வழிபாட்டுரிமை ஒரு சனநாயக உரிமை; ஆனால் மதவெறி காமவெறியை விடக் கொடுமையானது. மத வெறியின் உள்ளடக்கம் அதிகார வெறிதான்.

“ஜெய் ஸ்ரீராம்“ முழக்கம் போட்டுக் கொண்டிருந்த பாரதிய சனதா பரிவாரங்கள் இப்போது “ஜெய் நரேந்திர மோடி” முழக்கம் போடுகின்றன. அனைத் திந்திய அதிகாரம் தொட்டுவிடும் தொலைவில் இருப்ப தாகப் பார்ப்பனிய ஆற்றல்களும் பார்ப்பனியத்தை அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணிகளும் கனவு காண்கின்றன.

தங்களின் அதிகார வெறியை நிறைவேற்றிக் கொள்ள “இராமா, இராமா” என்று முழக்கமிடுவது பயனளிக்குமா அல்லது “மோடி மோடி” என்று முழக்க மிடுவது பயனளிக்குமா என்று பருவத்திற்கேற்ப பா.ச.க. பார்ப்பனிய ஆற்றல்கள் முடிவு செய்து கொள்ளும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் காவிக் கூட்டம் “அத்வானி, அத்வானி” என்று அர்ச்சனை மந்திரம் ஓதின! பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்டி யலில் இராமர் இருக்கிறார். மற்றபடி பா.ச.க.வினருக்கு அத்வானி, மோடி வரிசையில்தான் இராமரும் இருக்கிறார்.

அண்மையில் புனேயில் உள்ள இந்தியத் திரைப் படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் (திஜிமிமி) பா.ச.க. வின் மாணவர் பிரிவான அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் (கிஙிக்ஷிறி) நடத்திய வெறி யாட்டம் சகித்துக் கொள்ள முடியாதது. 21.08.2013 அறிவன் (புதன்) கிழமை இரவு புனே கல்லூரியில் “கபிர் கலா மஞ்ச்” என்ற கலைக்குழுவினர் தங்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே கபிர் கலா மஞ்ச் அமைப்பினர் அங்கு நிகழ்ச்சி நடத்த மேற்படிக் கல்வி யகம் அனுமதி மறுத்து வந்துள்ளது. அக்கலைக் குழு வினர் மாவோவியர்கள் (மாவோயிஸ்ட்) என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அத்தடை நீங்கி, மாணவர் களின் ஆதரவுடன் க.க.ம.வினர் நிகழ்ச்சி நடத்தியதில் அதன் ஏற்பாட்டாளரும் அங்கு கற்கும் மாணவரு மான அஜயன் அதாத்திற்கு முழு மனநிறைவு.

ஆனால் அஜயன் மனநிறைவு நிலைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு வந்த பா.ச.க. மாணவர் அமைப்பின் செயல்பாட்டாளர் ஒருவர் அஜயனை மடக்கி “நீ ஏன் கபிர் கலா மஞ்சினரை அழைத்தாய்? நீ நக்சல்பாரியா?” என்று ஆவேசமாகக் கேட்டார். அதற்கு அஜயன் “நான் நக்சல்பாரி இல்லை” என்று விடையளித்தார். அதற்கு பா.ச.க மாணவர் “நீ எந்தக் கட்சியை ஆதரிக்கிறாய்“ என்று கேட்டார். “நான் ஒரு கலைஞன், நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை” என்று அஜயன் விடையளித்தார். “அப்படியென்றால் நீ நக்சல்பாரி இல்லை என்று நிரூபிக்க “ஜெய் நரேந்திர மோடி” என்று முழக்கமிடு என்று அந்த பா.ச.க. மாணவர் கட்டாயப் படுத்தினார். அவ்வாறு முழக்க மிட அஜ யன் மறுத்தவுடன் அவரை பா.ச.க. மாணவர் கள் சூழ்ந்து கொண்டு அடித்துத் துவைத்தனர். மேலும் மூன்று திரைப் படக் கல்லூரி மாணவர்களையும் தாக்கினர்.

இதே பா.ச.க. பரிவாரங்களில் ஒரு பிரிவினர்தாம் எம்.எஃப். உசேன் அவர்களின் ஓவியக் காட்சிக் கூடத்தைத் தாக்கி அவரது உயிருக்கு உலை வைக்கத் திட்டம் தீட்டினர். வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்ட பின் உசேன் இந்தியாவை விட்டே வெளி யேறி வெளி நாட்டுக் குடிமகனானார். அந்தக் கத்தார் நாட்டிலேயே அவர் இறந்தும் போனார்.

நரேந்திர மோடியின் நாமாவளி பாடிக் கொண்டிருக்கும் பா.ச.க. -இந்துத்துவா கும்பல், என்ன தகுதி கருதி, மோடி புகழ் பாடுகின்றன? 2002 பிப்ரவரி மாதம் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு இரண்டாயிரம் இஸ்லாமிய அப்பாவி மக்களை இனக் கொலை போல் மதக் கொலை செய்யத் துணை போனாரே அந்தத் தகுதி கருதியா?

