குகிறது.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி, மாயாவதி அரசு பட்டாபர்சோல் உழவர் நிலங்களை குறைந்த விலையில் கட்டாயமாக வாங்கியது. சாலை விரிவாக்கம் என்ற பெயரால் வாங்கப்பட்ட இந்நிலங்களில் கணிசமான பரப்பு தனியார் மனை வணிகர்களிடம் பன்மடங்கு விலைக்கு விற்கப்பட்டது.

அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட தங்கள் நிலம், கண்முன்னாலேயே பன்மடங்கு விலைக்கு கைமாற்றப்படுவதைக் கண்டித்தும் தங்களுக்கு உரிய இழப்பீடு கோரியும் உழவர்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உத்திரப்பிரதேச அரசு காவல்துறையை ஏவி, உழவர்களைத் தாக்கியது. உழவர் தலைவர் மன்வீர்சீங் தேவாட்டியா தலைமையில் ஒன்றுதிரண்ட உழவர்கள் காவல்துறையோடு மோதினர். காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 2 உழவர்களைக் கொன்றதோடு, வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது. இம்மோதலில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். தேவாட்டியா மீது 20 வழக்குகள் பதிவு செய்து அவரைப் பிடித்துக் கொடுப்போருக்கு ரூ.50,000 பரிசு என்றும் உ.பி. அரசு அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் உழவர் போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன
Pin It

அ.இ.அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை விட, தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி தமிழக மக்களிடம் பரவலாக இருந்திருக்கிறது. தி.மு.க.வின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இந்த அளவு படுதோல்வி அடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தடுத்து விட்டதால் தி.மு.க.வுக்கு இந்தப் படுதோல்வி ஏற்பட்டது என்று கருதினால் அது பிழை. வாக்குப் பதிவுக்கு முந்திய இருநாள்களும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் திட்டமிட்டு ஒதுங்கிக் கொண்டன. தி.மு.க. ஒரு வாக்காளர்க்கு ஓர் ஆயிரம் ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைத் தமிழகமெங்கும் கொடுத்தது. அ.இ.அ.தி.மு.க. நேர்மையின் நிலைக்களன் அன்று. ஆட்சி நடத்தி அடித்த கொள்ளைப்பணம் தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.விடம் இப்போது சேமிப்பில் இல்லை. ஆட்சியை இழந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா! எனவே, அ.இ.அ.தி.மு.க. வாக்காளர்களுக்குக் குறைவாகப் பணம் கொடுத்தது.

தி.மு.க. திணித்த பணத்தை வாங்கிக் கொண்டு அ.இ.அ.தி.மு.க. அணிக்கு வாக்களித் தோர் விகிதம் அதிகம். இது புதிய போக்கு!

துடைத்தெறியப்பட்ட தோல்வியைத் தி.மு.க. சந்தித்ததற்கான காரணங்களை இரண்டு வகையாகக் காணலாம். ஒன்று அமைப்பு வழிப் பட்டவை. மற்றொன்று அரசியல் வழிபட்டவை.

தி.மு.க., கலைஞர் கருணாநிதியின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவில்லை. ஒன்றையொன்று காலைவாரிவிடும் கருணாநிதி யின் குடும்ப ஆதிக்கக் குழுக்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. குடும்பக் குழுக்களின் ஆதிக்கச் சண்டையை அவ்வப்போது சமரசம் செய்து வைக்கும் வேலைதான் கருணாநிதியின் பொதுத் தலைமைக்கான அன்றாட வேலையாக இருக் கிறது. தலைமையில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் போலவே, மாவட்டங்களிலும், அதற்குக் கீழும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் குடும்ப ஆதிக்கமும், அதனால் வீச்சுப்பெற்ற குழுச் சண்டைகளும் தி.மு.க.வை ஆட்டி அலைக்கழித்து விட்டன.

தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து, கலைஞரின் 'உயிரினும் மேலான உடன்பிறப்புகள்' பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக நின்றனர். இந்த விரிசலைக் கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவரது நடத்தும் குடும்பக் குழுக்களின் ஆதிக்க அரசியல், அவரின் வேண்டுகோள்களையும், கட்டளைகளையும் காலில் போட்டு மிதிக்கும் அளவிற்குக் கழகக் கண்மணிகளுக்குத் துணிச்சல் தந்தன.

கழகப் போட்டி வேட்பாளர் நிற்காத தொகுதிகளில், மாவட்ட மற்றும் அதற்குக் கீழே உள்ள தி.மு.க. பிரமுகர்கள் சிலர் தங்கள் கழகத்திற்கு அல்லது கூட்டணிக் கட்சிக்கு இரண்டகம் செய்து எதிரணியினர்க்கு ஆதர வாகக் கீழறுப்பு வேலை செய்தார்கள்.

