தமிழர்களின் கடல் வழி வணிகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இது குறித்து அகநானூறில்

உலகுகிளர் தன்ன உருகெழுவங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்றுறை நீதான்
மாடவெள்ளொரி மருங்கறிந்து ஒய்யா
(அகம் 255.1-6)

பொருள்: துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் உயரமான மலை மேட்டின் மேல் கட்டப்பட்டிருந்தன. கலங்கரை விளக்கின் உதவியால் மரக்கலங்களை இராக்கலத்திலும் துறைமுகங்களுக்கு ஓட்டினார்கள். கலங்கரை விளக்குக்கு மாடவெண்ணொளி என்ற பெயரும் இருந்தது.

இதன் மூலம் இரவு, பகல் பாராமல் வணிகம் செய்த தொன்மைத் தமிழனின் பெருமை விளங்கும்.

இவ்வளவு நீண்ட மரபு கொண்ட தமிழர்களின் கடல் வணிகம் தற்பொழுது கூனிக் குறுகி, தங்கள் வணிகத்தையும், துறைமுகங்களையும் மேம்படுத்துவதற்காக டெல்லியிடம் கையேந்தும், கையறு நிலையில்தான் உள்ளது.

நவீன சரக்குக் கப்பல்கள் இருவகையின அவை Mother vessel (தாய்க் கப்பல் அல்லது பெரிய கப்பல்) feeder veesel (சிறியகப்பல்)

தாய்க்கப்பல் எனப்படுவது 1000 சரக்குப் பெட்டகத்திற்கு (container) மேலும் தற்பொழுது மெர்ச்க் (mearsk) நிறுவனத்திடம் உள்ள 6500 சரக்குப் பெட்டகம் வரைக்கும் கொண்டு செல்ல பயன்படும் பெரிய கப்பல்களைக் குறிக்கும்.

சிறிய கப்பல் எனப்படுவது 400க்கும் குறைவான சரக்கு பெட்டகங்களை கொண்டு செல்லும் கப்பல்களைக் குறிக்கும்.

தமிழ்நாட்டின் பெரிய துறைமுகமான தூத்துக்குடி, சென்னை உள்பட இதர துறைமுகங்கள் பெரும்பான்மையினும் இந்தத் தாய்க் கப்பல் வருவதற்கு வசதியுமில்லை, அனுமதியுமில்லை.

இங்கே சேகரிக்கப்படும் அனைத்து சரக்குகளும் சிறிய கப்பல் மூலம் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பெரிய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு அயல்நாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகிறது. கொழும்பு துறைமுகம் மூலம் இலங்கையின் வருமானமும் நன்றாக உயர்ந்து கொண்டே வருகிறது. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு சீனாவின் உதவியுடன் ஹம்மன் தோட்டாவிலும் பெரிய துறைமுகத்தை வடிவமைத்து கொண்டு வருகிறது இலங்கை அரசு.

இதை உன்னிப்பாக கவனித்து வந்த மலையாளிகள் கொச்சிக்கு அருகே உள்ள தங்களது “வல்லா பாடம்” துறைமுகத்தை பெரியத் தாய்க்கப்பல் நிறுத்தும் விதமாக புனரமைப்பு செய்ய நடுவண் அரசிடம் 2007 ஆம் ஆண்டு கோரிக்கையை வைத்து, உடனடியாக அனுமதியும் வாங்கி விட்டார்கள். இந்தியாவின் சிறப்புப் பொருளாதர மண்டலமாக அறிவிக்கப்பட்ட ஒரே துறைமுகமாக, பல்வேறு சலுகையுடன் இதற்கு அனுமதி அளித்த பெருமை முன்னாள் கப்பல்துறை அமைச்சர் திரு டி. ஆர். பாலுவைச் சாரும். இவரே இத்திட்டத்திற்கு அடிக்கல் நட்டு 2012க்குள் முடிக்க உத்தரவிட்டார். முடித்தும் விட்டார்கள்.

இங்கு நேரு காலம் முதல் தற்பொழுது வரை தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தி தாய் கப்பல்கள் நிறுத்த ஆவன செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை கேட்பாரற்று இருக்கிறது.

