பட்டினியால் பரிதவித்து கோரிக்கைப் பேரணி நடத்திய பிரெஞ்சு மக்களைப் பார்த்து 14 ஆம் லூயி மன்னன் சொன்னானாம் “ சாப்பிடுவதற்கு ரொட்டி இல்லையென்றால் என்ன? கேக் சாப்பிடுங்களேன்” என்றானாம்.

அதுபோல் இந்நாட்டு அரசியல் தலைவர்கள் வறுமையில் வாடும் மக்களைப் பார்த்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கேலிபேசுகிறார்கள். காங்கிரசு நாடாளு மன்ற உறுப்பினர் இராஜ்பப்பர், மும்பையில் முழுசாப்பாடு 12 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றார். இன்னொரு காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் ரசீத் மசூது தில்லியில் 5 ரூபாய்க்கு வயிறார சாப்பிடலாம் என்றார். இவர்கள் அனைவரையும் தாண்டி காங்கிரசு கூட்டணி கட்சியின் அமைச்சர் பரூக் அப்துல்லா மன நிறைவாக ஒரு ரூபாயிலும் சாப்பி டலாம், நூறு ரூபாயிலும் சாப்பிடலாம் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. என்று தத்துவம் பேசினார்.

வறுமை, வறுமைக்கோடு குறித்த விவாதத்தைத்தான் இவ்வளவு பொறுப்போடும் மனித நேயத்தோடும் இந்த அரசியல் புள்ளிகள் நடத்துகிறார்கள்.

அண்மையில் இந்தியாவின் திட்டக் குழு வறுமைக்கோடு குறித்த வரையறுப்பை வெளியிட்டது. இதன் படி கிராமப் புறத்தில் ஒரு நாளைக்கு தலா 27 ரூபாய் வருமானம் உள்ளவரும், நகர்ப் புறத்தில் நாள் வருமானம் ரூ 33 உள்ளவரும் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பதாகக் கூறியது. அதாவது ஐந்து நபர் கொண்ட ஒரு கிராமப்புற குடும்பத்தின் மாத வருமானம் ரூ.4080 க்கு மேல் இருந்தாலோ அதே போன்ற நகர்ப்புறக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ 5000க்கு மேல் இருந்தாலோ அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று திட்டக் குழு வரையறுக்கிறது.

இந்த வரையறுப்பின் படி வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஏழை களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, மருத்துவம் போன்றவற்றை சலுகை விலையில் வழங்கினால் போதும்.

இக்கணக்கீட்டின் படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஆண்டுக்கு 2.2 விழுக்காடு மக்கள் தொகையினர் வறுமைக்கோட்டுக்கு மேல் எழுந்து வந்து விட்டார்கள் என்றும் இப்போதைய மக்களில் 21.9 விழுக்காட்டினர் மட்டுமே வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் என்றும் திட்டக்குழு அறிவிக்கிறது.

முனைவர் சுரேஷ் டெண்டுல்கர் என்பவர் தலைமையில் வறுமைக்கோட்டை வரையறுப்பதற்கு ஒரு குழுவை திட்டக்குழு நியமித்தது. அக்குழுவின் வரையறுப்பே திட்டக் குழுவின் முடிவாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் மருத்துவ ஆய்வு மன்றம் இந்தியச் சூழலில் சீரான உடல் நிலையில் ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு 2100 கலோரி வெப்பம் தேவைப்படும் என்றும், எளிய வேலை செய்கிற அலுவலக பணியாளர்களுக்கு 2425 கலோரியும் கடும் உடல் உழைப்பு செய்பவர்களுக்கு 3800 கலோரியும் வெப்ப ஆற்றல் தேவைப்படும் என்று வரையறுக்கிறது. இந்த உடல் வெப்ப ஆற்றல் கிடைக்கிற அளவுக்கு அவர் உணவு உட்கொள்ள வேண்டும் என்று பொருள்.

ஆனால் டெண்டுல்கர் குழு 1800 கலோரி வெப்பம் ஆற்றல் கிடைத்தால் போதும் என்று தன்னிச்சையாக முடிவு செய்தது. அதே போல் ஒரு நபருக்கான ஒரு நாள் கல்விச் செலவு 1ரூபாய்.90 பைசா என்று கணக்கிட்டது. இதைப்போன்று 52 அளவு கோலை வைத்து வறுமைக்கோடு என ஒன்றை இக்குழு தீர்மானித்தது. இதன் படி ஒரு வீட்டில் மின் விசிறி இருந்தாலோ, தொலைக்காட்சிப்பெட்டி இருந்தாலோ, அலைபேசி போன்ற மின்னனு சாதனங்கள் ஏதாவது இருந்தாலோ அக்குடும்பம் வறுமைப்பட்டக் குடும்பமாக வரையறுக்கப்பட முடியாது என டெண்டுல்கர் குழு கூறுகிறது.

இவ்வாறு மக்கள் வாழ்க்கைக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆட்சியாளர்களின் விருப்பதற்கு இசைய வரையறுக்கப்பட்டதுதான் இந்த வறுமைக்கோடு.

இந்த வரையறுப்பின் அடிப்படையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோருக்கே உணவுபாதுகாப்புச் சட்டம், ஆதரவற்றோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மருத்துவ வசதி போன்றவற்றை இந்திய அரசு இனி வழங்கும்.

நாட்டு மக்களை மேலும் மேலும் வறுமையில் தள்ளவே இந்த வறுமைக்கோடு பயன் படுத்தப்பட போகிறது.

ஆனால் இவ்வாறு வறுமைக்கோட்டை வரையறுத்த திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தன் அலுவலகக் கழிப்பறையை சீர் செய்யவே 27 இலட்சம் ரூபாய் அரசு பணத்தைச் செலவு செய்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Pin It