ஈழத் தமிழர்களுக்காக மார்ச்சு - ஏப்ரல் (2013) மாதங்களில் நடந்த மாணவர் போராட்ட அலைகள், தில்லியை அதிரவைத்ததை விட அதிகமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. அக்கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் தினமணி ஏட்டில் (19.4.2013) எழுதியுள்ள கட்டுரை. அக்கட்சியின் திகைப்பையும் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது.

“தனி ஈழம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பது சரியல்ல”

“மாறாகத் தமிழகத்திலிருந்து உணர்ச்சியைக் கிளறி விடுவது சரியான அணுகுமுறை ஆகாது. இது கடந்த காலத்திலும் கூட எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. என்பதே அனுபவம் உணர்த்தும் பாடமாகும்.

“தனி ஈழம் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்காக நிர்ப்பந்தம் கொடுக்கத் தமிழகத்தில் வரிகொடா இயக்கம் என்ற பேச்சும், தமிழக அரசு தனியாக வெளியுறவுத் துறை உருவாக்க வேண்டுமென்ற கருத்தும், ஏன் தமிழ்நாடு தனிநாடாக ஆகக் கூடாதா என்ற அளவுக்கு விபரிதமாகச் செல்வதும் கவலையளிப்பதாக உள்ளது”.

“தனிஈழம்” என்ற சொல்லைக் கேட்டதும் இராசபட்சேயை விட இராமகிருட்டிண னுக்கு ஆத்திரம் வருகிறது. மாணவர் போராட்டத்தை ஆதரிப்பது போல் கட்டுரை யைத் தொடங்கிய அவர், மாணவர் போராட்டத்திற்கு எதிரான கருத்துகளை அடுக்கிக் கொண்டே போகிறார். காங்கிரசுக்காரர்கள் எழுதத் துணியாத கட்டுரையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எழுதியுள்ளார்.

ஏன் தனி ஈழம் கூடாது என்பதற்கு எந்த விளக்கமும் அவர் தரவில்லை. ஆனால் தனி ஈழம் கேட்டால் “இலங்கைத்” தமிழர்களை இலங்கை அரசு மேலும் தாக்கும் என்று மட்டும் கூறுகிறார். உலகில் உள்ள தேசிய இனங்கள் பெரும்பாலானவை தங்களுக்கான தனித்தேசங்களைப் பெற்றிருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தனித் தேசிய இனம். அவர்களை சிங்களப்பேரினவாதிகள் ஒடுக்குகிறார்கள். இனப்படுகொலை செய்கிறார்கள். சற்றொப்ப இரண்டரை இலட்சம் ஈழத் தமிழர்களை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்துவிட்டது. 2008 - 2009 இல் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளது.

இராமகிருட்டிணன், இந்த உண்மைகளை அரை குறையாக ஏற்றுக்கொள்கிறார். இதே கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“இறுதிக் கட்டப் போரின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை நியமித்த குழுவின் அறிக்கையே கூறுகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

“போர் நிறுத்தப் பகுதி” என்று அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த மக்களின் மீது கூடக் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டன. காற்றில் உள்ள ஆக்சிசனை இழுக்கும் வகையிலான வேதியியல் குண்டுகள் கூடப் பயன்படுத்தப்பட்டு மக்கள் மூச்சுத் திணறி சாகுமாறு செய்யப்பட்டனர். மருத்துவமனைகள், செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்றவை கூட குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. பெண்கள், குழந்தைகள் எனக் குவியல் குவியலாகக் கொல்லப்பட்டனர் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது இராணுவத்தினரின் காட்டுமிராண்டித் தனத்திற்குச் சாட்சியமாக உள்ளது. இலங்கை இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களின் கதி இன்னமும் கூட என்ன வென்று தெரிய வில்லை. இறுதிக்கட்ட மோதலின் போது கடுமையான மனிதஉரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை”.

இனவெறி அடிப்படையில் சிங்கள அரசால் நடத்தப்பட்ட இவ்வளவு பெரிய கொலைச் செயல்களை அடுக்கும் இராமகிருட்டிணன் இப்பொழுது கூட இது “இனப்படுகொலை” என்று சொல்லவில்லை. மனிதஉரிமை மீறல், போர்க்குற்றம் என்று மழுப்புகிறார்! “இறுதிக் கட்ட மோதல்” என்கிறார். சிங்கள அரசு நடத்திய போர் என்று சொல்லக் கூட அவர் விரும்பவில்லை. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற் குமான ஆயுத மோதல் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள்” நெருங்குகின்றன என்கிறார். அந்த “மோதலில்” கூட விடுதலைப்புலிகளுக்குத்தான் முதல் இடம் தருகிறார்.

ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராக இவ்வளவு காழ்ப்புணர்ச்சிகளை அடக்கி வைத்துக் கொண்டுள்ளவர் இந்தக் கட்டுரை எழுத வேண்டிய தேவை என்ன? தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததும், குறிப்பாக அ.இ.அ.தி.மு.கவும், தி.மு.க.வுமே ஆதரித்ததும் சி.பி.எம். கட்சியின் தலையில் அடித்தது போல் ஆகிவிட்டது. மாணவர் போராட்டத்தை ஒட்டி ஈழத்தமிழர்கள் தனி நாடு அமைக்கக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய பின் சி.பி.எம் கட்சியின் பொறி கலங்கி விட்டது.

எப்படியாவது இந்த மாணவர் போராட்டத்தை மடை மாற்றி “சிங்களரும் தமிழரும் சமத்துவ அடிப்படையில் சேர்ந்து வாழவேண்டும்” என்ற இனிப்பு தடவிய நச்சு மாத்திரையை மாணவர்கள் சப்பும்படிச் செய்யவேண்டும் என்பதுதான் இராம கிருட்டிணனின் செயல் உத்தி!

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நடந்த “மோதலில்” இத்தனைப் பேரழிவுகளும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே நேர்ந்துள்ளது. சிங்களக் குடி மக்களுக்கு விடுதலைப் புலிகளால் எந்த அழிவும் நிகழவில்லை. அப்படி சிங்களர்களுக்கு அழிவு நிகழ்ந்ததாக இராமகிருட்டிணன் கூடக் கூறவில்லை. இது ஒன்றே போதாதா நடந்தது தமிழின அழிப்புப் போரே தவிர சமநிலை நிலையில் நடந்த “மோதல்” அல்ல என்று முடிவுக்கு வர? பிறகு ஏன், சி.பி.எம். கட்சி, ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இராசபட்சே கும்பலைப் பாதுகாப்பதற்காகத்தான் “இனப்படுகொலை” என்ற சொல்லைப் பயன்படுத்த மறுக்கிறதா?

“மோதல்” முடிவுக்கு வந்து நான்காண்டுகள் நிறைவுறும் நிலையில், எஞ்சியுள்ள மக்களுக்கு குடிமை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? இல்லை.

இதோ இராமகிருட்டிணனே கூறுகிறார்:

“போரின் போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் இன்னமும் கூட முழுமையாக மீள் குடியமர்த்தபடவில்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் இன்னமும் நீடிக்கின்றன. தமிழ்மக்கள் பாரம்பரியமாக வசித்த பகுதிகளில் சிங்கள மக்கள் திட்ட மிட்டுக் குடியமர்த்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகள் சிங்களவர்க்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெளத்த ஆலயங்கள் நிறுவப்படுகின்றன. தமிழ் மக்களின் நிலம் இராணுவத்தினரால் பறிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன”

இனப்படுகொலைப் போர் முடிந்த பின், தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு செயல் படுத்தும் சிங்கள இன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்தாம் இவை அனைத்தும். இன அழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இவை என்று ஏன் சி.பி.எம். கட்சி பார்க்கவில்லை? இனப்படுகொலை அரசான சிங்கள அரசைப் பொதுவாகக் கண்டித்துவிட்டு அதன் இனஅழிப்பு இன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கிறது சி.பி. எம் கட்சி.

மேற்கண்ட இன அழிப்பு இன ஒடுக்குமுறைச்செயல்கள் அனைத்தும் இலங்கை அரசு கடைபிடிக்கும் சனநாயக விரோத நடவடிக்கைகள் மட்டுமே என்று திசை திருப்புகிறது சி.பி.எம். கட்சி. அதற்குச் சான்றாக சிங்கள இதழளார்கள் சிலரை இராசபட்சே அரசு சிறைப்பிடித்துச் சென்றதைக் காட்டுகிறது. “ காணாமல் போன இளைஞர்கள் பட்டியலில் தமிழர்கள் மட்டுமல்ல, சில சிங்களப் பத்திரிகை யாளர்களும் உண்டு” என்கிறார் இராமகிருட்டிணன். எப்படி சமப்படுத்துகிறார் பாருங்கள்!

