ஆங்கிலத்துக்கு இறைமொழிக்குள்ள இடத்தைத் தர மறுத்து இலத்தீன் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வந்ததைக் கடைசிக் கட்டுரையில் கண்டோம். இறையியல் துறையில் மட்டுமல்லாது அறிவியல் துறையிலும் இலத்தீனின் ஆதிக்கமே கொடி கட்டிப் பறந்தது. பழைய ஆங்கிலத்தின் காலக் கட்டங்களில் இங்கிலாந்தின் கல்விக் கூடங்கள் முழுக்க முழுக்கக் கத்தோலிக்கத் திருப்பேரவையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இறையியலைப் பயிற்றுவிப்பதே அன்றைய கல்விக்கூடங்களின் அடிப்படைப் பணியாக இருந்தது.

இயற்கை அறிவியலைப் பயிற்றுவிக்கையில் திருப் பேரவையின் சமயக் குருமார்கள் அனுமதிக்கும் அறிவியல் கோட்பாடுகளை மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க முடியும். இறையியலின் மொழியே இலத்தீன்தான் எனும் போது அறிவியலின் மொழியாகவும் இலத்தீனே இருந்தது. ஆங்கிலத்தின் துணைக் கொண்டு எந்த அறிவியல் கருத்தையும் கொண்டு செல்ல முடியாது என்றுதான் அன்றைய ஆங்கில அறிவியலர்கள் கூட கருதி வந்தனர்.

அறிவியல் மீது ஒரு பக்கம் இலத்தீன் ஆதிக்கம் செலுத்தி வந்தது என்றால், மறுபக்கம் கிரேக்க, ரோமானியப் புராணங்களும் இங்கிலாந்து அறிவியலின் மீது மட்டுமல்லாது, மொத்த ஐரோப்பிய அறிவியலின் மீதே முழுத் தாக்கம் செலுத்தி வந்தன. எந்த அறிவியல் கலைச் சொல்லையும் கிரேக்க அல்லது ரோமானியப் புராணக் கடவுளர்களின் பெயர்களைக் கொண்டு தான் உருவாக்க வேண்டும் என்பதே விதியாக இருந்தது. அவ்வப்போது ஜெர்மானிய அல்லது நார்ஸ் புராணக் கடவுளர்களும் அறிவியல் கலைச் சொற்களுக்குத் துணை செய்வதுண்டு.

இதற்கான சான்றுகளை ஐரோப்பிய நாட்காட்டி மாதங்களின் பெயர்கள் எப்படி கிரேக்கப் புராணக் கடவுளர்களின் பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன என்று ஏற்கெனவே கண்டோம்.

இப்போது ஆங்கிலக் கிழமைப் பெயர்களை எடுத்துக் கொள்வோம். ஆங்கிலக் கிழமைகளில் முதல் கிழமையாகிய சன்டே (ஞாயிற்றுக்கிழமை) சூரியனையும், இரண்டாவது கிழமையாகிய மன்டே (திங்கள்கிழமை) நிலவையும் அடிப் படையாகக் கொண்டு உருவானவை. இவை இரண்டு தவிர மற்றக் கிழமைகளே நம் கவனத்துக் குரியவை.

டியூஸ்டே– செவ்வாயைக் குறிக்கும் இந்தக் கிழமை டைர்(Tyr) என்னும் நார்ஸ் புராணக் கடவுளின் பெயரால் உருவானது. டைர் என்பது டிவாஸ் (Tiwas) என்னும் ஜெர்மானிய வேர்ச் சொல்லி லிருந்து கிளைத்தது ஆகும். ஒரு சமயம் ஃபென்ரிர் (Fenrir) என்னும் அரக்க ஓநாய் ஒன்று அட்டகாசம் செய்து கொண்டி ருந்த போது அதனை அடக்கு வதற்கு எந்தக் கடவுளரும் துணியாத நிலையில் டைர் இறைவன் அந்த ஓநாயைத் தன் ஒரு கையை இழந்து அடக்கிய காரணத்தால் நார்ஸ் புராணத்தில் போர்க் கடவுளாகவும் கடவுள்களின் தலைவனாகவும் மதிக்கப் படுகிறார்.

