பழைய பக்கங்களிலிருந்து

 (சேலம் விக்டோரியா திடலில் 1961 ஆம் ஆண்டு மே மாதம், திரு. ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி இது. 16.5.1961 நாளிட்ட தனி அரசு இதழில் இது வெளிவந்துள்ளது. இச்சொற்பொழிவு “சம்பத் பேசுகிறேன்” என்ற தலைப்பில் சம்பத்தின் சொற்பொழிவுகளை ஆர்.பி.சங்கரன் தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது. தி.மு.க.விலிருந்து விலகிய சம்பத் 1961 ஏப்ரல் 19 அன்று தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். பின்னர் அவர் காங்கிரசில் இணைந்து விட்டார்.)

 தேசியம் என்று சொல்லுவது காங்கிரசிற்கே பட்டயமாகிவிட்டதா? தேசியம் என்று சொல்லுவதால் ஏன் கோபம் பொத்துக் கொண்டு கிளம்ப வேண்டும்?அண்மையில் திருவாளர் அண்ணா துரை பேசியதாக நம்நாடு இதழில் வந்திருக்கிறது. திராவிடத் தேசியம் என அவர் பேசியுள்ளார். அதற்காக, தேசியம் எனும் சொல்லை அவர் பயன்படுத்தியதற்காக நான் பரிதாபப்படுகின்றேன்.

 தேசியம் என்பது ஒரு அரசியல் தத்துவமாகும். அது முதலில் ஐரோப்பாவில் உருவாகியது. உலக அரசியலில் இன்றைக்குத் தேசியம் ஆதிக்கம் செலுத்துகின்றது. முன்னர் ராஜாக்கள் என்ற நிலைமை இருந்தது.தற்பொழுது தேசிய உணர்வு நிலைக்களனாய் நிற்கிறது. நம்முடைய கோரிக்கை தமிழ்த் தேசிய அடிப்படையில் எழுந்ததாகும்.

 இந்திய தேசியமென காங்கிரஸ் பேசுகின்றது. திராவிட தேசியமென தி.மு.க. கூறுகின்றது. தமிழ்த் தேசியமென நாம் உரைக்கின்றோம்.

 இந்தத் தேசியங்களில் எது மெய்?இந்தியத் தேசியமென்பது முழுப்பொய் என்பதை எல்லோரும் அறிவர்.ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இந்தியத் துணைக் கண்டத்தில் எழுப்பிய வெள்ளை எதிர்ப்புணர்ச்சி இந்தியத் தேசியமாகாது. அந்தப் போலியான இந்தியத் தேசியத்தை எதிர்க்க அதைவிடப் போலியான, இல்லாத திராவிடத் தேசியத்தை எப்படி ஏற்க முடியும்?

 இந்தியத் துணைக் கண்டம் மொழிவழி அமைய மொழி வழி ராஜ்யக்குழு அமைக்கப் பட்டது. சென்னை ராஜதானி என்ற பெயரில் இருந்த மலையாளப் பகுதியும், கர்நாடகப் பகுதியும், ஆந்திரப் பகுதியும் பிரிந்தன.

 மொழிவழி மாநில அறிக்கை வெளியானதுமே வெள்ளையனை வெளியேற்ற எழுந்த உணர்ச்சி போலவே மொழி உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பியது. மொழிப் பிரச்சினையில் மொழி வாரி ராஜ்யப் பிரச்சினையில்,எல்லைப் பிரச்சினையில் உத்வேகத்துடன் கிளம்பிய உணர்ச்சிக்கு என்ன பெயர்? அந்த உணர்ச்சியே மராட்டிய தேசியம், ஆந்திர தேசியம், தமிழ்த் தேசியம்,குஜராத்தி தேசியம்.இந்தத் தேசிய உணர்வுக்கு இந்தியத் துணைக் கண்டத்து தலைவர்கள் மாகாணப்பித்து, மொழி வெறி, பகுதி உணர்வு என்று கெட்ட பெயரிட்டனர். என்றாலும் அந்த உணர்ச்சி மங்கவில்லை. ஏனென்றால் அது மெய்யான தேசியமாகும்.

 தமிழ்நாட்டில் நியாயமாக வளர்ந்தது தமிழ்த் தேசியமாகும். இல்லாத இந்தியத் தேசியத்தை எதிர்க்க அதைவிட இல்லாத திராவிடத் தேசியத்தை நம்பினோம் நாம்.. பிரச்சாரம் செய்தது திராவிடத் தேசியம் தான். ஆனால் விளைந்த பலனோ தமிழ்த் தேசியமாகும். அந்த உண்மையான தமிழ்த் தேசியத்தை அணைத்துக் கொள்ளத் தயக்கமேன்? வெட்கமேன்?

திராவிடத் தேசியம் பேசிய நாம் ஆந்திர மன்னர்களின் மாண்புகளை விளக்கியதுண்டா? கர்நாடகத்தின் சிறப்புகளைக் கூறியது உண்டா? கேரளத்தின் பெருமைகளைக் கேளீர் எனச் சொன்னது உண்டா? சுற்றிச் சுற்றி தமிழ் மன்னர் களின் சிறப்புகளை, வீரங்களை, மாண்புகளையே கூறி வந்தோம். சேரன் செங்குட்டுவனில் இருந்து ராஜேந்திர சோழன் வரை கூறியிருந்தோம். கேரளத்து மார்த்தாண்ட வர்மன் தெரியாது. ஆந்திரத்து கிருஷ்ண தேவராயர் புரியாது. கர்நாடக ஹைதர் அலி விளங்காது. இவைகளைக் கூறாத காரணம் நம்முடைய உள்ளத்திலே படிந்திருந்தது தமிழ்த் தேசியமாகும். உதட்டிலேதான் திராவிடத் தேசியம் இருந்தது. இந்த உண்மையைத் தைரியமாய் உணர வேண்டும்.

