தமிழகத்திற்கு 2011- ஆம் ஆண்டு, போராட்ட ஆண்டாக முடிந்தது. 2012 ஆம் ஆண்டும் போராட்ட ஆண்டாகவே தொடரப் போகிறது. இதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டுள்ளன.

முல்லைப் பெரியாறு அணை உரிமை, கூடங்குளம் அணு உலை ஆகிய இரண்டு சிக்கல்களிலும் போராட்டங்கள் தமிழர்கள் மீது திணிக்கப்படும் நிலைதான் உள்ளது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர் உயிர்க்காப்பிலும், நல்ல முடிவு இன்னும் வரவில்லை.

கடந்த 24.1.2012 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மீன்வளத்துறை அமைச்சர் கே.பாபு, “முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கேரள அரசுக்கு எதிராக அவ்வறிக்கை இருக்குமானால், அதனை ஏற்க மாட்டோம். நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணக் கேரள அரசு அணியமாக உள்ளது'' என்றார்.

அமைச்சர் பாபுவின் இந்த அறிவிப்பு, அவரது தனிப்பட்ட கருத்தோட்டமன்று. கேரள அரசின் கருத்தோட்டமாகும். அது மட்டுமன்று கேரள எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துப் பெரிய கட்சிகளின் கருத்தோட்டமும் ஆகும்.

வல்லுநர் குழு அறிக்கையை ஏற்க மாட்டோம் என்று அவர் சொல்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்று சொல்வதாகும். ஏனெனில் வல்லுநர் குழுவுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் எதுமில்லை. உச்சநீதிமன்றத்துக்குப் பரிந்துரை அளிக்கும் கடமை மட்டுமே அதற்குண்டு. அக்குழு தனது அறிக்கையை அண்மையில்தான் இறுதி செய்துள்ளது. வரும் பிப்ரவரி 27 வாக்கில் தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கும். அதன் பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்.

வல்லுநர் குழு தனது பரிந்துரைகளைக் கமுக்கமாக வைத்திருந்து உச்ச நீதிமன்றத்திடம் அளித்து விடும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போதோ அல்லது அது கருதும் நேரத்திலோ வல்லுநர் குழு அறிக்கையில் உள்ளவற்றை வெளிப்படுத்தும்.

முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் உள்ள வல்லுநர் குழுவில் தமிழகப் பிரதிநிதியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏர்.ஆர்.லெட்சுமணன் உள்ளார். கேரளப் பிரதிநிதியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளார். மற்றும் நீரியல் மண்ணியல் வல்லுநர்களாக பிற மாநிலங்களைச் சேர்ந்த சத்தே, மாத்தே என்று இருவர் உள்ளனர்.

இவர்களின் அறிக்கை என்னவென்று தெரிவதற்கு முன்பே, கேரள அரசுக்கு எதிராக அவ்வறிக்கை இருக்குமானால் அதனை ஏற்கமாட்டோம் என்கிறார்கள் மலையாள ஆட்சியாளர்கள். 2006 பிப்ரவரி 27- இல் உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணை வழக்கில் வழங்கிய தீர்ப்பைக் குப்பைக்கூடையில் வீசியது அப்போதிருந்த காங்கிரசுக் கூட்டணி அரசு. இப்போதுள்ள உம்மன் சாண்டிதான் அப்போதும் முதல்வர். இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவரான சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் தான் அப்போதும் எதிர்க்கட்சித் தலைவர். காங்கிரசும் சி.பி.எம். கட்சியும் மலையாள இனவெறியைத் தூண்டிவிடுவதில் ஒன்றாகக் கைகோத்துக் கொள்பவை. “உச்சநீதிமன்றத் தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது, இதோ அதற்கான சட்டம்” என்று புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அவர்கள் அப்போது இயற்றினார்கள்.

நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்ட சட்டம் எதுவும் இந்தியாவில் இயற்ற முடியாது. அரசமைப்புச் சட்ட அட்டவணை 9இல் சேர்க்கப்படும் சட்டங்கள் நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்கள் தாம், நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம், கேரளாவை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறது.

அந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி 2006இல் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்தவழக்கு கேள்வி முறையின்றி கிடக்கிறது. உச்சநீதிமன்றமோ 2006இல் தான் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்து கொண்டுள்ளது. தில்லி அதிகார பீடத்தில் மலையாளிகள் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்கிறது.

மண்டல் குழு பரிந்துரை 1990களில் செயல்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல், (69 விழுக்காடு வரை) இடஒதுக்கீடு வழங்குவது செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அப்போது முதலமைச்சராக இருந்த செயலலிதா, தமிழ்நாட்டு சட்டப்பேரவையில், 69 விழுக்காட்டை உறுதி செய்து சட்டமியற்றி அதை 9ஆவது அட்டவணையில் சேர்த்திட நாடாளுமன்றத்திலும் சட்டமியற்றச் செய்தார். ஆனால், அதனை இன்றுவரை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அப்போது இட்ட இடைக்கால ஆணை இன்னும் நீடிக்கிறது. இதுவரை இறுதித் தீர்ப்பு வரவில்லை. கேரளாவுக்கொரு நீதி, தமிழ்நாட்டிற்கு வேறொரு நீதி.