வெட்னஸ்டே– புதனைக் குறிக்கும் இந்தக் கிழமை வோடன் (Woden) என்னும் நார்ஸ் புராணக் கடவுளின் பெயரால் உருவானது. இவர் வேட்டைக் கடவுள் என்றும், வாயு பகவான் என்றும் கருதப்படுகிறார்.

தேஸ்டே– வியாழனைக் குறிக்கும் இந்தக் கிழமை தோர் (Thor) என்னும் நார்ஸ் புராணக் கடவுளின் பெயரால் உரு வானது. சிஃப், ஜன்சக்சா ஆகிய இறைவிகளின் கணவனாகிய தோர் இரு ஆடுகள் இழுத்துச் செல்லும் தேரில் பயணம் செய்பவர். கையில் பெரிய சுத்தியலை ஏந்தி நிற்பார். நார்ஸ் புராணத்தின்படி இவர் இந்தச் சுத்தியலிலிருந்து இடியையும் மின்னலையும் உருவாக்குவதால் இடிமின்னல் கடவுள் எனக் கருதப்படுகிறார்.

ஃப்ரைடே– வெள்ளியைக் குறிக்கும் இந்தக் கிழமை ஃப்ரே (Frey) என்னும் நார்ஸ் புராணக் கடவுளின் பெயரால் உரு வானது. பிள்ளைப்பேற்றை அருளும் இறைவனாகிய இவர் பன்றியை வாகனமாகக் கொண்டவர்.

சேடர்டே– சனியைக் குறிக்கும் இந்தக் கிழமை சேடன் (Saturn) என்னும் ரோமா னியக் கடவுளின் அல்லது கோளின் பெயரால் உருவானது. இந்த சேடன் கடவுள் குறித்த சுவார சியமான கிரேக்க -ரோமானியப் புராணக் கதையைச் சற்றே பார்ப்போம்.

புவித் தாயாகிய டெர்ரா (Terra) என்னும் இறைவிக்கும், வான் தந்தையாகிய சீலஸ் (Caelus) என்னும் இறை வனுக்கும் நில நடுக்கம், புயல், எரிமலை ஆகியவற்றின் மூலவர்களாக 3 பிறவிகள் பிறந்தனர். இவர்களுக்கு மனிதத் தோற்றம் இருந்ததே தவிர, மனிதர்களுக் குரியகுணங்கள் இருக்கவில்லை. உலகின் முதல் உயிர்களாகிய இவர்கள் 100 கைகளுடனும் 50 தலைகளுடனும் பேரரக்கர் களாகக் காட்சி தந்தார்கள். இவர்களைத் தவிர டெர் ராவுக்கு ஒற்றைக் கண்ணுடன் மூவர் பிறந்தனர். இவர்கள் சைப்ளோப்கள் (Cyclops) எனப் பட்டனர். பிறகு ஏழு குழந் தைகள் பிறந்தார்கள், இவர்கள் டைட்டன்கள் (Titans) எனப் பட்டனர்.

பேரரக்கர்களாகக் காட்சி யளித்த பிள்ளைகளைக் கண்டு அருவருப்புற்ற சீலஸ் மூவ ரையும் புவிக்கடியில் சிறை வைத்தான். இதனால் மனம் வெதும்பிய தாய் டெர்ரா சிறைப்பட்ட தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றும் படித்த தன் மற்றப் பிள்ளை களிடம் கெஞ்சினாள். எவரும் உதவ முன்வராத நிலையில் ஒரேயொரு டைட்டன் மட்டும் உதவ முன் வந்தான். அவன் தான் சேடன் என்னும் இறைவன் ஆவான். அவன் தன் ஆயுதமாகிய அரி வாளால் தன் தந்தை சீலசை ஆயிரம் துண்டு களாக வெட்டிக் கொல்கிறான்.

