காலம் தாழ்ந்து பார்க்கப் போகிறோமே என்ற குற்ற உணர்ச்சியோடு தான் கடலூர் மாவட்டத்தில் புயல் சீரழித்த பகுதிகளைப் பார்க்கப் போனோம். என்னுடன், சென்னை த.தே.பொ.க. தோழர்கள் பாலா, நாகராசு ஆகியோரும் ஓட்டுநர் ரெங்கராசும் வந்தனர்.

26.1.2012 அன்று சிதம்பரத்திலிருந்து புவனகிரி வழியாகப் புறப்பட்டோம். குறிஞ்சிப்பாடி யிலிருந்து பாலூர் முதன்மைச் சாலை வழியாகச் சென்றபோது கண்ட காட்சிகள் கோரமானவை. மனிதர்கள் நடமாடினார்கள் இயற்கை செத்துக் கிடந்தது.

வழியில் ஒரு பெரியவர் சொன்னார்: “விழுந்து கிடப்பது மரமல்ல, ஒவ்வொன்றும் எங்களின் ஒவ்வொரு தலைமுறை. பலாவும் முந்திரியும் முப்பதாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டவை. ஒவ்வொரு மரத்தின் வேரிலும் ஒரு கிழவனும் கிழவியும் இருக்கிறார்கள். அவர்கள் குடத்தில் தண்ணீர் சுமந்து ஊற்றி உயிரானவை இவை" என்றார்.

பனைமரங்களைத் தவிர மற்றெல்லா மரங்களும் வீழ்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் அடையாள சின்னமாகத் தமிழக அரசு ஏற்கெனவே பனைமரத்தைத் தான் வைத்துள்ளது. தமிழீழத்திற்கும் பனை மரமே அடையாளம்!

பத்திரக்கோட்டை மிகவும் சேதமடைந்த ஊர்களுள் ஒன்று. அது இயக்குநர் தங்கர்பச்சான் ஊர். அவரின் மூத்த அண்ணன் செல்வராசு, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வேரோடு சாய்ந்து பட்டுக் கிடக்கும் முந்திரிகளையும் பலாமரங்களையும் காட்டிச் சொன்னார், “இந்த நாளில் எங்கள் காடு சிரித்துக் கொண்டிருக்கும்; இப்பொழுது எங்கள் காடு அழுகிறது. இதோ பாருங்கள் தலை முறிந்து மொட்டையாக நிற்கும் பலா மரத்தில் பால் வடிந்து காய்ந்துள்ளது. அதுதான் அதன் கண்ணீர்" என்றார்.

பத்திரக்கோட்டையில் உழைக்கும் மக்களாகிய ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தெருவுக்கு நண்பர்கள் இரெ.இராசவேலும், வீ.செல்வகுமாரும் அழைத்துச் சென்றார்கள். அங்கு எல்லாக் கூரைகளும் பிய்த்தெறியப்பட்டு அலங்கோலமாய் விட்டன. மீண்டும் கரும்புத் தோகைகளைக் கொண்டு கூரை போட்டுக் கொண்டிருந்தனர். அத்தெரு மக்கள் புயல் வீசியபோது, தங்கள் வீடுகளை விட்டு ஓடி, ஒட்டு வீடொன்றில் புகுந்து தப்பித்த நிகழ்வுகளை அங்குள்ள நண்பர்கள் சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விளக்கினர். அவர்களின் வீட்டுக்கருகில் ஒரு பலாமரம் இலை தழை அற்று, தலை முறிந்து மொட்டையாக நிற்கிறது. அதில் 15 பலாக்காய்கள் இன்னும் தொங்கிக் கொண்டுள்ளன. ஈழத்தில் தாயும் இறந்து தாயின் மடியில் அவள் குழந்தையும் இறந்து கிடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது  அம்மரம்!

ஏழுமலையின் மாமரம் உயிரோடிருக்கும் போது பத்தாயிரம் ரூபாய்க்கு விலைக்குக் கேட்டார்களாம். இப்பொழுது விழுந்து கிடக்கும்  அதே மரத்தை வெறும் 900 ரூபாய்க்குக் கேட்கிறார்களாம். மாமரத்தின் அடக்கச் செலவுக் கான தொகையா அது-?

