நக்சல்பாரி இயக்கத்தின் தமிழக நிறுவனர்களில் ஒருவரும் தூக்குத் தண்டனை பெற்று பின்னர் வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வெளிவந்த ஈகியும் தமிழ்த்தேசியப் போராளியுமான புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் பெண்ணாடத்தில் 16.5.2013 அன்று நடந்தது. கூட்டத் திற்குப் புலவரின் தம்பியும் புலவரோடு சேர்ந்து சிறைத்தண்டனை பெற்றவரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பெண்ணாடம் கிளைச்செயலாளருமான தோழர் கு.மாசிலாமணி தலைமை வகித்தார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெங்கசாமி, புலவர் கலியபெருமாள் அவர்களின் மூத்தமகனும் அவரோடு சிறைத்தண்டனை அனுபவித்தவருமான தோழர் க.வள்ளுவன், புலவரின் இளையமகனும், அவரோடு சிறைத்துன்பங்களை அனுபவித்தவருமான தோழர். க.சோழநம்பியார், தமிழக மகளிர் ஆயத்தின் அமைப்பாளர் தோழர் அருணா, தமிழர் நீதிக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சௌரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சின்னதுரை, மனித நேயப்பேரவை பொறுப்பாளர் தோழர் ச.பஞ்சநாதன், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் தமிழரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் தயா தமிழன்பன், நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் தோழர் முத்து அசோகன், திராவிடர் கழக ஒன்றியச் செயலாளர் தோழர் வெ.அறிவு, தமிழக இளைஞர் முன்னணித் தோழர் சி.பிரகாசு, ஆகியோர் உரையாற்றினர்.

த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.க. தோழர் சி.பெரியார் செல்வன் நன்றி கூறினார்

கூட்டம் தொடங்குவதற்கு முன் புலவர் கலியபெருமாள் மற்றும் அவர் துணைவியார் அன்னை வாலாம்பாள், ஆகியோர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள சவுந்திர சோழபுரம் செங்களத்தில் தலைவர்களும் தோழர்களும் வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர் பெண்ணாடம் பேருந்து நிலையம் அண்ணா அரங்கத்தில் தொடங்கிய பொதுக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக சாத்துக்கூடல் தே.இளநிலா அவர்களின் தலைமையிலான திருவள்ளுவர் கலைக்குழுவின் தப்பாட்ட நிகழ்ச்சி மிக எழுச்சியாக நடைபெற்றது. அதன் பிறகு தோழர் சமர்ப்பாகுமரன் - சேகுவேரா ஆகியோர் கனல் தெறிக்கும் இன எழுச்சிப்பாடல்கள் பாடினர்.

நிறைவாக தோழர் பெ.மணியரசன் பேசும் போது பின்வருமாறு பேசினார்.

“தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம் அவருக்கு மட்டுமன்றி இப்பகுதியில் சமூகப் புரட்சிக்காகவும் தமிழ்த் தேச விடுதலைக்காகவும் உயிரீகம் செய்த தமிழ்த் தேச விடுதலைப் போராளி தோழர் தமிழரசன் தோழர்கள் காணியப்பன், சர்ச்சில், கணேசன், லெனின், உள்ளிட்ட போராளிகள் அனைவருக்கும் செலுத்தும் வீரவணக்கமாகும்.

அவர்களுடைய போராட்ட முறையில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களுக்காக, தமிழ்த் தேசத்திற்காக இன்னுயிர் ஈந்த ஈகியர் ஆவர். பணம், பதவி, புகழ், மூன்றுக்கும் ஆசைபடாமல் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காகப் போராடியவர்கள். இன்று பகட்டு அரசியலில் ஈடுபட்டு குறுக்கு வழியில் பிரபலம் தேடுவதற்காக இன்னாரை வரவேறுக்கும் இன்னார் என்று தங்கள் படங்களை பதாகைகளில் போட்டுக் கொள்ளும் கவர்ச்சி அரசியல் மேலோங்கி யுள்ளது. இளைஞர்கள் தங்களின் சமூகப்பொறுப்பை தங்களின் பண்பாட்டை புலவர் கலியபெருமாள், தமிழரசன் போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

தங்களுக்கு உடன்பாடில்லாத வழிமுறைகளில் போராடிய ஈகிகளை புறக்கணிக்கும் போக்கு தமிழ் நாட்டில் உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்; பகத்சிங் தோழர்கள் வேறொரு வழிமுறையைப் பின்பற்றினர்; சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார். இந்த மூன்று பிரிவினரையும் வரலாறு மதிக்கிறது. காந்தியம் பேசும் அரசியல்வாதிகளும் மதிக்கிறார்கள். முதலாளிய அரசியல்வாதிகள் மூன்று பிரிவினரையும் அரவணைத்து மதிக்கும் அந்தப்போக்கை பார்த்து பாட்டாளிவர்க்க புரட்சிகுத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நான் கூறும் இந்தத் திறனாய்வு எனக்கும் பொருந்தும் மற்ற தோழர்களுக்கும் பொருந்தும்.