பிறகு இந்த உலகை ஆளத் தொடங்குகிறான் சேடன்.ஓப்ஸ் என்னும் தனது தங்கையுடன் சேர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கிப் பின்னர் அவ ளையே மணக்கிறான். இரு வருக்கும் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை தந்தையை, அதாவது சேடனைக் கொன்று விடும் என அசிரீரி சொல்வதால் சேடனுக்கு அச்சம் மேலிடு கிறது. எனவே தனக்கு வரிசை யாகப் பிறந்த ஐந்து குழந்தை களைக் கடித்து விழுங்கி விடுகிறான். ஏதாவது ஒரு குழந்தையையாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கும் ஓப்ஸ் தனக்குப் பிறந்த ஆறா வது குழந்தையை மறைத்து வைத்து விட்டு அதற்குப் பதிலாகக் குழந்தை போன்ற பொம்மையைக் கணவன் சேட னிடம் தருகிறாள். அவனும் அதனைக் கடித்துத் தின்று விடுகிறான்.

ஓப்ஸ் காப்பாற்றிய குழந்தை ஜூபிடர் என்னும் பெயரில் தந்தை சேடனிடமே வேலைக் குச் சேர்கிறான். பிறகு தனது பாட்டி டெர்ராவுடன் சேர்ந்து தனது தந்தை சேடனுக்குச் சற்றே நஞ்சைக் கொடுக்கிறான். இதனால் சேடன் தான் ஏற் கெனவே விழுங்கிய ஐவரையும் வாந்தி எடுத்து விடுகிறான். ஐவரும் உயிருடன் புவியில் வந்து விழுகிறார்கள்.

இப்போது இறைவன் ஜூபிடர் டைட்டனாகிய தனது தம்பி புரோமிதியஸ் (Prome theus),  தனது மூன்று சிற்றப்பன் களாகிய ஐம்பது தலை அரக்கர்கள் ஆகியோரின் துணையுடன் தனது தந்தை சேடன் மீது போர் தொடுக் கிறான். இறுதியில் தந்தை சேடனைக் கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்கிறான். அசிரீரி வாக்கு பலித்தது.பிறகு ஜூபிடர் இந்த உலகைப் பேரதி காரத் துடன் ஆளத் தொடங்குகிறான். அவன் உடன்பிறந்தோரில் ஒருவனாகிய அட்லஸ் (Atlas) தனது தாத்தா வாகிய வானம் கீழே விழுந்து விடாமல் இருக்கும் பொருட்டு அதனை என்றென்றும் தாங்கி நிற்கும் பொறுப்பை எடுத்துக் கொள் கிறான்.  அந்த அட்லசின் வல்ல மையால்தான் இன்றுங் கூட நம் உச்சி மீது வானிடிந்து வீழ்ந் திடாமல் இருக்கிறதாம்!

நெப்டியூன், புளூட்டோ என ஜூபிடருக்கு உடன்பிறந்தோர் பலர். வானாட்சியை ஜூபி டரும், கடலாட்சியை நெப்டி யூனும், பாதாள உலக ஆட்சியை புளூட் டோவும் எடுத்துக் கொண்டனர்.

இதுதான் சேடன் குடும் பத்தின் கதை. சேடன் என்ற இந்தப் பெயரைத்தான் ஆங்கி லேயர்கள் ஆங்கிலக் கிழமை ஒன்றுக்கும், சூரியனின் கோள் ஒன்றுக்கும் சூட்டியுள்ளனர்.

ஆங்கிலத்தில் சன்டே எனப் படும் ஞாயிற்றுக்கிழமைக்கும் கடவுளுக்கும் பெரிதாகத் தொடர் பில்லைதான் என்றா லும், அன்றைய நாள் ஆங்கி லேயர்கள் அலுவலகப் பணி செய்யாது ஓய்வெடுத்துக் கொள் வதற்கு ஓர் ‘அறிவியல்’ காரணம் உண்டு. ஆறு நாட்கள் இந்த உலகைப் படைத்த கடவுள் களைப்புற்று ஓய்வெடுத்துக் கொண்ட நாளாம் சண்டே; அதனால்தான் இவர்களும் ஓய்வெடுத்துக் கொள்கிறார் களாம். ‘ஆங்கில’ கடவுள் இளைப்பாறும் நாளே தமிழர் களுக்கும்ஓய்வெடுக்கும் நாளாகிப் போன கொடுமையை யாரிடம் போய்ச் சொல்வது?