ஊரில் மின்கம்பங்கள் எல்லாம் புதிதாக நடப்பட் டுள்ளன. புயல் எல்லா மின்கம்பங் களையும் வீழ்த்தி விட்டுத்தான் வெளியேறியதாம். மின் இணைப்பு இல்லை. எனவே குடிக்கத் தண்ணீர் இல்லை. குளிக்கத் தண்ணீர் இல்லை. குளங்கள், கிணறுகள் எல்லாம் போய் விட்டன. நிலத்தடி நீரை மோட்டார் மூலம் எடுத்துத் தான் எல்லா வற்றுக்கும் பயன்படுத்தி யிருக்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால் தண்ணீர் இல்லை என்ற நிலையில் அந்தப்பகுதி ஊர்கள் உள்ளன.

சிலம்பிநாதன் பேட்டை, கீழ்மாம்பட்டு, சத்திரம், புலியூர், குமளங்குளம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், ஒதியடிக்குப்பம், இராமாபுரம், சிந்தாமணிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் இதே அவலம் தான்!

புயல் காற்றின் சுழற்சியில் முந்திரிக்காட்டில் சிக்கித் தப்பித்த பத்திரக்கோட்டை ப.தேவராசு சொன்னார்:

புயல் காற்றால் மின்னி ணைப்புத் துண்டிக்கப் பட்டு தண்ணீர் இல்லாமல் தவித் தோம். ஊர் இருளில் மூழ்கியது. மூன்று நாள்வரை எந்த நிவாரணப் பணியும் நடைபெற வில்லை. தங்கர்பச்சான் சன் டி.வி. நிருபரை அழைத்துக் கொண்டு வந்து, எங்கள் பகுதி அவலங்களைச் சொல்லி அது ஒளிபரப்பான பிறகுதான், அரசு அதிகாரிகளின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியது. அமைச்சர் கள் வந்தார்கள். புயல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. அமைச்சர்களோ 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து போனார்கள். எந்த நிவாரணமும் உடனடியாக நடைபெற வில்லை. தங்கர்பச்சான் முயற்சியில் பத்திரிக்கைகளும் டி.வி.க் களும், 'தானே' புயல் சேதங்களை வெளிப்படுத்திய பிறகு தான் அரசு நிர்வாகம் கொஞ்சம் அசைந்தது. 

“கடலூர் மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, சுறுசுறுப்பாக நிவாரணப் பணிகளைச் செய்ய வில்லை என்று புகார் தெரிவித் தோம். அவரை மாற்றிவிட்டு, எங்கள் மாவட்டத்தில் ஏற் கெனவே ஆட்சியராய் இருந்த ரத்னூ அவர்களைப் போட் டார்கள். அதன் பிறகு நிவாரண வேலைகள் ஓரளவு நடந்தன; ஆனால் போதுமானதாக இல்லை" என்றார்.

தேவராசு, வருத்தத்தோடு இன்னொன்றையும் சொன்னார், “எங்கள் கிராமங்களில் வசதியுள் ளவர் வசதியில்லாதவர் என்ற வேறுபாடில்லை, அனைவரும் தண்ணீரின்றி, சோறாக்க வழி யின்றி, பட்டினி கிடந்தோம். குழந்தைகளுக்குப் பால் கிடைக் கவில்லை. ஒரு டீக்கடைகூட நடத்த முடியவில்லை. அரசு தான் உடனடியாக ஓடி வரவில்லை. உதவி செய்யும் எண்ணம் கொண்ட பெரு மக்களும், தொண்டு நிறுவனத் தாரும் தமிழ்நாட்டில் அற்றுப் போய்விட்டார்களா? தமிழர்கள், தமிழர்கள் என்று பேசும் அமைப்புகளும் இந்தத் தமிழர்கள் துயரம் நீக்க ஏன் வரவில்லை?". அவரின் கேள்வி கள் ஞாயமானவை.

சுனாமிப் பேரழிவு நடந்த போது, தமிழகமெங்குமிருந்து அறச்சிந்தனை கொண்ட மக்களும், தொண்டு நிறுவனங் களும் பாராட்டும்படியான துயர் துடைப்புப் பணிகள் செய்தனர். இப்பொழுது எல் லோரும் புயல் பாதித்த பகுதி மக்களைக் கைவிட்டது பெருங் குறையாகத்தான் உள்ளது. குற்ற உணர்ச்சியோடுதான் நானும் இதைக் குறிப்பிடுகிறேன். ஆனந்த விகடன் வார இதழ் துயர் துடைப்பு நிதி சேர்ப்பது பாராட்டிற்குரியது. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் தனது கல்லூரிகளில் கடலூர் மாவட் டத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக் கல்விக் கட்டணத் தையும், விடுதி மற்றும் உணவுக் கட்டணத் தையும் பல்கலை நிர்வாகமே ஏற்றுக் கொண் டுள்ளது. இச் செயல் பாராட்டிற்குரியது.