மார்க்சியத்தை ஓர் ஆன்மிக நூல் போல் பார்க்காமல் மண்ணுக்கேற்ப மாற்றி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற படைப்பூக்கம் மிக்க புரட்சியாளர்கள் தோழர்கள் புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோர்.

அவர்கள் 1984 ஆம் ஆண்டு மே மாதம் இதே பெண்ணாடத்தில் இரண்டுநாள் நடத்திய தமிழ்த் தேசிய இனம் குறித்த கருத்தரங்குகளும், பொதுக் கூட்டங்களும் தமிழ்த் தேசிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளவையாகும். தமிழ்த் தேசிய இனச்சிக்கல் குறித்து ஆராயும் எவரும் பெண்ணாடத்தின் தீர்மானத்தை விட்டு விட்டு தங்கள் ஆராய்ச்சியைத் தொடர இயலாது.

அதே 1984 ஆம் ஆண்டு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டுக்கொண்டிருந்த நானும், இப்போது த.தே.பொ,க.வின் பொதுச்செயலாளராக உள்ள தோழர் கி.வெங்கட்ராமனும் தமிழ்த் தேசிய இனச்சிக்கல் உள் ளிட்ட மண்ணுக்கேற்ற மார்க்சியம் குறித்து எங்களுக்குள் விவாதம் செய்து கொண்டிருந்தோம். 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் உள்ள தோழர்களையும் அழைத்து கல்லணையில் இரண்டு நாள் விவாதித்தோம். அதில் எழுதப்பட்ட ஆவணமாக ஓர் அறிக்கையை வைத்து விவாதித்தோம். சி.பி.எம். தலைமை எங்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியது. அதன் பிறகு எம்.சி.பி.ஐ. என்றும், தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி என்றும் உருவானதுதான் எங்கள் இயக்கம்.

கல்லணையில் விவாதிக்கப்பட்ட அந்த ஆவணத்தை, “இந்தியாவில் தேசிய இனங்கள்’’ என்ற நூலாக வெளியிட்டோம் அதில் இந்தியா ஒரு தேசமல்ல, இந்தியாவில் பல தேசங்கள் இருக்கின்றன. இந்தத் தேசிய இனங்களுக்குத் தங்களது சொந்த தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமை அதாவது தன்னுரிமை உண்டு என்று லெனின் கருத்துக்களை சுட்டிக் காட்டி கூறியிருந்தோம். அந்த ஆவணத்தை நான் எழுதினேன் என்றாலும் பல தோழர்களின் கருத்துப் பங்களிப்பும் அதில் இடம் பெற்றன.

1984 ஆம் ஆண்டு தனித் தமிழ்நாடு கோரிக்கையை புலவர் கலியபெருமாளும், தமிழரசனும் பெண்ணாடம் தீர்மானத்தில் கூறியிருந்தார்கள். அதே காலத்தில் சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ்த்தேசியக் கருத்தியலை நாங்களும் முன் வைத்தோம்.

இந்தியா பல தேசங்களைக் கொண்டது. இதை ஒரு தேசம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூட கூற வில்லை. இது அரசுகளின் ஒன்றியம் (UNION OF STATES) என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. (விதி:1) அதே போல் “இந்தியன்’’ என்று ஒரு தேசிய இனம் இருப்பதாக அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியாவின் குடிமக்கள் (CITIZEN OF INDIA) பற்றி மட்டும் தான் அது கூறுகிறது. ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தை யாத்துத் தந்த அதே தலைவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இந்திய தேசம், இந்தியன் என்ற தேசியஇனம் என்ற புனைவுக் கருத்தியலைப் பேசி இந்திய தேசிய வெறியை பல்தேசிய இன மக்களுக்கு ஊட்டினார்கள்.