சேடன், ஜூபிடர் போன்ற கடவுளர்கள் அடிக்கும் கூத்து கள் இந்து மதப் புராணங் களையே விஞ்சி விட்டன அல்லவா? மூடநம்பிக்கைகளும் ஆபாசக் குப்பைகளும் ஆங்கிலேயர் கடைப்பிடிக்கும் மாதங்களிலும் கிழமைகளிலும் மட்டு மல்லாது அறிவியல் துறையிலும் படிந்துள்ளன.

முதலில் வானியலைப் பார்ப்போம். சூரியக் குடும் பத்தின் கோள்கள் ஒவ்வொன் றின் பெயரும் எந்த ளவுக்கு அறிவியல் அடிப் படையில் அமைந்துள்ளது என ஆராய்வோம்.

மெர்குரி – சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் (அறிவன்) எனப்படும் இந்தக் கோளுக்குரிய பெயர் மெர்குரி (Mercury) என்னும் ரோமானியக் கடவுளின் பெயரால் உரு வானது. இரு இறக்கை களுடன் காணப் படும் வணிகக் கடவுளே மெர்குரி. இவன் இறைவன் ஜூபிடருக்கும் அவன் தம்பி அட்லசின் மகள் மையாவுக்கும் பிறந்தவன். மெர்குரிக்கு ரோமா னியப் புராணத்தில் சுவாரசிய மான ஒரு குட்டிக் கதையும் உண்டு.

மெர்குரியின் தந்தையும் இறைவன்களின் தலைவனு மாகிய ஜூபிடருக்கு ஜுடுர்னா (Juturna) என்னும் பெண் ணுடன் கள்ளக் காதல் ஏற்பட் டது. இவள் நாம் ஏற்கெனவே கண்ட ஜேனஸ் என்னும் இருதலைக் கடவுளின் மனை வியாவாள். இவளுடைய தோழியும் அல்மோ என்னும் ஆறு பெற்றெடுத்த மகளுமாகிய லாரண்டா (Larunda) என்னும் நீர்த் தேவதைக்கு இந்தக் கள்ளக் காதல் தெரிந்து விட்டது. இரகசியம் காக்கத் தெரியாத பெண்ணாகிய லாரண்டா இந்தக் கள்ளக் காதலை ஜூபிடர் மனைவியின் காது களில் போட்டு விட்டாள்.

இதனால் சினமுற்ற ஜூபிடர் லாரண்டாவின் நாக்கை அறுத்து விட்டான். மேலும் அவன் தனது மகன் மெர் குரியிடம் லாரண்டாவை இறைவன் புளூட்டோ அரசாட்சி செய்யும் பாதாள உலகத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் அடைத்து விடும்படி ஆணையிட்டான். மெர்குரி அவளைக் கூப்பிட்டுக் கொண்டு போகும் வழியிலேயே அவள் மீது மோகம் கொண்டு அவளைக்கற்பழித்து விட்டான். அவளுக்குக் குழந்தையும் பிறந்தது. எனவே ஜூபிடருக்குத் தெரியாமல் அவளைப் பாது காத்து வந்தான் மெர்குரி. இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த மெர்குரியின் பெயர் தான் சூரியக் குடும்பத்தின் முதல் கோளுக்குச் சூட்டப் பட்டது. அடுத்த கோளின் கதை என்ன?

