இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்கு ஆண்டுக்கொருதடவை வணக்கம் செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கவிடாமல் இவ்வாண்டு தடுத்து விட்டது தமிழக அரசு.

தமிழக சட்டப் பேரவையில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானங்களை முதல்வர் செயலலிதா அடுத்தடுத்து நிறைவேற்றினார். இலங்கைக்கெதிராகப் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும், ஈழம் குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும், பன்னாட்டுப் புலனாய்வு தேவை, சிங்களர் இடம்பெற்றுள்ள மட்டைப்பந்து ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது, கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று மிகச் சரியான தீர்மானங்களையும், முடிவுகளையும் எடுத்தார் செயலலிதா.

இந்திய அரசு அதிரும்படி மேற்கண்ட முடிவுகளை அறிவித்த செயலலிதா ஆட்சி, இனப்படுகொலையில் மாண்டு போன மக்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தத் தடை விதித்தது ஏன்? இச்சிக்கலில் இந்திய அரசுடன் தமிழக அரசு கைகோத்துக் கொண்டது ஏன்?

முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழின உணர்வாளர்களின் கருத்துப் பரிமாற்றங்களைக் கண்காணிக்க அவற்றின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரக் காவல் இணை ஆணையர் தலைமையில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் இந்திய அரசுடன் சேர்ந்து செயலலிதா அரசு எடுத்த நடவடிக்கை தான்! இந்திய அரசின் உளவுத்துறையும் தமிழக அரசின் உளவுத்துறையும் இணைந்து கொண்டு வந்திருப்பதுதான் இந்தக் கண்காணிப்பு!

2013 சூன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டில், தமிழகமெங்கும் அரசுத் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை, ஆங்கிலப பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்று கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் சட்டப்பேரவையில் அறிவித்தார். எந்தெந்தப் பள்ளிகளில் முதற்கட்டமாக ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்ற பட்டியலும் அணியமாகிவிட்டது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் ஆங்கில மொழியில் நடத்தப்படும். மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்வெழுத வேண்டும்.

அடுத்த அதிரடியாக, கல்லூரிகளில் ஆங்கில வழியில் கலை, அறிவியல் பாடங்களை படிப்போர் தமிழில் தேர்வெழுதலாம் என்று இருந்ததைக் கைவிட்டு, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்று தமிழக அரசின் உயர்க் கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்நடவடிக்கைகள் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழின உணர்வாளர்களின் கருத்துப் பரப்பல் ஆகியவற்றுக்கெதிராக வீசப்பட்ட வெடிகுண்டுகள் ஆகும். திட்டமிட்டு, குறிப்பான இலக்கு நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவை!

இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள காலம் எது? தமிழின உணர்வாளர்கள் பாராட்டும் வகையில் ஈழம் தொடர்பான தீர்மானங்களும் முடிவுகளும் முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள காலத்தில்! கச்சத்தீவை மீட்டுத் தருவேன் என்று முதலமைச்சர் முழங்குகின்ற காலத்தில்!

முதலமைச்சர் செயலலிதாவின் மேற்கண்ட நடவடிக்கைகளை உற்றுப்பார்த்தால், ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன.

கருணாநிதி இழந்துவிட்ட தமிழின உணர்வாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும்; தமிழின உணர்வாளர்களைக் கொண்ட வாக்கு வங்கியைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக ஈழம் தொடர்பான, தமிழின உணர்வாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை அப்படியே தீர்மானம் போடுவது; பேசுவது ஒரு பக்கம். முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு நினைவு வணக்கம் நடத்தத் தடை போடுவது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தையும், தம்பி பாலச்சந்திரன் படத்தையும் காவல்துறையினரை ஏவி கிழித்தெறியச் செய்வது, சிற்றூர்களில் கூட நினைவு வணக்கம் செலுத்தவிடாமல் காவல்துறையை ஏவி அரண் அமைப்பது என்ற இனத்துரோகச் செயல்கள் மறுபக்கம்!

தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் நமக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலையின் கீழ் நின்று கூட முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு மலர் வணக்கம் செய்யத்தடை! சிலையை? சுற்றிக் காவல்துறையினரை நிறுத்தினர்.

திறந்த வெளியில் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை நடத்த இருந்த நினைவு நாள் கூட்டங்களுக்குத் திடீர்த் தடை! தமிழகமெங்கும் தடை!