இராசபட்சே அரசின் தமிழின அழிப்புப்போரையும் போருக்குப் பிந்தைய தமிழினப் பகை நடவடிக்கைகளையும் ஏற்காத சிங்கள இதழாளர் சிலர் கட்டுரை எழுதினார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்கள். கொலைசெய்யப்பட்டிருக்கலாம். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மிகச்சிலராக இருந்தாலும் அவர்களுக்கு நம் தலை தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகிறோம்! ஆனால் அவர்களின் உயிரிழப்பையும் இலட்சக் கணக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டத்தையும் சமப்படுத்தி இவை அனைத்தும் ஓர் அடக்குமுறை அரசின் சனநாயகக் விரோதச் செயல்கள்தானே தவிர, அவை இனப்படுகொலைகள் அல்ல, அங்கே நடப்பது இன ஒடுக்குமுறை அல்ல என்பதை நிறுவுவதற்காக இத்தனைப் பாடுகிறார் இராமகிருட்டிணன். இந்த வரையறுப் பின் படி அடுத்த கட்ட அறிவுரையை வழங்குகிறார் இராமகிருட்டிணன்.

“ராஜபட்சவின் எதேச்சாதிகார ஆட்சிக்கு அந்நாட்டு உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிங்களர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்…… சமீபத்தில் உயர்கல்வியை தனியார் மயமாக்கிட ராஜபட்ச அரசு முடிவெடுத்த போது அதை எதிர்த்து இலங்கை முழுவதும் தமிழ் சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராடி அரசின் முடிவை முறியடித்துள்ளார்கள். இவ்வாறு ராஜபட்சே அரசுக்கு எதிராக இனவேறுபாடின்றி நடைபெறும் ஜனநாயக இயக்கம் பலப்படக் கூடிய அடிப்படையில் இங்கு நமது அணுகுமுறை அமைய வேண்டும்.”

”இனவேறுபாடு பார்க்காதீர்கள்” என்று இராமகிருட்டிணன் தமிழ்நாட்டு மாணவர் களுக்கும் மக்களுக்கும் அறிவுரை வழங்குகிறார். இனப்பாகுபாடு பார்க்கும் சிங்கள இனவெறிக் கும்பலால் அழிக்கப்பட்டார்கள் தமிழர்கள். அவர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, சொந்தமண்ணில் வீடிழந்து, விளைச்சல் நிலமிழந்து அன்னையின் மடியில் அனாதை ஆகிப்போன குழந்தையைப் போல் தாய் மண்ணில் அகதிகளாக்கப்பட்டு அலைகிறார்கள் நம்மவர்கள். நம்மைப் பார்த்து இனவேறுபாடு பார்க்கதீர்கள் என்கிறார் இராமகிருடிணன்.

ஆட்டை கவ்வி நரி இழுத்துச் செல்லும் போது ஆடும் நரியும் பாகுபாடு கருதாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒருவர் இதர ஆடுகளிடம் சொன்னால் எப்படி இருக்கும்? கொலைகாரக் காட்டுப் பூனை கோழியைக் கவ்வி இழுத்துச் செல்லும் போது இரண்டும் கூட்டுப் போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அதன் சூக்குமம் என்ன? காமக்கொடூரன் ஒருவன் கன்னிப் பெண்னை கட்டாயப்படுத்தி வன்முறை செய்யும் போது அவன் அத்துமீறி நடக்கிறான், அவனை விலக்கிவிடுங்கள், அவனைத் தாக்காதீர்கள் என்று சுற்றியுள்ளோர்க்கு அறிவுரை வழங்கினால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது இராமகிருட்டிணன் அறிவுரை!

சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் ஒன்றிணைந்து போராடியதாக இராம கிருட்டிணன் சொல்கிறார். தமிழ்மாணவர்களின் பள்ளிகள், கல்லூரிகள் சிங்கள இராணுவத்தால் ஏற்கெனவே இடிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள கல்விக் கட்டடங்க ளில் சிங்கள இராணுவம் முகாம் அமைத்துள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழ் மாணவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் விதவைகள் உள்ள தமிழ் ஈழத்தில் தந்தையில்லா மாணவர்கள் ஏராளம். இத்தனைக் கொடுமைகளையும் தாண்டிப் படிப்பவர்கள் மரத்தடியில் படிக்கிறார்கள். சிற்சில இடங்களில் கட்டடங்கள் இருக்கின்றன. சிங்களமாணவர்களும் தமிழ்மாணவர்களும் கைகோத்துப் போராடினார் கள் என்கிறார் இராமகிருட்டிணன்.

ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் புரளி கிளப்புவோர் போல், எங்கோ அரிதாக நடந்திருக்கும் ஒரு நிகழ்வை சராசரிப் போக்கு போல் ஊதிப் பெருக்கி உலவ விடுகிறார் அவர். ஊதிப் பெருக்கப்பட்ட மேற்படி நிகழ்வைத் தாண்டி சிங்களர் தமிழர் ஒற்றுமைப் போராட்டத்திற்கு வேறு நிகழ்வு எதையும் காட்ட முடியுமா அவரால்?

ஈழத் தமிழர்களுக்குக் குடிமை உரிமை வழங்க, இராணுவத்தை வடக்கு கிழக்கு மாநிலங்களிலிருந்து வெளியேற்ற, இனப்படுகொலை கூட அல்ல போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரிகள், இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து குறிப்பிடத்தக்க சிங்கள எதிர்கட்சி ஒன்றாவது வைத்து இயக்கம் நடத்தியதுண்டா?

இலங்கை அரசே அமைத்த “கற்றுக்கொண்ட படிப்பினைகளுக்கும் நல்லிணக்கத்திற்கு மான ஆணையத்தின்” (எல். எல். ஆர்.சி.) பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஒரு கட்சியாவது அங்கு கோரிக்கை வைத்ததுண்டா? குறிப்பாக, முதன்மை எதிர்க் கட்சியான ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி (யு.என்.பி,) இவ்வாறு கோரிக்கை வைத்ததுண்டா? வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யு.என்.பி. கோரியதுண்டா? இல்லை!

கடந்த மார்ச்சு மாதம் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா, இராசபட்சேவுக்கு வாகான ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அந்த அளவு நீர்த்துப் போன தீர்மானத்தைக் கூட வெளிநாடுகள் ஜெனிவாக் கூட்டத்தில் கொண்டுவரக்கூடாது என்பதை வலியுறுத்தி அம்முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கே கொழும்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியுடனும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) என்ற இன்னொரு கம்யூனிஸ்ட்டுக் கட்சியுடனும் உடன் பிறப்பு உறவு வைத்துள்ளது. தன்னுடைய அனைத்திந்திய அமைப்பு மாநாட்டிற்கு உடன் பிறப்புப் பேராளர்களாக அக்கட்சிகளின் தலைவர்களை அழைக்கிறது. அக்கட்சிகளின் அமைப்பு மாநாட்டிற்குத் தன் தலைவர்களைப் பேராளர்களாக அனுப்புகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.எம். தலைவர் டி.கே. ரெங்கராஜன் 2009 பேரழிவிற்குப் பிறகு இலங்கை மாநாட்டிற்குப் போய் வந்தார்.

இலங்கையில் சிங்களர்களிடையே செயல்படும் மேற்படிக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கொள்கைப்படி தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவும் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள், இராணுவத்தினர் மீது நடவடிக்கையும் கோரி மக்கள்இயக்கம் நடத்துகின்றனவா? இல்லை. தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் சிங்களர்களை வெளியேற்றவும், இராணுவத்தைத் திரும்பப் பெறவும் மக்கள் திரள் போராட்டம் நடத்துகின்றனவா? இல்லை. வேறு எந்த எதிர்க்கட்சியாவது அவ்வாறு மக்கள் திரள் போராட்டம் நடத்துகின்றதா? இல்லை. பின்னர் எந்தச் சிங்களரோடு இணைந்து தமிழர்கள் போராடி இராசபட்சேயின் அடக்கு முறையை எதிர்ப்பது?

