கடைசியில் ஒரு வழியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மரண தண்டனையை எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டது. கடந்த மே 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் தில்லியில் கூடிய அக்கட்சியின் நடுவண் குழு இவ்வாறு தீர்மானித்தது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தாங்கள் முதன்மையான கட்சி என்று கூறிக்கொள்ளும் இக்கட்சியின் மார்க்சிய மூளைகளுக்கு மரண தண்டனைக்கு எதிராக முடிவெடுக்க இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. இப்போதும் இக்கட்சி அரைக் கிணறுதான் தாண்டியிருக்கிறது.

“மரணதண்டனை பல நேரங்களில் தவறாக வழங்கப்பட்டுவிடுகிறது. இதனால் ஏற்படும் உயிர் பாதிப்பு பின்னால் சரி செய்துகொள்ள முடியாத ஒன்றாகும்’’ என்று தனது முடிவுக்குக் காரணத்தை விளக்கும் அத்தீர்மானம் “எனினும் அரிதிலும் அரிதான வழக்குகளில், தண்டனைக் குறைப்பு ஏதுமின்றி வாழ் நாள்முழுவதும் சிறைத்தண்டனை வழங்கலாம்’’ என்று கூறுகிறது.

“அரிதிலும் அரிதான’’ என்பதற்கு தெளிவான வரையறை ஏதுமில்லை என்பதுதான் மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் முக்கிய வாதம். நீதிபதிகள் அரிதிலும் அரிதான என்பதற்கு மனம் போன போக்கில் விளக்கமளித்து தவறான முறையில் சாவுத்தண்டனை வழங்கிவிடுகிறார்கள் என்பதை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. (எ.கா: சந்தோஷ்குமார்பரியார் – எதிர் -- மகாராஷ்ட்டிர மாநில அரசு) இவ்வாறு தவறான முறையில் நீதிமன்றம் மூலம் உயிர்ப்பறிப்பு நடப்பதுதான் மரணதண்டனைக்கு எதிரான முக்கிய காரணமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடுவண் குழு தீர்மானம் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டுதான் மரண தண்டனையை எதிர்ப்பது என முடிவுக்கு வந்துள்ளது. எனினும் ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்ற நிபந்தனையை முற்றிலும் கைவிட அதற்கு மனம் வரவில்லை. வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் தண்டனை என்பதற்கு இந்த நிபந்தனையை பொருத்திக் கொள்ளுகிறது. இது மரண தண்டனைக்கு எதிரான அதன் நிலைப்பாட்டையே கேலிக் கூத்தாக்குகிறது. மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்று கோருவதற்கு முதன்மையான நோக்கமே, குறிப்பிட்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு சிறையாளிகள் விடுதலையாகி தங்கள் குடும்பத்தோடும், சமூகத் தோடும் இணைந்து பிறரைப் போல இயல்பான வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவு மரணதண்டனை பெற்றோரின் உற்றார் உறவினர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் செய்யும் அரைகுறை நடவடிக்கையே ஆகும்.

தூக்கு தண்டனை சிறையாளிகளின் மனநிலையிலிருந்து நோக்கினால் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுவதை விட தூக்கில் தொங்கவிடப்படுவது மேலானது. பல நீதிமன்றத் தீர்ப்புகளே கூறுவது போல் மரணதண்டனை என்பது ஒரு நொடி மரணம். மரண தண்டனைக்காக காத்திருப்பது என்பது ஒவ்வொரு நொடியும் மரணம். வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் இருப்பதோ, அதை விடக்கொடியது. பிணமாகத் தொங்காமல் நடைப் பிணமாய் இருக்க வைப்பது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இந்த முடிவு எடுப்பதற்குத்தான் இக்கட்சிக்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்றுள்ள இந்திய நீதி மன்றங்களை ‘முதலாளிய நீதி மன்றங்கள்’ என்றுதான் வரை யறுக்கிறது. ஆனால் இந்த ‘முதலாளிய நீதிமன்றங்கள்’ கூட மார்க்சிஸ்ட் கட்சியை விட முற்போக்காக சிந்திக்கின்றன.

எடுத்துக்காட்டாக சங்கீத் - எதிர் - அரியானா மாநிலஅரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வாழ்நாள் தண்டனை பற்றி விவாதிப்பதை குறிப்பிடலாம். 2012 நவம்பர் 20 அன்று நீதிபதிகள் கே.எஸ்.இராதா கிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு வாழ்நாள் தண்டனை குறித்து கீழ்வருமாறு திறனாய்வு செய்கிறது.