 இந்தி எதிர்ப்பு உணர்ச்சியில் முதலில் அருமை யாகக் கனிந்தது “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற லட்சியமாகும். 1938-இல் திருவாரூரில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தான் பெரியார் தலைமையில் திராவிடநாடு லட்சியம் தோன்றியது.ஆந்திர நாட்டு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களின் கோரிக்கையாலேயே தமிழ்நாடு லட்சியம் திராவிட விடுதலைக் கோரிக்கையாக மாறியது. இந்த அரசியல் விபத்து கண நேரத்தில் ஏற்பட்டதாகும். பெரியார் ராமசாமியின் அரசியல் தீர்வாகும்.

 எந்த ஆந்திரத் தலைவர்கள் திராவிட நாடு கோரிக்கைக்கு காரணமோ, அவர்கள் பெரியா ரையும் விட்டனர்; திராவிடத்தையும் விட்டனர்; ஜஸ்டிஸ் கட்சியையும் மறந்தனர். அந்தத் திடீர் லட்சியம் பெரியார் ராமசாமி தலையில் வீழ்ந்து, அவருடைய பொறுப்பாக மாறியது.

 முதலில் ஆரியர் சூழ்ச்சியில் இருந்து விடுபட திராவிடம் என்று கேட்கப்பட்டது. ஆரியமாயை புத்தகம் கூட திருவாளர் அண்ணாதுரையால் எழுதப்பட்டது. அது இன்றைக்குப் படிக்கப் பட்டால் வாக்குகள் கிடைக்காது என்று அதன் ஆசிரியரே கூறக்கூடும். மீட்டர் கேஜிலிருந்து ப்ராட்கேஜிற்கு மாறுவது போல கொள்கைக்கு வேறு ஒரு அர்த்தம் - ஷிப்ட் கொடுக்கப்பட்டது. மார்வாரி, பனியா சுரண்டலை, பொருளாதார ஆதிக்கத்தை வீழ்த்தவே திராவிடம் எனப் பேசப்பட்டு,வகுப்புப் பிரச்சினை என்பதிலிருந்து பொருளாதார அர்த்தம் கற்பிக்கப்பட்டது.பின்னர் இந்திய அரசியல் சட்டம் உருவாகியது. அரசியல் சட்டம் உருவான நேரத்தில் - டெல்லியில் அதிகாரக் குவியல் சேர்க்கப் பட்ட போது வேடிக்கை பார்த்தோம். காரிய மெல்லாம் முடிந்து அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் டெல்லியில் ஏகாதிபத்தியம் எனக் குதிக்க ஆரம்பித்தோம்.

 லட்சியத்தை மாற்றாமல் அர்த்தம் மாற்றி வந்திருக்கிறோம். நம்முடைய மக்களிடம் நாம் ஏன் பயப்பட வேண்டும்? உண்மையை விளக்க ஏன் அஞ்ச வேண்டும்?

 இந்தி ஏகாதிபத்தியம் என்கின்றோம். உடனே மொத்தமாக வடநாட்டு ஏகாதிபத்தியம் என்று கூறுகின்றோம், வடநாடு என்றால் என்ன என்ற கேள்விக்கு பார்ப்பனர் அல்லாதவர் என்று சொல்லிப் பழக்கப்பட்ட நாம் திராவிட நாடு இல்லாதது வடநாடு என்று கூறுகின்றோம்.

 நம்மைப் போல ஒரியர்கள் துயரப்படுகின்றனர்; மராட்டியர்கள் வேதனைப்படுகின்றனர். அவர் களை எதிரிகள் என்கின்றோம்.அதைப் போலவே எதையும் ஏற்றுக் கொள்ளாத, ஒத்துக் கொள்ளாத வர்களை நண்பர்கள் எனக் கூறுகின்றோம்.திராவிடத்தேசியம் நம்முடைய இதயத்தில் இல்லவே இல்லை.தமிழ்நாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்து பேசி விட்டால் - தமிழர்களையே சந்தித்துவிட்டால் போதுமா?

இலங்கைப் பிரச்சினைப் பற்றி ஆந்திரர், மலையாளிகள், கன்னடத்தார் கவலை கொள்ள வில்லை எனச் சொன்னார்கள். நாம் தான் எங்கே ஆந்திர ஒரிசா எல்லை பற்றி, கர்நாடக - மராட்டிய எல்லை பற்றி, கவனம் செலுத்தினோம்? திராவிட தேசியம் உண்மை என்றால் அந்த உணர்வு நமக்கு மிருக்கும்.இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து அவர்களுக்கும் அக்கறையிருக்குஇல்லாத ஒன்றை,வெறும் நிழலை ஏன் அணைத்துக் கொள்ள வேண்டும்?

 சம்பத் முக்கியமில்லை. கொள்கை தான் முக்கியம். தூத்துக்குடி பொதுக்குழு தமிழ்நாடு லட்சியம் குறித்து முடிவெடுக்கும் என நம்பினேன்.அந்தக் கொள்கையை,ஏற்றுக் கொண்டதை சுவீகரித்துக் கொள்ள ஏன் தயங்க வேண்டும்? அதற்காக நான் வருந்துகிறேன். ஒரு கட்சிக்கு அடிப் படைப் பலம் வேண்டும். அடிப்படை பலம் என்பது லட்சியப் பிடிப்பே ஆகும். ஒரு கட்சியின் வாழ்வு தேர்தல் முடிவிலே இல்லை. எனவே தேர்தல் வேளையிலா மாற்றம் என்பது நல்ல முறையல்ல.

Pin It