தி.மு.க.கூட்டணியில், தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும், தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடை யேயான உறவில், மோதல்களும் முறிவுகளும் ஏற்பட்டு தேர்தல் நேரத்தில் அக்கட்சிகள் ஒட்டிக் கொண்டன. இக்கட்சிகள் கசப்பைச் சப்புக் கொட்டிக் கொண்டே கைகோத்துச் சென்றன மக்களிடம்.

காங்கிரசுக் கென்று வாக்கு வங்கி இருந்த காலம் மூப்பனாரோடு முடிந்து விட்டது. கொசுவுக்கு ராஜபிளவை நோய் வந்தது போல, சிறுத்துப் போன காங்கிரசுக்குள் பற்பல குழுப்பிளவுகள். கோயில் மாடுகளைப் போல் திரியும் அக்குழுக்களின் பிரமுகர்கள் கூட்டணி தயவில் அவ்வப்போது தமிழகத் தேர்தலில் மஞ்சள் குளிப்பார்கள்; மணம் பெறுவார்கள். தில்லி அரசியலையும், தில்லி ஆட்சியையும் சார்ந்து தமிழ்நாட்டில் பேரம் பேசி பதவி பெறும் புல்லுருவிச் செடிகள் அப்பிரமுகர்கள்.

இந்தக் காங்கிரசுப் பிரமுகர்களின் கீழறுப்பு வேலை இந்தத் தேர்தலில் மிக அதிகம்.

மேற்கண்ட கோளாறுகள், தி.மு.க.வின் படு தோல்விக்கான அமைப்பு வழிக் காரணிகள். அதன் அரசியல்வழிக் காரணங்களில் முகாமை யானவற்றைப் பின்வருமாறு கூறலாம். அரசியல் காரணங்கள் என்று இங்கு நாம் கூறுபவை, தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட குறைபாடுகள்.

கருணாநிதி - முரசொலிமாறன் குடும்பங்களின் ஆதிக்க அரசியல் மற்றும் அவை அடித்த கொள்ளைகள்.

கருணாநிதி உருவாக்கி நிலைப்படுத்தியுள்ள வாரிசு அரசியல், அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள யாரும், எத்தனை தகுதிகள் பெற்றி ருந்தாலும் கழகத் தலைமைக்கு வர முடியாது என்று வேலி கட்டி வைத்து விட்டது. அடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அண்டிப் பிழைக்கும் அல்லக்கையாக இருந்தால் தான் கழகத்தில் இரண்டாம் நிலைத் தலைவராக,  மாவட்டச் செயலாளராக ஆக முடியும் என்ற கட்டாயம். இந்த நிலை கழக உறுப்பினர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் முகம் சுழிக்க வைத்து விட்டது.

கருணாநிதி - முரசொலிமாறன் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்து, பல்வேறு தொழில்களில் புகுந்து அரம்பத்தனம் (ரவுடித்தனம்) செய்து, அத்தொழில்களில் ஏற்கெனவே இருந்து வந்த பலரை அடித்து வீழ்த்தினார்கள்; அத்தொழில்களை விட்டே விரட்டினார்கள்.

இவர்களால் திரைப்படத்துறை, தொலைக் காட்சித்துறை, கம்பிவடத் தொலைக்காட்சி, செய்தி ஏடுகள், தாளிகைகள் போன்ற பல தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. திரைப் படத்துறையில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கூட அக்கட்சிக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று அஞ்சினார்கள். கருணாநிதியுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ரஜினிகாந்தே, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

கருணாநிதி குடும்பத்தாரின் மலைக் கொள்ளை, மணற் கொள்ளை ஆகியவை தமிழகத்தின் இயற்கை வளத்தையே சூறையாடியது.

இரண்டாம் அலைக்கற்றை ஊழல், கருணாநிதி குடும்பத்தாரின் பல்லாயிரம் கோடி பகற்கொள்ளையை ஐயத்திற்கிடமில்லாமல் அம்பலப்படுத்தி விட்டது.

விலை உயர்வு, நச்சுக்காய்ச்சல் வெப்பம்  போல் உயர்ந்து வருகிறது. நல்ல அரிசி வாங்கிச் சாப்பிட விரும்பும் நடுத்தர மக்கள் ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.18க்கு வாங்கி னார்கள். தி.மு.க. ஆட்சியில் அது கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தருவது, அந்த மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது? மற்ற அனைத்துப் பொருள்களின் விலையும் அப்படியே கிடுகிடு என உயர்ந்தது. நடுவண் ஆட்சிக்கு இந்த விலை உயர்வில் முகாமையான பொறுப்பு உண்டு. அங்கேயும் தி.மு.க. ஆளுங்கட்சி தானே!

கொழுந்துவிட்டு எரிந்த விலைவாசி உயர்வு என்ற நெருப்பு கருணாநிதி கொடுத்த தொ.கா.பெட்டி, எரிவளி அடுப்பு போன்ற இலவசங்களைப் பொசுக்கிவிட்டது.