வீனஸ் – புதனை அடுத் துள்ள வெள்ளி என்னும் இந்தக் கோளுக்குரிய பெயர் வீனஸ் (Venus) என்னும் ரோமானிய இறைவியின் பெயரால் அமைந் தது. இவள் கடல் நுரை யிலிருந்து பிறந்தவள். காதல் இறைவி எனப் போற்றப்படும் இவள் ரோமானியப் புராணத் தின் மிக முக்கிய மான கடவுள் ஆவாள். காமத் தலைவியாகிய இவள் பெண் களின் உடல் வளைவுகளுக்கும் வெட்டு களுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து வருபவள். எனவே தான் மிக அழகானது என்றும், எடுப்பான பரப்பைக் கொண் டது என்றும் கருதப் பட்ட கோளாகிய வெள்ளிக்கு இந்தப் பேரழகி வீனசின் பெயர் சூட்டப்பட்டது. பெண் கற்பின் இறைவி எனக் கருதப்படும் இவள் வல்கன், மார்ஸ் ஆகிய கடவுளர்களை மணந்தாள்.

மார்ஸ் – நமது புவியை அடுத்துள்ள செவ்வாய் என்னும் இந்தக் கோளுக்குரிய பெயர் மார்ஸ் (Mars) என்னும் ரோமா னியப் போர்க் கடவுளின் பெயரால் அமைந்தது. இவன் ஜூனோ இறைவிக்குப் பிறந்தவன். ஆனால் தனது தாய் ஜூனோவின் கணவனாகிய ஜூபிடருக்குப் பிறந்தவன் இல்லை. அப்பா இல்லாமல் எப்படி மகன் பிறப்பான்? இதற்கு வேடிக்கையான ரோமா னியப் புராணக் கதை ஒன்று உண்டு.

ஒரு முறை இறைவன் ஜூபிடர் தன் மனைவி ஜூனோ வின் துணையின்றியே தன் நெற்றி யிலிருந்து மினர்வா (Minerva) என்னும் மகளைப் பெற்றெடுத் தான். பின்னர் இவள் பெண் கன்னித் தன்மையின் இறை வியானாள். கணவன் ஜூபிடர் தன் துணை யின்றியே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து விட்டதைக் கண்ட இறைவி ஜூனோவும் தன் கணவனின் துணையின்றி ஒரு பிள்ளையைப் பெற் றெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டாள். இதற்காக அவள் ஃபுளோரா (Flora) என்னும் பூக்களின் இறைவியிடம் சென்று யோசனை கேட்டாள். ஃபுளோ ராவும்  மாயப் பூ ஒன்றை வர வழைத்து அதனைப் பூப்படை யாத பசு ஒன்றின் வயிற்றின் மீது வைத்தாள். உடனே அதன் வயிற்றில் கரு உண்டானது. இப்போது ஃபுளோரா இன் னொரு மாயப் பூவை வர வழைத்து அதனை ஜூனோ வின் வயிற்றில் வைத்தாள். உடனே ஜூனோ கரு வுற்றாள். பத்து மாதம் கழித்துச் செக்கச்செவேல் என அழகு மகன் மார்சைப் பெற்றெடுத் தாள். செந்நிறக் கோளாகிய செவ் வாய்க்கு மார்ஸ் என்பது பொருத் தமான பெயரே.

ஜூபிடர் – செவ்வாயை அடுத்துள்ள வியாழன் என்னும் இந்த மிகப் பெரிய கோளுக் குரிய பெயர் ஜூபிடர் (Jupiter) என்னும் கிரேக்கப் புராணக் கடவுள் (படத்தில் காண்க) ஒருவரின் பெயரால் அமைந்தது. கிரேக்கப் புராணத்தில் சீயஸ் (Zeus) இறைவனுக்கு இவன் இணையானவன். இவன் இறை வன்களின் அரசன் என்றும் இறைவிகளின் அரசி யாகிய தன் தங்கை ஜூனோவை மணந்த வன் என்றும் ஜூன் மாதத் துக்கான பெயர்க் காரணம் கண்ட போது தெரிந்து கொண் டோம் அல்லவா? ஜூபிடர் ஏன் தங்கையை மணக்க வேண்டும்? இதற்கான ரோமானியப் புராணக்கதையைக் காண்போம்.

