தமிழ்நாடு-பாண்டிச்சேரி கடலோரப்பகுதியில் பாண்டிச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, சிறிமுஷ்ணம், ஜயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடிக்கு  தெற்குப்பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும் அத்தோடு சேர்ந்து மீத்தேன் என்ற எரிவாயுவும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

பழுப்பு நிலக்கரியின் மதிப்பீடு: பாகூர் பகுதி -766 மில்லியன்டன்.  நெய்வேலி, ஜயம் கொண்டான், வீராணம் பகுதி: 6835 மில்லியன் டன். மன்னார்குடி பகுதி- 19,788 மில்லியன்டன். இப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயுவின் மதிப்பீடு- 98000 கோடிகனஅடி. முதலில் மீத்தேன் வாயுவை எடுக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

 இந்திய அரசின் திட்டம்

  வளரும் எரிவாயுத் தேவைகளுக்காக இந்த மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட்ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பொரேசன் லிமிடெட் (Great Eastern Energy corporation Limited )என்ற கம்பெனிக்கு 29.07.2010 அன்று வழங்கியுள்ள உரிமத்தின் விவரங்கள் வருமாறு.

 மீத்தேன் எரிவாயு எடுக்கப்படவுள்ள நிலப்பரப்பு

 தஞ்சைமாவட்டத்தில்    திருவிடைமருதூர் ,கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்கள்  திருவாருர் மாவட்டத்தின் குடவாசல்,வலங்கைமான்,நீடாமங்கலம்,மன்னார்குடி வட்டங்கள் . மொத்த நிலப்பரப்பு : 691 சதுர கிலோமீட்டர்கள். இதில் 24 ச.கிமீ பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.எஞ்சிய 667 ச.கி.மீ ( 166,210 ஏக்கர்கள்) மீத்தேன் எடுக்க தரப்பட்டுள்ளன.

 கிரேட் ஈஸ்டெர்ன் கம்பெனியின்  உடனடி செயல்திட்டம்.

 மீத்தேன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி,தமிழக அரசின் முன் அனுமதி ஆகியன பெறப்பட்டுள்ளதாக கம்பெனிதரப்பில் கூறப்படுகின்றது.உள்ளுறைக் கிணறுகளுக்கான துளையிடும் வேலைகள்2012 இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என கம்பெனி கூறியிருந்தது. முதற்கட்டவேலையாக  தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறைகிணறுகளும், திருவாருர் மாவட்டதில் 38 உள்ளுறை கிணறுகளுக்குமான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன.

 மொத்தம் 50 கிணறுகள் அமைக்கப்பட இருக்கும் ஊர்களின் விவரங்கள்.  கும்பகோணம் வட்டம்: கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி ,விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில்.

  திருவிடைமருதூர் வட்டம். மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை.

 ஒரத்தநாடு வட்டம் : குலமங்கலம்.

 குடவாசல் வட்டம் :சித்தாடி, குடவாசல், மேலைப்பாளையம், மலுவச்சேரி,ஓகை, கீழப்பாளையூர்,கமுகக்குடி ,பத்தூர், கொரடாச்சேரி,ஆர்பார்,மஞ்சக்குடி, வடவேர், செல்லூர்.

 வலங்கைமான் வட்டம்: சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர்,அனுமந்தப்புரம், கீலவடமல்,ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கொயில்வெண்ணி,ஆதனூர்,கண்டியூர் நீடாமங்கலம் வட்டம் பூவனூர் ,கீழவாந்தச்சேரி(தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல்,காளாச்சேரி.

 மன்னார்குடி வட்டம்:கர்ணாவூர்,வடபாதி,சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு.

 பசுமைத்திட்டம்???:மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு.அதனை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும் மீத்தேன் மாசுபாடுகள் அற்ற தூய்மையான எரிபொருள் என்றும்கம்பெனி எடுத்துஇக்கூறுகின்றது.நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுப்பது ஒரு பசுமைத் திட்டம் என கம்பெனி பொய்யான விளம்பரம் செய்கின்றது.

 மீத்தேன் எரிவாயு எடுக்கும் முறை: நிலக்கரிப்படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பது அல்ல. நிலக்கரிப் படிமத்தில் –அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப்பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருப்பது .மன்னார்குடிப்பகுதி நிலக்கரிப் படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்றது.தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்த படிமங்களை அழுத்திக்கொண்டுள்ளது.இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப்பாறைகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.

நிலக்கரிப்பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றியதன் பின்னரே மீத்தேன் வாயு வெளிவரமுடியும்.அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் கருவிகளைக்கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்றவேண்டும். அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1650 அடிவரை வெளியெற்றப்படும்போது காவிரிப்படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500அடிகளுக்கு கீழே இறங்கிவிடுவதோடு இந்த மன்னார்குடி நிலக்கரி படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு தொடர்புள்ள நிலத்தடிநீர் தொகுப்புகள் Acquifers அனைத்தும் வறண்டு போகும்.எல்லாவற்றிற்கும் மேலாக மிக அருகாமையில் உள்ள வங்கக்கடலின் உப்பு நீர் காவிரிப்படுகையின் உள்ளே ஊடுருவும்.காவிரிப்படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும்.நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றன நிகழும் அபாயமும் உண்டு.