இந்த உண்மைகள் அனைத்தும் சி.பி.எம். கட்சிக்கும் இராமகிருட்டிணனுக்கும் தெரியும். சிங்களர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குக் கீழ்ப்படிந்து ஒன்றிணைந்து வாழுங்கள் என்பதைத்தான் சி.பி.எம். கட்சி சொல்லவருகிறது. ஆனால் அதை நேரடியாகச் சொன்னால் அம்பலப்பட்டுபோவோம்; தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து முற்றிலும் அயன்மைப்பட்டு போவோம் என்ற அச்சத்தின் காரணமாக பூசி மெழுகி சிங்களரோடு ஒன்றிணைந்து போராடுங்கள் என்கிறது.

விவரம் தெரியாமல் வெள்ளந்தியாக நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் சி.பி.எம். கட்சி சிங்களரோடு சேர்ந்து போராடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறுகிறதென்றால் இதே அறிவுரையை சிங்களக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிடம் பகிரங்கமாக வலியுறுத்த வேண்டுமல்லவா? அவ்வாறு வலியுறுத்த வில்லையே ஏன்?

2011 ஆம் ஆண்டு சூலை மாதம் 30 ஆம் நாள் சென்னையில் சி.பி.எம் கட்சி சிங்கள ஆதரவு மாநாடொன்றை நடத்தியது. அம்மாநாட்டிற்கு “இலங்கைத் தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு” என்று பெயரிட்டிருந்தது. அதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தலைவர்கள் ஆற்றிய உரைகள் ஆகியவை அக்கட்சியின் நாளேடான தீக்கதிரில் 31.7.2011, 1.8.2011 ஆகிய நாள்களில் வந்தன. அம்மாநாட்டில் பிரகாஷ்காரத் கலந்து கொண்டார்.

 “இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த ஆயுத மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்” என்றுதான் தீர்மானம் தொடங்கும். (தீக்கதிர் 31.7.2011) இராமகிருட்டிணன் தமது தினமணிக் கட்டுரையில் அவ்வாறுதான் “இரு தரப்பு ஆயுத மோதல்” என்று குறிப்பிடுகிறார்.

சி.பி.எம். கட்சியின் சிங்களச் சேவையும் ஈழத் தமிழர்களுக்கெதிரான நயவஞ்சகமும் தற்செயலானதன்று. திட்டமிட்டது; அதன் அனைத்திந்தியத் தலைமையின் ஆரியச் சார்புக் கோட்பாட்டின் அடியொற்றியது.

காவிரிச் சிக்கலில் தமிழர்களுக்கு எதிராகவும் கன்னடர்களுக்கு ஆதரவாகவும், முல்லைப் பெரியாறு சிக்கலில் மலையாளிகளுக்கு ஆதரவாகவும் தானே செயல் படுகிறது சி.பி.எம். கட்சி! தமிழர் கன்னடர் ஒற்றுமை, தமிழர் மலையாளி ஒற்றுமை ஆகியவற்றை மனமாசற்று மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறதென்றால் அது என்ன செய்திருக்க வேண்டும்.? அக்கட்சியின் தமிழகத் தலைமையும் கர்நாடகத் தலைமை யும், காவிரிச் சிக்கலின் தீர்வுக்குக் வழிச் சொல்லிக் கூட்டறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அதே போல் முல்லைப்பெரியாறு அணைச்சிக்கலுக்குத் தீர்வுகளை முன் வைத்து அக்கட்சியின் தமிழக கேரளத் தலைமைகள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் அனைத்திந்தியத் தலைமை காவிரி, முல்லைப்பெரியாறு சிக்கல்களுக்குத் தீர்வுகளை முன் வைத்து தனது இரு மாநிலக் கிளைகளையும் அத்தீர்வினை ஏற்குமாறு கட்டுப்படித்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஏன் சி.பி.எம். கட்சி செயல் படவில்லை?

“அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டுக் கருக்கருவாள்” என்பது போல சி.பிஎம். தலைமையின் சட்டைப் பைக்குள் எத்தனை தத்துவங்கள்; எத்தனை சித்தாந்தங்கள்; எத்தனை சமரசத் தீர்வுகள்! தூ, வெட்கமாயில்லை? இந்நிலையில் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பற்றிப் பேசுவது பகட்டுத் தனம் என்ற பாமர அறிவு கூட அற்றுப் போய்விட்டீர்களா? இந்தியாவுக்குள் இனச் சமரசத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் இரத்தச் சேற்றில் சிக்கிச் சீரழியும் ஈழத் தமிழர்களுக்குச் சமரசத் தீர்வு சொல்ல கிளம்பி விட்டீர்களே, இதை என்னென்று சொல்வது? அறியாமையா? ஆடம்பரமா? ஆரிய பாசமா? ஈழத் தமிழின அழிப்புப் போரை நடத்திய இந்திய ஏகாதிபத்தியத்திற்குச் செய்யும் கையாள் வேலையா?

