பழைய சொற்களுக்குள் பதுங்கிக் கொள்ளும் பதவி அரசியல்வாதிகளைப் புறந்தள்ளிப் புதிய முழக்கங்களுடன் பொங்கி எழுந்துள்ள மாணவர் பட்டாளத்தை வாழ்த்துகிறோம்.

 அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆலவட்டம் வீசி, குறுக்குச்சால் ஓட்டி, இராசபட்சே கும்பலுக்குப் பாதுகாப்புக் கவசம் உருவாக்கப் புறப்பட்டோரின் முகத்திரையைக்கிழித்தெறிந்தது மாணவர் போராட்டம். பல இடங்களில் அமெரிக்கத் தீர்மான நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள் மாணவர்கள். தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் அமெரிக்கத் தீர்மானத்தைப் பாடையில் கிடத்தி சுடுகாட்டில் எரியூட்டினார்கள்.

 அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து பிப்ரவரி மாதம் முதல் ஆலாபனை பாடிக் கொண்டிருந்த கருணாநிதி அவர்களே, நடுக்காட்டில் மனைவியைக் கைவிட்டுப்போன நளனைப் போல், அமெரிக்கத் தீர்மானம் ஆகாது என்று பேசி, புதிய தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என்றார்.

 காங்கிரசுக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகவேண்டிய நெருக்கடியைக் கொடுத்தது மாணவர் போராட்டம்.

 1. இராசபட்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். புலன் விசாரணை அடிப்படையில் அக்கும்பலைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

 2. இனிமேலும் சிங்களர்களோடு சேர்ந்து வாழ ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்களா, அல்லது தனிநாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதைத் தீர்மானிக்க ஐ.நா.மேற்பார்வையில் ஈழத்திலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஈழத்தமிழர்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 3. தமிழ் ஈழத்தில் இலங்கைச் சிங்களப் பேரினவாத அரசின் கீழ் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு கருத்துரிமை, அமைப்பு நடத்தும்உரிமை, கூட்டம் கூடும் உரிமை, கோரிக்கைகள் எழுப்பும் உரிமை உள்ளிட்ட குடிமை உரிமைகளை வழங்கவும், துயர் துடைப்புப் பணிகளைச் செய்யவும் ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையின் கீழ்இயங்கும் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை ஈழத்தமிழர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

 என்ற கோரிக்கைகள் மாணவர்களால் தெள்ளத் தெளிவாக வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் கடைசியில்ஒரே கோரிக்கைக்கு வந்தன.

தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு விசாரணை வேண்டும் என்று கேட்டன. ஒட்டு மொத்தத் தமிழகத்தின், தமிழக அரசின் கோரிக்கை ஆகிப்போன தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கையைப் புறக்கணித்தது இந்தியா.

 அமெரிக்காவின் அசல் தீர்மானம் இராசபட்சேயை நீதிபதியாக்கியது. அது இன்னும் நீர்த்துப்போகும்படித் திருத்தங்களைச் செய்தது இந்தியாவின் ‘திருப்பணி’.

 இந்தத் தீர்மானம் எதுவும் செய்யாது என்று தெரிந்த நிலையிலும், இந்த உதவாக்கரைத் தீர்மானத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று இறுமாப்போடுகூறிவிட்டான் இராசபட்சே!

 ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றதற்கான குற்ற உணர்வோ, கூச்சமோ, என்ன ஆகுமோ என்ற அச்சமோ கிஞ்சிற்றும் கிடையாது இராசபட்சேவுக்கு!தன்னைப் பாதுகாக்க, இந்தியா, சீனா, இரசியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கியூபா, வெனிசுவேலா என்று எத்தனையோ நாடுகள் போட்டியிடுகின்றன என்ற இறுமாப்பில் தலைக்கனத்துத் திரிகிறான்.

