இன்று அனைவருக்கும் பொதுவான உரிமையாக உள்ள தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012, பொதுச்சொத்து என்ற நிலையிலிருந்து, விற்பனைக் கடைச் சரக்காக மாற்றலாம் என்றது. இந்திய அரசின் இவ்வறிவிப் பிற்கெல்லாம் முன்பிலிருந்தே, கோக், பெப்சி என உலகமய முதலாளிகள் தொடங்கி, உள்ளூர் முதலாளிகள் வரை, குடிநீரை விற்பனைச் சரக்காக மாற்றும் ‘திருப்பணி’யைத் தொடங்கி விட்டனர். இதன் ஆபத்து என்னவென்பதை சென்னை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அரசு நிறுவனங்கள் விநியோகிக்கும் குடிநீரில் சுத்திகரிப்புக்காக அதிகளவு குளோரின் வேதிப்பொருட்கள் கலக்கப் படுவதாலும், முறையான வகையில் அவை சுத்திகரிக்கப்படாமல் அலட்சியமாக விநியோகிக் கப்படுவதாலும், சில நேரங்களில் கழிவு நீர் கலந்து வருவதாலும் பெரும்பாலான மக்கள் அதை குடிநீராகப் பயன்படுத்துவதில்லை. அதைக் களைவதற்கு, சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற பொறுப்புடன் அரசு செயல்பட முன்வரவில்லை. இது உலகமய முதலாளிய நிறுவனங்களுக்கு மிகவும் மகிழ்வை ஏற்படுத்தின.

பெப்சிகோவின் அக்குவாஃ பீனா (AQUAFINA), கொக்க கோலாவின் கின்லே (KINLEY) போன்ற நிறுவனங்கள் குடிநீரை, ‘மினரல் வாட்டர்’ என்ற பெயரில் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்தன. பல உள்ளூர் முதலாளிகளும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சிப் போக்கில், இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 950 தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளன.

இந்நிறுவனங்களில் பெரும்பாலானவை, நகரப் பகுதிகளைச் சுற்றியுள்ள நிலத்தடி நீர் அதிகமுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்குச் சென்று, ஆழ்குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை கேன் களில் அடைத்து விற்கின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள கிராமப்புறங் களிலிருந்து எடுக்கப்படுகின்ற நீரே, சென்னை மாநகரெங்கும் தனியாரால் விநியோகிக்கப் படுகின்றது.

தனியார் நிறுவனங்களால் செய்ய முடியும் இதே போன்ற குடிநீர் சுத்திகரிப்புச் சேவையை, தமிழக அரசு நினைத்தால் பகுதி வாரியாக, எளிதாகச் செய்துவிட முடியும். புதுச்சேரியில், தனியாரிடம் குடிநீர் விநியோகத்தை முற்றிலும் விட்டுவிடாமல், தனியார் நிறுவனங்களின் தொழில் நுட்ப உதவியைக் கொண்டு மாநில அரசே தனது பொதுப்பணித் துறையின் மூலம், 20 லிட்டர் அளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை வெறும் 7 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. இதைத் தனியார் உதவிகூட இன்றி, தமிழக அரசு முழுமையாக, தரமான முறையில் செய்திடமுடியும்.

ஆனால், குடிநீர் வழங்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயலும் அரசு, இவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, குடிநீர் வழங்கும் பொறுப்பை முழுவதுமாக தனியாருக்குத் தாரை வார்த்தால் எவ்வளவு தரகுத் தொகைக் கிடைக்கும் என்று கணக்குப் போடுவதில் ஆட்சியாளர்களின் கவனம் உள்ளது.

கோடைக்காலங்களில் தண்ணீர் பயன்பாடு அதிகரித்ததால், இலாபவெறியுடன் முறையான வகையில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுவதும், தூய்மை செய்யப்படாத கேன்களில் தண்ணீர் அடைத்து வைக்கப்படுவதும் என முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த 13.02. 2013 அன்று, நடுவண் குற்றப் புலனாய்வுத் (CBI) துறை அதிகாரிகள், விதிமுறைகள் மீறிய தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உரிமம் வழங்க கையூட்டு பெற்றதாக, இந்தியத் தர நிர்ணய நடுவத்தைச் (Bureau of Indian Standards - BIS) சேர்ந்த 2 அதிகாரிகளைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும், குடிநீரின் தரத்தைப் பரிசோதிக்கும் அறிவியலாளர்கள் ஆவர். இந்நிறுவனத்தின், சென்னை தரமணி அலுவ லகத்தை சி.பி.ஐ. சோதனையிட்ட போது, சற்றொப்ப 300க்கும் மேற்பட்ட உரிமம் முடிந்த தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சென்னையில் செயல்பட்டுக் கொண்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்தது. -அங்கீகாரம் இல்லாத தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆனையிட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடுமாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு முறையான உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வந்த, 103 குடிநீர் குடுவை தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்தனர். அவற்றை உடனடியாக இழுத்து மூடி, அவற்றின் மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர்க் குடுவை தயாரிக்கும் தனியார் நிறுவனங்களின் சங்கமான தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர் சங்கம், கடந்த 15.05.2013 அன்று முதல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்தம் செய்தது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த 309 தனியார் குடிநீர் சுத்தி கரிப்பு நிலையங்களும் தண்ணீர் வழங்குவதை நிறுத்தின.

தனியார் குடிநீர் வழங்கலையே பெரிதும் நம்பியிருந்த சென்னை நடுத்தரவர்க்க மக்களை இது கடுமையாக பாதித்தது. அசோக் நகரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட குடிநீர் குவளை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும்கூட சில வணிகர் களால் கொள்ளை இலாபத்துடன் விற்கப்பட்டது. மதுபான அருந்தகங்களில் கிடைத்த 3 ரூபாய் குடிநீர் பாக்கெட்டுகள், 7 ரூபாய் வரை விற்கப்பட்டன. இப்போராட்டத்திற்கு, பன்னாட்டு நிறுவனமான கின்லேவும் ஆதரவுத் தெரிவித்திருப்பதாக, தனியார் குடிநீர் விநியோக சங்கத் தலைவர் ஊடகங்களில் பெருமையுடன் பேட்டியளித்தார்.

போராட்டத்தின் போது, மக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்ததைக் கண்டு ஆர்வமடைந்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள், போராட்டம் நிறைவுற்ற இரண்டு நாட்களிலேயே, குடிநீர்க் குடுவைகளின் விலையை ரூபாய் 25லிருந்து, ரூபாய் 35 முதல் 40 வரை விலையேற்றம் செய்து விட்டனர். இதுதான் தனியார் நிறுவனங்கள், மக்கள் சேவையாற்றும் நிலை.

தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களின் இப்போராட்டம், மக்களுக்கும் அரசுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். எனவே, தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கையகப்படுத்தி, தமிழக அரசே தூய்மையான குடிநீர் வழங்கலை ஏற்று நடத்த வேண்டும்.

Pin It