வீட்டிற்குள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு மின்வெட்டால் இருட்டும் புழுக்கமும்,- வெளியில் தொழில், வணிகம், செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தது!

2009இல் முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் தமிழர்களை குண்டுபோட்டுக் கொன்ற சிங்கள - இந்தியக் கூட்டுக் கொலைகாரர்களை, மனிதகுலப் பவைவர்களை, தமிழின அழிப்பாளர்களை ஆதரித்துக் கொண்டே, எதிர்ப்பது போல் நாடகமாடிய கருணாநிதியின் நயவஞ்சகம், இன இரண்டகம் இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழன்-தமிழச்சி நெஞ்சிலும் மற்றும், மனித நேயர் நெஞ்சிலும் நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கிறது.

தமிழக ஆட்சியைப் பயன்படுத்தியும், தில்லி ஆட்சிக்குத் தி.மு.க.வின் துணை தேவைப் பட்டதை நிபந்தனையாக்கியும் மெய்யாகவே கருணாநிதி போராடியிருந்தால், போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும். தமிழினத்தைக் காத்திருக்க முடியும். அவ்வாறு காக்க முடியாவிட்டால் தமிழ் மக்களோடு சேர்ந்து உண்மையாகப் போராடி ஈகி ஆகியிருக்கலாம். பசப்பு நாடகங்களை நடத்தித் தமிழினத்தை ஏமாற்றினார் கருணாநிதி. ஏமாற்றியவர் இப்போது ஏமாந்தார்.

தமிழின அழிப்பில், காங்கிரசு, தி.மு.க. ஆகியவை வகித்த பங்கு தி.மு.க. அணியின் படுதோல்விக்கான காரணங்களுள் ஒன்று. அதுவே முதன்மைக் காரணி என்று நாம் பிழைபடக் கணிக்க வேண்டியதில்லை.

செயலலிதா, மாற்று அரசியல் கொள்கை, பொருளியல் கொள்கை கொண்டுள்ளார் என்பதற்காகவோ, அவர் தமிழின உரிமைகளை மீட்பார் என்ற நம்பிக்கை காரணமாகவோ, ஊழல் அற்ற நேர்மையாளர் என்பதற்காகவோ அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து விடவில்லை. தி.மு.க. ஆட்சியின் கொடுமை தாங்க முடியாதவர்கள் உடனடித் துயர் நீக்கம் என்ற உளவியலில் செயலலிதாவுக்குப் பேராதரவு தந்துள்ளனர்.

செயலலிதாவின் சசிகலாக் குடும்பக் கொடுங் கோன்மை, ஊழல் கொள்ளை, உலகமயப் பொரு ளியல் கொள்கை, தமிழ்மொழி, தமிழினத்திற் கெதிரான காழ்ப்புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், அடக்குமுறை,  தொழிற் சங்க உரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது..

தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டி கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவை கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சிலவேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வளவே!

சரியான மாற்று சக்தி இல்லாத போது ஒன்றின் தகிப்பைத் தாங்க முடியாத மக்கள், தகித்து ஓய்ந்துள்ள இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆயிரம் குற்றங்குறை இருந்தாலும், அனைவர்க்குமான அரசியல் கட்சிகளைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இத்தேர்தல் மீண்டும் மெய்ப்பித் துள்ளது. சாதிக் கட்சிகளை ஓரங்கட்டிவிடு கிறார்கள். இது தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் நல்ல அறிகுறி. ''பொதுக்கட்சி களில், சாதி, வர்க்க அழுத்தம் இருப்பது வேறு செய்தி.''

2004 மக்களவைத் தேர்தலில் ஓர் இடம் கூட அ.இ.அ.தி.மு.க. அணி பெறவில்லை. நாற்பதையும் தி.மு.க. அணி பெற்றது. கிட்டத்தட்ட அந்த நிலை இப்பொழுது நடந்துள்ள தமிழகத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் வெற்றி தோல்விகளால் தேர்தல் கட்சியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது.

மேற்கு வங்கம், அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநிலங்களின் தனித்தனிச் சிக்கல்கள் அடிப்படையில் வந்தவையே. இம்முடிவுகளில் அனைத்திந்தியப் பொதுத் தன்மை என்று எதுவும் இல்லை.

புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை, அதன் செயற்களம் தேர்தல் அன்று! இனவிடுதலை, இனஉரிமைக்கான போராட்டக் களம்! தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் ஆரவாரம் கொண்டு, அதில் மிதந்து செல்லும் தக்கையன்று தமிழ்த் தேசியம்!
Pin It
ரோமாபுரியில் அடிமைகளைக் கொல்வதற்கு அவர்களின் ஆண்டைகளுக்கு உரிமை உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உலகில் யாரைக் கொல்லவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு “உரிமை“ உண்டு.

ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஈராக் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டின் குடியரசுத் தலைவரையும் தளபதிகளையும் தூக்கில் போடலாம். லிபியா மீது போர் விமானங்களை அனுப்பி அந்நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை மீதும், குடியிருப்புகள் மீதும் குண்டு வீசலாம்.

ஈரான் மீது எந்த நேரமும் குண்டு வீசுவோம் என்று மிரட்டலாம்.

இப்படிப்பட்ட மனித குலத்திற்கெதிரான பயங்கரவாதப் படுகொலைகள் அனைத்தையும் வட அமெரிக்க நாடு தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த வரிசையில் வட அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெறாமலும் அந்நாட்டிற்கு செய்தி தெரிவிக்காமலும் 2.5.2011 அன்று பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடன், அவர் உறவினர்கள், இயக்கத்தவர்கள் பலரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டு வான்வழியே திரும்பிப் போய்விட்டனர்.

அமெரிக்கப் படையினர் அத்துமீறி இன்னொரு நாட்டிற்குள் சென்று படுகொலைகள் புரியும் காட்சியை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டன் மற்றும் படைத் தளபதிகள் உள்ளிட்டோர் வாசிங்டன் வெள்ளை மாளிகையில் அமர்ந்து கமுக்கமான நேரடி ஒளிபரப்பில் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரிப் பிரபுக்கள் சிங்கங்களுடன் அடிமைகளை மோதவிட்டு அச்சிங்கங்கள் அடிமை மனிதர்களைக் கொன்று உண்ணும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள். இன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் அவர்களின் தளபதிகளும் தங்களின் படையாட்கள் மனிதர்களைப் படபடவென்று சுட்டுக் குருதி வெள்ளத்தில் வீழ்த்துவதைப் பார்த்துச் சுவைத்தார்கள்.

பின்லேடனை உயிரோடு பிடிக்க வாய்ப்பிருந்தும் வேண்டும் என்றே சுட்டுக் கொன்றோம் என்று அந்நடவடிக்கையில் ஈடுபட்டோரே கூறுகிறார்கள். சட்ட நீதியை அமெரிக்கா மதிக்காது என்பதற்கு இது ஒரு சான்று.

ஈராயிரம் ஆண்டுகளாக இந்தக் குரூரம், கொலைவெறி, ஆதிக்க வர்க்கத்திடம் தொடர்கிறது. பாரக் ஒபாமா, கருப்பர் என்றும், சனநாயகவாதி என்றும் அவருக்கு முற்போக்கு ஒப்பனை செய்தார்கள் பலர். அவர் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிய வர்க்கத்தின் பேராளர். அந்த வர்க்கத்தின் குணத்தைத்தான் அவர் வெளிப்படுத்துவார் என்று நாம் அப்போதே சொன்னோம்.

ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு வெள்ளை நிற மேலாதிக்கக்குணம் இணைப்புச் சங்கிலியாக இருக்கிறது. கருப்பு ஒபாமா வெள்ளை நிறத்திமிரின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார்.

அமெரிக்க பயங்கரவாதம் என்பது ஏகாதிபத்தியப் பயங்கரவாதமாகவும் வெள்ளை பயங்கர வாதமாகவும் செயல்புரிகிறது.

பின்லேடனைச் சுட்டுக் கொன்றதில் இரண்டு கோட்பாடுகள் விவாதிக்கப்பட வேண்டியவை. ஒன்று பயங்கரவாதம், இன்னொன்று ஒரு நாட்டின் இறையாண்மையும் அமெரிக்காவின் உலக இறையாண்மையும்.

பயங்கரவாதம் என்றால் என்ன? அப்பாவிப் பொதுமக்களைக் கூட்டமாகக் கொல்வது, வன்முறை மூலம் மக்களை அச்சுறுத்துவது, இந்த அளவுகோலின்படி பின்லேடனும் பயங்கரவாதி. அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் பயங்கரவாதி.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் நியுயார்க் இரட்டைக் கோபுரங்களை விமானங்களால் மோதிச் சாய்த்தனர் பின்லேடனின் அல்கய்தா அமைப்பினர். இதில் 3 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அமெரிக்க படைத் தலைமையகமான பென்டகன் மாளிகை மீது இன்னொரு விமானம் மோதி சில பகுதிகளைத் தகர்த்தது. இந்நடவடிக்கைப் பயங்கரவாதச் செயல் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

பின்லேடனையும் பின்லேடனின் பயங்கரவாத அமைப்பையும் உருவாக்கியவர்கள் யார்? இதே வட அமெரிக்க ஆட்சித்தலைவர்களும் படை மற்றும் சி.ஐ.ஏ.அமைப்புகளும்தாம் 1970 களில் ஆப்கானிஸ்தான் இராணுவத் தளபதி தராக்கி புரட்சி செய்து, அந்நாட்டு மன்னராட்சியை நீக்கிக் குடியரசு ஆட்சி முறையை உருவாக்கினார். அவர் சோவியத் ஒன்றிய ஆதரவாளர். ஆப்கனில் உள்நாட்டுக் கலகம் வெடித்தது. அதை அடக்க தராக்கி, சோவியத் படைகளை வரவழைத்தார்.

