டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், 03.02.2012 அன்று வெளியான, ஜெய்தீப் மசும்தார் (Jaideep Mazumdar) என்பவர், மேற்கு வங்க சாதி அமைப்பு குறித்து எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்.

தமிழாக்கம்: க.அருணபாரதி

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சமூக வியலாளர் ஆஷிஸ் நந்தி வெளியிட்ட சர்ச்சைக் குரிய கூற்றுகள் குறித்து இங்கு கடுமையாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் விவாதிக்கப் படாமல் உள்ளது.மேற்கு வங்கத்தின் மேல்தட்டில் உள்ளவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை பிரதி நிதித்துவப்படுத்தத் தவறிவிட்டனர் என்பதே அது. கடந்த 100 ஆண்டு களில், மேற்கு வங்கத்தில், இதர பிற்படுத் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அட்டவணை சாதிகள் மற்றும் அட்டவணை பழங்குடியின சமூகத்தினர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரவில்லை என்றும் அவர் சொன்னார்.

மேற்கு வங்கத்தின் அனைத்து முதல்வர் பதவியிலும்,பெரும்பாலான அமைச்சரவைகளிலும், உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் அமர்த்தப் பட்டனர். காங்கிரஸ் ஆட்சி, 1947லிருந்து 1977வரை இருந்த 3 அடுத்தடுத்த குறுகிய கால கூட்டணி ஆட்சிகள், 2011வரை இருந்த இடது முன்னணி ஆட்சி மற்றும் தற்போதைய திரிணாமூல் காங்கிரசு ஆட்சிவரை உள்ள,அனைத்திலும் பிற்படுத்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித் துவம் மிகவும் குறைவானது ஆகும்.

எந்த ஆட்சியிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கோ, பழங்குடியினருக்கோ முக்கிய துறைகள் ஒதுக்கப்படவில்லை.சமூக சீர்திருத்தங்களின் தொட்டிலாக மட்டுமின்றி, அட்டவணை சாதியினர்,இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியின மக்களை,மாநிலமக்கள் தொகையில் சற்றொப்ப68விழுக்காடாகக் கொண்டுள்ள மாநிலத்தில்தான் இந்நிலைமை நீடிக்கிறது.

மாநிலத்தின் முதல் முதலமைச்சர் முனைவர் பிரபுல்லா சந்திர கோஷிலிருந்து,மம்தா பானர்ஜியின் அமைச்சரவை வரை ஒரு பார்வை பார்த்தால், நந்தி கூறியது உண்மையெனத் தெரியும். மேலும், வெறும் 2 விழுக்காடு மட்டுமே உள்ள பார்ப்பனர் கள், அடுத்தடுத்து வரும் அரசுகளில் முக்கிய துறைகளை வைத்திருக்கின்றனர்.தற்போதைய மேற்கு வங்க அமைச்சரவையில் உள்ள 44 பேரில், முதலமைச்சர் உள்பட 14 பேர் பார்ப்பனர்கள் ஆவர். வெறும் 2 பேர்தான் பழங்குடியினர். அட்டவணை சமூகம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 7பேர்,அவர்களில் பெரும்பாலான வர்கள் இளைநிலை அமைச்சர்கள்.குறிப்பாக அதில் முக்கியமானவரான,நடுவண் புலனாய்வு நிறுவன முன்னாள் இணை இயக்குநர் உபேன் பிஸ்வாஸ்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பொறுப்பில் உள்ளார். மற்றவர்கள், இளைஞர் சேவைகள், நீர்வழி மேலாண்மை உள்ளிட்ட துறைப் பொறுப்புகளில் உள்ளனர். வனத்துறைதான், பிற் படுத்தப்பட்ட அமைச்சர்கள் வைத்திருக்கும் முக்கி யத்துவம் வாய்ந்ததுறை ஆகும்.

மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 25 விழுக்காடு உள்ள இசுலாமியர்களில், 5 பேர் மட்டுமே,44பேர் கொண்ட அமைச்சரவையில் பிரதிநிதித்து வப்படுத்தப்பட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தின்,34ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சி உள்ளிட்ட தொடர்ச்சியான அமைச்சரவைகளில் இதுதான் போக்காக இருந்து வருகின்றது.

சமூகவியலாளர் மதுசூதன் கோஷ், “ஆட்சி அதிகாரத்திலுள்ள கட்சி அல்லது கூட்டணிகள் வேறுபாடின்றி,மாநிலத்தின் முக்கியமான மற்றும் அதிகாரம் வாய்ந்ததுறைகள் பார்ப்பனர்களுக்கும் இதர உயர் சாதியினருக்கும்தான் எப்போதும் கொடுக்கின்றனர். ராஜாராம் மோகன் ராய்,சுவாமி விவேகானந்தர் மற்றும் ஐஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற பெரும் சமூக சீர்திருத்தவாதிகள் உருவான மாநிலத்தில், அதிகாரத்திற்கு வெளியே தாழ்த்தப் பட்ட, பழங்குடியின,இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் வைக்கப் பட்டிருப்பது முரண்பாடானது மட்டுமின்றி,மிகவும் அவமானகரமானதும் கூட” என்கிறார்.

மேலும் அவர், வங்கத்தில் மத்திய மற்றும் உயர் அதிகாரப் பிரிவு, காவல்துறை, வேறுபல துறைகள், ஏன் கல்வித்துறையில் கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைவிடபார்ப்பனர்களும்,இதர உயர் சாதியினருமே உள்ளனர் என அவர் சுட்டிக் காட்டுகிறார்.ஆங்கிலேயர் ஆட்சியிலும் இதுதான் நிலைமை. வங்க மாகாண சட்டசபைக்கு முதலில் தேர்தல் நடைபெற்ற 1892-லிருந்து, பார்ப்பனர்களும் இதர உயர் சாதியினரும்தான் பெரும்பாலும் உறுப்பினராக இருந்துள்ளனர்.

1977இல் இடது முன்னணி ஆட்சியைக் கைப்பற்றும் வரை இருந்த முதல்வர்களான பிரபுல் லா சந்திர கோஷ், பித்தன் சந்திரராய், பிரபுல்லா சந்திர சென், அஜெய் முகர்ஜி மற்றும் சித் தார்த்தா சங்கர்ராய் ஆகியோரது அமைச்சரவைகளில் 75விழுக்காட்டினர் உயர்சாதியினர் ஆவர்.

ஜோதி பாசுவின் முதல் அமைச்சரவை,ஓரளவு சமத்துவமாக உயர்சாதியினரை 60 விழுக்காடாக வைத்திருந்தாலும்,அதன் பின்னர் வந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் அமைச்சரவைகளில் அது முறையே 65, 75 என அதிகரித்தது. அதன் பின்னர் வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, 2001 மற்றும் 2006களில் அமைத்த அமைச்சரவைகளில், அதே சாதிக் கலவையை வைத்திருந்தார். மம்தா பானர்ஜியும் இதே பாரம்பரியத்தைத் தொடர்கிறார்.

எதிர்பார்த்ததைப் போலவே,வெளியில் வைக்கப் பட்ட பிரிவினர் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி நசுரூல் இஸ் லாம், “தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின, இதர பிற்படுத் தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து, வங்கத்தில் அரசியல் யுத்தம் தொடுக்க வேண்டிய நேரமிது.அதன்பின்,நாங்கள் “அரசர்களை” உருவாக்குவோராவோம், அடுத்த முதல்வராக ஒரு இசுலாமியரோ, தாழ்த்தப்பட்ட அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ வருவர்” என்கிறார்.

Pin It