நடுவண் அரசின் நிதி உதவியுடன் வல்லர்பாடம் துறைமுகத்தை ஆழப்படுத்திய மலையாளிகளின் அடுத்த கோரிக்கைதான் சூழ்ச்சியானது. துறைமுகத்திற்குத் தாய்க் கப்பல்கள் வந்தால் போதுமா? சரக்குகளுக்கு எங்கே போவார்கள்? நமது தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் பல துறைமுகங்களில்தான் சரக்கு உள்ளது. ஆகவே இவர்கள் வைத்த மற்றொரு கோரிக்கை இந்தியாவில் உள்ள இதர துறைமுகங்களில் இருந்த சரக்குகளை வல்லர்பாடம் துறைமுகத்திற்கு கொண்டு வரவும், செல்லவும் பன்னாட்டு சிறிய கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதாகும் இதன் மூலம் தாய்க் கப்பல்களையும் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி இந்தியாவின் எந்த துறைமுகத்திற்கும் கிடையாது. வல்லர் பாடத்திற்கு மட்டும்தான் 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்கும் வசதியுடன் அளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 407 வணிக கப்பல்கள் சட்டம் 1958ன் படி அயல் நாட்டுக் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கிடையே வணிகம் செய்யக் கூடாது. ஆனால் தற்பொழுது இதிலிருந்து வல்லர்பாடத்திற்கு மட்டும் விதிவிலக்களித்துள்ளது. நடுவண் அரசு.

இந்தியாவில் உள்ள சிறிய கப்பல் உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி திரு அனில்டெவ்வி அவர்களின் தலைமையில் பல்வேறு கட்டமாக போராடி வருகிறார்கள். இந்தத் துறையிலும் பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து சிறிய கப்பல்கள் தொழிலை அழிக்கின்ற பெருமை காங்கிரசையும் திரு ஜி.கே. வாசனையும் சாரும்.

வல்லர்பாடம் துறைமுகத்தை இந்தியாவின் பெரிய துறைமுகமாக மாற்ற முயலும் மலையாளிகளுக்கு இந்திய அரசு பல்வேறு வகையில் உதவி புரிவதற்காக நமக்கு பல்வேறு உரிமைகளை மறுக்கிறது.

அதாவது கடல்வழியாக சரக்கு வருவதற்கு மேற்கூறிய வழிகளை ஏற்படுத்திய நடுவண் அரசு நாள் ஒன்றிற்கு 15 தொடர்வண்டிகளின் மூலம் சரக்கு துறை முகத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறது. இனி நமது தமிழ்நாட்டில் இருப்புப் பாதையை பெருமளவு பயன் படுத்த போவது இந்த சரக்கு வண்டிகள்தாம்.

முல்லைப் பெரியாற்றில் நீர் தர மறுக்கும் கேரள அரசிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கேரளாவிற்கு செல்லும் 13 தரைவழிகளையும் மூடச் சொல்லி நாம் போராடிக் கொண்டு இருக்கும் வேளையில், நமது இருப்புப் பாதையில் பயணிகளின் புதிய தொடர்வண்டி திட்டத்தை செயல் இழக்கச் செய்து அவர்களின் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப் போகிறார்கள்.

ஆகவே நாம் அடுத்த கட்டமாக நமது கோரிக்கையை நன்றாக கூர்மைப்படுத்த வேண்டும். தூத்துக்குடி மற்றும் சென்னையில் பெரிய தாய் கப்பல்கள் வருவதற்கு துறைமுகத்தை செழுமைப்படுத்த வேண்டும். சேதுக் கால்வாய்த்திட்டம் நீதிமன்ற வாக்கில் இருப்பதைக் காட்டி இத்திட்டத்தை நிறுத்த முடியாது. சேது கால்வாய்த் திட்டம் என்பது வேறு. அதாவது தாய் கப்பல் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு சேது கால்வாய் வழியாக செல்வதுதான், சேதுகால்வாய் திட்டம். அது நீண்டகாலம் நடுவண் அரசால் அரசியல் காரணத்திற்காக கிடப்பில் போடப்பட்ட திட்டம். நமது தற்போதைய கோரிக்கை தூத்துக் குடியிலும் சென்னையிலும் தாய் கப்பல்கள் நேரடியாக வரவழைக்க வேண்டும். இருதுறைமுகத்திற்கும் நடுவே வல்லர்பாடம் போல சிறு கப்பல்கள் மூலமும் தரை வழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் சரக்குகளை நாமே கொண்டு செல்லலாம்.

அடுத்து நமது இருப்புப் பாதையை பயன்படுத்தும் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு மலையாளிகள் பயன்படுத்தும் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு என துல்லியமாக கணக்கிட்டு நமது இருப்புப் பாதையின் பயன்பாட்டைக் கூட்ட வேண்டும். புதிய பயணிகள் தொடர்வண்டி திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க நடுவண் அரசு முன்வரும் அளவுக்கு நமது போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்.

Pin It