சோவியத் படைகளை வெளியேற்றக் கோரி ஆயுதப் போர் நடத்தியவர்களில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் அடங்குவர். இஸ்லாமிய அடிப்படை வாதியாக இருந்து கொண்டு சோவியத் படைக்கு எதிராக ஆயுதப் போர் நடத்த பின்லேடனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அள்ளி அள்ளி வழங்கியது வட அமெரிக்கா. அமெரிக்கா ஊட்டி வளர்த்த பின்லேடன் பின் அமெரிக்காவுக்கு எதிராக எப்போது திரும்பினார்?

உள்நாட்டு எதிர்ப்பை சமாளிக்க முடியாத சோவியத் படைகள் பேரிழப்பிற்குப் பின் ஆப்கனை விட்டு வெளியேறி சொந்த நாட்டிற்குத் திரும்பின. ஆயுதக் குழுக்களில் வலுவான தாலிபன் குழு மற்ற குழுக்களை வீழ்த்தியும் விரட்டியும் ஆட்சியைப் பிடித்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையுடைய தாலிபான் ஆட்சி அமெரிக்காவின் கைப்பிள்ளையாகச் செயல்பட மறுத்தது.

அமெரிக்கா ஆப்கானுக்குள் படை அனுப்பி, தாலிபான் ஆட்சியை நீக்கி, தனது பொம்மை அரசை நிறுவி நாளது வரை அந்நாட்டை ஆண்டுவருகிறது. அங்கு பல்லாயிரம் மக்களை அமெரிக்கப் படையும். அதன் கூட்டணி நாட்டுப் படைகளும் கொன்று குவித்தன.

ஆப்கனில் அமெரிக்காத் தலையிட்டதற்கும் பின்னர் ஈராக்கில் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் 1990களில் நடத்தியதற்கும் பதிலடி கொடுக்க பின்லேடனின் அல்கய்தா நடத்தியதே 2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல்.

ஈராக்கில், தடைசெய்யப்பட்ட வேதி (இரசாயன) ஆயுதங்கள் இருக்கின்றன, அவற்றைக் கைப்பற்றி அழிக்கப் போகிறோம் என்று சொல்லி அமெரிக்கப் படை ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் குடியரசுத் தலைவர் சதாம் உசேனைப் பிடித்துத் தூக்கில் போட்டது. இது வரை வட அமெரிக்கா பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட கூட்டணி நாடுகள் ஒன்பது இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றுள்ளன. எல்லாம் முடிந்த பிறகு அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் ஈராக் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் தடை செய்யப்பட்ட வேதி ஆயுதம் எதுவும் இல்லை என்று அறிவித்தனர்.

இப்போது லிபியாவில் அமெரிக்க - பிரஞ்சுப் படை விமானங்கள் வான் தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்று வருகின்றன.குடியரசுத் தலைவர் கடாபியைக் கொல்ல முயல்கின்றன.

அமெரிக்கா,பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மேற்கண்ட ஆக்கிரமிப்புப் போர்கள் அனைத்தும் மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதப் போர்களே.புதிய செங்கிஸ்கான்கள் குடியரசுத் தலைவர் என்றும் பிரதமர் என்றும் முகவரி ஒட்டிக் கொண்டு தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பயங்கரவாதக் குற்றத்திற்காக ஒசாமா பின்லேடனைத் தண்டிப்பதென்றால், முதலில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர், பிரித்தானியப் பிரதமர், பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் ஆகியோர்க்குத் தண்டனை வழங்கிவிட்டு அதன் பிறகே பின்லேடனிடம் வரவேண்டும்.

2002ஆம் ஆண்டு சென்னை வந்திருந்த அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான நோம் சோம்ஸ்கி.“பின்லேடன் பன்னாட்டு பயங்கரவாதி என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எப்போதுமே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தான் முதல்நிலைப் பன்னாட்டுப் பயங்கரவாதி ''என்றார்.

அடுத்து இறையாண்மை. பாகிஸ்தான் மேலும் மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து தனது இறையாண்மையை மெல்ல மெல்ல அந்நாட்டிடம் அடமானம் வைத்து வருகிறது.

