தோழர் இரா.சு.முனியண்டி இல்லத் திருமணத்தில் த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் உரை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி – திருவாட்டி ரசியா ஆகியோரின் மூத்த மகன் செல்வன் விஜய்க்கும் புதுக்கோட்டை மாவட்டம் கல்விராயன் விடுது திரு. அ.இராமசாமி – திருவாட்டி பத்மாவதி ஆகியோரின் மகள் செல்வி வெண்ணிலாவுக்கும் திருவள்ளுவராண்டு ஆணி மாதம் 5ஆம் நாள்(19.06.2013) அறிவன்(புதன்) கிழமை தஞ்சையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பேராசிரியர் த.செயராமன், ஜூனியர் விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் திரு. குள.சண்முகசுந்தரம், மீடியா வாய்ஸ் நிர்வாக ஆசிரியர் திரு. எஸ்.சரவணகுமார், தலைமை நிருபர் திரு. பி.என்.எஸ்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வாழ்த்துரை வழங்கிய தோழர் பெ.மணியரசன் பேசியது வருமாறு:

“மணமகன் விஜய் மீடியா வாய்ஸ் ஏட்டின் செய்தியாளராகப் பணியாற்றுகிறார். இந்த நாட்டில் கொஞ்சமாவது குடிமை உரிமைகள் இருக்கின்றன, சனநாயக உரிமைகள் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் நீதித்துறையும் ஊடகத்துறையும் தான்! நீதித்துறையில், ஊடகத்துறையில் கறைகள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. குறைகள் இருந்தாலும் அவற்றால் தான் குடிமை உரிமைகள், சனநாயக உரிமைகள் ஓரளவு காப்பாற்றப்பட்டு வருகின்றன.

அதனால் தான் ஊடகத்துறையை சனநாயகத்தின் நான்காம் தூண் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஊடகத்துறையில் மணமகன் விஜய் பணிபுரிகிறார். அவர் தந்தை எங்கள் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர் என்றாலும் வஜய் பொதுவானவர். ஏன், த.தே.பொ.க. கூட அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவானது தான். அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் இனத்தை, தமிழ்நாட்டை விடுதலை செய்து, தமிழ்த் தேசக் குடியரசு அமைக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தை முன்வைத்து பதவி அரசியலில் ஈடுபடாமல், தேர்தலில் நிற்காமல் – வாக்களிக்காமல் செயல்படும் எங்கள் கட்சி தமிழர்கள் அனைவர்க்கும் பொதுவானது தான். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்பதைத் தமிழ்த் தேசப் பொதுமைக் கட்சி எனறு அழைத்தாலும் அதுவும் பொருத்தமானதே!

தமிழின மறுமலர்ச்சிக்கு முதலில் குரல் கொடுத்தவர்கள் தமிழறிஞர்கள் தாம்! பார்ப்பனப் புரோகிதரை நீக்கி, திருமணம், குடமுழுக்கு போன்ற விழாக்களை உருவாக்கியவர்கள் தமிழறிஞர்களே! 19ஆம் நூற்றாண்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த சித்தூர் மாவட்டத்தில் மார்க்க சகாய ஆசாரி என்ற தமிழறிஞர் பார்ப்பன புரோகிதரை நீக்கித் திருமணம் செய்து வைத்தார். அத்திருமணம் செல்லாது என்றும் அப்பெண்ணை வைப்பாட்டியாகக் கருதலாமே தவிர, மனைவியாகக் கருதக் கூடாது என்று பார்ப்பனர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்நீதிமன்றத்தில் வாதாடி, கருத்துகளை அடுக்கி வெற்றி பெற்றார் மார்க்க சகாய ஆசாரி. பிற்காலத்தில் தந்தை பெரியார் பார்ப்பன புரோகிதர் நீக்கப்பட்ட இத்திருமண முறையை செழுமைப்படுத்தி, சுயமரியாதைத் திருமணமாக – பரவலாகத் தமிழகமெங்கும் நடத்தி - பரப்பினர்.

தமிழறிஞர் மறைமலை அடிகளார் பார்ப்பனப்புரோகிதர் விலக்கப்பட்ட குடும்பச்சடங்குகளையும் கோயில் குடமுழுக்குப் போன்ற சடங்குகளையும் வலியுறுத்தினார். அவர் 1905ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரை தமிழர் மறுமலர்ச்சிக்கான வித்துகளைக் கொண்டிருந்தது என்கின்றனர். 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் தான் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.

தமிழர் மறுமலர்ச்சிக்கான தொடக்க விதைகள் வள்ளலார் இராமலிங்க அடிகளாரிடம் இருந்தன. ஐரோப்பிய நாடுகளில் 16ஆம் நூற்றாண்டு வாக்கில் மறுமலர்ச்சியுகம் எழுந்தது. தமிழ்நாட்டில் 19ஆம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளாரிடமிருந்து மறுமலர்ச்சியுகம் தொடங்கியது.

சாதி மறுப்பு, பார்ப்பனியம், வர்ணாசிரம தர்மம் ஆகியவற்றிற்கான மறுப்பு சமூக சமத்துவம் – ஆண் பெண் சமத்துவம் என சோசலிச நோக்கம் கொண்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவியர் வள்ளலார். அந்த சங்கத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களையும் இசுலாமியர்களையும் சேர்த்தவர் வள்ளலார். 1867-ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கினார் வள்ளலார். அப்போது அச்சபையின் சுவரில் பின்வரும் வாசகங்களை எழுதிவைத்தார்!

“ஆண் மக்கள், பெண் மக்கள் முதலியவர்களிடத்திலும் ஜாதி, சமயம், மதம், ஆசிரிமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்தில் கொள்ளுவது ஜீவ ஒழுக்கமாம்”

வர்ணாசிரமம், சூத்திரத் தன்மை ஆண் பெண் பேதம் உள்ளிட்ட அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்க்கிறார் வள்ளலார். “நால் வருணம், மேல் வருணம், தோல் வருணம்” என்று பாடி வர்ணாசிரம தர்மத்தைச் சாடினார்.

“வேத ஆகமங கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
சூதாக சொன்ன அலால் அவ
உண்மை நிலை தோன்ற உரைத்தல் இல்லை”

என்று பாடினார். வள்ளலாரிலிருந்து கிளைத்ததுதான் மறுமலர்ச்சிக் காலத் தமிழர்களின் சிந்தனை எழுச்சி; பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு; சமத்துவக் கருத்தியல்.

பல தெய்வ வணக்கம் கூடாதென்ற வள்ளலார் உருவ வணக்கம் கூடாதென்றார். ஒளியை வணங்கச் செய்தார். ஆன்மிகத்தில் இது மிகப்பெரும் புரட்சி.

தமிழர்களைப் பொறுத்தவரை உள்ள பலவீனம், அவர்கள் தங்களின் வேர்களை அறியாததுதான்; தங்களின் வரலாற்றுப் பெருமிதத்தை அறியாததுதான்! நாங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் தமிழர்களின் வேரிலிருந்து புறப்பட்டது. தமிழர்களின் அறத்திலிருந்து புறப்பட்டது. தமிழர்களின் விடுதலையை நோக்கிச் செல்வது.

தமிழ்த் தேசிய அறத்தை இல்லறத்தில் கடைபிடித்து எடுத்துக்காட்டான வாழ்க்கையை மணமக்கள் வாழ வாழ்த்துகிறேன்”

இவ்வாறு பேசினார்.

Pin It