இது கருணாநிதி பாணி பம்மாத்து அரசியல் தானே!

ஒன்றரை இலட்சம் உறவுகளை காவு கொடுத்துவிட்டு, குற்ற உணர்வோடு குறுகுறுக்கும் தமிழினம் ஒப்பாரி வைத்து அழக்கூட உரிமை இல்லையா?

இது ஒப்பாரியோடு முடியாது, இன உணர்வாக - இன எழுச்சியாக வீச்சுப் பெறும் - அது கூடாது என்பது தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் எச்சரிக்கை உணர்வு! அதே எச்சரிக்கையோடுதான் செயலலிதாவும் தடை போட்டுள்ளார்.

தமிழ் மொழி என்றாலே செயலலிதாவிற்கு எப்போதுமே ஒவ்வாமை ஏற்பட்டு விடும். 1998-இல் ஐந்தாம் வகுப்பு வரைக் கட்டாயம் தமிழ் அல்லது தாய்மொழியைப் பாட மொழியாகவும பயிற்று மொழியாகவும் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி அரசு போட்ட ஆணையை அன்று தமிழகத்தில் எதிர்த்த ஒரே தலைவர் செயலலிதா மட்டுமே! நடுவண் தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் தலைவராக இருந்தும் அதன் நிர்வாகிகளைச் சந்திக்கக்கூட மறுக்கிறார் செயலலிதா. அதன் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்கு அவர் போவதே இல்லை.

இப்பொழுது தொடக்கப்பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை தமிழை விரட்டிவிட்டு, அவற்றை ஆங்கிலமயமாக்கிட சூறாவளி வேகத்தில் செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார் செயலலிதா.

தமிழ்வழி வகுப்புகளில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் சேர்ப்பது குறைந்து வருகிறது எனில் அக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை சாக்காக வைத்துத் தமிழ்வழிக் கல்வியை ஊற்றிமூடத் திட்டம் தீட்டக்கூடாது.

1.            தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கச் சட்டம் இயற்ற வேண்டும்.

2.            போதிய ஆசிரியர்களை அமர்த்த வேண்டும். விளையாட்டுத் திடல், கழிவறை வசதி போன்ற உள்கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். ஓவியம், இசை ஆகியவற்றிற்கு ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.

3.            மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகள் சேர்க்கையில் தமிழ்வழி மாணவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

4.            மெட்ரிக்குலேசன் முதலாளிகள் நடத்தும் பள்ளிகளில் - குறிப்பாக நாமக்கல் வட்டாரப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்புக்குரிய பாடத்தை மட்டும் நடத்துகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்புப் பாடத்தை 12ஆம் வகுப்பில் மட்டும் படிக்கிறார்கள். மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அப்பாடத்தை இரண்டாண்டுகள் படிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிக மதிப்பெண் வாங்கித் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அம்மாணவர்களுக்குப் பாடம் முழுமையாகப் புரிந்திருக்காது. பெற்றோர்களை ஈர்த்து வணிகம் செய்ய இப்பள்ளிகள் செய்யும் தந்திரத்தை முறியடிக்க 11ஆம் வகுப்பிலும் பொதுத் தேர்வு வைக்க வேண்டும்!

இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதை விடுத்து ஆங்கிலவழி வகுப்புகளைத் திறந்தால், ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பின்தங்கிவிடுவார்கள். குறிப்பாக மாணவிகளும் கிராமப்புற மாணவர்களும் அதிகம் பாதிக்கப்படுவது. சமூகநீதி பாதிக்கப்படுவார்கள்.

உலகெங்கும் பெரும்பாலும் தாய்மொழியில்தான் கல்வி வழங்குகிறார்கள். குழந்தை உளவியல், கல்வி உளவியல் வல்லுநர்கள் தாய்மொழிக் கல்வி வழியாகத்தான் அறிவு வளரும் என்கின்றனர். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டும் கற்பிக்கலாம்.

கருணாநிதி ஆண்டாலும் செயலலிதா ஆண்டாலும் இன, மொழி உரிமைகளுக்கு நாம் போராடித்தான் ஆக வேண்டும்.

இன, மொழி எதிர்ப்புத் திசையில் செயலலிதா ஆட்சி தொடர்ந்தால் அதை எதிர் கொள்ள அணியமாக வேண்டும்.

Pin It