ஆப்கனில் ஏற்பட்ட தாலிபான் அரசை ஏற்று அதனுடன் தூதுரக உறவை உருவாக்கியிருந்தது பாகிஸ்தான். ஆனால் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தவுடன் ஆப்கான் மீதான அதன் ஆக்கிரமிப்புப் போரைப் பாகிஸ்தான் ஆதரித்தது. அமெரிக்காவின் அடியாளாக பாகிஸ்தான் மாறியது.

பாகிஸ்தான் நாட்டுக்குள் வடமேற்கில் வச்ரிஸ்தான் பகுதியில் அடிக்கடி அமெரிக்க வான் படையினர் குண்டு வீசித் தாக்குகின்றனர். பழங்குடி மக்களைக் கொல்லப்படுகின்றனர்.

இப்பொழுது பாகிஸ்தானின் உள் நாட்டுப் பகுதிக்குள் அதன் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிமீ தொலைவில் அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குவது பற்றிய தயக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை.

""அமெரிக்காவின் பகைவன் உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் போய்த் தாக்குவோம்'' என்கிறார் ஒபாமா. பாகிஸ்தான் போன்ற அண்டிவாழும் நாடு மட்டுமல்ல, நட்பல்லாத நாடாக இருந்தாலும், அந்நாட்டின் அனுமதியின்றி உள்ளே போய் தாக்குவோம் என்ற பொருளில் ஒபாமா கூறுகிறார்.

வட அமெரிக்காவுக்கு, எவர் அனுமதியுமின்றி எல்லா நாட்டுக்குள்ளும் போய்த் தாக்க உரிமை உண்டு. அதாவது அமெரிக்க இறையாண்மை உலக இறையாண்மை என்பது இதன் பொருள்.

அமெரிக்காவின் உலக இறையாண்மையை எல்லா நாடுகளும் ஏற்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகளுக்குத் தன் நாட்டில் கூட இறையாண்மை இல்லை.

"ஏகாதிபத்தியம் என்பதன் பொருள் போர்" என்றார் லெனின். ஏகாதிபத்திய முதலாளிய முறையை ஒழிக்கும் வரை எந்தநாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பில்லை. அதன் எதிர் வினையாக, ஏகாதிபத்தியங்களின் இறையாண்மைக்கும் பாதுகாப்பில்லை. நியூயார்க் இரட்டைக் கோபுரங்களும் பெண்டகன் படைத் தலைமையகமும் பின்லேடன் அமைப்பால் தாக்கப்பட்டது இதற்கு ஒரு சான்று.

பின்லேடன் உடலை இஸ்லாமிய முறைப்படி நிலப்பகுதியில் எங்காவது புதைத்தால் அது நினைவுச் சின்னமாகிவிடும் செல்வாக்குப் பெற்றுவிடும் என்று அஞ்சி எங்கோ நடுக்கடலுக்கடியில் புதைத்தது அமெரிக்காவின் சின்னத் தனத்தையே காட்டுகிறது.

இராசபட்சே விடுதலைப் புலிகளின் நினைவிடங்களை அழித்ததும் அரச பயங்கரவாதப் பண்பியல் வக்கிரத்தின் வெளிப்பாடே!

வருங்காலத்தில் ஒபாமாவை விட பின்லேடன், மக்கள் செல்வாக்கைப் பெற்றிருப்பார் என்பதை ஒபாமாவே ஒப்புக் கொண்டது போல் அந்தச் சவ அடக்கம் நடந்துள்ளது.

உலகை விழுங்க அமெரிக்கா கொண்டுவந்த உலகமயக் கொள்கை அமெரிக்காவையே விழுங்கிக் கொண்டுள்ளது. இதிலிருந்து அமெரிக்காவைத் தப்பிக்க வைக்கவும் அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் அடுத்த நாட்டை ஆக்கிரமிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒபாமா வருங்காலத்தில் மேலும் தீவிரமாகவே ஈடுபடுவார். கடைசியில் ஒபாமாவும் அவருக்குப் பின் அவர் பதவிக்கு வருபவரும் அமெரிக்காவை கிட்டதட்ட எல்லாவகையிலும் திவாலாக்கி விடுவார்கள். அமெரிக்காவின் அடியாளாக இந்தியாவை மாற்றிக் கொண்டுள்ள மன்மோகன்-சோனியா ஆட்சியும் இந்தியாவைப் பாகிஸ்தான் நிலைக்குக் கொண்டுவந்து விடும்.

மேலாதிக்க வல்லரசான அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியப் புரட்சியே தமிழக இறையாண்மையை மீட்டு உறுதிப்படுத்தும்.
Pin It

‘இனவியல்: ஆரியர்-திராவிடர்--தமிழர்' கட்டுரைக்கு எதிர்வினையாக ‘புராணங்கள் வரலாறாகுமா?’ என்ற கேள்வியை புலவர் க.முருகேசன் எழுப்பியிருந்தார் (தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், மே1--15,2011). புரா ணங்கள் உறுதியாக வரலாறில்லை.ஆனால் புராணங்களின் அடிப்படையில் தவறான கோட்பாடுகள் இதற்கு முன்னரே கட்ட பட்டிருந்தால், அப்புராணங்களை குறுக்கு வெட்டு நெடுக்கு வெட்டு செய்து, அக்கு அக்காகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியது ஒரு வரலாற்றாளனின் கடமை.

