உறங்கா நிறங்கள், எரியும் வண்ணங்கள், புயலின் நிறங்கள், புகைமூட்டம், திசை முகம், உயிர்ப்பு, போர்முகம் உள்ளிட்ட பல்வேறு ஓவியத் தொகுப்புகள்- கண்காட்சிகள் வழி தமிழ்ச் சமூகத்தின் பிம்பத்தைத் தன் தூரிகையால் பிரதிபலித்தவர் ஓவியர் புகழேந்தி.கருப்பு வெள்ளைக் கோடுகளிலும், பலவண்ண ஓவியங் களிலும் கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழகத் தில் ஓவியப் புரட்சி செய்யும் படைப்பாளி அவர்.

இவரது, “மேற்கு வானம்”, “ஓவியம்: கூறுகளும் கொள்கைகளும்” உள்ளிட்ட நூல்கள் ஓவியம் பற்றிய அடிப்படை வரைவுகளையும் ஓவியக் கொள்கைகளையும் எடுத்துக் கூறுவதோடு மட்டுமின்றி,அனைத்துவகை ஊடகங்களையும் கையாளுகின்ற படைப்பாளர்கள் மற்றும் பார்வை யாளர்கள் அனைவருக்கும் பயன்படக் கூடியவையாக அமைந்தன.

அவ்வகையில், இந்தியாவின் பன்முகப் பிகாசோ என்று அழைக்கப்பட்டவரும், இந்திய நவீன ஓவியத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவரு மான மறைந்த தூரிகைச் சிற்பி எம்.எஃப் உசேன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை,“எம்.எஃப் உசேன் இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி”என்ற நூலாக ஓவியர் புகழேந்தி சிறப்புற எழுதியிருக்கிறார்.

இந்நூல், எம். எஃப் உசேனைப் பற்றிய ஓரு முழுமையான வரலாற்று நூல். வளரும் படைப் பாளர்களுக்கு ஓர் நம்பிக்கை ஒளி. புதிய வாயிலின் திறவுகோல்.

மராட்டிய மாநிலம், பந்தர்பூரில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, திரைப்படங்கள், விளம்பர ஓவியங்கள் என வாழ்கையைத் தொடங்கி பெரும் புகழடைந்தவர் எம்.எஃப் உசேன் அவர்கள்.

உசேன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை தொடங்கி,அவர் தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி,இலண்டன்,துபாயில் வாழ்ந்து, கத்தாரியக் குடிமகனாக இறந்தது வரையிலான பல அரிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

 “இவரது ஓவியங்கள் நுட்பமானவை, கோடுகள் ஐயமற்றவை, தெளிவானவை மட்டுமின்றி தொலை நோக்கு உள்ளவை. தங்கு தடையற்ற தூரிகைக் கீறல்களின் வேகம், கூட்டமைவு அனைத்திலும் அவர் தமக்கென ஒரு தனி உத்தியை உருவாக்கினார்”என்று ஓவியர் புகழேந்தி உசேனின் நுட்பமான படைப் பாளுமை குறித்துப் பல்வேறு ஓவியச் சான்றுகளோடு விவரித்திருக்கிறார்.

உசேனின் இளமைக் கால வாழ்க்கைப் போராட்டத்தை இந்நூல் வழி படிக்கிற போது, இடைநிறுத்தா நாவலை வாசிப்பது போல் அப் படியே மனதில் படிகிறது.இது ஓர் ஓவியனின் வரலாற்று நூல் மட்டுமல்ல, உசேனின் வாழ்க்கைக் காவியமாகும்.

இந்நூலில், 1947, 48 களில் உசேன் வரைந்த “குயவர்கள்”, “விடியல்”, “தல் தல் குதிரை” “மார்க்க அறிஞர்” 1950, களில் வரைந்த “நாட்டுப்புற இணையர்கள்”, “இரண்டு பெண்கள்”, “மனிதன்”, “சிவப்பு நிர்வாணம்:”, “மாராத்தியப் பெண்கள்” உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களின் உட்கூறுகள்அதன்வலிமைஆகியவற்றைஓவியர்புகழேந்திகூர்மையுடன்சொல்லியிருக்கிறார்.

