இந்தியாவின் காலனியாகத் தமிழ்நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பதற்காக, இந்தியா எதைச் செய்தாலும் தமிழர்கள் பொறுத்துத் கொள்வார்கள் என்று தில்லிச் சுல்தான்கள் புரிந்து கொள்ளக் கூடாது.

தமிழின அழிப்பு சிங்களப்படை அதிகாரிகளான கமாண்டர் பண்டார திஸ்ஸநாயகே, மேஜர் அரிச்சந்திரா ஆகிய இருவருக்கும் தமிழகத்தின் குன்னூரில் உள்ள வெலிங்டன் பாதுகாப்புப் பணி அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில், படைப்பயிற்சி அளித்து வந்தது இந்திய அரசு. 2013 சூன் 3ஆம் நாள் தொடங்கிய அப்பயிற்சி 10 மாதங்கள் நடக்க வேண்டியது.

தமிழின உணர்வு அமைப்புகள் வெலிங்டன் கல்லூரி வாயிலில் முற்றுகைப் போராட்டம் நடத்தி, அவ்விருவரையும் வெளியேற்றி இலங்கைக்கு அனுப்பக் கோரின. அடுத்தடுத்த நாட்களில் இவ்வெதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்த போதிலும் இந்திய அரசு அசையவில்லை. பயிற்சி கொடுப்பதைத் தொடர்ந்தது. இவ்வாறு சிங்களப் படையாட்களுக்கு தமிழகத்தில் பயிற்சி கொடுக்கும் போது, தமிழ் அமைப்புகள் எதிர்த்துப் போராடினால் உடனடியாகத் தமிழக முதலமைச்சர் தலையிட்டு சிங்களர்களை வெளியேற்றுமாறு இந்திய அரசுக்குக் கோரிக்கை வைப்பார். இம்முறை அவரும் அமைதி காத்தார். புதிதாக நடுவண் இணையமைச்சர் பொறுப்பேற்றுத் தமிழ்நாட்டிற்கு வந்த இராசபட்சேயின் நண்பர் சுதர்சன நாச்சியப்பன், “நாம் பயிற்சி தரவில்லை என்றால் அவர்களுக்கு சீனா பயிற்சி தரும். எனவே, பயிற்சி பெறும் சிங்களப் படையதிகாரிகளைத் திருப்பி அனுப்ப முடியாது” என்றார். கடந்த மாதம் தஞ்சாவூர் வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இனிமேல் தமிழ்நாட்டில், இலங்கை இராணுத்தினருக்குப் பயிற்சி தர மாட்டோம்” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறிய அடுத்த மாதமே வெலிங்டனில் சிங்கள அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்திய போதும், சிங்கள அதிகாரிகளை வெளியேற்ற மறுத்து பிடிவாதம் காட்டியது இந்திய அரசு.

நாம் எழுப்பும் வினாக்கள் இவைதாம்!

சிங்களப்படையை மேலும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை என்ன? அந்நாட்டிற்கு எந்த வெளிநாட்டால் ஆபத்து ஏற்படும்?

இலங்கைக்கு எந்த வெளிநாட்டுடனும் எல்லைத் தகராறு கிடையாது. வேறு தகராறுகளும் கிடையாது.

இலங்கைக்குள் அடிமையாக வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்தாம் இலங்கைச் சிங்களர்களின் ஒரே எதிரிகள்!

ஏற்கெனவே இரண்டு இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது சிங்களப்படை. தாயக விடுதலை கோரும் தமிழீழப் புலிகள் அமைப்பும் அங்கு இல்லை. பின் எதற்காக இலங்கை இராணுவத்தை மேலும் மேலும் வலுப்படுத்த இந்தியா துணை செய்கிறது?

தமிழின அழிப்பு “இலட்சியம்”இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள பொது நோக்கம் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் கட்சி வேறுபாடின்றிப் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் குடிமை உரிமைகள், அரசியல் உரிமைகள் கோரி சனநாயக வழிப் போராட்டங்கள் நடத்தினால் அவர்களை சிங்கள இராணுவம் எதிர் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு சிங்களன் பங்காளி, தமிழன் பகையாளி! சிங்களப் படையாட்களுக்கு இந்திய அரசு பயிற்சி தருவது காங்கிரஸ் அரசின் செயல்பாடாக மட்டும் குறுக்கிப் பார்த்திடக் கூடாது. பா.ச.க., சமாஜ்வாதி, சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்திந்தியக் கட்சிகள் பலவற்றின் நிலைப்பாடும் அதுவே.

ஈழத்தமிழர்களை சீனப்பயிற்சி பெற்ற இராணுவம் அழிக்கக் கூடாது. இந்தியப் பயிற்சி பெற்ற சிங்கள இராணுவம்தான் அழிக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறதா?

ஆம் என்றே இவ்வினாவிற்கு விடையிறுக்க வேண்டியுள்ளது. 2008, 2009-ஆம் ஆண்டுகளில் சிங்களப்படைக்கு இந்திய அரசு போர்க்கருவிகள் தந்தபோதும் இதே வாதம்தான் வைக்கப்பட்டது. இந்தியா ஆயுதம் தரவில்லை என்றால் சீனா ஆயுதம் தரும் என்றார்கள். அதேபோல் இந்திய ஆயுதத்தைக் கொண்டு ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்றது சிங்களப்படை! ஏதாவதொரு நாட்டில் இந்திக்காரர்களையோ, மலையாளிகளையோ அல்லது வேறு இனத்தவரையோ, அந்நாட்டு அரசு நூற்றுக்கணக்கில் கொன்றிருந்தால் அந்நாட்டுப் படைக்கு இந்தியா மேலும் மேலும் பயிற்சி தருமா?