பல்லவர் வரலாற்றை பாகவத புராணத்திலிருந்து தொடங்குவதாகவும், மனுவை முன்னிறுத்துவதாகவும் கடிதத்தில் புலவர் க.முருகேசன் குறைபட்டிருக்கிறார். இனவியல் கட்டுரை மனுதர்ம நூலையும் பாகவத புராணத்தையும் தோண்டித் துருவி பார்ப் பதற்கு என்ன காரணம்? தென்னிந்திய மக்களைக் குறிக்க 'திராவிடர்' என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் இராபர்ட் கால்டுவெல்(1856). கால்டுவெல் அந்த சொல்லை முறையாகப் புரிந்து கொள்ளவில்லை. குறைப் புரிதலின் காரணமாக தவறான பொருளில் பயன்படுத்தி விட்டார். அதை இனவியல் கட்டுரைத் தொடர் விளக்கி யிருக்கிறது.

’திராவிடர்’ என்ற சொல்லைக் கால்டுவெல் எங்கிருந்து பெற்றார்? அந்த சொல் கால்டு வெல்லின் கண்டுபிடிப்பா? 'திராவிடர்' என்ற சொல்லை அவருக்கு வழங்கிய அந்த மூல ஆவணம் எது?

’திராவிட' என்ற சொல் ‘தமிழ’ என்ற சொல்லிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்பதையும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கூட ‘திரமிள’ என்ற சொல் தமிழகத்தை சுட்டப் பயன்பட்டிருப்பதையும் இனவியல் கட்டுரை (இயல்06) சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆனால் இதே சொல், பின்னர், சேர,சோழ, பாண்டியர் அல்லாத ஒரு அரசக்குடியினரைக் குறிக்கும் சொல்லாக சமஸ்கிருத இலக்கியங் களில் வருகிறது. இச்சொல் ஓர் அரசக்குடியி னரை அல்லது ஒரு கூட்டத்தாரைக் குறிக்கும் சொல்லாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மாறிப்போனது. இக்கூட்டத்தாரைக் குறித்து வந்த ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தான் எடுத்துக் கொண்டு அதை தென்னிந்திய மக்களைக் குறிக்கும் இனப்பெயராகக் கால்டு வேல் பயன்படுத்தியிருக்கிறார்.

மனுஸ்மிருதியிலும், பாகவதப் புராணத் திலும், ‘’திராவிடர்’ என்ற சொல்வருகிறது என்று கூறி புராணத்தைச் சான்றாக ஏற்றவர் கால்டுவெல். ‘’உயர் நிலையிலிருந்து வீழ்ந்து பட்ட சத்திரியர்களை மனுஸ்மிருதி குறிப் பிடுகிறது; அதில் திராவிடர் என்போர் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள், "திராவிடர்" என்ற சொல் தென்னிந்தியக் குடிகள் அனைவரையும் குறிப்பிடும் சொல்லாகவே தோன்றுகிறது’ என்றும் இதே பொருளில் பாகவத புரணத்திலும் சத்ய விரதன் என்பவன் திராவிட தேசத்து அரசன் என்று குறிப்பிட பட்டிருக்கிறது’ என்றும் இராபர்ட் கால்டு வெல் கூறுகிறார் கால்டுவெல்லே கூறுகிறபடி “திராவிடர்” என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணம் மனுஸ்மிருதியும், பாகவத புராண மும்தான்.

மனுஸ்மிருதியும், பாகவதபுராணமும், வழங்கிய சொல்லை எடுத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தத் தென்னிந்திய மக்களுக்கும் இனப் பெயராகச் சூட்டிய கால்டுவெல் குற்றவாளி இல்லை; அச்சொல்லை அப்படியே எவ்வித ஆய்வும் இன்றி ஏற்றுக் கொண்டு கட்சிகள் கட்டிய அரசியல்காரர்கள் குற்றவாளி இல்லை; இந்த அபத்தத்தைச் சுட்டிக்காட்டி, மனுஸ்மிருதியையும், பாகவதபுராணத்தையும் தோண்டித் துருவி ‘திராவிடம்’ என்ற சொல் உண்மையில் எவரைக் குறித்தது என்பதை அம்பலத்துக்குக் கொண்டு வரும் இனவியல் கட்டுரையாளர் தான் குற்றவாளியா?

‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்குமுன், மனுவையும் பாகவத புராணத்தையும் எவரும் கேள்விக் குள்ளாக்கவில்லை. இனவியல் கட்டுரை இப்போது கேள்வி எழுப்புகிறது; ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இது தவறாகுமா? ‘இனவியல்’ கட்டுரைத் தொடர் மனுஸ்மிருதி யையும், பாவகத புராணத்தையும் ‘திராவிடர்’ பற்றிய ஆய்வில் பயன்படுத்தியுள்ளதாகக் குறைபடும் ஆர்வலர்கள், முன் உள்ள கேள்வி இதுதான்: 'உங்களுக்கு திராவிடர் என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணம் எது?’ (கால்டுவெல் கடன் பெற்றவர்).

மகாபாரதம் போன்ற சமஸ்கிருத இலக்கியங்கள், தென்னிந்தியப் பகுதியில் ‘சேரர், சோழர், பாண்டியர் இவர்களோடு நான்காவ தாக ‘திராவிடர்’ என்ற அரசக்குடியினரையும் குறிப்பிடுகின்றன. சேர, சோழ, பாண்டியர் அல்லாத அந்த அரசக்குடியினர் ‘பல்லவர்கள்’ என்று சான்றுகளின் அடிப்படையிலேயே இனவியல் கட்டுரைத் தொடர் அடையாளம் கண்டது. மற்றபடி, புராண இதிகாசங்கள் பேசும் யுகங்கள், கல்பங்கள், பல கோடி ஆண்டுக் கணக்குகள் இவையெல்லாம் குப்பை என்பது அனைவருக்கும் தெரியும்.

எதிர்வினையாக வெளியிடப்பட்டிருக்கும் கடிதம் பல்லவர்களைத் தமிழர்கள் என்று காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறது. வரலாற்ற றிஞர் இராசமாணிக்கனார் “மகேந்திர வர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், அபராஜித வர்மன், இவர்களே தமிழ் அறிவு பெற்றிருந்தனர்” என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரிவதாகக் கூறுகிறார் என்று இனவியல் கட்டுரை எடுத்துக் காட்டியிருந்தது. கட் டுரைக்கு எதிர்வினையாற்றிய புலவர் க.முரு கேசன் “பல்லவர்களின் மொழி தமிழல்ல, அவர்கள் பிறமொழியாளர்கள் என்று தன் வாதத்துக்கு வலுச் சேர்க்க முயல்கிறார் செயராமன்” என்றும், இதன் பொருள் “தமிழ்ப் புலமை பெற்றிருந்தனர் என்பதாகும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்ற வாதத்தை வலுவாக வைத்தவர் இராசமாணிக்கனார். அவர் இவ்வாறு பதிவு செய்கிறார்.

“பல்லவர் வடவர் ஆதலின் அவர் பட்டயங்கள் எல்லாம் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ”(பல்லவர் வரலாறு(2000), பக். 306).

“சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க் கும், சிவஸ்கந்த வர்மன், புத்த வர்மன், வீரகூர்ச்ச வர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத் தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும் பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின், இளந்தி ரையன் வழி வந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?” (மேலது, பக். 28)

பல்லவர்கள் தங்கள் பட்டயங்களில் தாங்கள் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பதிவு செய்துள்ளனர். சில பட்டயங்களில் “பிரம்ம-சத்திரியர்கள்” என்று விவரித்துள்ளனர். இது அவர்களுடைய வாக்குமூலம். பல்லவர்கள் தமிழர்கள் என்று நிறுவ எவர் விரும்பினாலும், அவர்கள் ‘பரத்வாஜ கோத்திரத்தார் அல்லர்’ என்று முதலில் நிறுவியாக வேண்டும்; அது ஒரு காலத்திலும் நடவாது.

பல்லவர் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்கள் பலரை  புலவர் க.முருகேசன் பட்டியலிட்டு, இவ்வாறு குறிப்பிடு கிறார். “இவர்களில் யாரும் பல்லவர்கள் பார்ப் பனர்கள் என்றோ அவர்கள் ஆண்டநாடு திராவிடதேசம் என்றோ குறிப்பிடவில்லை”.

பல்லவர் வரலாற்றை ஆய்வு செய்த பட்டியலில் கண்ட அனைவரும் சிறந்த வரலாற்றறிஞர்கள் தாம். ஆனால், ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் அவர்கள் காணத் தவறியவை உண்டு. இதுவரைக் காணத் தவறிய ஒன்றை அடுத்து வரும் ஆய்வாளர்கள் காணக் கூடாது என்பது இல்லை. இதுவரை பயன்படுத்தப்பட்ட ஆவணங்களையும், தரவு களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவதும், இதுவரைக் காணத் தவறியவற்றை வெளிச் சத்துக்குக் கொண்டு வருவதும், ஆய்வில் அக்கறை காட்டும் ஒருவரின் தலையான பணி அல்லவா?
Pin It