டேப் மேத்தா, இப்ராகிம் அல்காசி, பீர்பாய் போன்ற படைப்பாளிகள், உசேனின் ஓவியங்கள் குறித்து சொல்லுகிற வியப்பூட்டும் செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

2006 இல் ஆங்கில வார இதழான இந்தியா டுடே, “காஷ்மீர் தூதுக்குழுவுக்கான கலை” என்று ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் இந்திய வரை படத்துடன் அடங்கிய ஒரு நிர்வாணப் பெண்ணின் ஓவியம் வெளிவந்திருந்தது.இந்த ஓவியத்திற்கான தலைப்பை உசேன் எழுதவில்லை. அந்த ஓவியத்தை ஏலம் விட்டவர்கள் “பாரத மாதா” என்று அழைத்தார்கள். அதன் விளைவாக உசேனை தேசத் துரோகி என்று குற்றம் சாட்டியது ஒரு கூட்டம்.

சில விளக்க முடியாத காரணங்களுக்காக அப்போதைய உள் துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்,மதச் சிக்கல்களை உருவாக்கும் இந்த கருத்து மாறுபாட்டிற்குரிய ஓவியங்களை ஒரு ஆலோசனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தார்.அது உசேனுக்கு எதிரான வழக்கை வலிமையாக்கியது.

ஆலோசனைக்கனுப்புவதைத் திரும்பப் பெற வேண்டுமென்று கலைஞர்கள் சமூகம் வேண்டு கோள் விடுத்தும்,அரசு அசையவே இல்லை.இந்தியப் பண்பாட்டையும், இராமாயணம்,மகா பாரத இதிகாசங்களைக் கொண்டாடும் பல்வேறு ஓவியங்களை செய்தவர் என பல தரப்பினர் வாதிட்டார்கள்.ஆனால் அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை. “பாரத மாதா” ஓவியம் குறித்த வழக்கு 2006இல் அவர் மீது பதியப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் இவ்வழக்கு பதியப்பட்டது. மொத்தம் 99 வழக்குகள் உசேன் மீது சுமத்தப் பட்டன. பிறகு எல்லாவற்றையும் அவர் எதிர் கொண்டார். பாரத மாதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பாரதமாதா வழக்கில் விடுவிக்கப்பட்டாலும் உசேன் மீதான பிற வழக்குகள் கைவிடப் பட வில்லை.

2008இல் தில்லியிலுள்ள இந்திய அனைத் துலக மையத்தில் உசேனின் படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டபோது இந்துத்துவா வெறிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. பல்வேறு கலைக் காட்சிக் கூடங்களில் உசேனின் ஓவியத்தை அகற்றத் தொடங்கினார்கள். இப்படி பல இடர்ப்பாடுகளை சந்தித்த செய்திகள் இந்நூலில் திரைக்கதை போல் கண் முன்னே நகர்கின்றன.

ஜூன் 9, 2011 இலண்டனில் அவர் இறந்த போது அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர இந்துத்துவா அமைப்புகள் எதிர்த்தன.ஆகையால் அவரது உடல் இங்கிலாந்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங்,ஓவியர் ஜட்டின் தாஸ், ஓவியர் சத்தீஸ்குஜ்ரால், சீதாராம் யெச்சூரி, ஓவியர் அஞ்சலி எல்லாமேனன் போன்றோர் உசேனின் ஈடு இணையற்ற கலைப்பணியை அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதையும் ஓவியர் புகழேந்தி பதிவு செய்துள்ளார்.

இந்திய நவீன ஓவியங்களின் முன்னோடியான தூரிகைச் சிற்பி எம்ஃஎப் உசேனின் வாழ்க்கை வரலாற்றை ஓவியர் புகழேந்தி எழுதியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். புதிய செய்திகள், ஓவியக் கலைச் சொற்கள், உசேனின் பல ஓவியங்கள் என இந்நூல் படிப்போரை பெரிதும் ஈர்க்கும். இந்நூலின் வாயிலாக வளரும் படைப் பாளிகளுக்கு ஒரு புதிய ஊட்டச்சத்தை வழங்கியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

 எம்.எஃப்.உசேன் - இந்திய சமகால ஒவியக் கலையின் முன்னோடி

ஒவியர் புகழேந்தி

                                                பக்கம் : 240 விலை: ரூ 175                                            

வெளியீடு

தூரிகை வெளியீடு

எஸ்.பி. 63, 3ஆவது தெரு,

முதல் செக்டர்,

கே.கே. நகர்,

சென்னை - 600 078

பேச: 94441 77112

Pin It