இந்துக்கள் உட்பட நடுநிலை நெஞ்சம் கொண்ட அனைத்து மக் களும் குசராத் படுகொலை களுக் குக் கண்டனம் தெரிவித்த போது, “ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்ச்செயல் உண்டென்று“ அக் கொலைகளுக்கு ஞாயம் கற்பித் தாரே அத்தகுதி கருதியா? கோத்ரா தொடர்வண்டித் தீ வைப்பில் அயோத்தி பக்தர்கள் எரிந்து போனதற்கு எதிர்வினையா கவே இரண்டாயிரம் அப்பாவி இஸ்லா மியர்கள் கொல்லப் பட்டார்கள் என்றார் மோடி! அந்தப் படுகொ லைகளுக்குக் காரணமானவர் மோடிதான் என்று கூறி அமெரிக் காவில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கிறது அந்நாட்டரசு! ஒரு வேளை மோடி இந்தியாவின் பிரத மராகி விட்டால் அப்போது அமெ ரிக்கா என்ன செய்யும் என்று தெரியவில்லை!

ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற் குக் கடந்த ஆகஸ்ட் 12ஆம் நாள் அளித்த செவ்வியில் 2002 -இல் குசராத்தில் நடந்த இஸ்லாமிய மதக் கொலை பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று மோடியைக் கேட்டார்கள். அதற்கு மோடி “காரில் போய்க் கொண்டிருக்கி றோம். ஒரு நாய்க் குட்டி மீது நம் கார் மோதி அது இறந்து விடுகிறது. அப்போது நாம் வருத்தப் படுவோம் அல்லவா அது போன்றது தான் 2002 நிகழ்வு“ என்றார்.

இரண்டாயிரம் அப்பாவி இஸ்லாமிய மக்கள் தமது அரசின் பக்கத் துணையோடு படுகொலை செய்யப்பட்டதற்கு இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னர் கூட மோடிக்கு மனச்சான்று உருத்த வில்லை. இவர் பிரதமரானால் இந்தியாவின் இராசபட்சே ஆக மாட்டாரா?

அர்.எஸ்.எஸ், பா.ச.க. பரிவாரங் கள் நரேந்திர மோடியைத் தங்களின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தக் காரணமே, இரண்டாயிரம் பேரின் படுகொலைக்குக் காரண மாய் இருந்தபோதிலும் அதற்காக மனங்கலங்காமல் ஒரு நாய்க்குட்டி கொல்லப்பட்ட நிகழ் வைப் போல் அலட்சியமாய் இருக் கும் அவரது கல்மனதிற்கு ஒரு “கவர்ச்சி” இருக் கிறது என்பதுதான். அக் கவர்ச்சி பா.ச.க.விற்கு வெற்றி யைத் தேடித் தரும் என்ற நம்பிக்கை தான்!

பாபர் மசூதியைத் தகர்த்துக் கதாநாயகன் ஆனவர்தாம் அத் வானி! ஏதோ ஓர் அழிப்பு வேலைதான் இந்துத்துவா சக்தி களின் கவர்ச்சிக்குக் காரணமா கிறது. அப்பாவி இந்து மக்களிடம் இஸ்லாமியர்களை மிகப்பெரிய பகை சக்தியாகக் காட்டி அப்பகை வர்களை அடக்கவும் அழிக்கவும் அவதாரமெடுத்த தலைவராக ஒரு வரை முன்னிறுத்துவது பா.ச.க.வின் வாடிக்கை. அத்வானி பாபர் மசூதி யைத் தகர்த்த பிறகுதான் இஸ்லா மியத் தீவிரவாதிகள் உருவானார் கள் என்பது கவனிக்கத்தக்கது.

குசராத் மாநிலத்தை அவர் முன்னேற்றி விட்டார். அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதைப் போல் இந்தியா வையும் அவர் முன்னேற்றுவார் என்று பா.ச.க. படம் காட்டுகிறது. நரேந்திரமோடி முதல்வர் ஆவதற்கு முன்பே குசராத் தொழில் வளர்ச்சி யில் முன்னேறிய மாநிலம் தான்! இந்தியாவின் முதல்நிலைப் பெரு முதலாளிகள் குசராத்தி சேட்டுகள்.

உலகமயத்திற்கேற்ற முதல மைச்சர் மோடி! பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் வேட்டைக் காடாகக் குசராத்தைத் திறந்து விட்டதில் மோடிக்கு நிகர் மோடியே! தொழிலாளர் உரிமை களைப் பெருமுதலாளிகளும் பன் னாட்டு முதலாளிகளும் பறிப்பதற் குத் தமது அரசை அடியாள் வேலை செய்ய வைத்தவர் மோடி.