 இராசபட்சேயை பிரித்தானியா, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 54 நாடுகளை உறுப்புகளாகக் கொண்ட காமன்வெல்தின் தலைவனாக மகுடம் சூட்டிஅழகு பார்க்கக் காத்திருக்கிறது இந்தியா! இது அக்கொலைகாரனுக்கு எவ்வளவு ஆணவத்தை உண்டாக்கியிருக்கும்!

 ஆம், வரும் நவம்பர் 15-17 ஆகிய நாள்களில் கொழும்பில், காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்தியாவின் முன்முயற்சியுடன் இணைந்து செயல்படுகிறதுபிரித்தானியா! காமன்வெல்த் மாநாடு நடைபெறும் நாட்டின் குடியரசுத்தலைவர் அல்லது பிரதமர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த்தின் தலைவராகச் செயல்படுவார்.

 ஒன்றரை இலட்சம் தமிழர்களின் குருதி குடித்தவன், மனித இரத்தவாடை அவனை விட்டு அகலாத நிலையில், அவன் 54 நாடுகளுக்குத் தலைவனாகப்போகிறான். சிலி நாட்டின் பினோசே போல், யூகோஸ்லாவியாவின் மிலோசோவிச் போல் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூனிக்குறுகி நிற்க வேண்டிய கொடியவன், 54 நாடுகளின் கோமானாகஆக்கப்பபடுவான் எனில், அம்முயற்சியில் ஈடுபடும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் காரித்துப்புவது யார்? காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலாளராக இருப்பவர் இந்தியாக்காரர் கமலேஷ் சர்மா!இந்தியாவின் திரைமறைவு வேலைகளுக்கு ஏற்ற நபராக அல்லவா அவர் இருப்பார்.

 கொழும்பு செல்ல கனடா நாட்டுப் பிரதமர் மறுத்துவிட்டார்; மனித உரிமைகள் பறிக்கப்பட்டு, போர்க் குற்றங்கள் புரியப்பட்ட மண்ணில் என் கால்கள் பதியாது; கொழும்பில் காமன்செல்த் மாநாடு நடத்தினால் நான் கலந்து கொள்ள மாட்டேன் வேண்டுமானால் அதிகாரிகளை அனுப்பி வைக்கிறேன் என்று கூறிவிட்டார்.

 தென்னாப்பிரிக்காவின் வெள்ளை இன ஆதிக்கத்தைக் கண்டித்து, கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்து, இந்தியாவும் இன்னபிற நாடுகளும் காமன் வெல்த்திலிருந்து அந்நாட்டை 1961இல் வெளியேற்றின. சிறுபான்மை இன மக்களை அரசும், பெரும்பான்மையின வெறியர்களும் படுகொலை செய்ததைக் கண்டித்து ஜிம்பாப்வே நாடு 2003-இல் காமன் வெல்திலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் நாதியற்ற தமிழ் இனம் அழிக்கப்பட்டால் அதற்கு நீதி கிடைப்பதில்லை.

 காமன் வெல்த்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டியது இலங்கை நாடு. ஆனால், அந்நாட்டில் மாநாடு நடத்தி, அதன் ஆட்சித் தலைவனை 54 நாடுகளுக்குத்தலைவனாக்க முயற்சிகள் நடக்கின்றன. இம்முயற்சியில் இந்தியாவின் பாத்திரம் முதன்மையானது.

 இந்தியாவின் தமிழினப் பகை உணர்வை இளம் நெஞசங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! ஏனெனில் இந்திய அரசின் தமிழின எதிர்ப்பை காங்கிரசுக் கட்சியின்வஞ்சகமாக, சோனியா காந்தியின் சூழ்ச்சியாகக் காட்ட தமிழகத்தில் கட்சிகள் போட்டி போடுகின்றன.

 எந்த அனைத்திந்தியக் கட்சியாக இருந்தாலும், வடநாட்டுக் கட்சியாக இருந்தாலும் தமிழினத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கமாட்டா என்பதை அண்மையில் மாணவர்கள் அறிந்திருப்பார்கள்.

