உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களைப் “பயங்கரவாதிகளின் பாதுகாவலர்” என்று இந்திய ஆளும் வர்க்கம் குற்றம்சாட்ட முடியாது. ஆனால் அவர் வீசிய மனித உரிமை வெடிகுண்டு, ஆட்சியாளர்களை மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தையும் கலக்கிக் கொண்டுள்ளது.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் இணைக்கப்பட்டுத் தூக்குக் கொட்டடியில் துன்புற்றுக் கொண்டிருக்கும் அப்பாவிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் சாவுத் தண்டனையை நீக்குவதுமின்றி, 22 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் அவர்கள் விடுதலை செய்யப்படவும் உரியவர்கள் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாகக்,குழப்பங்களுக் கிடமில்லாமல் கூறிவிட்டார் நீதிபதி கே.டி.தாமஸ் (இந்து, 25.02.2013).

அப்பாவியான அப்சல் குருவைத் தூக்கில் போட்டுவிட்டு,அடுத்து வீரப்பன் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று அப்பாவிகளான ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசை மாதய்யன், சைமன் ஆகியோரைத் தூக்கிலிட நாள் குறித்தனர் இந்திய ஆட்சியாளர்கள். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு,அது ஆறு வார காலத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.

இந்த நால்வர் கதையை முடித்த பின்னர்,மூன்று தமிழர்களை நெருங்கிடத் திட்டம் போட்டிருக்கிறது தில்லி என்பது பொதுவாகக் கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் கே.டி.தாமசின் மனித உரிமை வெடிகுண்டு தில்லி முகாமில் விழுந்துள்ளது.

 சட்ட நூலில் இருந்து சாவுத் தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதே நமது அடிப்படை நிலைபாடு. கொலைக் குற்றம் புரிந்தவர்களுக்குப் பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினால் போதும் என்பது நமது கருத்து.

உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் சாவுத் தண்டனையை நீக்கிவிட்டன.இன்னும் சில நாடுகளில் சாவுத் தண்டனை இருந்தாலும் அதை அவை செயல்படுத்துவதில்லை. நிலையான சட்டங்களால் ஆளப்படும் குடியரசு நாடுகளில் சாவுத் தண்டனை இருப்பது நாகரிகக் கேடும் மனித உரிமைப் பறிப்பும் ஆகும். அரசே சட்டப்படியான கொலைகாரனாகச் செயல்படுவது சனநாயக நடைமுறைக்கும் மனித உரிமைக் கருத்தியலுக்கும் எதிரான செயல்.

இக்கருத்தியல் உலகெங்கும் வளர்ந்து வரும் காலத்தில்,இப்போதும் சில நாடுகள் பிடிவாதமாக சாவுத் தண்டனையக் கெட்டியாக வைத்துக் கொண்டுள்ளன.

இந்திய அரசு,முதலாளிய சனநாயகமும் மன்னராட்சி மனநிலையும் கலந்துள்ள கலவையாகும். மன்னராட்சி மனநிலையில் நிலக்கிழமை சிந்தனையை விட இந்துத்துவா சிந்தனையே மேலோங்கியுள்ளது.

சாவுத் தண்டனையை நிறைவேற்றுவதில்,தீவிரவாத இந்துத்துவாக் கட்சியான பாரதிய சனதாக் கட்சிக்கும் மிதவாத இந்துத்துவாக் கட்சியான காங்கிரசுக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.அப்சல் குருவுக்கான தூக்குக் கயிற்றை இந்துத்துவா போட்டிதான் முறுக்கேற்றியது.

இங்கு நாம் சாவுத் தண்டனையே கூடாது என்ற தருக்கத்தால் மட்டுமின்றி, அப்பாவியான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது மாபெரும் குற்றம் என்ற நோக்கிலும் அதை எதிர்க்கிறோம். அப்சல் குரு அப்பாவி என்பதற்கான சான்றுகளைக் கடந்த த.தே. தமிழர் கண்ணோட்டத்தில் எழுதியிருந்தோம்.

