மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள 80 விழுக்காடு நிலங்களை நீண்ட கால குத்தகைக்கு (99 ஆண்டு குத்தகைக்கு) ஆங்கிலேயர் அரசு வழங்கியது. குத்தகை காலம் முடிந்த பின்பும் கூட மேற்படி நிலங்களைக் கைப்பற்றி நிலமில்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கிட அரசு முன் வரவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமான தொழிலதிபர் களுக்கும் நீண்டகால குத்தகைக்கு வழங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை மலைப்பகுதியில் ஆம்பாடி எஸ்டேட் நிறுவனத்திற்கும் முன்னாள் சனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் மகள் காந்திமதி பெயரில் உள்ள (காந்திமதி எஸ்டேட்) நிறுவனத்திற்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீண்டகால குத்தககைக்கு வழங்கப் பட்டுள்ளது. அதே போன்று டாக்டர் மத்தியாசு குடும்பத்திற்கும் பல நூறு ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிங்கம்பட்டி ஜமீனும் முன்னாள் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி.சாமிக்கு பல நூறு ஏக்கர் கிராம்பு ஏலக்காய் தோட்டம் உள்ளது.

மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் நிறுவனம் பாம்பே டையிங் சவுளி நிறுவன அதிபர் நூஸ்லிவாடியாவுக்கு (பி.பி.டி. நிறுவனத்திற்கு) மிகக் குறைந்த குத்தகைக்கு (99 ஆண்டு) வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று தேனி மாவட்டம் அருகில் உள்ள மூணாறு தேயிலை எஸ்டேட் கம்பெனிக்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதிலுமுள்ள நிலங்கள் யாவும் ஆதிக்க சக்திகளுக்கும் ஆளும் காங்கிரசுக் கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நீலமலை:

புவியியல் ரீதியாக கூறும்போது உலகின் ஆரம்ப மலைத் தொடர்களில் மேற்குத் தொடர்ச்சி மலை மிக முக்கியமானது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி விந்திய மலைத் தொடர்வரை நீள்கிறது.

இந்த மண்ணின் பாரம்பரியக் குடிகளாக பனியர், இருளர், காட்டுநாயக்கர், குரும்பர், முள்ளுக்குரும்பர், கோத்தர், தொதவர் ஆகிய பழங்குடிகள் உள்ளனர். நீலகிரியின் ஏனைய பகுதிகளில் இருந்து கூடலூர் (பந்தலூர்) பகுதி முற்றிலும் வித்தியாசமானது. 72,171 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட மலைகளும் சமவெளிகளுமான பீடபூமியாகும். இங்குள்ள பசுமை மாறாக் காடுகள் உலக முக்கியத்துவம் வாய்ந்தவை.

பழங்குடிகள் மக்களின் பாரம்பரிய பூமியாக இருந்த கூடலூரை ஒரு கட்டத்தில் கேரளா மாநிலம் நிலம்பூர் கோவிலக ராஜ பரம்பரையினர் கைப்பற்றினர். இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வரை வன நிலத்தை 1845 ஆம் ஆண்டு 9 பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தனர் இவர்கள் பல்லாயிரக் கணக்கான விலை மதிக்க முடியாத காடுகளை அழித்து மரங்களைக் கடத்தினார்கள்.

இதன் பிறகு இந்த நிலத்தில் தேயிலை, காப்பி, மிளகு போன்ற பணப்பயிர்களைப் பயிரிட்டு பெருந்தோட்டங்களாக மாற்றினர். 1969 ஆம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிப்புச்சட்டம் அமுலுக்கு வந்த போது குத்தகைகாரர்களிடம் இருந்த நிலங்கள் பிரிவு 17 க்கு உட்படுத்தப்பட்டன. பிரிவு17ன் கீழ் 80,088 ஏக்கர் நிலப்பகுதி உள்ளது. ஜமீன்தார் முறை ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் அந்த நிலங்களைத் தமிழக அரசு எடுத்துக் கொள்ள முயன்றபோது அதனை எதிர்த்து மஞ்சுஸ்ரீ பிளாண்டேசன் (பிர்லா குரூப்) உட்பட 9 பெருந்தோட்ட நிறுவனத்தினர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் இப்பகுதி நிலங்களை விவாதத்துக்குரிய பகுதியாக நீதிமன்றம் அறிவித்ததோடு அப்போது விவசாயம் செய்திருக்கும் நிலத்தைத் தவிர்த்து ஒரு அங்குல நிலம் கூட புதிதாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இதை எல்லாம் துச்சமென மதித்து பெருந்தோட்டத்தினர் பெருச்சாளியாக மாறி அருகில் இருக்கும் அற்புதமான காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து அழித்து தங்கள் தோட்டங்களை விரிவுபடுத்திக் கொண்டார்கள். 12 தோட்டத்தினருக்கு 1969 ஆம் ஆண்டு 19644.19 ஏக்கர் மட்டும்தான் இருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்து மேலும் அதிகமாக 32356.52 ஏக்கர் அடர்ந்த வனத்தை ஆக்கிரமிப்புச் செய்து தேயிலை தோட்டங்களாக மாற்றியுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்து வனத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் தோட்டங்களின் அட்டவணை:

estate_land_626

இவ்வாறு வன நிலங்கள் யாவும் நிலக் கொள்ளையர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை இந்திய அரசும் வனத்துறையும் மீட்டு எடுக்காமல் அப்பாவி ஆதிவாசி மக்களை வனத்தை விட்டு வெளி யேற்றி வருகிறார்கள்.
 
இந்த அநீதிக்கு எதிராக ஆதிவாசிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட நிலங்களை கைப்பற்றி நிலமில்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கிட ஒரு வலுவான இயக்கம் தேவைப் படுகிறது.

Pin It