தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் வழக்கறிஞர் பாவேந்தன் இல்லத் திருமண விழாவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும், ஈரோடு மாவட்டம், குன்றத்தூர், பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது.

அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம்:

“இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேச விடுதலையும் தேவையென்றார். வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். மக்களுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் போராடி சிறை செல்பவர்களுக்கு கட்டணமின்றி வழக்கு நடத்துபவர். வழக்குகளில் விடுதலை வாங்கித் தருவார். அவரை நான் போராட்டக் காவலன் என்று அழைப்பதுண்டு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள வழக்கறிஞர் தமிழ்த் தேசியம் குறித்து இவ்வளவு சிறப்பாகவும் அழுத்தமாகவும் பேசியது கால மாற்றத்தின் அறிகுறியாகும். தமிழ்ச்சமூகத்திற்குள் இன்று உருவாகி வரும் ஒரு மாற்றத்தை, பெரிய பாய்ச்சலுக்கான ஓர் உள்இயக்கத்தை அறிவிக்கும் வெளிப்பாடாக அவரது பேச்சை நான் கருதுகிறேன்.

மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டு மென்றார்.

தமிழ்த் தேசியம் என்பது இன்று ஒரு தனித்துவமான சித்தாந்தமாக – கருத்தியலாக வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே தமிழ்மொழி சார்ந்து, தமிழ் இனம் சார்ந்து அமைப்புகள் செயல்பட்டிருக்கின்றன. போராட்டங்கங்கள் நடந்திருக்கின்றன. பெருமளவுக்கு தியாகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அப் பொழுதெல்லாம். தமிழ்த்தேசியம் என்ற ஒரு சித்தாந்தம் முன் வைக்கப்படவில்லை, வளர்க்கப்படவில்லை. இப்பொழுதுதான் தமிழ்த்தேசியம் என்ற சித்தாந்தத்தை முன் வைத்து அதனை வளர்த்து வருகிறோம்.

தமிழ்த் தேசியம் தனக்குத் தேவையானதை மார்க்சியத்திடமிருந்தும் பெரியாரியத்திலிருந்தும் அம்பேத்கரியத்திடமிருந்தும் எடுத்துக்கொள்ளும். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகியவற்றின் கலவையல்ல. தமிழ்த் தேசியம் தனித்துவமானது. அது தமிழர் அறம் என்ற மெய்யியலின் மேல் நிற்கிறது. தமிழர்களுக்கென்று இன அரசியல், மொழி அரசியல் இருக்கிறது. தமிழர்களுக்கென்று சக மனிதர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான அறக்கோட்பாடு இருக்கிறது. இவற்றை மேலும் வளப்படுத்த புதிய கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் இருந்து வந்திருக்கிறது. அந்த புரிதலோடுதான் தமிழ்த் தேசியம் ஒரு தனி சித்தாந்தம் என்று நான் சொல்கிறேன்.

சங்கக் காலத்தில் கணவன் மனைவியை சமத்துவ நோக்கில் தலைவன் – தலைவி என்றே அழைத்தார்கள். பிற்காலத்தில் தமிழினத்தில் பெண்ணடிமைக் கருத்துகள் ஏற்பட்டன. பெண்ணடிமைத்தனத்தை நம் சமூகத்திலிருந்து நாம் நீக்கியாக வேண்டும். மணமக்கள் பாரி – சிந்து திருமணம்; காதல் திருமணம் என்றார்கள். சாதி மறுப்புத் திருமணம் என்றார்கள். மணமக்களுக்கும், மணமகள் பெற்றோர்க்கும் நெஞ்சு நிறைந்தப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் பதவிகளுக்கு சாதியைப் பயன்படுத்த முனைவோர் சிலர், காதல் திருமணம் கூடாதென்கிறார்கள். நாடகக் காதல் என்கிறார்கள். சாதி ஒழிந்து விடுமோ என்று கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தை எதிர்ப்பதை பார்த்தால் சொந்த சாதிக்குள் கூட காதல் திருமணம் நடக்கக் கூடாது என்று கவலைப்படுவது போல் தெரிகிறது. இந்த தடைகளையெல்லாம் உடைத்து சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் பெருக்கத்தான் போகின்றன.

மணமக்களுக்கு ஒரே கருத்தை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன். காதல் திருமணம் செய்து கொண்டாலும், பிணக்குகள் வரத்தான் செய்யும். பிணக்கு இருக்கத்தான் வேண்டும். அது உப்பைப் போல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கணவன் மனைவி வாழ்க்கையில் சுவை இருக்கும் என்று நம்முடைய பெரியவர் திருவள்ளுவர் சொன்னார். உப்பு இல்லாவிட்டால் உணவு சப்பென்று இருக்கும், உப்பு அதிகமாகி விட்டால் சாப்பிடமுடியாமல் கரிக்கும். உப்பைப் போல் அளவோடு பிணக்கு இருக்கட்டும் என்றார்.

இன்னொன்றையும் பெரியவர் சொன்னார். கணவன் மனைவியிடையே பிணக்கு வந்தால் நாள்கணக்கில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. கணவனோ அல்லது மனைவியோ வலிந்து போய் பேசினால் தோற்றுப் போனதாகும் என்று கெளரவம் பார்க்கக் கூடாது. ஊடல் என்ற பிணக்கில் வலிந்து போய் முதலில் பேசி பிணக்குத் தீர்ப்பவர்தான் வெற்றிப் பெற்றவர் ஆவார். அந்த வெற்றி இருவரின் வெற்றி. பின்னர் அவர்கள் மகிழ்ந்திருக்கும் போது அதன் பெருமை தெரியும் என்றார் அவர்.

பாரிக்கும் சிந்துவுக்கும் பிணக்கு வந்தால் உங்கள் தாத்தாவான திருவள்ளுவர் சொன்ன திருக்குறளை நினைத்து செயல்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் கணப் படும். – குறள்

Pin It