குசராத்தில் நிலநடுக்கம் சேதம் உண்டாக்கிய போது தமிழ்நாடு அரசு நிதி உதவி அளித்தது. அதேபோல் மற்ற மாநிலங்களில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது தமிழக அரசு உதவி செய்தது. ஆனால், தமிழகம் இயற்கைப் பேரழிவில் பாதிக்கப் பட்டுள்ள போது எந்த மாநிலமும் உதவிக்கு முன்வர வில்லை என்பது கவலையளிக்கும் செய்திதான்.

ஒரு ஏக்கர் முந்திரிக்கு ரூ. 3600 அரசு உதவித்தொகை கொடுத்துள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் விழுந்து கிடக்கும் பலா, முந்திரி, மா, மரங்களை அகற்ற 20 ஆயிரம் ரூபாய் தேவை என்கிறார்கள் உழவர் கள். சேதமடைந்த வீட்டுக்கு ரூ. 2500 வழங்கியுள்ளது அரசு. சுட்ட ஓட்டில் ஒரு சொட்டுத் தண்ணீரைவிட்டால் அது ஆவியாய்ப் போய்விடுவதைப் போல், அந்தத் தொகை அவசியச் செலவுகளுக்குப் போய் விட்டது. மக்கள் தவிக்கிறார்கள்.

இப்பொழுதுள்ளதைவிட நான்கு மாதங்கள் கழித்துதான் பெரும்பாதிப்புகள் வரும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இப்பொழுது கையிலுள்ள காசைக் கொண்டு சாப்பிடு கிறோம். 4 மாதங்கள் கழித்து, ஊரில் வேலை எதுவும் இருக் காது. விளைச்சல் இருக்காது. பலா, முந்திரி விளைச்சலும் அவற்றிற்கான வேலைகளும் தாம் இங்குள்ள மக்களுக்கான முக்கிய வருமானம். அது இனி இருக்காது. அதனால் வறுமை அதிகமாகி இப்பகுதியில் திருட்டும் புரட்டும் பெருகும் அபாயம் உள்ளது என்கிறார் கள் பெரியவர்கள்.

“அரசாங்கம் முந்திரி, பலா நாற்றுத் தருவதாக சொல்கிறது. அதெல்லாம் நர்சரியில் வளர்ந் தவை. எங்கள் மண்ணில் சுட ராக வளராது. எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 கொடுத்தால் நாங்களே எங்கள் மண்ணுக் குரிய விதைகளைக் கொண்டு முந்திரி, பலா மரங்களை உற்பத்தி செய்து கொள்வோம்” என்றார் ஒரு பெரியவர். “அவை தான் நல்ல பலன் கொடுக்கும்” என்கிறார்.

இப்பொழுது நடும் ஒரு முந்திரிக் கன்றோ, பலாக் கன்றோ அது முழுப்பலன் கொடுக்க 15 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் உழவர்கள். அங்கங்கே வாழை, கரும்புப் பயிர்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.

மக்கள் கோரிக்கைகளுக்கு அரசு முதலில் செவி கொடுக்க வேண்டும். பின்னர் அவற்றை நிறை வேற்றுவது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகள்:

1. முந்திரி, பலா மரங்கள் சேதமடைந்த உழவர்களுக்கு ஒர் ஏக்கருக்கு 20,000 ரூபாய் மானியம் கொடுக்க வேண்டும்.

2. புதிதாக முந்திரி, பலா சாகுபடி செய்ய நிலத்தடி நீரை எடுத்தாக வேண்டும். அதற்கு ஒவ்வொரு உழவருக்கும் ஆழ் குழாய்க் கிணறு தோண்ட வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். அதற்குரிய மும்முனை மின் இணைப்பு உட னடியாகக் கொடுக்க வேண்டும்.