“20ஆண்டுகள், 25ஆண்டுகள் சிறைத்தண்டனை, தண்டனை குறைப்பே இன்றி வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை என உச்ச நீதிமன்றம் வழங்கிவரும் தீர்ப்புகள் அரசாங்கத்தின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தையே நீக்குவதாக உள்ளது.

இந்த நிலைப்பாடு அனுமதிக்கப்படக் கூடாதது என்று நாங்கள் கருதுகிறோம். அரசாங்கத்தை பார்த்து உங்களுக்கு தண்டனை குறைப்பு அதிகாரம் இல்லை என்று சொல்வது போல் இவ்வாறான தீர்ப்புகள் உள்ளன. அவ்வாறு நீதிமன்றம் அரசைக்கட்டிப் போட முடியாது. எந்தக் காரணம் கொண்டும் ஒரு நீண்ட நாள் சிறையாளி தண்டனைக் குறைப்பு கோருவதற்கான உரிமையை நீதிமன்றம் பறித்து விடக்கூடாது’’.

வாழ்நாள் தண்டனை என்பதை ஒரு மனிதனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதற்கும் சிறையிலடைக்கும் தண்டனை எனப்பொருள் கொள்ளக்கூடாது என்று இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 432 தண்டனக் குறைப்பு பற்றி பேசுகிறது.

ஒரு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஒருவரின் தண்டனையை தொடர்புடைய மாநிலஅரசு எப்போது வேண்டுமானாலும் குறைக்கலாம். அவ்வாறு தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு முன் அக்குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய அல்லது தண்டனையை உறுதி செய்த நீதிபதியிடம் கருத்துக் கேட்டு அதனை ஆய்வு செய்து அதன்பிறகு முடிவெடுக்க வேண்டும் என்பது இதற்குரிய நிபந்தனை.

ஆயினும், அரசுக்கு உள்ள இந்த தண்டனைக் குறைப்பு அதிகாரத்துக்கு இந்திய தண்ட னைச் சட்ட விதி 433 (A) ஒரு வரம்பு விதிக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனுவில் மரணதண்டனை நீக்கப்பட்டு வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறைவாசம் முடிவதற்கு முன்னால் தண்டனைக் குறைப்பு கோரமுடியாது என்பதே அந்த வரம்பு.

இந்திய தண்டனைச் சட்ட விதி 433 (A) விதிக்கும் வரம்புக்குட்பட்டு விதி 432ன் படி தண்டனைக் குறைப்பு பெறும் உரிமையைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கிறது.

‘முதலாளிய சட்டம்‘ வழங்கும் சனநாயகத்தைக் கூட ‘பாட்டாளியக் கட்சி’ தட்டிப் பறிக்கிறது.

தண்டனைக் குறைப்பு கோரும் மேல் முறையீடுகளில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் தவறு செய்வதை உச்சநீதிமன்ற தீர்ப்புகளே சுட்டி காட்டுகின்றன. இவ்வாறான தீர்ப்புகளில் இராம்தியோசவான் -எதிர்- பானிகாந்த்தாஸ் என்ற வழக்கின் தீர்ப்பு கவனிக்கத்தக்கது.

மிகவும் அரிதாக, ஏற்கப்படும் இரண்டாவது சீராய்வு மனுவின் மீது (Second Review Petition) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.,ஜெயின், வி.எஸ்.சிர்புர்கர், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் 2010 நவம்பர் 19 அன்று தீர்ப்பு வழங்கினர். அசாமில் நிகழ்ந்த கொலை வழக்கு இது.

இராம்தியோசவான் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரைக் கொலைசெய்துவிடுகிறார். அவர்க்கு கீழமை நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலும் அத்தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அத்தீர்ப்பின் மீது அவர் அதே உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்க 10.05.2001 அன்று அம்மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து மரணதண்டனையை உறுதிசெய்கிறது.

ஆயினும் கொலைக் குற்றம் நடந்த போது, இராம்தியோசவானுக்கு 16 வயது என எடுத்துக்காட்டி “சிறாருக்கு மரண தண்டனையா?’’ என்ற தலைப்பில் முனைவர் வேத்குமாரி என்ற சட்டத்துறைப் பேராசிரியர் தில்லியிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதுகிறார்.