 வெளியேற்றப்படும் நிலத்தடி நீர்:

ஒருசுற்றுச்சூழல் பேரிடர்ஆழ்துளைக்கிணறுகளில் இருந்து வெளியெற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டது.கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இதில் உள்ளது.குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம்,மக்னீசியம்,அமோனியா,ஆர்செனிக், பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கின்றன.

 80ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக்கொண்டால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம். நாளுக்குசுமார் 20000 கேலன் ( 75000 litres) நீர் ஒரு கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும்.மாசு நிறைந்த இந்த நீரை தற்போது பாசன/வடிகால் வாய்க்கால்களாக பயன்பட்டுக்கொண்டிருக்கும் வாய்க்கால் ஆறு வலைப்பின்னலில் விட திட்டமிடுகின்றார்கள்.இது மிகவும் அபத்தானது.நாசத்தை விலைகொடுத்து வாங்கும் இந்த மூடத்தனத்தால் ஒரு பேரிடம்,பேரழிப்பு தமிழகத்தை சூழும் அபாயம் உள்ளது.

காவிரிப் படுகையை பாலைவனமாக்கி கனிமக்கொள்ளைக்கான திட்டம்..

கம்பெனி தனது மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற கிணறுகளுக்கான இடம், கிணறுகளை இணைக்கும் எண்ணெய் குழாய்கள், சாலைகள், கம்ப்ரெசர், வெற்றிட-பம்ப் , ஆழ்குழாய் துளையிடும் எந்திரங்கள், அதற்கான பொருட்களை சேமிக்கும் இடம் என வளமான காவிரிப்படுகை மண் குப்பையாக மாறும். ஒரு புறம் நிலத்தடி நீரின் அழிவு. மறுபுறம் மாசுமிக்க உப்பு மிக்க கழிவு நீரின் தாக்கம்.இவை காவிரிப்படுகையை பாலை நிலமாக மாற்றும்.(மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.நிலம் உள்வாங்கவும் பிற இயற்கை சீற்றங்களுக்கும் ஆளாகியுள்ளன ) இந்த திட்டத்தால்   வேளாண்மையும், வேளாண் மக்கள் சமூகமும் அழிந்துபோகும்.இதையே வாய்ப்பாக்கி கீழே புதைந்துள்ள நிலக்கரியை அள்ள திட்டமிடுகின்றார்கள்.

 பேரழிவு மன்னார்குடிப்பகுதியோடு நிற்காது.தமிழகமே பாதிக்கப்படும்காவிரிப்படுகையின் மன்னார்குடிப்பகுதி வறண்டுபோகும்போது,பிறமாவட்டங்களும் பாதிக்கப்படும்.தொடர்புடைய நீர்தாரைகள் சேதப்படும் .நிலத்தடிநீர் வேளாண்மைக்கும் குடிநீர்த்தேவைக்கும் கிடைக்காது.சென்னை முதல் இராமேசுவரம் வரை குடிநீர் தேவை நிறைவேறாது.ஒரு மகத்தான சமூகத்தின் வாழ்வாதாரமாகவும்,பண்பாட்டுச் சிறப்பிடமாகவும் ,எண்ணற்ற கால்நடைகள்,பறவைகள்,மற்றும் உயிர் வகைகளுக்கு தாய்மடியாகவும் உள்ள செழிப்பான வேளாண் நிலத்தை எரிவாயஎடுக்க விற்பது தனது ஆடம்பர செலவுகளுக்கு வழிகாணத்தெரியாத அற்பப் பதர் தன் தாயை விற்பதற்கு ஒப்பானதாகும்.காவிரிநீரில் தமிழர்களின் உரிமையை கள்ள மௌனம் சாதித்து மறுத்து வரும்மன்மோகன் அரசு திட்டமிட்டே காவிரிப்படுகைக்கு வருகின்ற தண்ணீரைத் தடுக்கின்றதோ என்ற ஐயமும் வலுக்கின்றது.

 முல்லைப்பெரியாறு,காவிரி,பாலாறு நீர் உரிமைகளை தமிழர்களுக்கு மறுக்கின்ற மன்மோகன் அரசு பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் தாய்மண்ணாக விளங்கும் காவிரிப்படுகை நிலத்தில் முழு உரிமை கொண்டாடுவதும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு கைமாற்றிக்கொடுப்பதும் அடிப்படைகள் அற்றவைகோடிக்கணக்கான வேளாண் மக்கள் வேறு  தொழிலை நாடட்டும் என்ற மன்மோகன் சிங்சிந்தனை நாட்டு நலனுக்கு விரோதமான ஒன்று.

 நம் முன்னோர்கள் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த விடுதலை நம்மையும் நாட்டு நலனையும் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அல்ல.உயிர் ஈகை தந்தேனும் தாயகம் காப்போம்.கம்பெனிக்காரர்கள் உள்நுழைய அனுமதியோம்.

தொடர்பிற்கு. க.கா.இரா.இலெனின் ,

அமைப்பாளர் 9443120364 ;                                        

 பொறியாளர் கோ.திருநாவுக்கரசு,

 ஒருங்கிணைப்பாளர் 9380297522                                                         

 04.05.2013 அன்று   காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை             

 இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் தலைமையில் தஞ்சாவூர் காவேரி நகர் சுந்தர்மகாலில் நடைபெறும் “காவிரிப்படுகையை விழுங்க வரும் மீத்தேன்  திட்டம்” என்ற விரிவான கருத்தரங்கத்தில் பங்கு பெறுங்கள்.. 

Pin It