ஜூபிடர்தான் முதலில் தன் தங்கை ஜூனோவைக் காதலிக் கிறான். ஆனால் சொந்த அண்ணனை மணக்க முடியாது என மறுக்கிறாள் ஜூனோ. எப்படியாவது அவளை அடையத் துடிக்கும் ஜூபிடர் ஒரு குயிலாக உருவெடுக்கிறான். ஒரு மழைக் காலத்தில் அந்த ஜூபிடர் குயில் ஜூனோவின் மடியில் வந்து விழுகிறது. குளிரில் நடுநடுங்கிக் கொண் டிருக்கும் குயிலைக் கண்டு பரிதாபப்படும் ஜூனோ அதனைக் கதகதப்பாகத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டு அதற்கு வருடிக் கொடுக்கிறாள். இப்போது ஜூபிடர் குயில் உருவம் துறந்து தனது உண்மை உருவத்தை அடைகிறான். தன் அண் ணனை அணைத்துக் கொண்டு விட்டோமே என வெட்கித்துப் போகிறாள் ஜூனோ. ஆனால் ஜூபிடரோ தன்னைத் திருமணம் செய்து கொள் ளும்படி வற்புறுத்துகிறான். குற்ற உணர்வில் வெதும்பிக் கொண்டிருக்கும் ஜூனோ அவனை மணக்க இசைகிறாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு உலகை ஆள் கிறார்கள். காமப் பித்து பிடித்த இறைவன் ஜூபிடரின் நாம கரணத் துடன் தான் வியாழன் ஆங்கில வானில் உலா வந்து கொண்டிருக்கிறது.

சேடன் – வியாழனுக்கு அடுத்த கோளாகிய சனி (காரி) குறித்து நாம் ஏற்கெனவே சனிக் கிழமையில் விரிவாகக் கண்டு விட்டோம். சனி கோளுக்கு இருபதுக்கு மேற்பட்ட நிலவுகள் உண்டு. அந்த நிலவுக ளுக்கும் கூட அட்லஸ், புரோ மீதியஸ், ஜேனஸ், டெலஸ்டோ, கேலிப்சோ எனப் புராணக் காலத்துக் கடவுளர்களின் பெயர்களே கிடைத்துள்ளது. இனி அடுத்த கோளின் கதையைப் பார்ப்போம்.

யுரேனஸ் – சனியின் அடுத்த கோளிது. இதற்கு யுரேனஸ் (Uranus) என்னும் கிரேக்கப் புராணக் கடவுளிடமிருந்து இந்தப் பெயர் கிடைத்தது. யுரேனஸ் கதையைச் சற்று பார்ப்போம்.

புவி இறைவி எனக் கருதப்படும் காயா(Gaea)ஒரு முறை ஈதர் (Aether) என்னும் வளி மண்டல இறைவனுடன் உறவு கொண்டு யுரேனஸ் என்னும் மகனைப் பெற்றெ டுக்கிறாள். இந்த யுரேனஸ்தான் வானமாக உருவெடுக்கிறான். எனவே இவனே வான் இறைவன் ஆவான். வானமாகிய யுரேனஸ் அன்றாடம் இரவு கீழே இறங்கி வந்து புவியாகிய தனது தாய் காயாவுடன் புணர்கிறான். இவர்களுக்குப் பல தலைக ளுடனும், ஒற்றைக் கண்ணுடனும் பல பிள்ளைகள் பிறக்கிறார்கள். இப்படிச் சொந்தத் தாயுடன் படுத்துக் கொண்ட யுரேனஸ்தான் நமது சூரியக் குடும்பத்தின் ஒரு கோளின் பெயராகவும் அமைந்து விட்டது. ஆனால் இந்த யுரேனசை 1851 இல் கண்டு பிடித்தது வில்லியம் லேசர் என்னும் மானிடர் ஆவார்.

