நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இன்றி, இதரக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டும் காங்கிரசுக் கூட்டணி அரசு வலுக்குறைவானது என்பது நாடறிந்த உண்மை. ஆனால் வலுக்குறைவான இந்த அரசு, தனிப்பெரும்பான்மையுடன் கோலோச்சிய காங்கிரசு ஆட்சி செய்யத் துணியாத அத்துமீறல்களை அடுத்தடுத்து செய்துவருகிறது. அரசமைப்புச் சட்ட நோக்கங்களுக்குப் புறம்பாக மேலும் மேலும் அதிகாரங்களை நடுவண் அரசில் குவித்து வருகிறது. மாநில அரசுகளை மேலும் மேலும் ஓட்டாண்டியாக்கி ஒட்டுண்ணி அரசுகளாக மாற்றி வருகிறது.

மாநிலங்களின் வசமுள்ள ஆறுகளை நடுவண் அரசு எடுத்துக்கொள்ளவும், அவற்றை தனியாருக்கு ஏலம் விடவும் சட்ட முன் வரைவு கொண்டுள்ளது. தில்லி அரசுக் கொண்டு வந்துள்ள தேசிய நீர்கொள்கையும் அணைகள் பாதுகாப்புச் சட்டமும் இதற்கு வகை செய்கிறது.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான எந்த நிகழ்விலும்- மாநில அரசு ஒப்புதலின்றி- நேரடியாக தலையிட்டு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, நடுவண் அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் இயற்ற தீவிர முயற்சிகளில் இருக்கிறது.

இப்பொழுது நடுவண் அரசு வழங்கும் மானியத் தொகைகள் மாநில அரசுகள் வழியாக வழங்கப்படுகின்றன. இனிமேல், மானியங்களை நேரடியாக நடுவண் அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் போடும் புதிய ஏற்பாட்டைக் கொண்டுவருகிறது.

உரம், மண்ணெண்ணை சமையல் எரிவளி, ஆகியவற்றிற்கு நடுவண் அரசு கொடுக்கும் மானியத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை 1.7.2013 செயல்படுத்த உள்ளது. மாநில அரசுகள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகின்றன.

இது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும். கூட்டாட்சி முறைக்கும் அதிகார பரவல் முறைக்கும் எதிரான செயல் என்றும், மாநில அரசு வழியாக அம்மானியங்களை வழங்க வேண்டுமென்றும் காட்டமாக முதல்வர் செயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மாநில உரிமைகளைப் பறித்திட இந்திய ஏகாதிபத்திய அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் முதல்வர் செயலலிதா எதிர்த்து வருவது பாராட்டிற்குரியது. தேசிய இனஉரிமை என்ற அடிப்படைப் பார்வை செயலலிதாவிடம் இல்லாவிட்டாலும், நிர்வாகத்தில் கூட்டு அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே மாநிலங்களிடம் உள்ள உரிமைகளை நடுவண் அரசு பறிக்கக் கூடாது என்றும் உறுதியாகக் குரல் கொடுக்கிறார்; கண்டனம் செய்கிறார்.

“ மத்திய அரசால் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டு, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில அரசுகள் தங்கள் நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மத்திய அரசு கருதுகிறது. இந்த விசயத்தில் மாநில அரசுகள் வெறும் பார்வையாளர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறதா? இது ஒரு அதிகார அத்துமீறல். அது மட்டுமல்லாமல் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கும், சனநாயக அதிகாரப் பரவலாக்க உணர்வுக்கும் முற்றிலும் மீறிய செயலாகும்.”

இவ்வாறு காட்டமாகக் கடிதம் எழுதியுள்ள முதல்வர், ஆளும் கட்சியின்தலைவர் என்ற முறையில் நடுவண் அரசு முயற்சிக்கு எதிராக அற வழியில் மக்கள் எழுச்சியை உண்டாக்கி மாநில உரிமைக் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். வெறும் நிர்வாகத் தரத்திலான மறுப்புகளாக மட்டும், பதிவு செய்து விட்டு, உரிமைப் பறிப்புகளை தடுக்காமல் விட்டுவிடக் கூடாது.

மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நடுவண் அரசின் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டி முடிவுகள் எடுப்பதும், அனைத்துக் கட்சிகள் கலந்துகொள்ளும் மக்கள் திரள் எழுச்சிகளை உருவாக்குவதும் தேவை. இது போன்ற முயற்சிகள் ஆளுங்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கவே பயன்படும்.

தனித் தேசிய இன தாயகமாக உள்ள மாநிலத்தின் உரிமைகளை கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்க்காமல் - அவ் எதிர்ப்பை மக்கள் திரள் எழுச்சியாக வடிவமைக்காமல் - நிர்வாக அளவிலான கடிதப் போக்குவரத்தாக மட்டும் பதிவு செய்வது என்ன பலன் தரும்? அதே போல் இதில் ஒத்தக் கருத்துள்ள இதர மாநிலங்களின் முதலமைச்சர்களையும் இணைத்துக் கொண்டு நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக முதல்வர் முயல வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு வேலை என்று சுருக்கிக் கருதாமல் இது தமிழக மக்களின் உரிமைப் பறிப்பு தொடர்பான சிக்கல் என்ற உண்மையை உணர்ந்து எதிர்க் கட்சிகளும், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், நடுவண் அரசு எடுக்கும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.

Pin It