3. உழவுத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 365 நாள் வேலையாக பாதிக்கப் பட்டப் பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும். தனியார் வேளாண் நிலங்களில் வேலை செய்வதை யும், இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

4. ஏற்கெனவே 100 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைத்து வந்தது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஏற்பட்ட பிறகு, இப்பொழுது 650 அடி ஆழத்தில் தான் தண்ணீர் கிடைக்கிறது. நெய்வேலி சுரங்கமும் மின்நிலையங்களும் ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டுகின்றன. அதில், குறிப்பிட்டத் தொகையை ஒதுக்கி புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிதி உதவியும், துயர் துடைப்புப் பணிகளும் செய்ய வேண்டும்.

மக்களின் இந்தக் கோரிக்கைகளைத் தமிழக அரசு ஏற்க வேண்டும். இயற்கைப் பேரழி வுக்குள்ளான இப்பகுதிகளை இந்திய அரசு ‘தேசிய இயற்கைப் பேரிடர்’ பகுதியாக அறிவிக்க மறுக்கிறது. உரிய இழப்பீட்டுத் தொகையும் தமிழக அரசுக்கு அது வழங்கவில்லை. வெள்ளைக் காரக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளைப் போல தில்லியிலிருந்து வந்தவர்கள் தமிழக அரசுக்கு மேலே அதிகாரம் படைத்த கண்காணிப் பாளர்களாக வந்து போனார்கள். அவர்களுக்கு முந்திரி என்றாலே என்னவென்று தெரியவில்லை. ஒரு அதிகாரி கேட்டாராம், “முந்திரி எந்தக் கிழங்கிலிருந்து வளர்கிறது?" என்று.

அப்படிப்பட்ட அதிகாரிகளின் கருணையை எதிர்பார்த்துத் துயர் துடைப்புப் பணிகளை செய்ய வேண்டிய நிலையில் தான் தமிழக அரசும் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, முதலமைச்சர் செயலலிதா அன்றாடம் அமைச்சர்களையும், அதிகாரி களையும் நீக்கிக் கொண்டும், இடம் மாற்றிக் கொண்டும் இருப்பதால் நிர்வாகத்தில் நிலையற்ற  தன்மை நிலவுகிறது. துயர் துடைப்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்படாமைக்கும் சரியாக நடைபெறாமைக்கும் இந்த நிலையற்ற தன்மையும் ஒரு முக்கியக் காரணமாகும்.

அந்தப் பகுதிக் கிராமங்களை விட்டுத் திரும்பும் போது, மீண்டுமொருமுறை அந்த மண்ணைப் பார்த்தோம். செக்கச்சிவந்த மண். போட்டது முளைக்கும் பொன் விளையும் நிலம். இயக்குநர் தங்கர்பச்சான் தொலைபேசியில் சொன்ன சொற்கள் மனதில் எதிரொத்தன.

“எங்கள் பகுதியில் பலாவும், முந்திரியும் குடும்ப உறுப்பினர்களைப் போலத்தான். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பெயருண்டு. கல்கண்டு, பச்சைமுத்து, பாவாடைராயன், ஆயிரங்காய்ச்சி போன்றவை பலாவுக்கான பெயர்கள். பச்சை யம்மாள், செம்படையான், சிவப்புக்காய்ச்சி, வள்ளி, வாழைக்காய்ச்சி, வெள்ளைக்காய்ச்சி போன்றவை முந்திரி மரங்களின் பெயர்கள். ஒவ்வொரு முந்திரி மரத்தின் கொட்டைக்கும் ஒரு முகமுண்டு. இருபது ஏக்கரில் விளைந்த முந்திரிக் கொட்டை களை ஒன்றாகக் கொட்டி வைத்தாலும், எங்கள் அம்மா எந்தக் கொட்டை எந்த மரத்தில் விளைந்தது என்பதை அவற்றின் முகம் பார்த்து அடையாளம் சொல்வார். இந்தப் புயல் எங்கள் காட்டில் வாழ்ந்த பறவைகளையும் அழித்து விட்டன. இப்பொழுது எங்கள் வானத்தில் ஒரு காக்கை, குருவி கூடப் பறக்கவில்லை" என்றார்.

மீண்டும் அந்த பசுமையும், உயிர்ப்பும் பண்ருட்டி, கடலூர் வட்ட கிராமங்களுக்கு வரும்; வரவேண்டும் என்ற நம்பிக்கையோடு திரும்பினோம்.

Pin It