நெப்டியூன்–யுரேனசை அடுத்த கோளிது. இதற்குரிய பெயர் கடலையும் நன்னீரையும் ஆளும் நெப்டியூன் (Neptune) என்னும் ரோமானிய இறை வனிடமிருந்து கிடைத்தது. நெப்டியூனைக் குதிரைகளின் கடவுள் என்றும் ரோமானியர் கள் வணங்கினர். அவர்கள் நெப்டியூனுக்குக் காளைகளைப் பலி கொடுத்து வணங்குவது வழக்கம். நெப்டி யூன் தனது வாகனமாகிய குதிரைகளில் கடற்பயணம் செய்து கடலை ஆள்வதாகவும் ரோமானியர்கள் நம்பினர். ஜூபிடரின் தம்பியே நெப்டியூன் என ஏற்கெனவே கண்டோம். நீலநிறக் கோளாகிய நெப்டியூனுக்குக் கடல் இறை வனின் பெயரைச் சூட்டியது பொருத்தமானதே. ஜொஹன் கல்லே என்னும் ஜெர்மானிய வானியலர் 1846 இல் நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

புளூட்டோ–நெப்டியூனை அடுத்த கடைசிக் கோளிது. இதற்குரிய பெயர் பாதாள உலகத்தை ஆளும் புளூட்டோ (Pluto) என்னும் கிரேக்க இறைவனிடமிருந்து கிடைத் தது. செல்வத்துக்கு அதிபதி யான இவருக்குக் கறுப்பு ஆடுகளைப் பலியிட்டால் வாழ்வு வளங்கொழிக்கும் என கிரேக்கர்கள் நம்பினர். இவர் ஜூபிடரின் தம்பி என்பதை ஏற்கெனவே கண்டோம். பிராசர் பைனா (Proserpina) என்னும் பெண்ணை புளூட்டோ வலுக்கட்டாயமாகத் தனது பாதாள உலகத்துக்குக் கடத்திச் சென்று புணர்கிறான். பிறகு அவளை மனைவியாக்கிக் கொள்கிறான்.

புவிக்கடியில் புளூட்டோவுடன் குடித்தனம் நடத்தும் இந்த பிராசர் பைனா புவியின் அனைத்துத் தாவரங் களுக்கும் மூல வித்தாக இருக்கிறாள். எனவே இவளைக் கிரேக்கப் புராணம் தாவர இறைவி(Vegetative Goddess) எனப் போற்றுகிறது. கிளைட் வில்லியம் டாம்பாக் என்னும் அமெரிக்க வானியலர் புளூட் டோ கோளை 1930இல் கண்டுபிடித்தார். அந்தக் கோ ளுக்குப் பல புராணக் கடவுளர் களின் பெயர்கள் பரிந் துரைக் கப்பட்டன. கடைசியாக வனடி யா பர்னே என்னும் பள்ளிச் சிறுமியின் ஆலோ சனைப்படி புளூட்டோ என்னும் புராணப் பெயர் அந்தக் கோளுக்குச் சூட்டப்பட்டது. புளூட்டோ ஒரு சூரியக் குடும்பக் கோளே அன்று என இப்போது அறிவி யலர்கள் அறிவித்து விட்டனர்.

இப்படிச் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் ஏதோ புராணக் கடவுளின் பெயருடன் தான் வலம் வருகிறது. தமிழர்கள் தாங்கள் அன்று கண்ட கோள்கள் ஒவ்வொன்றுக்கும் மதச்சார்பற்ற பெயர்களை அல்லவா சூட்டியுள்ளார்கள்.

சூரியனருகே புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருப்பது போன்றதொரு நிலையில் காணப்படும் கோளுக்குப் புதன் என்றும், வெள்ளி போன்று பளபள வென்று மின்னும் கோளுக்கு வெள்ளி என்றும், செந்நிறத்தில் காட்சியளிக்கும் கோளுக்குச் செவ்வாய் என்றும், இருக்கும் கோள்களிலேயே விரிந்து அகன்று காணப்படும் கோளுக்கு வியாழன் என்றும், கரிய நிறத்தில் காணப்படும் கோளுக்குக் காரி (சனி) என்றும் தமிழர்கள் பெயரிட்டதாகத் தமிழிலக்கியத்தில் உலகாய்தம் என்ற தமது நூலில் குறிப் பிடுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்.

(தொடரும்)

Pin It