குசராத் மாநில அரசு மிகப் பெரிய கடனாளி அரசாக மாறிய தும் மோடியின் ஆட்சியில்தான். 1,40,000 கோடி ரூபாய்க்கு மேல் குசராத் அரசுக்குக் கடன் உள்ளது. 2013 மார்ச்சு மாதம் வெளியான இந்தியத் தலைமைக் கணக்காளர் (சிகிநி) அறிக்கை, பொறுப்பற்ற முறையில் குசராத் அரசின் நிதி மேலாண்மை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கடன் தொகை உயர்வு விகிதம் கடந்த ஆண்டை விட 41 விழுக்காடு உயர்ந்துவிட்டது என்று கூறுகிறது.

இராமரைத் தங்கள் கட்சியின் ஆன்மிகச் சின்னமாகவும் அதன் வழி வணிக முத்திரையாகவும் பயன்படுத்துகிறது பா.ச.க. ஆனால், இராமருக்குக் கிடைக்க வேண்டிய அரசுரிமையைச் சூழ்ச்சியாகக் கைகேயி, தன் மகன் பரதனுக்குப் பறித்துக் கொண்டு, இராமரை வனவாசம் அனுப்பிய போது அதற்காக சினந்து கொள்ளாமல் அப்பொழுது மலர்ந்த தாமரை போல் முகப் பொலிவோடும் புன் முறுவலோடும் கைகேயியைப் பணிந்து வணங்கி, தம்பி பரதனுக்கு வழிவிட்டு வனவாசம் போனார் இராமர் என்று இதிகாசம் கூறு கிறது. ஆனால் பா.ச.கவில் பதவிச் சண்டை ஊர் சிரிக்கிறது. நரேந் திர மோடிதான் பா.ச.கவின் பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிவு வரஇருந்த போது அத்வானி சீறிச் சினந்து அக்குழுக்கூட்டத்தைப் புறக்கணித்ததுடன் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகினார். ஆர். எஸ்.எஸ். தலை வர் சமரசம் பேசி, அத்வானியை அமைதிப் படுத்தினார்.

மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி முதல்வரான போது குழுச் சண்டையினால் அவர் பதவி இழந்தார். கர்நாடகத்தில் எடியூ ரப்பா ஊழலாலும், குழுச் சண்டை யாலும் பதவி இழந்தார். நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்கத் தனிநபர்களிடம் கையூட்டு வாங்கி மாட்டிக் கொண்ட உறுப்பினர் களில் பா.ச.கவினரே அதிகம் பேர். சட்ட விரோதமாக வெளிநாடு களுக்குப் பெண்கள் கடத்திய வழக்கில் தளைப்பட்ட பாபுபாய் கடாரா பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர். பா.ச.க.வினரின் “ஆன் மிகச் சிறப்பு” இவ்வாறு சிரிப்பாய் சிரிக்கிறது.

அப்பாவிப் பக்தர்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று அதிகாரத்தைச் சுவைப்பதற்காகவும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை - புதிய முறையில் வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் மட்டுமே இராமரை வணிகச் சின்னமாகப் பயன்படுத்திக் கொள்கிறது பா.ச.க.

இலங்கையில் அதிகாரத்தை அடைவதற்கு சிங்கள இனவெறி யோடு கலந்த புத்த மதத்தைப் பயன்படுத்தி புத்தபிக்குகளும் சிங்கள அரசியல் தலைவர்களும் இணைந்து செயல்படுகின்றனர். அன்பையும் சமத்துவத்தையும் போதித்த புத்தமதம் இலங்கையில் புத்த பாசிசமாக மாற்றப்பட்டது.

அதே போல் இந்தியாவில் பார்ப்பனிய மேலாதிக்கம் கொண்ட இந்து பாசிசம்தான் பா.ச.க.வின் இலட்சியம்!

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் மாவோவிய ஆதரவாளர்களே கலை நிகழ்ச்சி நடத்தியதாக வைத்துக் கொள்வோம். அது தவறா? அதுவும் இந்திய மக்களில் ஒரு பகுதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்தியல்தானே! இந்துத்துவாக் கருத்தியல்களை நடுவமாகக் கொண்டு எத்தனை நிகழ்ச்சிகள் கல்வி நிலையங்களில் அன்றாடம் நடக்கின்றன! அதே புனே கல்லூரியில் இந்துத்துவா சார்பான எத்தனை கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கும்.

ஆன்மிகத்தின் சாரம் சகிப்புத் தன்மை என்கின்றனர். ஆனால் பா.ச.க.வின் ஆன்மிகம் பாசிசத் தன்மை கொண்டதாக இருக்கிறது.

நரேந்திர மோடி உருவத்தில் இந்தியாவிற்கொரு இராசபட்சேயை பா.ச.க. உருவாக்கி வருகிறது என்பதை சனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It