உலகத்தில் நடந்த புரட்சிகள் முதலாளியப் புரட்சியாக இருந்தாலும் கம்யூனிசப் புரட்சியாக இருந்தாலும் அவை ஒரு தேசத்தில் - ஒரு தேசிய இனத்தில்தான் நடந்தனவே தவிர பல தேசிய இனங்களுக்கிடையே ஒரே நேரத்தில் நடக்க வில்லை. பிரெஞ்சுப் புரட்சி பிரெஞ்சு தேசத்தில் மட்டும்தான் நடந்தது. பிரெஞ்சு தேசிய இனம் அதை நடத்தியது. இரசியப் புரட்சி இரசிய தேசிய இனத்தில்தான் நடந்தது. ஜார்மன்னன் பிடித்து வைத்திருந்த வெவ்வேறு தேசிய இன மக்களிடையே ரசியப் புரட்சி மையம் கொள்ளவில்லை. அவற்றில் ஆதரவு சக்திகள் மட்டுமே இருந்தன. அதனால்தான் அப்புரட்சியை ரசியப் புரட்சி என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிக் கூறியது. வரலாறும் இன்று வரை அவ்வாறே கூறுகிறது. அது சோவியத் ஒன்றியப் புரட்சி அல்ல. சோவியத் ஒன்றியம் என்பது 1917 இல் ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பிறகு உருவாக் கப்பட்ட கூட்டமைப்பு ஆகும்.

எப்பொழுதுமே ஒரு மக்கள் புரட்சி ஒரு தேசிய இன அடிப்படையத்தான் கொண்டிருக்கும். புரட்சிக்கான அடிப்படை அலகு ஒரு தேசிய இனமே தவிர பல தேசிய இனங்கள் அல்ல. ஒரே நேரத்தில் பல தேசங்களில் பல தேசிய இனங்களிடையே புரட்சி நடக்கவேண்டுமென்று டிராட்ஸ்கி கூறிய போது லெனின் அதை மறுத்தார். ஒரு புரட்சி ஒரு நேரத்தில் ஒரு தேசத்தில்தான் நடக்கும் என்றார்.

இந்தியாவில் பல தேசங்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் அனைத்திந்தியப் புரட்சி நடக்கும் வாய்ப்பே இருக்காது. கம்யூனிஸ்ட் கட்சி 90 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் செயல்பட்டும் கூட மக்கள் ஆதரவுப் பொருளில் அது அனைத்திந்தியக் கட்சியாக இல்லை. இந்திய விடுதலைப் போராட்ட சூழலில் உருவாகி அனைத்திந் தியக் கட்சியாக மக்கள் செல்வாக்கோடு வளர்ந்திருந்த காங்கிரசு கட்சியே தேய்ந்து வருகிறது. பல மாநிலங்களில் அக்கட்சி பொருட்படுத்தத் தக்க வலுவோடு இல்லை. பா.ச.க. நிலையும் அதுவே. மாறாக மாநிலக்கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் புதிது புதிதாக வளர்ந்துள்ளன. மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடுதான் இந்திய ஆட்சி நடைபெற வேண்டிய நிலை உள்ளது.

எனவே அனைத்திந்தியப் புரட்சி பற்றி பேசுவது, அது பற்றி தங்கள் கட்சித் திட்டத்தில் இலக்கு வைத்திருப்பது தெரிந்தோ தெரியாமலோ புரட்சியை நிரந்தரமாகக் கைவிடுவதற்குச் சமமாகும். முதலாளியக் கட்சிகள் அனைத்திந்தியக் கட்சிகளாக இருக்கின்றன என்றால் அவை நிலவுகின்ற சமூக அமைப்பை அப்படியே நீடிக்கச் செய்து அதற்குள் ஆதாயம் தேடும் சக்திகளைக் கொண்ட கட்சிகள் ஆகும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அடிப்படையான சமூக மாற்றத்திற்கான புரட்சியை நிகழ்த்த வேண்டியக் கட்சி. தேர்தல் கட்சியாக இருந்தாலும் ஆயுதப் புரட்சி செய்யும் கட்சியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேசிய இனத்தில்தான் புரட்சிக் கட்சியாக இருக்க முடியுமே தவிர பல் தேசிய இனங்களில் புரட்சிக் கட்சியாக இருக்க முடியாது.

வரலாற்றில் நடந்துள்ள கம்யூனிஸ்ட் புரட்சிகள் அனைத்தும் ஒரு தேசியஇனத் தாயகத்தில் நடந்தவையே. ரசியா, சீனா, கொரியா, வியட்நாம், கியூபா எனப் புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் ஒரு தேசப் புரட்சியே நடந்தது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் அனைத்திந்தியக் கட்சி வைத்திருப்பது அபத்தம். புலவர் கலியபெருமாள் அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினராகிய நாங்களும் அனைத்திந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, தமிழ்த் தேசப் புரட்சிக்கான தமிழக விடுதலைக்கான அமைப்பையும், கருத்தியலையும் உருவாக்கியவர்களாவோம்.

தமிழ்த் தேசியப் போராளி புலவர் கலியபெருமாள் அவர்களின் இந்த நினைவுநாளில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம். தமிழ்த்தேச விடுதலையை முன்னெடுப்போமென்று அவர் பெயரால் உறுதியேற்போம்’ ’இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

Pin It