அந்நாட்டு அதிபரைத் திரும்பத் திரும்ப சிறப்பு விருந்தினராக அழைத்துப் பாராட்டுமா? உறுதியாகச் சொல்லலாம். அவ்வாறு ஒருக்காலும் நடந்து கொள்ளாது.

தமிழர்களைப் பகையினமாக இந்தியாவும் கருதுவதால் தான் தமிழின அழிப்பில் பங்கு கொண்டது இந்தியா.

தமிழினத்தை அழிக்கத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் சிங்களப் படைக்குப் பயிற்சி தருகிறது இந்தியா.

முதுகிலே புண்ணிருந்தால் அதைப் பார்க்க கண்ணாடி தேடலாம். கையிலே இருக்கும் புண்ணைப் பார்க்கக் கண்ணாடி தேடலாமா? இந்திய அரசு தமிழினப்பகை அரசு என்று புரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் தேவையா?

ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்த நிகழ்வொன்றே போதாதா?

கோவை - நீலகிரி மாவட்ட அளவில் தமிழின அமைப்புகள் நடத்திய தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை சட்டை செய்யாமல் இருந்தது இந்திய அரசு. அதன்பிறகு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் தமிழகமெங்குமிருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இன உணர்வாளர்களைத் திரட்டி வெலிங்டனில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 25.06.2013 அன்று வெலிங்டன் முற்றுகைப் போராட்டத்திற்குத் திரண்டு கொண்டிருந்தபோது, 24.06.2013 அன்று பிற்பகல் அந்தச் சிங்கள அதிகாரிகள் இருவரையும் வெளியேற்றி கோவை - மும்பை வழியாகக் கொழும்பிற்கு அனுப்பி வைத்தது இந்தியா.

இந்திய அரசு அவ்விருவரையும் வெலிங்டனிலிருந்து இடம்மாற்றி, செகந்திராபாத்தில் பயிற்சி கொடுக்க விரும்பியது. ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள், தங்களின் ‘தன்மதிப்பு’க்கு இழுக்கு நேர்ந்துவிட்டதாகச் சினந்து, அதிகாரிகளைத் திருப்பி அனுப்புமாறு கூறிவிட்டனராம்!

தமிழின அழிப்பு சிங்கள அரசுக்கும் சிங்களப்படைக்கும் சிறப்புச் செய்யும் செயலை இந்தியா திரும்பத் திரும்பச் செய்ய முடிவது எப்படி? அதுவும் தமிழ்நாட்டில் சிங்களப் படையாட்களுக்குப் பயிற்சி கொடுப்பது, சிங்கள அமைச்சர்கள், அதிகாரிகளைத் தமிழகத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு அழைப்பது எப்படி?

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரசு, தே.மு.தி.க., போன்ற தமிழின உணர்வற்ற, பதவி அரசியல் கட்சிகளின்

கீழ்தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள். இக்கட்சிகள் தமிழர்களின் போர்க்குணத்தை மழுங்கடித்து விட்டன. இலவசங்களை எதிர்பார்க்கும் பயனாளிகளாக - இனப்பெருமிதம், வரலாற்றுப் பெருமிதம் அற்ற நுகர்வோராக - தன்மதிப்பற்ற வாக்களிக்கும் கருவிகளாகத் தமிழர்களை மாற்றி விட்டன. எனவே, தமிழ்நாட்டில் இந்திய அரசுக்கு எதிராக மக்கள் திரும்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இருக்கிறது.

காவிரியில் ஒரு சொட்டுத் தண்ணீரும் தர முடியாது என்று இனப்பகைக் கூச்சல் போடும் கன்னடர்களும், மேற்கண்ட கட்சிகள் தமிழர்களை வீதிக்கு வராமல் தடுத்து விடும் என்று நம்புகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயலும் மலையாள இனவெறியர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் மேற்கண்ட கட்சிகளின் தலைவர்களே! உண்மையான தமிழின உணர்வு, தமிழின உரிமைக் கொள்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட இயக்கம் மட்டுமே தமிழ்நாட்டில் சனநாயகத் தன்மை கொண்டிருக்கும்; மக்களை மதிக்கும்; மக்களுக்காகப் போராடும். அடிமைப்பட்டுள்ள தமிழ் இனத்தின் அடிமைத் தன்மையை மறைத்து “இந்தியர் அனைவரும் சமம்” என்று பேசும் இடதுசாரிகள் பம்மாத்துப் பேர்வழிகள். அவர்களால் தொழிற்சங்கப் போராட்டங்கள் மட்டுமே நடத்த முடியும். அரசியல் போராட்டங்கள் நடத்த முடியாது. போலியாகத் தமிழின உரிமை பேசி, வாக்குவங்கி அரசியல் நடத்தும் திராவிட இன, தமிழின அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் நம்பகமான கூட்டாளிகள்.

எனவே, காங்கிரசு, பா.ச.க. போன்ற இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கும் தமிழின உரிமைகளுக்கும் எதிரானவை என்று கருதிவிடக்கூடாது. தமிழின உணர்வுக்கு எதிரான இடதுசாரிகளும், போலி இன உணர்வாளர்களும் இந்திய ஏகாதிபத்தியத்தின் துணை சக்திகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் இனம் அடிமைப்பட்டிருக்கும் மண்ணில் அந்த இனத்தின் விடுதலையைக் கோருவதுதான் சனநாயகத்தின், மனித நேயத்தின் மனித உரிமையின் முதல்நிலைக் கோரிக்கையாகும்.

Pin It