29அகவையான எட்வர்ட் ஸ்னோடன் என்ற இந்த இளைஞன் நிச்சயமாக தண்டனைக்குரியக் குற்றவாளி தான் என வட அமெரிக்காவின் உளவுத்துறை இரகசியக் குழு (US Secret Committee on Inteligence) அமைப்பின் தலைவர் அறிவித்தார். அமெரிக்க அரசு அவருக்கு கைது ஆணைப் பிறப்பித்தது. பிரிட்டன் அரசு, தனது நாட்டு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஸ்னோடனுக்கு பயண அனுமதி கொடுக்கக் கூடாதென கடிதம் எழுதியது. ஸ்னோடன் ‘தேசத்துரோகம்’ செய்து விட்டார் என அமெரிக்க அரசு அதிகாரிகள் கூச்சலிட்டனர்.

அந்த இளைஞர் அப்படி என்ன செய்து விட்டார்?

‘தூதரகம்’ என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றிலும் அலுவலகங்கள் அமைத்து, அந்தந்த நாடுகளை உளவுபார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்திய அரசை விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. தற்போது, 29 அகவையான எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க இளைஞர், வட அமெரிக்க அரசு உலக நாடுகளை மட்டுமல்ல தனது சொந்த நாட்டு மக்களின் அந்தரங்கங்களிலும் தலையிட்டு உளவு பார்த்துள்ளது என ஆதாரங்களுடன், இரகசிய ஆவணங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தினார்.

இராணுவ வீரராக நாட்டுக்குச் சேவை புரிய வேண்டும் என்று எண்ணிய எட்வர்ட் ஸ்னோடன், அதற் காகப் பயிற்சிகள் மேற் கொண்டு 2004ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தவர் ஆவார். ஈராக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுத லைக்காகத் தான் போர் புரிகி றோம் என்ற அமெரிக்காவின் பரப்புரையை முழுமையாக நம்பி, ஈராக் போரில் ஆர்வத் துடன் ஈடுபட்ட ஸ்னோடன், அந்தப் பரப்புரை முற்றிலும் தவறு என்பதை அங்கு சென்ற பின்னர் தான் புரிந்து கொள்ள முடிந்தது என்கிறார்.

அதன் பின்னர், விபத்து ஒன்றின் காரணமாக உளவுப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார் ஸ்னோடன். வட அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் தேசியப் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவில், உளவுப் பார்ப்பதற்கான அதிநவீனக் கருவிகளை உரு வாக்கும் பிரிவில் பணி புரிந்தார் ஸ்னோடன். தனி மனித சுதந் திரம் குறித்து உலகெங்கும் வாய் கிழியப் பேசும் அமெரிக்க அரசு, தன்னுடைய உளவு நிறுவனங் களின் மூலம் தனது சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் வகையில் கருவிகள் தயாரித்துக் கொண்டிருந்தது.

அப்பணியில் ஈடுபடுத்தப் பட்ட ஸ்னோடன், தாம் செய்வது தவறு என்பதை மனசாட்சியுடன் எண்ணிப் பார்க்கத் தொடங் கினார். தன்னுடைய மக்களின் அந்தரங் கங்கள் உட்பட அனைத்தையும் கண்காணிப்பது குறித்து மனம் வருந்தினார். அப்போது அமெ ரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் காலத்தில் தொடங்கிய இந்த உளவுப்பணி, ஒபாமா வந்தப் பிறகு மாறிவிடும் என நம்பினார். ஆனால், ஒபாமா வந்தபின் இந்த உளவுப்பணி தீவிரப்படுத்தப்பட்டதே தவிர கைவிடப்படவில்லை.

அப்போது, வட அமெரிக்கா வின் உளவு வேலைகளை அம் பலப்படுத்திய விக்கிலீக்சின் பணி, ஸ்னோடனிற்கு உணர்வூட்டி யது. தன்னுடைய மனசாட்சிக்கு எதிராக பணிபுரிய மறுத்த ஸ்னோடன், அமெரிக்க அரசை அம்பலப் படுத்தியாக வேண்டு மென தனது உயிரையும் துச்ச மாக நினைத்துத் தான், அமெரிக்க உளவு இரகசிய ஆவணங்களை வெளிக் கொணர்ந்தார். தி கார்டி யன்மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகங்களுக்கு, இது குறித்த இரகசிய ஆவணங்களைக்கொடுத்து இதை அம்பலப்படுத்தினார்.

இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வப்போது சீன அரசு தன்னு டைய சொந்த நாட்டு மக்களை யும், பிற நாடுகளையும் உளவு பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறும் வட அமெரிக்க வல்லாதிக்க அரசு, தன்னுடைய சொந்த நாட்டு மக்களையே உளவு பார்ப்பது அம்பலமானதும், தலை குனிந்து நின்றது. ஆனாலும், இதற்காக மன்னிப்பேதும் கோராத அமெரிக்கா, அதிலென்ன தப்பு என வெட்கமின்றிக் கேள்விக் கேட் டது.

கடைசியாக ஹாங்காங்; சென்ற ஸ்னோடன், அங்கிருந்து தலைமறைவாகி இரசியத் தலை நகர் மாஸ்கோவிற்குச் சென்றார். அவரைக் கைது செய்து தன்னி டம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அவரை நாடு கடத்த வேண்டும் என்ற அமெரிக்க அரசின் கோரிக்கையை, இரசியா புறக்கணித்த நிலையில், அவர் தலைக்கு விலை வைத்துள்ளது வட அமெரிக்கா.

“நான் செய்த குற்றத்திற்காக எனக்கு வாழ்நாள் முழுவதும் தண்டனை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். இனி நான் எனது குடும்பத்தைக் கூட காண முடியாது. இந்தச் செயலுக்காக என் உயிர்கூட பறிபோகலாம். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மதிக்காமல், தன் சொந்த நாட்டு மக்களை ஓர் அரசு உளவு பார்ப் பதை எனது மனசாட்சி சகித்துக் கொள்ளவில்லை’’ என்கிறார் எட்வர்ட் ஸ்னோடன்.

விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சே மீது பொய் வழக்கு கள் புனைந்து கைது செய்ய முயன்ற அமெரிக்கா, அதே போல் ஸ்னோடனையும் கைது செய்ய முற்படலாம். ஆனால், தனி மனித சுதந்திரத்தைக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் வட அமெரிக்கா, தன்னுடைய அம்பலமான கோர முகத்தை இனி சரி செய்து கொள்ள முடியவே முடியாது.

Pin It