வீரப்பன் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, அதிரடிப்படையினர் 22 பேரைக் கண்ணிவெடி வைத்துக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தால் சாவுத் தண்டனை வழங்கப்பட்ட ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசை மாதய்யன், சைமன் ஆகிய நால்வரும் அப்பாவிகள் என்று பொதுவானவர்களே கூறுகிறார்கள்.

127 பேரைக் கைது செய்து அத்தனை பேர் மீதும் கண்ணிவெடிக் கொலை வழக்கு நடத்தினர். கர்நாடகச் சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வாழ்நாள் தண்டனையை நால்வருக்கும் சாவுத் தண்டனையாக மாற்றியது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம், அண்மைக் காலங்களில் சட்டத்தைப் பின்பற்றுவதைவிட, சமூக உணர்வு என்ற பெயரில் ஆளும் குழுவினரின் ஆசைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறது.வாழ்நாள் தண்டனை வழங்கியதே தவறு என்று கூறி நீதிகேட்டுப் போனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது.

நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில்,ஒளிவு மறைவின்றி தனது மனஉணர்வை வெளிப்படுத்தியது உச்சநீதிமன்றம்.அவ்வழக்கில் அப்சல் குரு மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்படவில்லை.ஐயத்தின் பலனைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்க்கு அளித்து அப்சலை விடுதலை செய்திருக்க வேண்டும் உச்சநீதிமன்றம். அப்படி விடுதலை செய்தாலோ, அல்லது அவர்க்கு வாழ்நாள் தண்டனை வழங்கினாலோ,“சமூகத்தின் பொது மனச்சான்று அமைதியுறாது” என்று காரணம் கூறி அவருக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இதே மன உணர்வில் தான் 11.05.1999அன்று உச்சநீதிமன்றம் இராசீவ்காந்தி கொலை வழக்கில் நான்கு தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இரவிச்சந்திரன், செயக்குமார், இராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு வாழ்நாள் தண்டனை வழங்கியுள்ளது.

இவ்வழக்கில் தடாச் சட்டம் போட்டது பொருந்தாது என்று கூறிய உச்சநீதிமன்றம், தடாச் சட்டத்தின் கீழ்,துன்புறுத்திக் காவல் அதிகாரிகள் பெற்ற “ஒப்புதல் வாக்குமூலத்தை” அடித்தளமாகக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கியது.நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையில் நீதிபதிகள் சையீத் ஷா முகம்மது காத்ரி,நீதிபதி டி.பி.வாத்வா ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்ப்பை வழங்கியது.நீதிபதி கே.டி.தாமஸ்,நளினிக்குச் சாவுத் தண்டனை வழங்கக்கூடாது என்று சிறுபான்மைத் தீர்ப்பு எழுதினார்.யாரைக் கொலை செய்வதற்கான சதிச் செயல் என்று தெரியாமலே அவர், சதிகாரர்களுக்கு உதவி செய்தார், அத்துடன் அவர்க்கும் அவர் கணவர் முருகனுக்கும் சாவுத் தண்டனை நிறைவேறினால் அவர்களின் (சிறையில் பிறந்த)பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று காரணங்களைக் காட்டினார் நீதிபதி கே.டி.தாமஸ்.

நால்வர் சாவுத் தண்டனைக்கெதிராகத் தமிழ்நாட்டில் போராட்டங்கள், எழுச்சிப் பேரணிகள் நடந்தன. ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நான்கு உயிர்களைக் காக்கக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு போராடினோம்.

இப்பின்னணியில் இராசீவ்காந்தியின் மனைவியும் காங்கிரசுக் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி நளினிக்குத் தண்டனைக் குறைப்பு அளிக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டதை ஒட்டி, தி.மு.க. ஆட்சியில் ஆளுநர் வழியாக, நளினியின் சாவுத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டது.  

2011-இல் மூன்று தமிழர்களின் கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து தூக்கிலிட நாள் குறிப்பிட்ட நிலையில் குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை அவர்களின் உயிர்காக்கப் போராட்டம் வெடித்தது.

காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளந்தளிர் செங்கொடி மூன்று தமிழர் உயிர் காக்கத் தீக்குளித்துத் தன்னுயிர் ஈந்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனைக்குத் தடை கோரி வழக்குப் போடப்பட்டது.ம.தி.மு.க.பொதுச் செயலாளர் திரு.வைகோ முயற்சியில் மூத்த வழக்கறிஞர்கள் ராம் சேத்மலானி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினர். தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கிடைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்தால் தமிழின உணர்வாளர்கள் பெரும் கூட்டமாகக் கூடி நீதிபதிகளுக்கு நெருக்குதல் கொடுத்து, நீதியை வளைத்து விடுவார்கள் என்று ஒரு காங்கிரசுக்காரர் போட்ட போலி வழக்கைப் பொருட்படுத்தி, சென்னையிலிருந்து தில்லிக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். ஆனால் காங்கிரசுக்காரரின் மனுவைக் கணக்கில் கொள்ளவில்லை, நாங்களே தன் விருப்பமாக வழக்கைத் தில்லிக்கு எடுத்துக் கொண்டோம் என்று காரணம் கூறிக் கொண்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

மூன்று தமிழர் உயிர் காக்கத் தமிழர் நெஞ்சில் பற்றி எரியும் போராட்ட நெருப்பு இன்னும் அணையவில்லை.மூன்று தமிழர்களை நெருங்க இந்திய அரசு முன் காய்களை நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் நீதிபதி கே.டி.தாமஸ் கருத்துகள் தமிழர் மனதில் மட்டுமின்றி, மனித உரிமையை மதிப்போர்,சாவுத் தண்டனையை எதிர்ப்போர் அனைவர் மனதிலும் நம்பிக்கை தளிர்க்கச் செய்துள்ளன.

இம்மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கியதற்கு இப்போது நீதிபதி தாமஸ் வருந்துகிறார்.

“மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப்பட்ட போது, அவர்களின் முற்பண்புகள், இயல்புகள், ஒழுக்கம் போன்றவற்றைக் கவனிக்கத் தவறிவிட்டோம். 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.சின்கா வழங்கிய தீர்ப்பில் சாவுத் தண்டனை வழங்குவதற்கு முன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் மேற்கண்ட பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.நாங்கள் அப்போது வழங்கிய சாவுத் தண்டனையில் இந்தக் கூறு கவனிக்கப்படாமல் குறைபாடாக உள்ளது.

“அவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார்கள். அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை கொடுத்திருந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 433-இன்படி 14 ஆண்டுகளில் அத்தண்டனை ஆய்வுக்குள்ளாகி, தண்டனைக் குறைப்பு பெற்றிருக்க முடியும். அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டு வாழ்நாள் தண்டனையை விட அதிக காலம் சிறையில் இருந்துவிட்ட அவர்களுக்கு சாவுத் தண்டனை நிறைவேற்றினால் அது ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை வழங்கியதாகிவிடும்.இப்படி இரு தண்டனை வழங்குவது அரசமைப்புச் சட்டவிதி 20மற்றும் 21-க்கு எதிரானது”.

நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களின் இக்கூற்றை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என்று கருதுகிறோம். சாவுத் தண்டனையை நீக்கினால் மட்டும் போதாது. 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட இம்மூவரையும், அதே வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், செயக்குமார், இராபர்ட் பயாஸ் ஆகிய நான்கு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இதுவே நீதி!

சாவுத் தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையிலிருக்கும் பஞ்சாபின் புல்லர், அசாமின் மகேந்திர தாஸ், தமிழகத்தின் மூன்று தமிழர் மற்றும் நான்கு தமிழர் வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் இந்திய அரசின் கொலைவெறிப் போக்கைத் தடுப்பதுடன் தனது குறைபாடுகளையும் சரி செய்து கொள்ளும் என்று நம்புவோம்.

 சாவுத் தண்டனை செத்துப்போகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நமது போராட்டம் அதை விரைவு படுத்தட்டும்.

 

Pin It