 நெடுந்துயிலுக்குப் பிறகு விழித்தெழுந்து, ‘காந்தி செத்தா போயிட்டாரு’ என்று கேட்பது போல் இப்பொழுதுதான் கருணாநிதிக்கு ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று உரைத்திருக்கிறது.

 காங்கிரசு, பா.ச.க., ஐக்கிய சனதா தளம், சமாஜ்வாதிக் கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ., தலைமை ஆகிய கட்சிகள் ‘இனப்படுகொலை’ இலங்கையில் நடத்தப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று மறுத்துவிட்டன.

தமிழக இளைஞர் முன்னணியும், தமிழ்நாட்டு மாணவர்களும் வலியுறுத்தியதற்கு ஏற்ப, ஐ.பி.எல். மட்டைப்பந்து விளையாட்டில், சிங்களர் இடம்பெற்றிருந்தால் அக்குழுக்கள் தமிழ்நாட்டில் விளையாட அனுமதிக்க முடியாது என்று தமிழகமுதலமைச்சர் செயலலிதா அறிவித்துவிட்டார்.

 ஆனால் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, சிங்களர் இடம் பெற்றுள்ள அணி விளையாட கேரளத்தில் விளையாட எல்லா வசதிகளும் செய்துத் தருவோம் என்று அறிவித்துள்ளார்.

 இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் கரியவாசம் அண்மையில் வெளியிட்ட செய்தியில் சிங்களர்கள், ஒரிசா, வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்துஇலங்கைக்கு வந்தவர்கள்; சிங்கள மொழியானது, சமசுக்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் வழி உருவானது என்று கூறியுள்ளார்.

 ஆரிய இன வேர், ஆரிய மொழி வேர் ஆகியவற்றிலிருந்து தோன்றியவர்கள்தாம் சிங்களர்; அவ்வேரிலிருந்து தோன்றியது தான் சிங்கள மொழி என்கிறார். எனவே, இந்தியர்கள் இலங்கையை எதிர்க்கமாட்டர்கள் என்கிறார்.

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து இதைத்தான் சொல்லி வருகிறது. இந்திய ஆரியமும் இலங்கை ஆரியமும் ஒரு மூலம் கொண்டவை.இவ்விரண்டிற்கும் தமிழினம் வரலாற்று வழியில் நெடுங்காலமாகப் பகையினம். எனவே, தமிழினத்தை அழிக்கும் போரில் இந்தியா பங்கு கொண்டது, காங்கிரசின் - சோனியாவின் சொந்த வெறுப்பு காரணமாகஅன்று; பா.ச.க.வோ மற்ற கட்சிகளோ நடுவண் அரசில் இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இந்த உண்மையை இப்போதாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் முழுமையாக உணர வேண்டும்.

 இந்தியாவிற்கு சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளி!

 இந்தியாவின் அடிமைக் காலனியாகத் தமிழ்நாடு இருக்கிறது. அடிமை கொண்டுள்ள இந்தியா வழங்கும் கங்காணிப் பதவிகள், சொத்துகள் குவித்துக் கொள்ள அதுதரும் சில வாய்ப்புகள் ஆகிய தன்னல வாய்ப்புகளுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள், இந்திய அரசியல் கட்டுக்கோப்புக்குள் நின்று, அதற்குக் கீழ்ப்பட்டு, ஈழச்சிக்கலில் குரல் கொடுக்கின்றன.

 தமிழக அரசியலில் நிலவும் இத்தகைய இந்திய அடிமை மனப்பான்மையை உடைத்தெறிந்து இன உரிமைக்காக மாணவர்கள் கட்டுத் தளையற்று சிந்திக்கவேண்டும். மாற்று அரசியல் என்பது ஆளை மாற்றுவது அல்ல; கட்சியை மாற்றுவது அல்ல; அணியை மாற்றுவது அல்ல. மாற்றுக் கொள்கையை - மாற்று இலக்கை முன்வைப்பது!

Pin It