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிக் காலமெல்லாம் இழப்புகளுக்கு ஆளாகிவரும் ஏமாளித் தமிழர்களே,

இந்தியாவில் நம்மை சமமாக நடத்த சட்டப் பாதுகாப்பும் இல்லை; நீதித்துறைப் பாதுகாப்பும் இல்லை. இந்திய அரசோ தமிழர்களுக்கு எப்போதும் எதிரானது. முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு விரும்புவது உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இல்லையென்றால், மலையாளிகள் அதற்குக் கட்டுப்படமாட்டார்கள். அணையை உடைப்பார்கள். கேரள அரசின் விருப்பமே தீர்வாக வந்தால் தமிழகத்திற்கு அது பேரிழப்பாக அமையும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தமிழர்கள் போராடித்தான் உரிமையை நிலைநாட்ட வேண்டியிருக்கும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமக்கு நல்ல தீர்வாக அமையும் என்று எண்ணி ஓய்ந்து கிடக்காதீர் தமிழர்களே!

மலையாளிகள் தமிழர்களை எப்படித் தாக்குவார்கள் என்று கடந்த ஆண்டு நவம்பர், திசம்பரில் பார்த்தோம். அது சிறு ஒத்திகை. வருங்காலத்தில் அவர்கள் தாக்குதல் உக்கிரமாக அமையலாம். அதே உக்கிரத்தோடு திருப்பித் தாக்குவதை விட சிறந்த தற்காப்பு நமக்கு வேறொன்றும் இருக்காது.

அடுத்து கூடங்குளத்தில் கொலைக்களமாக உருவாக்கப்பட்டுள்ள அணுஉலைக் களத்தைத் திறக்க எல்லா ஏற்பாடுகளையும் அணியம் செய்து வருகிறது இந்தியா.

நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவதுபோல் தமிழினத்தில் பிறந்த நடுவண் அமைச்சர்களைத் நமக்கெதிராகத் தூண்டிவிட்டுள்ளது இந்திய அரசு.

எசமான விசுவாசத்தை எக்கச்சக்கமாகக் காட்டிக் கொள்ள எப்போதும் அதிகமாகக் கூச்சலிடுபவர் அமைச்சர் நாராயணசாமி. எதற்கும் பதட்டமில்லாமல் நிதானமாகப் பேசிப் பழக்கப்பட்டுள்ள அமைச்சர் ஜி.கே.வாசன், நாராயணசாமியின் தரத்துக்குக் கீழிறங்கி வந்துள்ளார். அவர் 22.01.2012 அன்று மதுரையில் பேசும் போது, கூடங்குளம் அணுஉலைத் திறப்பிற்கான அடித்தளம் அமைக்கும் பொதுக்கூட்டம் காங்கிரசு சார்பில் நெல்லையில் பிப்ரவரி 4ஆம் நாள் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.

“கூடங்குளம் அணுஉலையைத் திறக்க அடித்தளம் அமைக்கும் கூட்டம்” என்ற சொற்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் பொருள்கள் ஏராளம்!

“கூடங்குளத்தைக் கொலைக்களமாக மாற்றாதே, அங்கு அணுஉலைகளைத் திறக்காதே” என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது. அவ்வமைப்பின் தலைவர்களைக் கொச்சைப்படுத்த, அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது; வெளிநாடுகளின் தூண்டுதலில் தான் அவர்கள் போராடுகிறார்கள் என்று இழிவுப் பரப்புரை செய்து வருகிறது இந்திய அரசு. அது மக்களிடம் எடுபடவில்லை.

அடுத்துத் தமிழர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதற்கான பெரும் சதித்திட்டத்தில் இறங்கியுள்ளது இந்தியா. இந்தியா எதிர்பார்க்கும் பெருங்கலவரத்துக்கான மனநிலைத் தயாரிப்புக்கூட்டமே ஜி.கே.வாசன் ஏற்பாடு செய்யும் பிப்ரவரி 4-நெல்லைக் கூட்டம்.

“இன்னும் இரண்டு வாரத்தில் கூடங்குளம் அணுஉலையைத் திறப்போம்” என்று கடந்த திசம்பரில் மாஸ்கோவில் மன்மோகன் சிங் அறிவித்தார். “எல்லா ஏற்பாடுகளையும்” செய்து வைத்துக் கொண்டுதான் அவர் அவ்வாறு அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுஉலைத் திறக்கப்படும் போது தமிழ் மக்கள் எதிர்த்தால், மக்களை இராணுவமும் காவல்துறையும் மட்டுமின்றி, கூலிப் படைகளும், விவரம் அறியாத தமிழ் மக்களும் தாக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

இதை எதிர்கொள்ள கூடங்குளத்தில் மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடக்கும் வகையில் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்;  பரப்புரை செய்ய வேண்டும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் உயிர் இப்போது உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. அது என்ன தீர்ப்புச் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை.

தமிழர்களே, நமக்கு ஓய்ந்திருக்க நேரமில்லை. நமது உயிர்ப்பும் உரிமையும் போராடும் ஆற்றலில் தான் பொதிந்துள்ளன. 

Pin It