இந்தக் கட்டுரையையே காரணமாக வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் தானே முன்வந்து இராம்தியோசவான் மரணதண்டனை குறித்து விசாரித்தது. கொலைக் குற்றம் நடந்த நேரத்தில் இராம்தியோசவான் சிறுவன்தான் என முடிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து கருணை மனு அசாம் ஆளுநரிடமோ இந்திய குடியரசுத் தலைவரிடமோ வருமானால் மரண தண்டனையை இரத்து செய்து தண்டனைக் குறைப்பு வழங்கும் வகையில் அம்மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது.

இதே அடிப்படையில் இராம்தியோசவான் அசாம் ஆளுநரிடம் கருணை மனு அளித்தார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் பின்னணியில் இம்மனுவை ஆய்வு செய்த அசாம் மாநில ஆளுநர் இராம்தியோசவானுக்கு 12.01.2002 அன்று தண்டனைக் குறைப்பு வழங்கி வாழ்நாள் சிறையாக மாற்றி ஆணையிட்டார்.

இந்த தண்டனைக் குறைப்பை எதிர்த்து கொலையுண்டவரின் சகோதரர் பானிகாந்த்தாஸ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 8.05.209 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஆளுநரின் தண்டனைக் குறைப்பை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்து ஆணையிட்டது.

இத்தீர்ப்பின் மீது இரண்டாவது சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட இரண்டாவது சீராய்வு மனுவை ஏற்று விசாரித்ததே மிகவும் அரிதான நிகழ்வு ஆகும்.

இந்த இரண்டாவது சீராய்வு மனுவின் மீது தீர்ப்பளித்த அமர்வு தனது தீர்ப்புரையில் கீழ் வருமாறு குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

“இந்த உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளில் ஒரு மனிதனின் மனித உரிமை பறிக்கப் பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதிக் கொண்டு முதல் சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதாகக் கருதுகிறோம். அது தவறானது. குடிமக்களின் மனித உரிமை மீறல்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் அரிதாக நிகழ்பவையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறான மீறல்கள் உச்ச நீதிமன்றத்தில் நிகழவே நிகழாது என்று சொல்லிவிட முடியாது’’.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் திறனாய்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவனித்ததாகத் தெரியவில்லை.

மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுவரும் புல்லர் வழக்கிலும், இராசீவ் காந்தி கொலை வழக்கிலும் இவ்வாறான கடும் தவறுகள் நடந்திருப்பதை ஏடுகளில் வெளிவரும் ஆய்வுரைகள் அக்கக்காக பிய்த்துப் போட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வது போல் அரிதிலும் அரிதான வழக்குகளில் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டுமென்றால் தூக்குமர நிழலில் நிற்க வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழர் மட்டுமின்றி நளினி, இராபட்பயஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய அப்பாவிகளும் கால் நூற்றாண்டுக்கு நெருக்கமாக சிறையில் வாடியபின்னும் விடுதலையே ஆகக்கூடாது என்று பொருள்.

எல்லா வழக்குகளிலும், அரிதிலும் அரிதான வழக்கு என வரையறுக்கப்பட்டே மரண தண்டனைகள் வழங்கப்படுகிறன. மார்க்சிஸ்ட் கட்சியின் தர்க்கப்படி மரண தண்டனை நீக்கப்பட்ட யாருக்குமே விடுதலை கிடைக்காது.

நல்ல வேலை, தமிழ் நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி இப்போது ஆட்சியிலிருந்து புலவர் கலிய பெருமாள், தோழர் தியாகு போன்றவர்கள் (மரணதண்டனை நீக்கப்பட்டு) சிறைக்குள் இல்லை. இருந்திருந்தால் மார்சிஸ்ட் கட்சி அதன் நடுவண் குழு தீர்மானத்தின்படி இவர்களை வெளியில் விட்டிருக்காது.

உலகெங்கிலும், இந்தியாவிலும் மரண தண்டனைக்கு எதிராக ஏற்பட்டு வரும் கருத்து அலைகளால் அழுத்தப்பட்டு வேறு வழியின்றி, மரண தண்டனைக்கு எதிராக முடிவெடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆயினும் அதன் பழமைவாதம் அதனை இன்னும் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரைக்கிணறு தாண்டுகிறது. அரைக்கிணறு தாண்டுவதை விட கிணறு தாண்டாமலிருப்பது தாழ்வற்றது.

Pin It