இரண்டாயிரம் (கி.பி. 2000) ஆண்டில் விடுதலைப் புலிகள் ஆணையிறவு முகாமைச் சிங்கள படையிடமிருந்து மீட்ட போது பதறிப்போனது சி.பி.எம். கட்சி. அடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற விடுதலைப்புலிகள் முயன்றால் அதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்று சி.பி.எம். அனைத்திந்தியத் தலைமை கோரிக்கை வைத்தது. இலங்கை அரசுக்கு இந்திய அரசு இலவசமாக ஆயுதங்கள் தந்து யாழ்பாணத்தைப் பாதுகாக்க உதவவேண்டும். விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்தால் அங்கிருக்கும் சிங்கள இராணுவத்தினை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து விடுவார்கள் என்று துடித்தார் அக்கட்சியின் தமிழகத் தலைவர் உமாநாத்! தமிழர் களை அழிப்பவர்கள் மீதும், தமிழர் உரிமைகளைப் பறிப்பவர்கள் மீதும் சி.பி.எம். தலைமைக்கு எப்போதும் பாசம் உண்டு! தமிழர்கள் மீது மட்டும் மறைத்து வைக்கப் பட்ட பகைமை எப்போதும் அதற்கு உண்டு!

வங்காளிகள், மலையாளிகள், இந்திக்காரர்கள் போன்ற பிற இனத்தார் எங்காவது ஒரு நாட்டில் அந்நாட்டு அரசால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தால் இனக்கொலை செய்த இனத்தோடு கூடிக் குலாவும்படி அறிவுரை வழங்குமா சி.பி.எம்.? வழங்காது. வங்காள தேச விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தது; அதற்காக இந்திய இராணுவம் போர் புரிந்ததையும் ஆதரித்தது சி.பி.எம். கட்சி அப்போது “பாகிஸ்தானோடு சமத்துவமாக வாழுங்கள், தனிநாடு கோராதீர்கள் என்று வங்காளிகளுக்கு அக்கட்சி அறிவுரைக் கூறவில்லை.

பொருளியல் கோரிக்கைகளுக்காக, தொழிற்சங்கக் கோரிக்கைகளுகளுக்காக சி.பி.எம். கட்சியில் இருக்கும் தமிழர்கள் அக்கட்சி மறைமுகமான தமிழின எதிர்ப்புக் கட்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எழுச்சி பெற காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைப் போராட்டங்களில் உங்களைக் கலந்து கொள்ள விடாமல் கட்சிக் கட்டுப்பாடு போடுகிறதல்லவா அக்கட்சி! அதன் பொருள் என்ன? உங்களைத் தமிழினத் துரோகம் செய்யத் தூண்டுகிறது என்பதுதான் அதன் பொருள்!

இதே மறைமுகத் தமிழின எதிர்ப்புக் கொள்கை அடிப்படையில், நம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத் திற்கும் நடந்த ஆயுத மோதல் என்று வர்ணிக்கிறது.

சி.பி.எம். கட்சித் தலைமை ஆரிய இனச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டது. ஆரியத்துடன் இணக்கம் கொண்டுள்ள வங்காளி, மலையாளி இந்திக்காரர்களை, இன்னும் மற்றவர்களை அக்கட்சி ஆதரிக்கும். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆரிய மேலாதிக்க சக்திகளுடன் மோதித் தனித்து நிற்கும் தமிழினத்தின் மீது சி.பி.எம். தலைமைக்கு அந்தரங்கமான காழ்ப்புணர்ச்சி உண்டு.

அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 1970களில் சி.பி.எம். கட்சி வளர்ந்து வந்தது. அம்மாநிலங்களில் தனித்து போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பலரைக் கொண்டிருந்தது. அசாமில் வெளியாரை வெளியேற்றும் போராட்டம் வந்த போது அப்போராட்டத்தை எதிர்த்து இந்திய இராணுவத்துக்கு அசாமியர்களைக் காட்டிக் கொடுக்கும் வேலை செய்தது. அசாமில் அன்று வீழ்ந்த அக்கட்சி இன்னும் எழுந்திருக்கவில்லை. பஞ்சாபில் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் எழுந்த போது இந்திய இராணுவத்துக்கு சீக்கிய இளைஞர்களைக் காட்டிக்கொடுத்தது சி.பி.எம். கட்சி. அக்கட்சியால் சீக்கியர் பலர் இராணுவத்தினராலும், காவல்துறையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் சீக்கியர்கள் புனிதத் தலமாக கருதும் அமிர்தசரசு பொற்கோயிலுக்குள் இந்திய இராணுவம் தாக்குதல் தொடுத்தது. இராணுவ வீரர்கள் சிலரும் இறந்துவிட்டனர். பல நூறு சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சி.பி.எம். கட்சித் தலைமை, கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றியது.

அப்போது, பஞ்சாபில் வீழ்ந்த சி.பி.எம். கட்சி மறுபடி எழுந்திருக்கவே இல்லை. சீக்கிய தலைவரான சிம்ரஞ்சித்சிங் மான் சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சீக்கியரான சுர்ஜித் சிங்கை பஞ்சாபின் வரதராசப் பெருமாள் என்று வர்ணித் தார். (வரதராசப்பெருமாள் என்பவர் ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து இந்திய அமைதிப்படையின் தயவால் முதல்வர் பதவியில் இருந்தவர்)

இப்போது இராமகிருட்டிணன் நம் மாணவர்கள் போராட்டத்தில் காணும் குற்றங்கள் 1, தனி ஈழம் கோருவது 2, தனித் தமிழ்நாடு கோர நேரும் என்று கூறுவது 3, தமிழகம் தனியே வெளியுறவுத் துறை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது.4, வரிகொடா இயக்கம் நடத்துவோம் என்று கூறுவது.

இதனால் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்படாத சீற்றம் சி.பி.எம். தலைமைக்கு ஏற்பட்டதேன்? ஆரியத்தை சித்தாந்த ரீதியாக ஆதரிக்கும் கட்சி என்பதால் அதற்கு இவ்வளவு சினமும் நெஞ்சப் படபடப்பும் ஏற்படுகிறது.

ஒரு தேசிய இனத்திற்குப் பிரிந்து போகும் உரிமை பிறப்புரிமை; பிரிந்து போவதை ஆதரிக்காதவன் கம்யூனிஸ்ட்டு அல்லன் என்பது மட்டுமல்ல, அவன் சனநாயக வாதியும் அல்லன் என்றார் லெனின். (லெனின் நூல் தொகுதி 20) சி.பி.எம். கட்சித் தலைமையோ லெனின் படத்தை சுவரில் மாட்டி வைத்துவிட்டு பாரதமாதா படத்தை நெஞ்சில் மாட்டி வைத்துள்ளது. பாரதமாதா ஆரிய மாதா அல்லவா!

தமிழகத்தில் நடந்த மாணவர் போராட்டம் பற்றி ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் நிரந்தரப் பேராளராக இருந்து கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்ற அர்தீப் எஸ் புரி சொல்வதைப் பாருங்கள்:

“தமிழ்நாட்டில் எழுந்துள்ள மக்கள் உணர்வை அரசியல்வாதிகளின் கைவேலை என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படிக் கருதினால் ஒன்று தவறு; இரண்டாவது நமக்கு நாமே பேரழிவை வரவழைத்துக் கொள்வது.

“இந்தியா விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு இடம் தரக்கூடாது.

“இலங்கையில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் 13 வது திருத்தத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்த பய 27.3.2013 அன்று “மாநில நிர்வாக அமைப்புகளை வைத்திருக்க வேண்டுமா? அவை தேசியத் தலைமையின் மகுடத்தைக் குறிபார்க்கின்றன.” என்று கூறினார். அவர் மாநில அமைப்புகளையே கலைத்து விடப்பார்க்கிறார். நாம் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்”. (தி இந்து 9.4.2013)

இந்திய ஆளும் வர்க்கத்தின் வெளியுறவுத்துறையில் செயல்பட்ட உயரதிகாரிக்குள்ள குறைந்த பட்ச ஞாய உணர்வு கூட சி.பி.எம் கட்சித் தலைமைக்கு இல்லை. காரணம் அது ஆரியச் சார்பு கட்சி. சிங்களர்களும் ஆரியர்கள்?

Pin It